ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்தப்பட தகுதியுள்ளவர்களாய் எண்ணப்படுகிறவர்கள்
“ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்.”—வெளி. 7:17.
1. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை பைபிள் எவ்வாறு குறிப்பிடுகிறது, இயேசு அவர்களுக்கு என்ன பொறுப்பை அளித்தார்?
பூமியில் கிறிஸ்துவுக்குச் சொந்தமான அனைத்தையும் கவனித்து வருகிற அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” என பைபிள் குறிப்பிடுகிறது. 1918-ல் இயேசு இந்த ‘ஊழியக்காரனை’ சோதனை செய்தார்; அப்போது, பூமியிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் ‘ஏற்ற வேளையில்’ ஆன்மீக உணவை உண்மையுடன் அளித்து வந்ததைக் கண்டார். எனவே, எஜமானாகிய இயேசு “தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும்” அவர்களை விசாரணைக்காரராக நியமித்தார். (மத்தேயு 24:45-47-ஐ வாசிக்கவும்.) இவ்வாறு, அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் பரலோகப் பரிசைப் பெறுவதற்கு முன்பு பூமியில் யெகோவாவை வழிபடுகிற மற்றவர்களுக்குச் சேவை செய்கிறார்கள்.
2. இயேசுவின் உடமைகளை விவரிக்கவும்.
2 ஓர் எஜமானுக்குத் தன் ஆஸ்திகள் மீது, அதாவது உடமைகள்மீது அதிகாரம் செலுத்த உரிமை இருக்கிறது; அவற்றைத் தன்னுடைய விருப்பப்படி பயன்படுத்தவும் அவருக்கு உரிமை இருக்கிறது. பூமியில் கடவுளுடைய ராஜ்யம் சம்பந்தப்பட்ட அனைத்தும் யெகோவாவால் நியமிக்கப்பட்ட அரசரான இயேசு கிறிஸ்துவின் உடமைகளாக இருக்கின்றன. அப்போஸ்தலனாகிய யோவான் தரிசனத்தில் கண்ட ‘திரள் கூட்டத்தாரும்’ அந்த உடமைகளில் அடங்குவர். அவர்களை யோவான் இவ்வாறு விவரிக்கிறார்: “இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.”—வெளி. 7:9.
3, 4. திரள் கூட்டத்தார் எத்தகைய பெரும் பாக்கியங்களைப் பெற்றிருக்கிறார்கள்?
3 தம்முடைய ‘வேறே ஆடுகள்’ என இயேசு சொன்ன தொகுதியின் பாகமாக இந்தத் திரள் கூட்டத்தார் இருக்கிறார்கள். (யோவா. 10:16) பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழ்வதே இவர்களுடைய நம்பிக்கை. இயேசு ‘தங்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்’ என்று இவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். ‘தேவன்தாமே தங்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்’ என்றும் நம்புகிறார்கள். இந்த எதிர்பார்ப்புடன், ‘இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்திருக்கிறார்கள்.’ (வெளி. 7:14, 17) இவர்கள் இயேசுவின் பலியில் விசுவாசம் வைக்கிறார்கள்; எனவே கடவுளுடைய பார்வையில் வெண்மையான அங்கிகளைத் தரித்தவர்களாகக் காணப்படுகிறார்கள். ஆபிரகாமைப்போல, இவர்களும் கடவுளுடைய சிநேகிதர்களாக இருக்கிறார்கள், நீதியுள்ளவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.
4 அதுமட்டுமல்ல, அதிகரித்து வருகிற இந்தத் திரள் கூட்டத்தாரைக் கடவுள் நீதியுள்ளவர்களாக கருதுவதால், அவர்கள் மிகுந்த உபத்திரவத்தின்போது இந்தப் பொல்லாத உலகிற்கு வரவிருக்கும் அழிவிலிருந்து தப்பிப்பிழைக்கும் நம்பிக்கையுடன் இருக்கலாம். (யாக். 2:23-26) அவர்கள் யெகோவாவிடம் நெருங்கி வர முடியும்; ஒரு தொகுதியாக அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கும் அருமையான எதிர்பார்ப்பும் அவர்களுக்கு இருக்கிறது. (யாக். 4:8; வெளி. 7:15) அவர்கள் ஒரு தனித் தொகுதியாகச் செயல்படுவதில்லை; மாறாக, பரலோக அரசரும் பூமியிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களும் வழங்குகிற ஆலோசனைகளுக்கு ஏற்ப சேவைசெய்ய மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
5. கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களுக்கு திரள் கூட்டத்தார் எவ்வாறு ஆதரவு அளிக்கிறார்கள்?
