யெகோவாவை கனப்படுத்தும் திருமணங்கள்
கிறிஸ்தவ திருமணங்ள் சம்பந்தமாக பின்வரும் இந்தக் கட்டுரை, சமீபத்தில் எதியோபியாவில் யெகோவாவின் சாட்சிகளாகியிருக்கிற பலருக்கு, உதவியாயிருக்கும் வழிநடத்துதலை அம்ஹாரிக் மொழியில் அளிப்பதற்காக அந்நாட்டில் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. உள்ளூர் பழக்கவழக்கங்களும் செயல்முறைகளுமான சிலவற்றை விளக்குகிறது, அவை நீங்கள் வாழும் இடங்களிலுள்ள பழக்கத்திலிருந்து வேறுபடலாம். இந்த வேறுபாடு மிகவும் கவனத்தை கவருவதாக நீங்கள் பெரும்பாலும் காண்பீர்கள். அதேசமயத்தில், சமநிலைப்பட்ட பைபிள்பூர்வ அறிவுரையை இந்தக் கட்டுரை அளிக்கிறது. நீங்கள் வாழும் பகுதியிலுள்ள திருமண பழக்கவழக்கங்கள் வேறுபட்டாலுங்கூட இதைப் பொருத்திப் பயன்படுத்தக் கூடியதாக நீங்கள் காண்பீர்கள்.
“மகிழ்ச்சியைக் கொண்டுவருகிற கிறிஸ்தவ திருமணங்கள்” என்பது, ஏப்ரல் 15, 1984-ன் காவற்கோபுரத்தில் சிறந்த ஒரு படிப்புக் கட்டுரையின் தலைப்பாக இருந்தது. அந்த வெளியீட்டிலிருந்த அடுத்தக் கட்டுரை, “திருமண விருந்துகளில் சமநிலைப்பட்ட மகிழ்ச்சியைக் கண்டடையுங்கள்” என்ற தலைப்பைக் கொண்டிருந்தது. (மணம் செய்துகொள்ளும்படி சிந்தனை செய்யும் எவருக்கும், உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் புத்தகத்தின் 2-ம் அதிகாரத்திலும், உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் புத்தகத்தின் 19-ம் 20-ம் அதிகாரங்களிலும், ஞானமுள்ள கூடுதலான அறிவுரை உள்ளது.)a அந்தக் கட்டுரைகள் வெளிவந்ததற்குப்பின் பலர் யெகோவாவின் சாட்சிகளாகியிருக்கின்றனர்; ஆகையால், நாம் வாழும் இடத்திற்கு முக்கியமாய்ப் பொருத்தமாயுள்ள சில குறிப்புகளையும், திருமணத்தைத் தொடங்கிவைத்தவரான யெகோவாவுக்கு நன்மதிப்பைக் கொண்டுவரும் சந்தர்ப்பங்களாக திருமண நிகழ்ச்சிகளை நடத்த நமக்கு உதவிசெய்யும் பொருத்தமான மற்ற குறிப்புகளையும் மறுபடியும் கவனித்துப் பார்க்க நாம் விரும்புகிறோம்.
திருமணத்தை எப்போது நடத்த வேண்டும்? என்பது முதலாவது கவனிக்க வேண்டிய ஒரு கேள்வியாக இருக்கலாம். அந்தத் தேதி, அவ்விடத்து திருமண பாரம்பரிய முகூர்த்த காலத்துக்குரிய தேதிகளாக இருக்க வேண்டுமா? ஆண்டின் வேறு எந்தச் சமயத்திலும் நடத்தப்படும் எந்தத் திருமணமும் வெற்றிகரமாயிராது என்பது உள்ளூர் நம்பிக்கையாக உள்ளது. இது ஆதாரமற்ற ஒரு குருட்டு நம்பிக்கையாக இருக்கிறது. எப்படியெனில், மகிழ்ச்சியோடும் ஒற்றுமையோடும் யெகோவாவைச் சேவித்துக்கொண்டிருக்கும் தம்பதிகள் பலர், பாரம்பரிய முகூர்த்த காலத்தின்போது மணம் செய்துகொள்ளவில்லை. நன்மையோ தீமையோ அதிர்ஷ்டத்தினால் உண்டாகிறது நாம் நம்புகிறதில்லை. (ஏசாயா 65:11; கொலோசெயர் 2:8) அவிசுவாசிகளான நம் உறவினர்களின் குருட்டு நம்பிக்கைகளுக்கு ஏற்ப திருமணத் தேதியை நாம் நிர்ணயித்தால், சத்தியத்துக்கும் பொய்ம்மைக்குமுள்ள வித்தியாசத்தைக் காணும்படி அவர்களுக்கு நாம் உதவிசெய்ய முடியாது. கிறிஸ்தவர்கள் எந்த மாதத்திலும் மணம் செய்துகொள்ளலாம் என்பதே உண்மை.
