விசுவாசத்தை வாழ்க்கையில் வெளிக்காட்டுங்கள்
‘விசுவாசம் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.’—யாக்கோபு 2:17.
1. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்திற்கும் செயல்களுக்கும் ஏன் முக்கியத்துவம் கொடுத்தார்கள்?
பொதுவாகவே, ஆரம்பகால கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தை வாழ்க்கையில் வெளிக்காட்டினார்கள். கிறிஸ்தவர்கள் எல்லாரையும் சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு ஊக்குவித்தார்: “நீங்கள் . . . திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.” அவர் இவ்வாறும் சொன்னார்: “ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.” (யாக்கோபு 1:22; 2:26) அவர் அதை எழுதி சுமார் 35 வருடங்களுக்குப் பிற்பாடும்கூட அநேக கிறிஸ்தவர்கள் தகுந்த செயல்கள் மூலம் தங்கள் விசுவாசத்தை வெளிக்காட்டி வந்தார்கள். ஆனால் சிலர் அப்படி வெளிக்காட்டாதிருந்தது வருத்தகரமான விஷயம். சிமிர்னா சபையிலிருந்தவர்களை இயேசு பாராட்டினார். ஆனால், சர்தை சபையிலிருந்த பலரைக் குறித்து அவர் இவ்வாறு சொன்னார்: “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.”—வெளிப்படுத்துதல் 2:8-11; 3:1.
2. கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தைக் குறித்து என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
2 ஆகவே, சத்தியத்தின்மீது ஆரம்பத்தில் வைத்திருந்த அன்பை வெளிக்காட்டுவதற்கும் கடவுளோடு எப்போதும் நல்லுறவை வைத்துக்கொள்வதன் அவசியத்தை உணர்ந்துகொள்வதற்கும் சர்தை சபையிலிருந்தவர்களை இயேசு ஊக்குவித்தார்; அப்பதிவை பிற்பாடு வாசிக்கிற எவருக்கும் அது ஊக்கம் அளிப்பதாய் இருக்கும். (வெளிப்படுத்துதல் 3:2, 3) நாம் ஒவ்வொருவரும் நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘என்னுடைய செயல்கள் எப்படிப்பட்டவையாய் இருக்கின்றன? நான் செய்கிற எல்லாவற்றிலும், பிரசங்க வேலை, சபை கூட்டங்கள் ஆகியவற்றோடு சம்பந்தப்படாத பிற காரியங்களிலும்கூட என்னால் முடிந்தவரை மிகச் சிறந்த விதத்தில் செயல்படுவதன் மூலம் விசுவாசத்தை வெளிக்காட்டுகிறேனா?’ (லூக்கா 16:10) வாழ்க்கையின் பல அம்சங்களில் நம் விசுவாசத்தை வெளிக்காட்ட வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரேயொரு அம்சத்தை மட்டும், அதாவது பார்ட்டிகளையும் கிறிஸ்தவ திருமணத்திற்குப் பிறகு நடைபெறுகிற வரவேற்புகளையும் பற்றி இக்கட்டுரையில் நாம் சிந்திப்போம்.
சிறிய பார்ட்டிகள்
3. பார்ட்டிகளில் கலந்துகொள்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
3 சந்தோஷமுள்ள கிறிஸ்தவர்கள் பார்ட்டிகளை ஏற்பாடு செய்து அதில் கலந்துகொள்ள அழைக்கும்போது நாம் எல்லாருமே மகிழ்ச்சியோடு போவோம். யெகோவா ‘நித்தியானந்த தேவன்’; தம்முடைய ஊழியர்கள் சந்தோஷமாய் இருக்கவே அவர் விரும்புகிறார். (1 தீமோத்தேயு 1:11) சாலொமோனைப் பயன்படுத்தி இந்த உண்மையை பைபிளில் பின்வருமாறு எழுதும்படி அவர் செய்திருக்கிறார்: “நான் களிப்பைப் புகழ்ந்தேன்; புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; . . . ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே.” (பிரசங்கி 3:1, 4, 13; 8:15) வீட்டில் வைக்கிற விருந்திலோ உண்மை வணக்கத்தார் நடத்துகிற சிறிய பார்ட்டிகளிலோ இப்படிப்பட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கலாம்.—யோபு 1:4, 5, 18; லூக்கா 10:38-42; 14:12-14.
