கடவுளாலும் மனிதராலும் மதிக்கப்படுகிற திருமணங்கள்
“கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; . . . இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.”—யோவான் 2:1, 2.
1. கானாவில் இயேசு செய்த காரியம் எதனிடம் நம் கவனத்தை ஈர்க்கிறது?
கடவுளுடைய மக்கள் மத்தியில் நடைபெறுகிற மதிப்புக்குரிய திருமணம் பெருமகிழ்ச்சி அளிப்பதை இயேசுவும், அவருடைய தாயும், அவரது சீஷர்கள் சிலரும் அறிந்திருந்தார்கள். ஒரு திருமண வைபவத்தின்போது கிறிஸ்து ஓர் அற்புதத்தை நிகழ்த்தி, அதை இன்னும் மகிழ்ச்சிமிக்கதாய் ஆக்கினார்; அதுவே அவர் நிகழ்த்திய முதல் அற்புதமாகும். (யோவான் 2:1-11) சிலர் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாய் யெகோவாவுக்குச் சேவை செய்ய விரும்புகிறார்கள்; அத்தகைய கிறிஸ்தவர்களின் திருமணங்களில் கலந்துகொண்டு நீங்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள். ஒருவேளை நீங்களே திருமணம் செய்துகொள்ளப் போகிறவராக அல்லது உங்கள் நண்பருடைய திருமணம் வெற்றிகரமாக நடப்பதற்கு உதவுபவராக இருக்கலாம். அப்படியானால், வெற்றிகரமான திருமணத்திற்கு எது உதவும்?
2. திருமணங்களைப் பற்றிய என்ன தகவல் பைபிளில் உள்ளது?
2 ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிடுகையில் கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆலோசனையைப் பின்பற்றுவது மிகவும் பயனுள்ளது என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:16, 17) ஆனால், கிறிஸ்தவ திருமணங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்குரிய விளக்கமான விவரங்களை பைபிள் தருவதில்லை என்பது உண்மையே. ஏனெனில், சம்பிரதாயங்களும் சட்ட ரீதியான காரியங்களும் இடத்துக்கு இடம், காலத்திற்குக் காலம் வேறுபடுகின்றன. உதாரணமாக, பூர்வ இஸ்ரவேலில் முறைப்படி திருமண வைபவம் என்ற ஒன்று நடைபெறவில்லை. திருமண நாளில், மணமகளை மணமகன் தன்னுடைய வீட்டிற்கோ தன் தகப்பனுடைய வீட்டிற்கோ அழைத்து வருவான். (ஆதியாகமம் 24:67; ஏசாயா 61:10; மத்தேயு 1:24, NW) இப்படி யாவரறிய அழைத்து வருவதுதான் திருமணமாகக் கருதப்பட்டது; இன்று அநேக திருமணங்களில் பொதுவாக இடம்பெறும் முறைப்படியான வைபவம் எதுவும் அப்போது இருக்கவில்லை.
3. கானாவில் நடந்த எந்த நிகழ்ச்சிக்கு இயேசு உதவினார்?
3 இஸ்ரவேலரைப் பொறுத்தவரை மணமகளை இவ்வாறு அழைத்து வருவதுதான் திருமணம் ஆகும். அதன் பிறகு, யோவான் 2:1-ல் சொல்லப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு விருந்தில் அவர்கள் கலந்துகொள்வார்கள். அநேக பைபிள் மொழிபெயர்ப்புகள் இந்த வசனத்தை இப்படி மொழிபெயர்த்துள்ளன: ‘கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது.’ ஆனால், மூல மொழியிலுள்ள அந்த வார்த்தையை “திருமண விருந்து” என மொழிபெயர்ப்பதே சரியானது.a (மத்தேயு 22:2-10; 25:10; லூக்கா 14:8) இயேசு, யூத திருமணம் ஒன்றில் கலந்துகொண்டதாகவும், அப்போது நடந்த விருந்தை மிகுந்த மகிழ்ச்சி தருவதாய் ஆக்குவதற்கு அவர் உதவியதாகவும் அந்தப் பதிவு தெளிவுபடுத்துகிறது. என்றாலும், அன்றைய திருமணங்கள், இன்றைய திருமணங்களிலிருந்து வித்தியாசப்பட்டவையாக இருந்தன என்பதே முக்கிய குறிப்பு.
4. கிறிஸ்தவர்கள் சிலர் எந்த விதத்தில் திருமணம் செய்துகொள்ள தீர்மானிக்கிறார்கள், ஏன்?