5 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் சாத்தானுடைய உலகத்திலிருந்து கடும் எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறார்கள்; இனியும் சந்திப்பார்கள். என்றாலும், திரள் கூட்டத்தைச் சேர்ந்த தங்களுடைய தோழர்கள் தரும் ஆதரவில் அவர்கள் நம்பிக்கை வைக்கலாம். அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இப்போது எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறபோதிலும், திரள் கூட்டத்தாரோ ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறார்கள். உலகம் முழுவதுமுள்ள சுமார் 1,00,000 சபைகளையும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களால் நேரடியாக மேற்பார்வை செய்ய முடிவதில்லை. எனவே, திரள் கூட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள ஆண்கள் சபை மூப்பர்களாக சேவை செய்கிறார்கள்; இது அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் வேறே ஆடுகளிடமிருந்து பெறுகிற ஆதரவின் ஓர் அம்சமாகும். இப்போது ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரரிடம்’ ஒப்படைக்கப்பட்டிருக்கிற லட்சக்கணக்கான கிறிஸ்தவர்களை கவனித்துக்கொள்ள இவர்கள் உதவுகிறார்கள்.
6. அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு வேறே ஆடுகளைச் சேர்ந்த தோழர்கள் தரும் ஆதரவு எவ்வாறு முன்னுரைக்கப்பட்டிருக்கிறது?
6 அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு வேறே ஆடுகளைச் சேர்ந்த தோழர்கள் தரும் மனமுவந்த ஆதரவை ஏசாயா தீர்க்கதரிசி முன்னுரைத்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “யெகோவா சொல்வதாவது, கூலி வாங்காத வேலையாட்களாகிய எகிப்தியரும் எத்தியோப்பியாவின் வணிகரும் உயரமான ஆட்களாகிய சபேரியரும் தாங்களாகவே உன்னிடத்திற்கு வந்து, உன்னுடையவர்களாவார்கள். அவர்கள் உன் பின்னே நடந்து வருவார்கள்.” (ஏசா. 45:14, NW) பூமியில் வாழும் நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்கள் அபிஷேகம் செய்யப்பட்ட அடிமை வகுப்பார் மற்றும் அதன் ஆளும் குழுவின் வழிநடத்துதலை இன்று ஏற்றுக்கொண்டு அடையாள அர்த்தத்தில் அவர்களுக்குப் பின்னே செல்கிறார்கள். இந்த வேறே ஆடுகள் ‘கூலி வாங்காத வேலையாட்களை’போல மனமுவந்து முழு இருதயத்தோடு பிரசங்க வேலையில் ஈடுபடுகிறார்கள்; அதற்காக, தங்களுடைய சக்தியையும் வளங்களையும் செலவழிக்கிறார்கள். இவ்வாறு உலகம் முழுவதும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி பூமியிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு இயேசு கொடுத்த வேலையில் அவர்களை ஆதரிக்கிறார்கள்.—அப். 1:8; வெளி. 12:17.
7. திரள் கூட்டத்தார் எதற்காக இப்போது பயிற்றுவிக்கப்படுகிறார்கள்?
7 திரள் கூட்டத்தார் அபிஷேகம் செய்யப்பட்ட தங்களுடைய சகோதரர்களுக்கு ஆதரவு அளித்து வருகிற அதே சமயத்தில், அர்மகெதோனுக்குப் பின் பூமியில் வாழவிருக்கிற புதிய மனித சமுதாயத்தின் அஸ்திவாரமாக இருப்பதற்கும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அந்த அஸ்திவாரம் உறுதியானதாயும் நிலையானதாயும் இருக்க வேண்டும்; அதில் பங்கு வகிப்பவர்கள் எஜமானரின் வழிநடத்துதலை மனமுவந்து ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கிறவர்களாக இருக்க வேண்டும். அரசராகிய கிறிஸ்து இயேசு தன்னைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதைக் காட்டுவதற்கு ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் ஒவ்வொருவரும் இப்போதே விசுவாசத்துடனும் உண்மைப்பற்றுறுதியுடனும் வாழ்வதன்மூலம் புதிய உலகில் அரசர் தரும் ஆலோசனைகளின்படி நடப்பதற்கு மனமுள்ளவராக இருப்பார்கள் என்பதைக் காட்டுகிறார்கள்.
திரள் கூட்டத்தார் விசுவாசத்தை வெளிக்காட்டுகிறார்கள்
8, 9. திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் விசுவாசத்தை எவ்வாறு காட்டுகிறார்கள்?
8 அபிஷேகம் செய்யப்பட்ட சபையினரின் தோழர்களான வேறே ஆடுகள் தங்களுடைய விசுவாசத்தைப் பல்வேறு வழிகளில் காட்டுகிறார்கள். முதலாவதாக, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பதில் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். (மத். 24:14; 28:19, 20) இரண்டாவதாக, ஆளும் குழு தருகிற அறிவுரைகளுக்கு மனமுவந்து கீழ்ப்படிகிறார்கள்.—எபி. 13:17; சகரியா 8:23-ஐ வாசிக்கவும்.
9 மூன்றாவதாக, யெகோவாவின் நீதியான நியதிகளுக்கு இசைவாக வாழ்வதன் மூலம் அபிஷேகம் செய்யப்பட்ட தங்கள் சகோதரர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” போன்ற குணங்களை வளர்க்க அவர்கள் கடும் முயற்சி செய்கிறார்கள். (கலா. 5:22, 23) இன்று இத்தகைய குணங்களை வெளிக்காட்டுபவர்களைக் காண்பது அரிது, மாறாக ‘மாம்சத்தின் கிரியைகளே’ மக்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படுகின்றன. என்றாலும், திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், “விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள்” ஆகியவற்றைத் தவிர்க்கத் தீர்மானமாயிருக்கிறார்கள்.—கலா. 5:19-21.