4. பார்ட்டிக்கு ஏற்பாடு செய்கிற ஒருவர் எதில் அக்கறை காட்ட வேண்டும்?
4 இத்தகைய ஒரு பார்ட்டியை பொறுப்பேற்று நடத்துகிறீர்கள் என்றால், அதற்கான திட்டத்தை நீங்கள் கவனமாகப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். விருந்து வைத்து உரையாடி மகிழ்வதற்காக சபையார் சிலரை மட்டும் அழைப்பதாக இருந்தாலும்கூட இதைச் செய்ய வேண்டும். (ரோமர் 12:13) ‘சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும்’ நடைபெறுகிறதா, ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்திற்கு’ இசைய இருக்கிறதா என்பதைப் பார்க்க நீங்கள் விரும்புவீர்கள். (1 கொரிந்தியர் 14:40; யாக்கோபு 3:17) “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். . . . இடறலற்றவர்களாயிருங்கள்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 10:31, 33) அப்படியானால், குறிப்பாகக் கவனம் செலுத்த வேண்டிய சில அம்சங்கள் யாவை? அவற்றை முன்கூட்டியே பரிசீலித்துப் பார்ப்பது, நீங்களும் விருந்தாளிகளும் நடந்துகொள்ளும் விதம் உங்களுடைய விசுவாசத்தை செயலில் காட்டுமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள உதவும்.—ரோமர் 12:2.
பார்ட்டி எப்படி இருக்க வேண்டும்?
5. பார்ட்டி நடத்துகிறவர் மதுபானங்கள், இசை ஆகியவற்றிற்கு ஏன் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்?
5 பார்ட்டி நடத்துகிற அநேகர், மதுபானங்களை அளிப்பதா வேண்டாமா என்ற கேள்வியை எதிர்ப்பட்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி தரும் பார்ட்டியாக இருப்பதற்கு இவை அவசியமில்லை. இயேசு தம்மிடத்தில் வந்த பெரும் கூட்டத்தாருக்கு, அப்பத்தையும் மீனையும் பன்மடங்காக்கி உணவளித்தார். ஆனால், அவர்களுக்கு அற்புதமாய் மதுவை, அதாவது திராட்சைரசத்தை அளித்ததாக அப்பதிவு சொல்வதில்லை; அப்படிச் செய்ய அவரால் முடிந்திருக்கும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (மத்தேயு 14:14-21) மதுபானங்களை அளிக்க நீங்கள் தீர்மானித்தால், எந்தளவு அளிக்கலாம் என்பதை நிதானியுங்கள்; அவற்றை விரும்பாதவர்களுக்கு அளிக்க பிற பானங்கள் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். (1 தீமோத்தேயு 3:2, 3, 8; 5:23; 1 பேதுரு 4:3) “பாம்பைப்போல் கடிக்கும்” ஒன்றைக் குடிப்பதற்கு வற்புறுத்தப்படுவதைப்போல் யாரையும் உணர வைத்துவிடாதீர்கள். (நீதிமொழிகள் 23:29-32) இசை அல்லது பாடலைப் பற்றி என்ன சொல்லலாம்? உங்களுடைய பார்ட்டியில் இசை இருக்குமானால், தாளத்தையும் பாடல் வரிகளையும் மனதில் வைத்து பாடல்களைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. (கொலோசெயர் 3:8; யாக்கோபு 1:21) ராஜ்ய இன்னிசையைப் போடுவது அல்லது ராஜ்ய பாடல்களை ஒன்றுசேர்ந்து பாடுவது இனிமையான சூழலை உருவாக்க உதவுகிறது என்பதை அநேக கிறிஸ்தவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். (எபேசியர் 5:19, 20) அதே சமயத்தில், அவற்றின் சத்தத்தையும் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்; அப்போதுதான் அது சுவாரஸ்யமான உரையாடலுக்கு தடையாகவும் இருக்காது, அக்கம்பக்கத்தாருக்குத் தொல்லையாகவும் இருக்காது.—மத்தேயு 7:12.