சட்ட சம்பந்தப்பட்ட அவசியமான திருமண முறைமைகளை நிறைவேற்றி முடித்தப் பின்பு, திருமணப் பேச்சு கொடுக்கப்படும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கையில், இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் இடையே அதிககால இடைவெளியிருக்க அனுமதிப்பது ஞானமாக இராது. ராஜ்ய மன்றத்தில் திருமணப் பேச்சு கொடுக்கப்படும்படி அந்தத் தம்பதிகள் விரும்பினால், வெகு முன்னதாகவே சபை மூப்பர்களை அணுகி, அதைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கேட்கவேண்டும். அந்த ஆசார ஏற்பாடுகள் தங்களைச் சுத்த மனச்சாட்சியுடன் விடும்படி, அவ்விடத்துச் சபை மூப்பர்கள் முன்னதாகவே உறுதிசெய்துகொள்வார்கள். சபை நடவடிக்கைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாதபடி நேரத்தைத் தீர்மானிக்க வேண்டும். திருமணப் பேச்சைக் கொடுக்கும்படி தெரிந்தெடுக்கப்பட்ட சகோதரர், மணமகனும் மணமகளுமாக இருக்கப்போகிறவர்களுக்கு உதவியான ஆலோசனையை அளிக்கவும், ஒழுக்க அல்லது சட்டப்படியான இடையூறுகள் ஏதும் இல்லை என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளவும், அதைதொடர்ந்து நடக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் தனக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் அந்தத் திருமணத்திற்கு மிக முன்னதாகவே அவர்களைச் சந்திப்பார். திருமணப் பேச்சு, ஏறக்குறைய அரை மணிநேரம் நீடிக்க வேண்டும்; ஆவிக்குரிய அம்சத்தை அறிவுறுத்தி, கண்ணியமான முறையில் கொடுக்கப்பட வேண்டும். அதைத் தொடரும் எந்த விருந்து உபசரிப்பைப் பார்க்கிலும் திருமணப் பேச்சே நிச்சயமாய் அதிக முக்கியமானதாக இருக்கிறது.
நாம் ‘உலகத்தின் பாகமானோரல்ல’ என்பதைக் காட்டுவதற்கு, கிறிஸ்தவ திருமணம் நல்ல ஒரு வாய்ப்பாக உள்ளது. (யோவான் 17:14, NW; யாக்கோபு 1:27) நம்முடைய ஒழுங்கானத் தன்மை மேலோங்கி நிற்க வேண்டும். ஒருவேளை சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு உண்டாக ஜனங்களைக் காத்திருக்க வைக்காமல், நாம் நேரம் தவறாமல் இருப்போம் என்பதை இது குறிக்கிறது. முக்கியமாய் மணமகள் இதை மதித்துணர வேண்டியது அவசியம். ஏனெனில்—அவளுடைய முக்கியத்துவத்தை மிகைப்படுத்துவதாக எண்ணி—தாமதமாக செல்லும்படி, உலகப் பிரகாரமான உறவினர்கள் அவளை வற்புறுத்தலாம். முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவ சகோதரி, நேரம் தவறாமல் இருப்பதன்மூலம், மனத்தாழ்மை, பிறர் நலத்தை எண்ணிப் பார்ப்பது போன்ற ஆவிக்குரிய பண்புகள் தனக்கு முக்கியமானவை என்பதைக் காட்டலாம்! மேலும், அந்த நிகழ்ச்சியைப் பதிவுசெய்ய புகைப்படம் எடுப்பவர் ஒருவர் அழைக்கப்பட்டிருக்கையில், ஒழுங்கு முக்கியமானது. புகைப்படம் எடுப்பவர் ஜாக்கட், டை, காற்ச்சட்டைகள் போன்றவற்றை ஒழுங்காய் உடுத்தி வரும்படியும், அவர் புகைப்படங்கள் எடுக்கையில் பேச்சுக்கு இடையூறு செய்யாதிருக்கும்படியும் நாம் முன்கூட்டியே கேட்டுக்கொள்வது நல்லது. ஜெபத்தின்போது புகைப்படங்கள் எடுக்கக்கூடாது. நம்முடைய ஒழுங்கு யெகோவாவுக்கு நன்மதிப்பைத் தந்து சிறந்த சாட்சிகொடுப்பதாயிருக்கும். அந்த நிகழ்ச்சியின் உண்மையான அர்த்தத்தை மறைத்துப்போடும் சமுதாய ஆசாரங்களுக்கு இணங்கிப்போக முயற்சி செய்வது அவசியமில்லை.
