கேள்விப் பெட்டி
◼ திருமணத்திற்காக ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்த மணமக்கள் விரும்பினால் அவர்கள் மூப்பர்களுடன் எந்தெந்த விஷயங்களைக் குறித்துப் பேச வேண்டும்?
பைபிள் நியமங்களுக்கு இசைய ஏற்பாடு செய்யப்படுகிற திருமணங்கள் யெகோவாவுக்குப் பெருமை சேர்க்கின்றன. முக்கியமாய், ராஜ்ய மன்றத்தில் நடக்கிற திருமணங்களைப் பொருத்தவரை இது உண்மையாய் இருக்கிறது; ஏனெனில், இங்கு நடக்கிற கூட்டங்களை வைத்து அந்தப் பகுதியிலுள்ளவர்கள் நம்முடைய அமைப்பு எப்படிப்பட்டதென தெரிந்துகொள்கிறார்கள். எனவே, ‘சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படுவதற்கு,’ தங்களுடைய திருமணத்தை ராஜ்ய மன்றத்தில் நடத்த விரும்புகிற மணமக்களுடன் திருமணம் சம்பந்தமாக சில விஷயங்களை மூப்பர்கள் சிந்திப்பது நல்லது.—1 கொ. 14:40.
தங்களுடைய திருமணத்தை ராஜ்ய மன்றத்தில் நடத்த விரும்புகிற மணமக்கள், அந்த மன்றத்தைப் பயன்படுத்த அனுமதி கேட்டு சபையின் ஊழியக் குழுவுக்குக் கடிதம் எழுத வேண்டும். எந்தத் தேதியில், எந்த நேரத்தில் ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு வெகு முன்னதாகவே இந்தக் கடிதத்தை அவர்கள் கொடுக்க வேண்டும். திருமணத்திற்காகக் கூட்ட நேரங்களை மூப்பர்கள் மாற்ற மாட்டார்கள் என்பதை அவர்கள் மனதில் வைக்க வேண்டும். அதோடு, மணமகனும் மணமகளும் நல்ல முன்மாதிரியாகவும் பைபிள் நியமங்களுக்கும் யெகோவாவின் நீதிநெறிகளுக்கும் இசைய வாழ்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்.
திருமண வைபவம் எந்த விதத்திலும் கடவுளுடைய கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தாதிருக்க, திருமண ஏற்பாடுகள் சம்பந்தமாகத் தீர்மானம் எடுப்பதற்கு முன் அவற்றைக் குறித்து மணமக்கள் ஊழியக் குழுவுடன் கலந்துபேச வேண்டும். தங்களுடைய விருப்புவெறுப்புகளை மூப்பர்கள் மணமக்கள்மீது திணிக்க மாட்டார்கள்; ஆனால், ஆட்சேபணைக்குரிய காரியங்கள் திட்டமிடப்பட்டிருந்தால் மூப்பர்களின் அறிவுரைக்கிசைய அவற்றில் மாற்றங்களைச் செய்ய மணமக்கள் மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். கிங்டம் மெலடீஸ் அல்லது நம்முடைய பாட்டுப் புத்தகத்தில் காணப்படும் பாடல்களுக்கான இசையையே பயன்படுத்த வேண்டும். ராஜ்ய மன்றத்தை அலங்கரிப்பதாக அல்லது அங்குள்ள நாற்காலிகளை மாற்றி அமைப்பதாக இருந்தால் அவற்றிற்கும் அனுமதி பெற வேண்டும். புகைப்படங்களையோ வீடியோவையோ எடுப்பதாக இருந்தால், அவை அந்த நிகழ்ச்சிக்குரிய கண்ணியத்தைக் குலைத்துப்போடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். சபை ஏற்பாடுகளுக்கு