6. பார்ட்டி நடத்துபவர், உரையாடுதல் அல்லது பிற நடவடிக்கைகள் சம்பந்தமாக தன் விசுவாசம் உயிருள்ளதாய் இருப்பதை எப்படிக் காட்டலாம்?
6 பார்ட்டிகளின்போது, கிறிஸ்தவர்கள் வித்தியாசமான விஷயங்களைப் பற்றி பேசலாம், ஏதாவது பிரசுரத்திலிருந்து சத்தமாக வாசிக்கலாம், அல்லது சுவாரஸ்யமான அனுபவங்களைச் சொல்லலாம். ஆனால், பேசும் விஷயங்கள் நெறிகெட்டதாக திசைமாறுகையில், பார்ட்டி நடத்துபவர் அதைச் சாதுரியமாக வேறு விஷயத்திற்கு மாற்றலாம். ஒருவரே பேசிக்கொண்டிராதபடியும் அவர் கவனமாய் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி யாராவது பேசுவது தெரிந்தால், மற்றவர்களையும் பேச்சில் ஈடுபடுத்த ஞானமாக அவர் முயற்சி எடுக்கலாம். அதற்காக ஒருவேளை அவர் இளைஞர்களையும் பேச்சில் பங்குகொள்ள அழைக்கலாம் அல்லது எல்லாருமே தங்களுடைய கருத்தைப் பகிர்ந்துகொள்ள உதவும் ஒரு விஷயத்தை பேச்சுப் பொருளாக்கலாம். இப்படி எல்லாரும் பேச்சில் கலந்துகொள்ளும்போது, சிறியோரும் பெரியோரும் அதை அனுபவித்து மகிழ்வார்கள். பார்ட்டியை ஒழுங்குபடுத்துபவராக நீங்கள் ஞானமாகவும் சாதுரியமாகவும் காரியங்களை செய்வீர்களானால், விருந்தாளிகளுக்கு உங்களுடைய ‘நியாயத்தன்மை தெரியவரும்.’ (பிலிப்பியர் 4:5, NW) உங்களுடைய விசுவாசம் உயிருள்ளதாய் இருப்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்வார்கள்; இது உங்கள் வாழ்க்கையின் எல்லா அம்சத்தோடும் சம்பந்தப்பட்டிருப்பதை அறிந்துகொள்வார்கள்.
திருமணங்களும் வரவேற்புகளும்
7. திருமணங்களையும் அதோடு சம்பந்தப்பட்ட வரவேற்புகளையும் ஏன் கவனமாகத் திட்டமிட வேண்டும்?
7 கிறிஸ்தவ திருமணம் நடைபெறும் சமயம் மகிழ்ச்சி தரும் விசேஷ தருணமாகும். இயேசு, அவரது சீஷர்கள் உட்பட கடவுளுடைய முற்கால ஊழியர்கள், மகிழ்ச்சி தரும் அத்தகைய நிகழ்ச்சிகளிலும் விருந்துகளிலும் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். (ஆதியாகமம் 29:21, 22; யோவான் 2:1, 2) என்றாலும், இன்றைய திருமண வரவேற்புகளை நல்ல பகுத்துணர்வோடும் கிறிஸ்தவ சமநிலையோடும் திட்டமிடுவதற்கு விசேஷ முயற்சி தேவை என்பதை சமீப கால அனுபவங்கள் காட்டுகின்றன. இவை வாழ்க்கையின் சாதாரண அம்சங்களாக இருந்தாலும், ஒரு கிறிஸ்தவர் தன்னுடைய விசுவாசத்தை வெளிக்காட்டுவதற்கு வாய்ப்பளிக்கின்றன.
8, 9. அநேக திருமணங்களில் செய்யப்படும் ஏற்பாடுகள், 1 யோவான் 2:16, 17-ல் உள்ள வார்த்தைகளை எவ்வாறு உறுதிப்படுத்துகின்றன?