வெற்றிகரமான திருமணத்துக்கு விருந்து உபசரிப்பு கட்டாயத் தேவையில்லை; ஆனால் அத்தகைய சந்தோஷமான நிகழ்ச்சிக்கு வேதப்பூர்வ தடங்கல் இல்லை. எனினும், உண்மையானக் கிறிஸ்தவர்களுக்கு அத்தகைய கூடுதல், மட்டுமீறிய செலவு, மிதமீறிய குடி, பெருந்தீனி, வெறிகொண்ட இசை, மறைமுகமாக இச்சையைத் தூண்டுவிக்கும் நடனம், மற்றும் சண்டைகளையுங்கூட உட்படுத்தும் உலகப்பிரகாரமான விருந்து உபசரிப்பிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும். ‘களியாட்டுகளை’ மாம்சத்தின் கிரியைகளாக பைபிள் வகைப்படுத்துகிறது. (கலாத்தியர் 5:21) மிகப் பெரிய கூட்டமாக இராதபோது அதைச் சரியானக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது எளிது. பொது வழக்கங்களைத் திருப்தி செய்வதற்காக ஒரு பந்தல் அமைப்பது அவசியமில்லை. இடம் அல்லது நிழல் தேவைப்படும் காரணங்களுக்காக பந்தலைப் பயன்படுத்த சிலர் தீர்மானித்தால், இது அவர்களுடைய சொந்தக் விருப்பம்.
தனிப்பட்ட விதமாக அழைக்கும் அழைப்பிதழ்களைப் பயன்படுத்துவது, விருந்தினரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கு ஒரு நல்ல வழி என்று அனுபவம் காட்டியிருக்கிறது. முழு சபையையும் அழைப்பதற்குப் பதிலாகத் தனிப்பட்ட நபர்களை அழைப்பது ஞானமானது. ஒழுங்குள்ள கிறிஸ்தவர்களாக, அத்தகைய மட்டுப்பாடுகளை நாம் மதிக்க வேண்டும். சபைநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் அங்கு விருந்து உபசரிப்பில் காணப்படும் சங்கடத்தைத் தவிர்ப்பதற்கும் தனிப்பட அழைக்கும் அழைப்பிதழ்கள் நமக்கு உதவிசெய்கின்றன. ஏனெனில் இது போன்றவை நடந்தால் சகோதரசகோதரிகள் பலர் சென்றுவிட ஒருவேளைத் தீர்மானிக்கலாம். (1 கொரிந்தியர் 5:9-11) அவிசுவாசிகளான உறவினர்களை அல்லது அறிமுகமானவர்களை ஒரு தம்பதி வரவழைத்தால், சந்தேகமில்லாமல் எண்ணிக்கையில் இவர்கள் மட்டுப்பட்டிருப்பர்; ‘விசுவாசத்தில் நமக்கு உறவினரானவர்களுக்கு’ அதிக முக்கியத்துவத்துவம் கொடுப்பர். (கலாத்தியர் 6:10) விருந்து உபசரிப்புக்கு அழைப்பதைப் பார்க்கிலும் திருமணப் பேச்சுக்கே உலகப்பிரகாரமாய் அறிமுகமானவர்களை அல்லது அவிசுவாசிகளான உறவினர்களை அழைப்பதை சிலர் தெரிந்துகொண்டிருக்கின்றனர். ஏன்? திருமண விருந்து உபசரிப்பில், உலகப்பிரகாரமான உறவினர்கள் சங்கடமுண்டாக்கும் அத்தகைய சூழ்நிலையை உண்டாக்கியபோது, பல சகோதர சகோதரிகள் தாங்கள் மேலும் அங்கிருக்க முடியாதவர்களாக உணர்ந்த சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன. சில தம்பதிகள், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் கிறிஸ்தவ நண்பர்களுக்கும் மாத்திரமே விருந்து ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