4 இன்று அநேக நாடுகளில், திருமணம் செய்துகொள்ள விரும்புகிற கிறிஸ்தவர்கள் அரசாங்கம் எதிர்பார்க்கும் தகுதிகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். அவற்றைச் செய்தபின், சட்டம் அனுமதிக்கிற எந்தவொரு விதத்திலும் அவர்கள் மணம் செய்துகொள்ளலாம். அது சிறிய, எளிய வைபவமாக இருக்கலாம். அதை நீதிபதியோ, மேயரோ, அரசு அங்கீகாரம் பெற்ற மத ஊழியரோ நடத்தி வைக்கலாம். சிலர் தங்களுடைய திருமணம் இவ்விதமாக நடப்பதற்குத் தீர்மானிக்கலாம். அதற்குச் சாட்சிகளாக இருப்பதற்கோ அந்த முக்கிய வைபவத்தை சிறப்பிப்பதற்கோ சில உறவினர்களை அல்லது கிறிஸ்தவ நண்பர்களை அவர்கள் அழைக்கலாம். (எரேமியா 33:11; யோவான் 3:29) இன்னும் சில கிறிஸ்தவர்கள் பெரிய விருந்தை அல்லது வரவேற்பை ஏற்பாடு செய்ய விரும்பாதிருக்கலாம். அப்படிப்பட்ட விருந்துக்குப் பெரிய அளவில் திட்டம் போட வேண்டியிருக்கும், ஏகப்பட்ட பணமும் செலவாகும். இதற்குப் பதிலாக, நண்பர்கள், உறவினர்கள் சிலரை மட்டும் அழைத்து ஒரு சிறிய விருந்துக்கு அவர்கள் ஏற்பாடு செய்யலாம். இவ்விஷயத்தில் நம்முடைய தனிப்பட்ட விருப்பங்கள் எதுவாயிருந்தாலும், முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்களுக்கு வித்தியாசப்பட்ட கருத்துகள் இருக்கலாம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.—ரோமர் 14:3, 4.
5. தங்களுடைய திருமணத்தில் பைபிள் அடிப்படையிலான ஒரு பேச்சு கொடுக்கப்பட வேண்டுமென அநேக கிறிஸ்தவர்கள் விரும்புவதேன், அப்பேச்சு எவற்றைச் சிறப்பித்துக் காட்டுகிறது?
5 பெரும்பாலான கிறிஸ்தவ ஜோடிகள் தங்களுடைய திருமணத்தில் பைபிள் அடிப்படையிலான பேச்சு கொடுக்கப்பட வேண்டுமென விரும்புகிறார்கள்.b காரணம், யெகோவாவே திருமணத்தை ஆரம்பித்து வைத்தவர் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அதோடு, மணவாழ்க்கையில் வெற்றியையும் சந்தோஷத்தையும் காண்பதற்கு உதவுகிற ஞானமான ஆலோசனைகளை தமது வார்த்தை மூலமாக அவர் அளிக்கிறார் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (ஆதியாகமம் 2:22-24; மாற்கு 10:6-9; எபேசியர் 5:22-33) மணம்செய்யவிருக்கும் பெரும்பாலோர் தங்களுடைய கிறிஸ்தவ நண்பர்களும் உறவினர்களும் இந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள். இருந்தாலும், வித்தியாசப்பட்ட பல சட்ட ரீதியான காரியங்களையும் செயல்முறைகளையும் அதோடு, உள்ளூர் பழக்கங்களையும் நாம் எப்படிக் கருத வேண்டும்? பல்வேறு நாடுகளில் திருமணங்கள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதை இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அவற்றில் சில, நீங்கள் அறிந்திருக்கிற அல்லது உங்களுடைய பகுதியில் நடைபெறுகிற திருமணங்களிலிருந்து பெருமளவு வித்தியாசப்படலாம். இருந்தாலும், கடவுளுடைய ஊழியர்கள் முக்கியமானதாய் கருதுகிற பொதுவான சில நியமங்களை அல்லது அம்சங்களை இதிலிருந்து நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
சட்டப்படியான திருமணம் மதிப்புக்குரிய திருமணம்
6, 7. மணம் முடிப்பதில் உட்பட்டுள்ள சட்டப்பூர்வ அம்சங்களுக்கு நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும், இதை நாம் எப்படிச் செய்யலாம்?