8 கடவுளுடைய நியமங்களை அறியாத, அவற்றைப் பொருட்படுத்தாத அநேகர், திருமணத்தை மிதமிஞ்சிய ஆடம்பரத்துடன் நடத்த வேண்டிய நிகழ்ச்சியாகக் கருதுகிறார்கள்; அந்தச் சமயத்தில் மிதமிஞ்சி என்ன செய்தாலும் அதில் தவறேதுமில்லை என்றும் நினைக்கிறார்கள். ஓர் ஐரோப்பிய பத்திரிகையில், புதிதாய் மணமான ஒரு மனைவி தன்னுடைய “ராயல்” திருமணத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டாள்: ‘12 குதிரை வண்டிகளும் இசை மழைபொழியும் இன்னிசை குழுவினரை ஏற்றியிருந்த ஒரு வண்டியும் பின்தொடர, நான்கு குதிரைகள் பூட்டிய ரதத்தில் நாங்கள் முன்னால் சவாரி செய்தோம். அதன் பிறகு, ராஜவிருந்தென்ன! அசத்தும் இசையென்ன! எல்லாமே பிரமாதம்! என் விருப்பப்படியே, அன்றைக்கு நான் ராஜகுமாரியாய் திகழ்ந்தேன்.’
9 திருமண ஏற்பாடுகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும், இதுபோன்ற உணர்ச்சி வயப்பட்ட வார்த்தைகள் அப்போஸ்தலன் யோவான் எழுதிய பின்வரும் வார்த்தைகளை உறுதிப்படுத்துகின்றன: “மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய [அதாவது, ஜீவனத்தின் பெருமையை பகட்டாகக் காட்டுவதாகிய] உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.” ராஜா-ராணி கதைகளில் வருகிற திருமணத்தைப் போல தங்களுடைய திருமணத்தைத் தடபுடலான “ராஜ” விருந்தோடு ஆடம்பரமாக நடத்த முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவ ஜோடிகள் விரும்புவதை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? மாறாக, அவர்களுடைய கண்ணோட்டம், “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என்ற ஆலோசனைக்கு ஏற்ப இருக்க வேண்டும்.—1 யோவான் 2:16, 17.
10. (அ) திருமணத்தை சமநிலையுடன் நடத்த திட்டமிடுவது ஏன் முக்கியம்? (ஆ) யாரையெல்லாம் அழைக்கலாம் என்பதை எப்படித் தீர்மானிக்க வேண்டும்?
10 கிறிஸ்தவ மணமக்கள், எதார்த்தமானவர்களாகவும் நியாயத்தன்மையுள்ளவர்களாகவும் இருப்பதற்கு பைபிள் அவர்களுக்கு உதவுகிறது. மணநாள் முக்கியமான நாள்தான்; எனினும், நித்திய வாழ்க்கையை எதிர்நோக்கி இருக்கிற அந்த இரு கிறிஸ்தவர்களுக்கும் இது அவர்களுடைய மணவாழ்வின் ஓர் ஆரம்பம் மட்டுமே என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு பெரிய விருந்தை வைக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அவர்கள் பார்ட்டி வைக்க விரும்பினால், அதற்காகும் செலவை கணக்கிட்டு, அதை எப்படி நடத்தலாம் என்பதைத் திட்டமிடுவார்கள். (லூக்கா 14:30) கிறிஸ்தவர்களாக அவர்களுடைய மணவாழ்வில், பைபிளின்படி கணவனே தலைமை ஸ்தானம் வகிப்பார். (1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 5:22, 23) ஆகவே, திருமண வரவேற்புக்கு மணமகனே முக்கிய பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அதனால், திருமண விருந்துக்கு யாரையெல்லாம் அழைக்கலாம் அல்லது எத்தனை பேரை அழைக்க முடியும் போன்ற விஷயங்களை, தான் கரம்பிடிக்கப் போகிறவளிடம் அவர் அன்புடன் ஆலோசிப்பார். மணமுடிக்கவிருப்போர் தங்களுடைய எல்லா நண்பர்களையும் உறவினர்களையும் விருந்துக்கு அழைப்பது சாத்தியமற்றதாய் இருக்கலாம் அல்லது நடைமுறைக்கு ஒத்துவராததாய் இருக்கலாம்; ஆகவே, சமநிலையுடன் சில தீர்மானங்கள் எடுக்க வேண்டியிருக்கலாம். சக கிறிஸ்தவர்கள் சிலரை அழைக்காமற்போனால், அவர்கள் தங்களைப் புரிந்துகொள்வார்கள், வருத்தப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை மணமுடிக்கவிருக்கும் அந்த இருவருக்கும் இருக்க வேண்டும்.—பிரசங்கி 7:9.