யோவான் 2:8, 9-ன்படி ‘பந்திவிசாரிப்புக்காரர்’ ஒருவரைத் தெரிந்துகொள்வது நடைமுறைக்குரியதாக இருக்கிறது. ஒழுங்கும் உயர்ந்த தராதரங்களும் இருக்கும்படி பார்த்துக்கொள்வதற்கு, நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர் ஒருவரைத் தெரிந்துகொள்ள மணமகன் விரும்புவார். நண்பர்கள் பரிசுகளைக் கொண்டுவந்தால், இது ‘பகட்டாகக் காட்டிக்கொள்ளாமல்’ இருக்கும்படி செய்யப்பட வேண்டும். (1 யோவான் 2:16, NW) இசை, தகாத உணர்ச்சியைத்தூண்டும் பாடல்களும் வரம்புமீறிய கூச்சல்களும், காதைப்பிளக்கும் தாளமும் இல்லாமல், மகிழ்ச்சியுடன் அனுபவிக்கக்கூடியதாக இருக்கலாம். போடப்படவிருக்கும் இசையை, ஒரு மூப்பர் முன்னதாகவே கேட்கும்படி செய்வது சிறந்ததென பலர் கண்டிருக்கின்றனர். பாரம்பரிய நடனங்கள் பல, கருவளம் சம்பந்தப்பட்ட நடனத்திலிருந்து தோன்றி, தகாத உணர்ச்சிவசப்பட செய்யும் இடறல்களைக் கொண்டுவரலாம். “கேக்கும் மதுபானத் தருணமும்,” சிலசமயங்களில், உலகப்பிரகாரமான மக்கள் கட்டுப்பாட்டைமீறி செல்வதற்கான சந்தர்ப்பமாகிவிட்டிருக்கிறது. உண்மையில், திருமண விருந்து உபசரிப்பின்போது, எந்த மதுபானமும் அளிக்காமலிருக்க பல தம்பதிகள் தீர்மானித்து, அத்தகையப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கின்றனர்.
யெகோவாவுக்கே நன்மதிப்பு உண்டாகச் செய்ய நாம் விரும்புவதால், நம்மீது மிதமீறிய கவனத்தைக் கவருவதற்கான பகட்டார்வத்தை நாம் தவிர்ப்போம். ஊதாரித்தனமாயிருக்கும் பொது மனப்போக்குக்கு எதிராக உலகப்பிரகாரமான பிரசுரங்களும் குரலெழுப்பியுள்ளன. ஒரு தம்பதி, ஆடம்பரமாக திருமணத்தை நடத்தியதால் கடனுக்குட்பட்டு, பின்பு அந்த ஒரு நாளின் செலவுளைச் செலுத்தித் தீர்ப்பதற்காகப் பல ஆண்டுகள் வறுமையில் துன்பப்படுவது எவ்வளவு ஞானமற்றதாயிருக்கும்! நிச்சயமாகவே, அந்தச் சந்தர்ப்பத்தின்போது அணியும் எந்த உடையும் அடக்கமாயும் நல்லொழுங்குள்ளதாயும், தேவபக்தியுள்ளவர்களாகத் தெரிவிப்பவர்களுக்குப் பொருத்தமானதாயும் இருக்க வேண்டும். (1 தீமோத்தேயு 2:9, 10) “கிறிஸ்தவ திருமணங்கள் நியாயமானத் தன்மையைப் பிரதிபலிக்க வேண்டும்” என்ற கட்டுரை (ஜனவரி 15, 1969-ன் காவற்கோபுரம்) உடையின்பேரில் அக்கறையைத் தூண்டும் இந்தக் குறிப்புகளைக் கூறியது:
“ஒருவருடைய திருமணம் ஒரு விசேஷித்த நிகழ்ச்சிக்குரிய சமயமாயுள்ளது; ஆகையால் மகிழ்ச்சியுடனும் கவர்ச்சியுடனும் காணப்படுவதற்கு பொதுவாய்க் கவனம் செலுத்தப்படுகிறது. எனினும், குறிப்பிட்ட ஒரு வகையான மண ஆடையையோ அல்லது சூட்டையோ ஒருவர் அணிய வேண்டுமென்று இது குறிக்கிறதில்லை. அவ்விடத்து உடை பாங்குகள், செலவுகள், சொந்த விருப்புவெறுப்புகள் ஆகியவற்றை சிந்தித்துப் பார்ப்பது நல்லது. . . . எனினும், தங்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு பார செலவை உண்டாக்குவதற்கு ஏதுவாக, அவ்வளவு விலையுயர்ந்த பகட்டான உடையை வாங்குவது பகுத்தறிவுக்கு ஒத்ததாக இருக்குமா? . . . மணப்பெண்கள் சிலர், அன்பான சிநேகிதியாக அல்லது உறவினளாக இருக்கும் ஒருவரின் மண ஆடையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். மற்றவர்கள் தாங்களே தங்கள் மண உடையைத் தைத்துக்கொள்வதில் மிகுந்த திருப்தியடைந்திருக்கின்றனர். இவ்வாறு, எதிர்காலத்தில் மற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தக்கூடிய ஓர் உடையை உடையோராகியிருக்கலாம். இயல்பாக உடுக்கும் உடையில் மிக அழகானதைத் திருமணத்துக்கு ஒரு தம்பதி உடுத்துவது முற்றிலும் தகுந்ததே . . . திருமணத்தைச் சிறப்பாக நடத்த முடிகிற நிலையிலுள்ளவர்கள், காலங்களின் நெருக்கடியானத் தன்மையால் ‘ஆரவாரமற்ற திருமணத்தை’ நடத்த அவர்கள் விரும்பக்கூடும்.”
அவ்வாறே, திருமணத்துக்கு வருபவர்கள் (மணமகனின் நண்பர்களும் மணமகளின் தோழிகளும்) பெரும் கும்பலாக இருக்க வேண்டியதில்லை. அவர்களும் தங்கள் உடையாலும் செயல்களாலும் தங்களிடமாக மட்டுக்குமீறிய கவனத்தைத் திருப்புவோராக இருக்க விரும்பமாட்டார்கள். சபை நீக்கம் செய்யப்பட்ட ஒருவரை, ராஜ்ய மன்றத்தில் பேச்சுக்கு வர அனுமதிக்கலாம் என்றாலும், ஏப்ரல் 15, 1984 காவற்கோபுரம் இவ்வாறு சொன்னது: “சபைநீக்கம் செய்யப்பட்டவர்களை அல்லது தங்களுடைய அவதூறான வாழ்க்கைமுறை பைபிள் நியமங்களுக்கு எதிர்மாறாகப் படுமோசமாயிருக்கும் ஆட்களைத் திருமண உபசார விருந்துக்கு அழைப்பது தகாததாயிருக்கும்.”
இயேசு ஒரு கலியாணத்தில் கலந்துகொண்ட போதிலும், பட்டணத்தின் வழியேட மிகுந்த கூச்சலுடன் கார்கள் ஊர்வலம் வரும் பொதுவிருப்ப வழக்கத்தை அவர் சம்மதிப்பார் என்று நாம் கற்பனை செய்ய முடியாது; திருமண ஊர்வலத்தில் கார் ஹார்னை தொடர்ந்து அடித்தற்காக வண்டி ஓட்டுவோருக்குப் போலீஸார் அபராதமுங்கூட விதித்திருக்கின்றனர். (மத்தேயு 22:21-ஐக் காண்க.) இந்த எல்லாவற்றிலும், தேச ஜனங்களின் பகட்டாரவாரத்தை அல்லது செயல் முறைகளைப் பின்பற்றுவதைப் பார்க்கிலும், தாழ்ந்த சிந்தையுள்ளோரிடமுள்ள ஞானத்தைக் கிறிஸ்தவர்கள் காட்ட வேண்டும்.—நீதிமொழிகள் 11:2.