6 திருமணத்தை யெகோவா ஆரம்பித்து வைத்தபோதிலும், மணம் செய்யவிருப்போர் எடுக்கும் நடவடிக்கைகளின்மீது அரசாங்கங்களுக்கு ஓரளவு அதிகாரம் இருக்கிறது. இது சரியானதுதான். ஏனெனில், இயேசு இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்.” (மாற்கு 12:17) அவ்வாறே அப்போஸ்தலன் பவுலும் அறிவுரை கூறியிருக்கிறார்: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால் தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.”—ரோமர் 13:1; தீத்து 3:1.
7 பெரும்பாலான நாடுகளில், திருமணம் செய்துகொள்வதற்கு தகுதியுள்ளவர்கள் யார் என்பதை இராயனே, அதாவது அரசாங்க அதிகாரிகளே நிர்ணயிக்கிறார்கள். ஆகவே, கிறிஸ்தவர் இருவர் மணம் செய்துகொள்வதற்கு வேதப்பூர்வமாகத் தகுதி பெற்றிருந்தாலும், அது சம்பந்தமான உள்ளூர் சட்டங்களுக்கும் அவர்கள் கவனமாய் கீழ்ப்படிய வேண்டும். உரிமம் பெறுவதும், அரசு அங்கீகாரம் பெற்ற திருமணப் பதிவாளரைப் பயன்படுத்துவதும், ஒருவேளை திருமணத்தைப் பதிவு செய்வதும் அதில் உட்படலாம். அகஸ்து இராயன் “குடிமதிப்பு” எழுதப்படும்படி, அதாவது பதிவு செய்யும்படி, கட்டளை பிறப்பித்தபோது மரியாளும் யோசேப்பும் அதற்குக் கீழ்ப்படிந்து, “குடிமதிப்பெழுதப்படும்படி” பெத்லெகேமுக்குப் பயணித்தார்கள்.—லூக்கா 2:1-5.
8. என்ன பழக்கங்களை யெகோவாவின் சாட்சிகள் தவிர்க்கிறார்கள், ஏன்?
8 கிறிஸ்தவர்கள் சட்டப்படியும் ஏற்கத்தக்க முறையிலும் மணம் செய்துகொண்ட பிறகு கடவுளுக்கு முன்பாக இருவரும் ஒருவருக்கொருவர் பொறுப்புள்ளவர்களாக ஆகிறார்கள். ஆகவே, யெகோவாவின் சாட்சிகள் பல்வேறு சட்டப்பூர்வ சடங்காச்சாரங்களைச் செய்வதற்காக திருமண வைபவத்தைத் திரும்பத் திரும்ப நடத்துவதில்லை; வெள்ளிவிழா அல்லது பொன்விழா தினத்தன்று தம்பதியர் மீண்டும் திருமண உறுதிமொழிகளை கூறுவதில்லை. (மத்தேயு 5:37) (சில சர்ச்சுகள், சட்டப்படியான திருமண வைபவத்தை முறையான திருமணமாக அங்கீகரிப்பதில்லை; பாதிரியோ மதகுருவோ சடங்குகளைச் செய்து, தம்பதியர் மணவாழ்வில் இணைவதை அறிவிக்காதவரை அதைத் திருமணமாக அங்கீகரிப்பதில்லை.) பல நாடுகளில், திருமணங்களை நடத்தி வைக்க யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஓர் ஊழியருக்கு அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கிறது. அப்படி அங்கீகாரம் பெற்றவர் இருந்தால், திருமணம் செய்துவைப்பதோடுகூட ராஜ்ய மன்றத்தில் திருமண பேச்சையும் அவர் கொடுப்பார். ராஜ்ய மன்றம் என்பது மெய் வணக்கத்திற்காக உள்ளூரிலுள்ள அனைவரும் கூடிவரும் இடமாகும்; இது, யெகோவா தேவன் ஆரம்பித்து வைத்த இந்தத் திருமண ஏற்பாட்டைப் பற்றி பேச்சு கொடுப்பதற்குப் பொருத்தமான இடமாகவும் இருக்கிறது.
9. (அ) சட்டப்படியான திருமணத்திற்குப் பின் என்ன ஏற்பாட்டை செய்ய கிறிஸ்தவ தம்பதியர் விரும்பலாம்? (ஆ) திருமண திட்டங்களில் மூப்பர்கள் எவ்வாறு சம்பந்தப்படலாம்?