‘பந்திவிசாரிப்புக்காரன்’
11. திருமணத்தின்போது ‘பந்திவிசாரிப்புக்காரன்’ என்ன செய்கிறார்?
11 தங்களுடைய திருமணத்திற்குப் பிறகு பார்ட்டி கொடுக்க மணமக்கள் விரும்பினால், அது கண்ணியமாய் நடப்பதை அவர்கள் எப்படி உறுதிசெய்துகொள்ளலாம்? கானா ஊரில் இயேசு கலந்துகொண்ட ஒரு திருமண விருந்து சம்பந்தமாக குறிப்பிடப்பட்டுள்ள ஓர் அம்சத்தைப் பின்பற்றுவது சிறந்தது என்பதை யெகோவாவின் சாட்சிகள் பல வருடங்களாகவே அறிந்திருக்கிறார்கள். அத்திருமணத்தில் ‘பந்திவிசாரிப்புக்காரன்’ ஒருவர் இருந்தார், அவர் பொறுப்புள்ளவராகவும் விசுவாசியாகவும் இருந்தார். (யோவான் 2:9, 10) அவ்வாறே, ஞானமுள்ள ஒரு மணமகன், இந்த முக்கிய பொறுப்பை ஏற்றுநடத்துவதற்கு ஆன்மீக ரீதியில் முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவ சகோதரரைத் தேர்ந்தெடுப்பார். மணமகனின் விருப்பங்களையும் நாட்டங்களையும் அவர் நன்கு அறிந்துகொண்டு, பார்ட்டிக்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டியவற்றைச் செய்ய முடியும்.
12. மதுபானங்களை அளிப்பது சம்பந்தமாக மணமகன் எதற்குக் கவனம் செலுத்த வேண்டும்?
12 பாரா 5-ல் சொல்லப்பட்டுள்ளதற்கு இசைய, மணமக்கள் சிலர் தங்களுடைய திருமண விருந்தில் மதுபானங்களை அளிக்க விரும்புவதில்லை; அளவுக்கு அதிகமாகக் குடித்து அந்த விழாவின் சந்தோஷத்தையும் சிறப்பையும் குலைத்துப்போடுவதைத் தவிர்ப்பதற்காகவே அவ்வாறு செய்கிறார்கள். (ரோமர் 13:13; 1 கொரிந்தியர் 5:11) ஒருவேளை, அவர்கள் மதுபானத்தை அளிப்பதாக இருந்தால், குறைவான அளவு வைக்கப்பட்டுள்ளதா அல்லது அவை மிதமான அளவு பரிமாறப்படுகிறதா என்பதை மணமகன் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். கானா ஊரில் இயேசு கலந்துகொண்ட திருமணத்தில் திராட்சைரசம் பரிமாறப்பட்டது; அதில், அவர் நல்ல தரமான திராட்சைரசத்தை அளித்தார். அந்த விருந்தின் பந்திவிசாரிப்புக்காரன் பின்வருமாறு சொன்னது ஆர்வத்துக்குரியது: “எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்த [அதாவது, குடித்து வெறித்த] பின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே.” (யோவான் 2:10) குடிவெறியை இயேசு நிச்சயம் ஊக்குவிக்கவில்லை; ஏனெனில், அதை அவர் தவறானதாகக் கருதினார். (லூக்கா 12:45, 46) திராட்சைரசத்தின் தரத்தை அந்த விசாரிப்புக்காரன் வியந்து பாராட்டியபோது தான் கலந்துகொண்ட சில விருந்துகளில் விருந்தாளிகள் சிலர் வெறிக்குமளவு குடித்திருந்ததைத் தான் கவனித்திருந்ததாகச் சொன்னார். (அப்போஸ்தலர் 2:15; 1 தெசலோனிக்கேயர் 5:7) ஆகவே, பின்வரும் இந்தத் தெளிவான ஆலோசனையை விருந்தினர் எல்லாரும் பின்பற்றுகிறார்களா என்பதை மணமகனும் பந்திவிசாரிப்புக்காரனாக அவர் நியமிக்கிற நம்பகமான கிறிஸ்தவரும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்: ‘துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாதீர்கள்.’—எபேசியர் 5:18; நீதிமொழிகள் 20:1; ஓசியா 4:11.