இடையூறாக இல்லாதவரை ராஜ்ய மன்றத்தை ஒத்திகைக்குப் பயன்படுத்த மூப்பர்கள் அனுமதிக்கலாம். அரசாங்க விதிப்படி, ராஜ்ய மன்றத்திலுள்ள அறிவிப்புப் பலகையில் திருமணத்திற்கான நோட்டீஸைப் போட வேண்டும், ஆனால், அழைப்பிதழ்களைப் போடக் கூடாது. ராஜ்ய மன்றத்தில் நடக்கவிருக்கிற திருமண வைபவத்தைப் பற்றிய சுருக்கமான அறிவிப்பை ஊழியக் கூட்டத்தில் மூப்பர்கள் செய்யலாம். ராஜ்ய மன்றத்தில் கொடுக்கப்படவுள்ள திருமண பேச்சைக் கேட்க யார் வேண்டுமானாலும் வரலாம்; ஆனால் இது, திருமண விருந்தில் கலந்துகொள்ள எல்லாருமே அழைக்கப்பட்டிருப்பதாக அர்த்தப்படுத்தாது. (யோவா. 2:2) அந்த ராஜ்ய மன்றத்தை வேறு சபைகள் பயன்படுத்தினால், அந்தச் சமயத்தில் பிற நிகழ்ச்சிகளை அங்கு நடத்த முடியாதென்பதை அவற்றிடம் தெரிவிப்பதும் முக்கியம்.
திருமணத்தில் கலந்துகொள்ள வரும் மணமக்களின் உறவினர்கள் எல்லாருமே முழுக்காட்டுதல் பெற்றவர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. எனினும், அவர்களுடைய பழக்கவழக்கங்கள் பைபிள் நியமங்களுக்கு முற்றிலும் நேர்மாறாக இருந்தாலோ அவர்களுடைய நடை உடை பாவனை மற்றவர்களின் மனதில் கேள்விகளை எழுப்பினாலோ அத்தகையவர்களைத் திருமணத்திற்கு அழைக்காதிருப்பது நல்லது. மூப்பர் இருந்தால் அவரே அந்தத் திருமண வைபவத்தை நடத்த வேண்டும். ஏனெனில், மூப்பர்கள், கடவுளுடைய வார்த்தையைப் போதிக்க தகுதி பெற்றவர்கள்; எனவே, முக்கியமான இந்த நிகழ்ச்சிக்குப் பொருத்தமான பைபிள் நியமங்களை விளக்குவதற்கு அவர்களே அதிக தகுதிவாய்ந்தவர்கள்.—1 தீ. 3:2.
திருமணத்தை நடத்தி வைக்கிற மூப்பரின் நற்பெயரும் உட்பட்டிருப்பதால் திருமண ஏற்பாடுகள் பற்றிய விவரங்களை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும். திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன் இருவரும் பழகிய காலத்தில் ஒழுக்கமாக நடந்துகொண்டதைப் பற்றித் தெரிந்துகொள்ள அவர்களைச் சந்தித்துப் பேசுவார்; அந்தச் சமயத்தில் அவர்கள் ஒளிவுமறைவில்லாமல் எல்லாவற்றையும் அவரிடம் சொல்ல வேண்டும். மணமக்களில் ஒருவர் மறுமணம் செய்கிறவராக இருந்தால், அவர் வேதப்பூர்வமாகவும் சட்டப்பூர்வமாகவும் திருமணம் செய்ய தகுதிபெற்றிருப்பதற்கு அத்தாட்சி அளிக்க வேண்டும். (மத். 19:9) அந்தச் சமயத்தில் முறையாக விவாகரத்து செய்திருப்பதற்கான பத்திரத்தை மூப்பரிடம் காட்ட வேண்டும்.
மூப்பர்களிடம் மணமக்கள் எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லும்போதும், அவர்களுடன் முழுமையாய் ஒத்துழைக்கும்போதும், திருமண வைபவம் எல்லாருக்குமே ஆனந்தம் அளிக்கும்.—நீதி. 15:22; எபி. 13:17.