9 இன்னும் சில நாடுகளில், நகராட்சி மன்றம் போன்ற அரசு அலுவலகத்திலோ திருமணப் பதிவாளர் முன்னிலையிலோதான் மணமக்கள் சட்டப்படி மணம் செய்துகொள்ள வேண்டும். கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் அவ்வாறு மணம்செய்த பிறகு, அதே நாள் அல்லது மறுநாள் ராஜ்ய மன்றத்தில் திருமண பேச்சு கொடுக்கப்பட ஏற்பாடு செய்கிறார்கள். (அவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்தவ சபையில் உள்ளவர்கள் உட்பட மனிதருக்கும் முன்பாக சட்டப்படி தம்பதியராய் இருப்பதால் பல நாட்கள் கழித்து திருமண பேச்சு கொடுக்கப்படுவதை விரும்ப மாட்டார்கள்.) சட்டப்படியான திருமணம் செய்யவிருப்பவர்கள், ராஜ்ய மன்றத்தில் திருமண பேச்சு கொடுக்கப்பட விரும்பினால் முன்கூட்டியே சபை ஊழியக் குழுவின் அனுமதியைப் பெற வேண்டும். அக்குழுவில் உள்ள மூப்பர்கள் கூடி தீர்மானிக்கையில், அந்த ஜோடிக்கு சபையில் நல்ல பெயர் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்; அதுமட்டுமல்லாமல், அந்தத் திருமணம் ராஜ்ய மன்றத்தில் வழக்கமாக நடக்கும் கூட்டங்களுக்கும் அங்கு நடத்த திட்டமிட்டுள்ள பிற ஏற்பாடுகளுக்கும் இடையூறாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவும் வேண்டும். (1 கொரிந்தியர் 14:33, 40) மணம் செய்யவிருப்பவர்கள் திருமணத்திற்காக மன்றத்தைத் தயார்படுத்த விரும்பினால் அதைக் குறித்தும் மூப்பர்கள் பரிசீலனை செய்வார்கள்; மன்றத்தைப் பயன்படுத்துவது குறித்து அறிவிப்பு செய்யப்பட வேண்டுமா என்பதையும் தீர்மானிப்பார்கள்.
10. சட்டப்படியான திருமணத்தை நடத்த வேண்டியிருந்தால், திருமண பேச்சு எப்போது கொடுக்கப்படும்?
10 திருமண பேச்சைக் கொடுக்கிற மூப்பர், சிநேகப்பான்மையுடனும், ஆன்மீக ரீதியில் உற்சாகப்படுத்தும் விதத்திலும், கண்ணியமான முறையிலும் அதைக் கொடுக்க முயலுவார். மணமக்களுக்குச் சட்டப்படியான திருமணம் முடிந்துவிட்டிருந்தால், இராயனுடைய சட்டப்படி அவர்கள் மணமானவர்கள் என்பதை அவர் தெரிவிப்பார். சட்டப்படியான திருமணத்தின்போது அவர்கள் ஒருவருக்கொருவர் திருமண உறுதிமொழிகளைச் சொல்லாதிருந்தால், திருமண பேச்சு கொடுக்கப்படுகையில் அதைச் சொல்ல அவர்கள் விரும்பலாம்.c ஒருவேளை, சட்டப்படியான திருமணத்தின் போது அந்த உறுதிமொழிகளை அவர்கள் சொல்லியிருந்தும், யெகோவாவுக்கும் சபைக்கும் முன்பாக அவற்றைத் திரும்பவும் சொல்ல விரும்பினால், தாங்கள் ஏற்கெனவே திருமணத்தில் ‘இணைந்துவிட்டதை’ தெரிவிக்க அதன் வாக்கியங்களை இறந்த காலத்தில் சொல்வார்கள்.—மத்தேயு 19:6; 22:21.
11. சில இடங்களில், மணம் செய்துகொள்ளவிருப்பவர்கள் என்ன முறையைப் பின்பற்றுகிறார்கள், திருமண பேச்சு எவ்வாறு கொடுக்கப்படுகிறது?