13. திருமண வரவேற்பில் இசை இருக்குமானால், மணமக்கள் எதற்குக் கவனம் செலுத்த வேண்டும், ஏன்?
13 பிற பார்ட்டிகளைப் போலவே, திருமண வரவேற்பில் இசை இருக்குமானால், அதன் சத்தத்திற்குத் தகுந்த கவனம் செலுத்த வேண்டும்; அப்போதுதான் எல்லாரும் உரையாடி மகிழ முடியும். ஒரு கிறிஸ்தவ மூப்பர் இவ்வாறு குறிப்பிட்டார்: “சாயங்காலம் ஆக ஆக, கூடிவந்திருப்போரின் பேச்சு சத்தம் அதிகமாகையில் அல்லது டான்ஸ் ஆரம்பிக்கையில், இசையின் சத்தமும் அதிகமாகிறது. குறைவாக இருந்த இசையின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கடைசியில் பேசவே முடியாதபடி செய்துவிடுகிறது. திருமண வரவேற்பு சமயம், எல்லாருடனும் கூடிக்குலவுவதற்கான நல்ல சந்தர்ப்பம். இசையை சத்தமாக வைத்து இந்தச் சந்தர்ப்பத்தைக் கெடுத்துப் போடுவது எவ்வளவு வருத்தமானது!” இங்கும்கூட, இசை எப்படிப்பட்டதாய் இருக்கிறது, சத்தம் எந்தளவுக்கு இருக்கிறது போன்றவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பு மணமகனுக்கும், பந்திவிசாரிப்புக்காரனுக்கும் உரியது. இசைக்குழுவினராக வெளியாட்களை நீங்கள் ஏற்பாடு செய்திருந்தாலும் செய்திராவிட்டாலும் அவர்களிடம் இந்தப் பொறுப்பை நீங்கள் விட்டுவிடக்கூடாது. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே [அதாவது, பெயரிலேயே] செய்யுங்கள்.’ (கொலோசெயர் 3:17) விருந்துக்கு (அதாவது, வரவேற்புக்கு) பின் விருந்தாளிகள் வீட்டிற்குச் சென்ற பிறகு, மணமக்கள் எல்லாவற்றையும் இயேசுவின் பெயரில் செய்தார்கள் என்று சொல்லுமளவுக்கு அந்த இசை இருந்ததாக அவர்கள் நினைத்துப் பார்ப்பார்களா? அவர்கள் அப்படி நினைத்துப் பார்க்கும்படி இருக்க வேண்டும்.
14. திருமணத்தைக் குறித்ததில் கிறிஸ்தவர்களுக்கு எவை இனிய நினைவை ஏற்படுத்த வேண்டும்?
14 ஆம், நன்கு ஏற்பாடு செய்து நடத்தப்படும் திருமணம் நெஞ்சைவிட்டு நீங்காத இனிய நினைவை ஏற்படுத்தும். ஆடம், எடிட்டா தம்பதியருக்கு திருமணமாகி 30 வருடங்களாகிவிட்டன. அவர்கள் கலந்துகொண்ட ஒரு கல்யாணத்தைப் பற்றி இவ்வாறு கூறினார்கள்: “அங்கு கிறிஸ்தவ சூழல் நிலவியதை உண்மையிலேயே உணர முடிந்தது. யெகோவாவைப் புகழ்ந்து பாடல்கள் பாடப்பட்டன, அதோடு சில நல்ல கேளிக்கைகளும் இடம்பெற்றன. டான்ஸுக்கும் இசைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அந்தக் கல்யாணம் ரொம்ப அருமையாக இருந்தது, உற்சாகத்தைத் தந்தது, எல்லாமே பைபிள் நியமங்களுக்கு இசைய நடந்தது.” இதுவரை பார்த்த விதமாக, மணமக்கள் தங்களுடைய விசுவாசத்தை செயலில் காட்ட நிறைய காரியங்களைச் செய்ய முடியும்.