ஆனால், அயலாரின், உலகப்பிரகாரமான உடன் வேலையாளரின், அல்லது தூர உறவினரின் மற்றும் அறிமுகமானோரின் திருமணங்களில் கலந்துகொள்வதைப் பற்றியதென்ன இதன்பேரில், ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவரவரே தீர்மானிக்க வேண்டும். நம்முடைய ஊழியத்துக்கும், தனிப்பட்ட படிப்புக்கும், குடும்ப மற்றும் சபைக்கடுத்த மற்ற காரியங்களுக்கும் நமக்கு நேரம் தேவைப்படுவதால், நம்முடைய நேரம் அருமையானது என்பதை மனதில் வைப்பது நல்லது. (எபேசியர் 5:15, 16) வார இறுதிநாட்களில், நமக்கு கூட்டங்களும் வெளி ஊழியங்களும் இருக்கின்றன, இவற்றை நாம் தவறவிட விரும்புவதில்லை. (எபிரெயர் 10:24, 25) பல திருமணங்களுக்குரிய நேரம், மாநாடுகள் அல்லது கர்த்தருடைய இராப்போஜன தினத்தோடு இணைந்த விசேஷ வெளி ஊழிய ஏற்பாடுகளுக்கு போன்றவற்றிற்கு இடையூறாக உள்ளது. உலகெங்குமுள்ள நம் சகோதரர், கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்புக்காக ஆஜராவதற்கு எடுக்கும் அதே விசேஷித்த முயற்சிகளை நாம் எடுப்பதிலிருந்து நம் கவனம் திருப்பப்பட அனுமதிக்கக்கூடாது. சத்தியத்தின் அறிவுக்கு நாம் வருவதற்கு முன்பாக, உலகப்பிரகாரமான ஜனங்களுடன் நாம் மிகுந்த நேரத்தைச் செலவிட்டோம், கடவுளுக்கு அவமதிப்பைக் கொண்டுவரும் சூழ்நிலைமைகளிலும் அவ்வாறு செலவிட்டிருக்கலாம். (1 பேதுரு 4:3, 4) இப்போது முதன்மையாக நாம் கருதும் காரியங்கள் வேறுபட்டவையாக இருக்கின்றன. உலகப்பிரகாரமான ஒரு தம்பதிக்கு வாழ்த்துதல் கார்டு ஒன்றை அனுப்புவதன்மூலம் அல்லது மற்றொரு நாளில் சுருக்கமான ஒரு சந்திப்பு செய்வதன்மூலம் வாழ்த்துதல் சொல்வது எப்போதும் சாத்தியமாக உள்ளது. சிலர் இத்தகைய சந்தர்ப்பங்களை, புதிதாகத் திருமணம் செய்தவர்களுக்குப் பொருத்தமான வேதவசனங்கள் சிலவற்றைப் அவர்களுடன் பகிர்ந்துகொண்டு, ஒரு சாட்சி கொடுப்பதற்குப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
உலகப்பிரகாரமான வழிகளுக்கு மேலாக ஆவிக்குரிய அம்சங்களுக்கு முதலிடம் கொடுக்கும் ஒரு திருமணம் யெகோவாவுக்கு மெய்யாகவே நன்மதிப்பைக் கொண்டுவரும்; இந்த உலகத்திலிருந்தும், அதன் குருட்டு நம்பிக்கைகளிலிருந்தும், மிதமீறிய தன்மைகளிலிருந்தும் தங்களை பிரித்து வைத்துக்கொள்ள நிச்சயப்படுத்திக்கொள்வதன் மூலமும், வழக்கமான தேவராஜ்ய நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய அதை அனுமதியாமல் இருப்பதன்மூலமும், பகட்டாரவாரத்துக்குப் பதிலாக நல்லடக்கத்தைக் காட்டுவதன்மூலமும், கிறிஸ்தவர்கள் அந்த நிகழ்ச்சியை அனுபவித்து மகிழ்வார்கள். மேலும், நல்மனச்சாட்சியுடனும் இனிய நினைவுகளுடனும் அந்தச் சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்திக் காண்பவர்களாகவும் இருப்பார்கள். ஞானத்தையும் பகுத்தறிவுக்கொத்த தன்மையையும் காட்டுவதால், நம்முடைய கிறிஸ்தவ திருமணங்கள் எல்லாம், நேர்மை இருதயமுள்ள பார்வையாளருக்கு ஒரு சிறந்த சாட்சியாய் இருப்பதாக.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்தவை.
[பக்கம் 24, 25-ன் படம்]
கிறிஸ்தவர்கள் அவ்விடத்து திருமண வழக்கம் ஒவ்வொன்றையும் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறதில்லை