11 சில இடங்களில், மணம் செய்துகொள்ளவிருப்பவர்கள் எந்த விதமான சம்பிரதாய முறைகளையும் பின்பற்றும்படி சட்டம் எதிர்பார்ப்பதில்லை; அரசாங்க பதிவாளர் முன்னிலையிலும்கூட எதையும் செய்யும்படி எதிர்பார்ப்பதில்லை. திருமண பதிவு படிவத்தில் அவர்கள் கையெழுத்திட்டு பதிவாளரிடம் அதைக் கொடுத்துவிட்டால் அவர்களுடைய திருமணம் முடிந்துவிடுகிறது. உடனடியாக, அவர்களுடைய திருமண சான்றிதழ் பதிவுசெய்யப்படுகிறது. இவ்விதத்தில் அவர்கள் கணவன் மனைவியாகக் கருதப்படுகிறார்கள்; அந்தச் சான்றிதழில் உள்ள தேதியே அவர்களுடைய மணநாள். மேற்குறிப்பிட்ட விதமாக, மணம் செய்துகொள்வோர், அதன் பிறகு ஆன்மீக ரீதியில் முதிர்ச்சி வாய்ந்த ஒரு சகோதரர் தங்கள் திருமணத்திற்கு ராஜ்ய மன்றத்தில் பைபிள் அடிப்படையிலான பேச்சு கொடுப்பதை விரும்பலாம். அவர்கள் தற்போது பதிவுத் திருமணம் செய்திருப்பதால், அவர்கள் தம்பதியராகவே இருக்கிறார்கள் என்பதைக் கூடிவந்திருப்போருக்குப் பேச்சாளர் அறிவிப்பார். ஒருவேளை தம்பதியர் உறுதிமொழிகளைச் சொல்ல விரும்பினால் அவை பாரா 10-லும் அதன் அடிக்குறிப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளதற்கு இசைவாய் இருக்க வேண்டும். ராஜ்ய மன்றத்தில் கூடிவந்திருப்போர் மணமக்களுடன்கூட மகிழுவார்கள்; கடவுளுடைய வார்த்தையிலிருந்து அளிக்கப்பட்ட ஆலோசனைகளிலிருந்தும் பயனடைவார்கள்.—உன்னதப்பாட்டு 3:11.
சம்பிரதாயப்படியான திருமணங்களும் சட்டப்படியான திருமணங்களும்
12. சம்பிரதாயப்படியான திருமணம் என்பது என்ன, அத்திருமணத்திற்குப் பின் என்ன செய்வது தகுந்தது?
12 சில நாடுகளில், ஜோடிகள் சம்பிரதாயப்படி (அதாவது, குலமரபுப்படி) மணம் செய்துகொள்கிறார்கள். இது ஓர் ஆணும் பெண்ணும் வெறுமனே ஒன்றுசேர்ந்து வாழ்வதையும் குறிப்பதில்லை; சில பகுதிகளில் திருமணமானவர்கள் என்ற அந்தஸ்தை தருகிற, ஆனால் சட்டப்படி முறையாக இல்லாத திருமணத்தையும் குறிப்பதில்லை.d மாறாக, ஒரு குலத்தவர் அல்லது ஓர் இடத்தில் வாழ்வோர் பொதுவாக அங்கீகரிக்கிற வழக்கத்தின்படி செய்துகொள்கிற திருமணத்தையே இது குறிக்கிறது. இத்திருமணத்தில் மணமகள் விலையை, அதாவது மணமகளுக்கு மணமகன் கொடுக்கும் தொகையை முழுமையாக கொடுப்பதும் மணமகள் வீட்டார் அதை வாங்கிக்கொள்வதும் இடம்பெறுகிறது; இதன் மூலம், இந்த ஜோடி சட்டப்பூர்வமாகவும் வேதப்பூர்வமாகவும் மணம் செய்துகொள்கிறது. சம்பிரதாயப்படியான இத்தகைய திருமணத்தை அரசாங்கம் செல்லத்தக்கதாயும் சட்டப்படியானதாயும் அவசியமானதாயும் கருதுகிறது. அதன் பிறகு, பொதுவாக அத்திருமணம் பதிவு செய்யப்படலாம்; இவ்வாறு பதிவு செய்கையில் மணமக்கள் திருமண சான்றிதழைப் பெற்றுக்கொள்வார்கள். திருமணத்தைப் பதிவு செய்வது, தம்பதியருக்குச் சட்டப்படியான பாதுகாப்பை அளிக்கலாம்; ஒருவேளை அந்தப் பெண் விதவையாகிவிட்டால் அவளுக்கும் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கும் அது பாதுகாப்பை அளிக்கலாம். சம்பிரதாயப்படி மணம் செய்துகொள்பவர்கள் தங்கள் திருமணத்தை உடனடியாக பதிவு செய்யும்படி சபை அறிவுறுத்தும். நியாயப்பிரமாணத்தின்படி திருமணங்களும் பிறப்புகளும் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது; இது ஆர்வத்திற்குரிய விஷயமே.—மத்தேயு 1:1-16.