அன்பளிப்புகள்
15. அன்பளிப்புகள் சம்பந்தமாக எந்த பைபிள் ஆலோசனையைக் கடைப்பிடிக்கலாம்?
15 அநேக நாடுகளில், மணமக்களுக்கு நண்பர்களும் உறவினர்களும் அன்பளிப்பு கொடுப்பது வழக்கம். நீங்கள் அப்படிக் கொடுப்பதாக இருந்தால் எதை நினைவில் வைக்கலாம்? ஒருவருடைய ‘ஜீவனத்தின் பெருமையை பகட்டாகக் காட்டுவதை’ குறித்து அப்போஸ்தன் யோவான் சொன்ன குறிப்பை நினைவுபடுத்திப் பாருங்கள். அப்படிப் பகட்டாகக் காட்டிக்கொள்வது, தங்கள் விசுவாசத்தை செயலில் வெளிக்காட்டுகிற கிறிஸ்தவர்களுக்கு உரியதல்ல, ஆனால் ‘ஒழிந்துபோகும் உலகத்துக்குரியது’ என்பதை அவர் தெளிவுபடுத்தினார். (1 யோவான் 2:16, 17) தேவ ஆவியால் ஏவப்பட்டு யோவான் சொன்னதை வைத்துப் பார்க்கையில், புதுமணத் தம்பதியர் தங்களுக்கு அன்பளிப்பு கொடுத்தவர்களின் பெயரை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டுமா? மக்கெதோனியாவையும் அகாயாவையும் சேர்ந்த கிறிஸ்தவர்கள் எருசலேமிலிருந்த சகோதரர்களுக்கு நன்கொடைகளைக் கொடுத்தார்கள். ஆனால், எல்லாருக்கும் தெரியும்படி அவர்களுடைய பெயர்களை அறிவித்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. (ரோமர் 15:26) அன்பளிப்பு கொடுக்கும் கிறிஸ்தவர்கள் தேவையில்லாமல் தங்கள்மீது கவனத்தை ஈர்ப்பதைத் தவிர்ப்பதற்காக தங்களுடைய பெயரைத் தெரிவிக்க விரும்ப மாட்டார்கள். இதன் சம்பந்தமாக, மத்தேயு 6:1-4-ல் காணப்படுகிற இயேசுவின் ஆலோசனையை சிந்தியுங்கள்.
16. அன்பளிப்புகளைக் குறித்ததில் மற்றவர்கள் தர்மசங்கடப்படாதிருக்க புதுமணத் தம்பதிகள் என்ன செய்யலாம்?
16 அன்பளிப்பு கொடுத்தவர்களின் பெயரை அறிவிப்பதானது, யாருடைய அன்பளிப்பு சிறந்தது அல்லது விலையுயர்ந்தது என்ற ‘போட்டி மனப்பான்மையையே தூண்டிவிடும்.’ ஆகவே, ஞானமுள்ள கிறிஸ்தவ மணமக்கள் அன்பளிப்பு கொடுப்பவர்களின் பெயர்களை யாவரறிய அறிவிப்பதில்லை. இப்படிச் செய்வது, அன்பளிப்பு கொடுக்க முடியாத நிலையில் உள்ளவர்களை தர்மசங்கடப்படுத்தலாம். (கலாத்தியர் 5:26, NW; 6:10) அன்பளிப்பைக் கொடுத்தவர் யார் என்பதை புதுமணத் தம்பதியர் அறிந்துகொள்வதில் தவறில்லைதான். அன்பளிப்புடன் கொடுக்கப்படுகிற ‘கார்ட்டிலிருந்து’ அவர்கள் அதை அறிந்துகொள்ள முடியும்; ஆனால், அதை சத்தமாக வாசிக்கக் கூடாது. அன்பளிப்புகளை வாங்குவது, கொடுப்பது, பெற்றுக்கொள்வது என எதுவாக இருந்தாலும், இந்தத் தனிப்பட்ட விஷயத்தில்கூட நம்முடைய விசுவாசத்தை செயலில் காட்டுவதற்கு நம் எல்லாருக்குமே வாய்ப்பு உள்ளது.a
17. கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தையும் செயல்களையும் குறித்ததில் என்ன இலக்கை வைக்க வேண்டும்?