13. சம்பிரதாயப்படியான திருமணத்திற்குப் பின் திருமண பேச்சில் எதைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்?
13 இத்தகைய சம்பிரதாயப்படியான திருமணத்தில் சட்டப்படி இணைந்த மணமக்கள், அப்போதே கணவன் மனைவியாக ஆகிவிடுகிறார்கள். மேற்குறிப்பிட்டுள்ளபடி, இத்தகைய திருமணத்தைச் செய்துகொண்டவர்கள், ராஜ்ய மன்றத்தில் திருமண பேச்சு கொடுக்கப்படுவதற்கும் திருமண உறுதிமொழிகளைச் சொல்வதற்கும் விரும்பலாம். பேச்சு கொடுக்கப்படுமானால், இராயனுடைய சட்டத்தின்படி இவர்களுக்கு ஏற்கெனவே திருமணம் நடந்துவிட்டது என்று பேச்சாளர் அறிவிப்பார். இப்படியாக திருமண பேச்சு என்பது ஒரேவொரு முறை மட்டுமே கொடுக்கப்படும். ஒரு திருமணத்திற்கு, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிற சம்பிரதாயப்படியான (குலமரபுப்படியான) திருமணத்திற்கு, பைபிள் அடிப்படையில் ஒரு பேச்சு மட்டுமே கொடுக்கப்படும். பதிவு செய்வதும், திருமண பேச்சு கொடுப்பதும் அடுத்தடுத்து நடக்கும்படி வைத்துக்கொள்வது, முடிந்தவரை ஒரே நாளில் நடக்கும்படி வைத்துக்கொள்வது சமுதாயத்தினரின் மத்தியில் திருமணத்தை மதிப்புக்குரியதாக்க உதவுகிறது.
14. ஒரு கிறிஸ்தவர் தன் திருமணத்தை சம்பிரதாயப்படியும் சட்டப்படியும் நடத்துவதற்கு வாய்ப்பிருந்தால் அவர் என்ன செய்யலாம்?
14 சம்பிரதாயப்படியான திருமணத்தை சட்டரீதியில் ஆதரிக்கும் சில நாடுகளில், சட்டப்படியான திருமணத்திற்கும் வாய்ப்பிருக்கிறது. சட்டப்படியான திருமணம் பொதுவாக, அரசாங்க அதிகாரி முன்னிலையில் நடத்தப்படுகிறது. அப்போது மணமக்கள் திருமண உறுதிமொழிகளைச் சொல்லலாம், பதிவேட்டில் கையெழுத்தும் போடலாம். கிறிஸ்தவ ஜோடிகள் சிலர், சம்பிரதாயப்படியான திருமணத்திற்குப் பதிலாக சட்டப்படியான திருமணத்தைச் செய்துகொள்ள விரும்புகிறார்கள். இரண்டுமே சட்டப்படி செல்லத்தக்கவையாக இருப்பதால் ஏதாவது ஒன்றை செய்தாலே போதும். திருமண பேச்சு, உறுதிமொழிகள் சம்பந்தமாக 9, 10 பாராக்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் சட்டப்படியான திருமணங்களுக்கும் பொருந்துகின்றன. முக்கிய விஷயம் என்னவெனில், மணமக்கள் யெகோவாவுக்கும் மனிதருக்கும் முன்பாக மதிப்புக்குரிய விதத்தில் மணம் செய்துகொள்கிறார்கள்.—லூக்கா 20:25; 1 பேதுரு 2:13, 14.
திருமணத்தின் மதிப்பைக் காப்பாற்றுங்கள்
15, 16. கனம்செய்வது எப்படித் திருமணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது?
15 பெர்சிய ராஜாவின் மணவாழ்வில் பிரச்சினை எழுந்தபோது, முக்கிய ஆலோசகராய் இருந்த மெமுகான் நல்லதொரு ஆலோசனையைக் கொடுத்தார். அதாவது, ‘எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணும்படியான’ ஆலோசனையைக் கொடுத்தார். (எஸ்தர் 1:20) கிறிஸ்தவ திருமணங்களைப் பொறுத்தவரை, எந்தவொரு ராஜாவும் அப்படிப்பட்ட ஆணையைப் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை; மனைவிகள் தங்கள் கணவரை கனம்பண்ண, அதாவது, கணவர்களுக்கு மதிப்புக்கொடுக்க விரும்புகிறார்கள். அவ்வாறே, கிறிஸ்தவ கணவர்களும் மனைவிகளுக்குச் செய்ய வேண்டிய கனத்தைச் செய்கிறார்கள்; அவர்களைப் புகழுகிறார்கள். (நீதிமொழிகள் 31:11, 30; 1 பேதுரு 3:7) மணவாழ்வில் ஒருவருக்கொருவர் மதிப்புக்கொடுப்பதை பல வருடங்களுக்குத் தள்ளிப்போடக் கூடாது. ஆரம்பத்திலிருந்தே, ஆம், மணநாள் முதற்கொண்டே ஒருவரையொருவர் மதிக்க வேண்டும்.