17 ஒழுக்கம் தவறாமல் வாழ்வது, கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்வது, பிரசங்க வேலையில் பங்குகொள்வது ஆகியவற்றில் மட்டும் நம்முடைய விசுவாசத்தைக் காட்டினால் போதாது. செய்யும் எல்லாக் காரியங்களிலும் நம் விசுவாசம் உயிருள்ளதாய் இருப்பதை நாம் ஒவ்வொருவரும் வெளிக்காட்டுவோமாக. ஆம், இதுவரை ஆராய்ந்த விஷயங்கள் உட்பட எல்லாவற்றிலும் நம் செயல்களை ‘நிறைவாய்’ செய்வதன் மூலம் நம் விசுவாசத்தைக் காட்டலாம்.—வெளிப்படுத்துதல் 3:2.
18. கிறிஸ்தவ திருமணங்கள் மற்றும் பார்ட்டிகள் சம்பந்தமாக யோவான் 13:17-ல் உள்ள வார்த்தைகள் எப்படி உண்மையாக இருக்கின்றன?
18 இயேசு கிறிஸ்து தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களின் கால்களை கழுவும் சாதாரண செயலைச் செய்ததன் மூலம் சிறந்த முன்மாதிரி வைத்தார். அதைச் செய்த பிறகு, அவர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.” (யோவான் 13:4-17) நாம் வாழும் பகுதியில், நம் வீட்டிற்கு வருகிற விருந்தினருடைய கால்களைக் கழுவ வேண்டிய அவசியமில்லாதிருக்கலாம் அல்லது அப்படிப்பட்ட வழக்கம் இல்லாதிருக்கலாம். எனினும், இந்தக் கட்டுரையில் நாம் பார்த்தபடி பார்ட்டிகளிலும் கிறிஸ்தவ திருமண விருந்துகளிலும் மட்டுமல்ல, வாழ்க்கையின் பிற அம்சங்களிலும் அன்பான, கரிசனையான செயல்கள் மூலம் நம் விசுவாசத்தைக் காட்டலாம். நாம் மணம் செய்துகொள்ளப் போகிறவர்களாக இருந்தாலும்சரி, திருமணத்தின்போது அல்லது அதற்குப் பிறகு நடக்கும் கிறிஸ்தவ பார்ட்டியில் கலந்துகொள்பவர்களாக இருந்தாலும்சரி, நம் விசுவாசத்தைச் செயல்கள் மூலம் வெளிக்காட்டலாம்.
[அடிக்குறிப்பு]
a திருமணங்கள் மற்றும் வரவேற்புகள் சம்பந்தமான கூடுதல் அம்சங்கள் “மணநாளின் மகிழ்ச்சிக்கும் கண்ணியத்திற்கும் மெருகூட்டுங்கள்” என்ற அடுத்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.
எப்படி பதில் அளிப்பீர்கள்?
பின்வருவனவற்றில் உங்களுடைய விசுவாசத்தை எப்படி வெளிக்காட்டலாம்?
• பார்ட்டிகளை ஏற்பாடு செய்கையில்.
• திருமணத்தையோ வரவேற்பையோ ஏற்பாடு செய்கையில்.
• அன்பளிப்புகளை கொடுக்கையில் அல்லது பெற்றுக்கொள்கையில்.
[பக்கம் 24-ன் படம்]
கொஞ்சம் பேரை அழைத்தாலும்கூட அது ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்திற்கு’ இசைய இருக்க வேண்டும்