16 இவ்வாறு மணநாளில் மணமுடிக்கவிருக்கும் ஆணும் பெண்ணும், அதாவது கணவனும் மனைவியும் மட்டுமே ஒருவருக்கொருவர் மதிப்புக்கொடுத்தால் போதாது. ஒரு கிறிஸ்தவ மூப்பர் திருமண பேச்சு கொடுப்பாராகில், அதுவும்கூட மதிப்புமிக்கதாய் இருக்க வேண்டும். அப்பேச்சு மணமக்களுக்குக் கொடுக்கப்படுவதாய் இருக்க வேண்டும். அது அவர்களைக் கண்ணிப்படுத்துவதாய் இருப்பதால், பேச்சாளர் ‘ஜோக்’ அடிக்கவோ கட்டுக்கதைகள் சொல்லவோ மாட்டார். மணமக்களிடம் தான் கவனித்த தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி அவர் குறிப்பிடக் கூடாது; அப்படிக் குறிப்பிடுவது மணமக்களையும் கூடிவந்திருப்போரையும் தர்மசங்கடப்படுத்திவிடும். மாறாக, திருமணத்தை ஆரம்பித்து வைத்தவரையும் அவரது தலைசிறந்த ஆலோசனைகளையும் சிறப்பித்துக்காட்டி, சிநேகப்பான்மையான முறையிலும் உற்சாகப்படுத்தும் விதத்திலும் அவர் பேச்சு கொடுக்க முயலுவார். ஆம், கண்ணியமான முறையில் மூப்பர் கொடுக்கிற பேச்சு திருமணத்திற்குக் கனத்தைச் சேர்க்கும், அது யெகோவா தேவனுக்கும் கனத்தைச் சேர்க்கும்.
17. கிறிஸ்தவ திருமணங்களில் ஏன் சட்டப்பூர்வ அம்சம் உள்ளது?
17 திருமணத்தில் உட்பட்டுள்ள அநேக சட்ட விவரங்களைப் பற்றி இந்தக் கட்டுரையிலிருந்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவற்றில் சில அம்சங்கள் உங்கள் பிராந்தியத்திற்குப் பொருந்தாததாய் இருக்கலாம். என்றாலும், உள்ளூர் சட்டங்களுக்கும் இராயனுடைய சட்டங்களுக்கும் மதிப்புக்கொடுத்து யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் செய்யப்படுகிற திருமண ஏற்பாடுகள் எந்தளவு முக்கியமானவை என்பதை நாம் எல்லாரும் அறிந்திருக்க வேண்டும். (லூக்கா 20:25) பவுல் நமக்கு இவ்வாறு அறிவுறுத்தினார்: “யாவருக்கும் செலுத்த வேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்த வேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்த வேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; . . . எவனைக் கனம்பண்ண வேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.” (ரோமர் 13:7) ஆம், தற்காலத்திற்காக யெகோவா ஏற்படுத்தியிருக்கும் திருமணத்திற்கு அதன் ஆரம்ப நாள் முதற்கொண்டு கிறிஸ்தவர்கள் கனத்தைச் செலுத்துவது தகுந்ததே.
18. திருமணத்தில் கட்டாயம் இடம்பெற அவசியமில்லாத எந்த அம்சத்திற்கு கவனம் செலுத்த வேண்டும், அதைக் குறித்த தகவலை நாம் எங்கே காணலாம்?
18 அநேக கிறிஸ்தவ திருமணங்களில், இந்த வைபவத்திற்குப் பிறகு விருந்து, அதாவது வரவேற்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு விருந்துக்கு இயேசு சென்றது உங்களுக்கு நினைவிருக்கும். அப்படி விருந்து அளிக்கப்படுமானால், அதுவும்கூட கடவுளுக்கு மதிப்புக்கொடுக்கும் விதத்திலும், புது மணத் தம்பதியர் மீதும் கிறிஸ்தவ சபையின் மீதும் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் விதத்திலும் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்வதற்கு பைபிள் ஆலோசனை நமக்கு எப்படி உதவும்? அடுத்த கட்டுரை அதை விளக்கும்.e
[அடிக்குறிப்புகள்]
a திருமண விருந்து தவிர பிற விருந்துகளுக்கும் இதே வார்த்தை பயன்படுத்தப்படலாம்.—எஸ்தர் 9:22, செப்டுவஜின்ட்.
b திருமண பேச்சு கொடுக்க யெகோவாவின் சாட்சிகள், “கடவுளுடைய பார்வையில் கனத்துக்குரிய விவாகம்” என்ற தலைப்பில் 30 நிமிடத்திற்கான குறிப்புத்தாளைப் பயன்படுத்துகிறார்கள். குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்திலிருந்தும் யெகோவாவின் சாட்சிகளுடைய பிற பிரசுரங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட சிறந்த வேதப்பூர்வ ஆலோசனைகள் இக்குறிப்புத்தாளில் உள்ளன. இப்பேச்சு, மணமக்களுக்கும் திருமணத்திற்கு வந்திருப்போருக்கும் பயனுள்ளது.
c உள்ளூர் சட்டம் வேறுவிதமான உறுதிமொழிகளைச் சொல்லும்படி எதிர்பார்க்காத வரையில் பின்வரும் உறுதிமொழிகளே பயன்படுத்தப்படுகின்றன; இவை யெகோவாவைக் கனப்படுத்துகின்றன. மணமகன் சொல்ல வேண்டியது: “[மணமகனின் பெயர்] ஆகிய நான் [மணமகளின் பெயர்] ஆகிய உன்னை என்னுடைய விவாகம் செய்யப்பட்ட மனைவியாக ஏற்றுக்கொண்டு, கிறிஸ்தவ கணவர்களுக்காக, பரிசுத்த வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தெய்வீக சட்டத்தின்படி, நாம் இருவரும் தேவனுடைய விவாக ஏற்பாட்டுக்கு இணங்க, பூமியில் வாழும் காலமெல்லாம் நேசித்தும் அருமையானவளாக ஆதரித்தும் வர ஒப்புக்கொள்கிறேன்.” மணமகள் சொல்ல வேண்டியது: “[மணமகளின் பெயர்] ஆகிய நான் [மணமகனின் பெயர்] ஆகிய உங்களை என்னுடைய விவாகம் செய்யப்பட்ட கணவராக ஏற்றுக்கொண்டு, கிறிஸ்தவ மனைவிகளுக்காக பரிசுத்த வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தெய்வீக சட்டத்தின்படி, நாம் இருவரும் தேவனுடைய விவாக ஏற்பாட்டுக்கு இணங்க, பூமியில் வாழும் காலமெல்லாம் நேசித்தும், அருமையானவராக ஆதரித்தும், ஆழ்ந்த மரியாதை காண்பித்தும் வர ஒப்புக்கொள்கிறேன்.”
d பதிவு செய்யாமல் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதைப் பற்றி ஆங்கில காவற்கோபுரம் மே 1, 1962, பக்கம் 287-ல் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
e பக்கம் 28-ல் காணப்படும் “மணநாளின் மகிழ்ச்சிக்கும் கண்ணியத்திற்கும் மெருகூட்டுங்கள்” என்ற கட்டுரையையும் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• திருமணத்தின் சட்டப்பூர்வ அம்சங்களுக்கும் ஆன்மீக அம்சங்களுக்கும் நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
• சட்டப்படியான திருமணத்தைச் செய்துகொண்ட கிறிஸ்தவ தம்பதியர் அதன் பிறகு எதை ஏற்பாடு செய்யத் தீர்மானிக்கலாம்?
• ஏன் ராஜ்ய மன்றத்தில் திருமணப் பேச்சு கொடுக்கப்படுகிறது?
[பக்கம் 18-ன் படம்]
பூர்வ இஸ்ரவேலருடைய திருமணத்தின்போது, மணமகளை மணமகன் தன்னுடைய வீட்டிற்கோ தன் தகப்பனுடைய வீட்டிற்கோ அழைத்து வந்தான்
[பக்கம் 21-ன் படம்]
சம்பிரதாயப்படியான திருமணத்திற்குப் பின், ராஜ்ய மன்றத்தில் திருமணப் பேச்சு கொடுக்கப்பட கிறிஸ்தவர்கள் விரும்பலாம்