10. திரள் கூட்டத்தார் எதைக் குறித்து திடத் தீர்மானமாய் இருக்கிறார்கள்?
10 நாம் அபூரணராக இருப்பதால், ஆவியின் கனியை வெளிக்காட்டுவதும், மாம்சத்தின் கிரியைகளைத் தவிர்ப்பதும், சாத்தானுடைய உலகிலிருந்து வரும் அழுத்தங்களை மேற்கொள்வதும் நமக்குக் கடினமாக இருக்கலாம். நம்மிடமுள்ள பலவீனங்களாலோ, ஆன்மீக காரியங்களில் தற்காலிகமாகப் பின்தங்கிவிடுவதாலோ, உடல்நலக் குறைவாலோ நமக்கு மனச்சோர்வு ஏற்படலாம்; என்றாலும், அத்தகைய மனச்சோர்வு நம்முடைய விசுவாசத்தின் உறுதியைக் குலைத்துப்போடவோ யெகோவாவின் மீதுள்ள அன்பைக் குறைத்துப்போடவோ அனுமதிக்கக்கூடாது என்பதில் நாம் திடத் தீர்மானமாய் இருக்கிறோம். மிகுந்த உபத்திரவத்திலிருந்து திரள் கூட்டத்தாரை காப்பாற்றுவதாக யெகோவா வாக்குறுதி அளித்திருக்கிறார்; அந்த வாக்கை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று நாம் அறிந்திருக்கிறோம்.
11. கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைப் பலவீனப்படுத்த சாத்தான் என்னென்ன உத்திகளைப் பயன்படுத்தியிருக்கிறான்?
11 என்றபோதிலும், நம்முடைய உண்மையான எதிரி பிசாசு என்பதையும் அவன் அவ்வளவு எளிதாக நம்மை விட்டுவிட மாட்டான் என்பதையும் நாம் அறிந்திருப்பதால், எப்போதும் விழிப்புடன் இருக்கிறோம். (1 பேதுரு 5:8-ஐ வாசிக்கவும்.) விசுவாச துரோகிகளையும் மற்றவர்களையும் பயன்படுத்தி நாம் பின்பற்றுகிற போதனைகள் தவறானவையென நம்மை நம்ப வைக்க அவன் முயன்றிருக்கிறான். ஆனால், அவனுடைய இந்த உத்தி பொதுவாக தோல்வியையே தழுவியிருக்கிறது. அதுபோலவே, துன்புறுத்தலால் சிலசமயம் பிரசங்க வேலையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறபோதிலும், துன்புறுத்தப்பட்டவர்களின் விசுவாசத்தை அது பெரும்பாலும் பலப்படுத்தவே செய்திருக்கிறது. எனவே, நம்முடைய விசுவாசத்தைப் பலவீனப்படுத்துவதில் மிகவும் திறம்பட்டதாகத் தெரிகிற ஒரு முறையையே அவன் அதிகமதிகமாய்ப் பயன்படுத்துகிறான். அதற்காக, மனச்சோர்வை தனக்குச் சாதகமாக அவன் பயன்படுத்திக் கொள்கிறான். இந்த ஆபத்தைக் குறித்து முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எச்சரிப்பு கொடுக்கப்பட்டது: “நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே [கிறிஸ்துவையே] நினைத்துக்கொள்ளுங்கள்.”—எபி. 12:3.
12. பைபிள் தரும் ஆலோசனை மனச்சோர்வில் வாடுபவர்களை எவ்வாறு பலப்படுத்துகிறது?
12 யெகோவாவைச் சேவிப்பதை விட்டுவிட வேண்டுமென்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? உங்களால் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாதென்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால், இத்தகைய எண்ணங்களைப் பயன்படுத்தி யெகோவாவுக்கு நீங்கள் செய்யும் சேவையைத் தடுக்க சாத்தானை அனுமதிக்காதீர்கள். பைபிளை ஆழமாகப் படிப்பது, ஊக்கமாக ஜெபிப்பது, கூட்டங்களில் தவறாமல் பங்குகொள்வது, சக விசுவாசிகளுடன் தோழமைகொள்வது போன்றவை உங்களைப் பலப்படுத்தி, ‘ஆத்துமாவில் சோர்ந்துபோகாதபடிக்கு’ உங்களைக் காக்கும். தமக்குச் சேவை செய்கிறவர்கள் புதுப்பெலனைப் பெற தாம் உதவுவதாக யெகோவா வாக்குறுதி அளித்திருக்கிறார்; அவருடைய வாக்குறுதியை நாம் நிச்சயம் நம்பலாம். (ஏசாயா 40:30, 31-ஐ வாசிக்கவும்.) கிறிஸ்தவ நடவடிக்கைகளில் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள். நேரத்தை விரயமாக்குகிற கவனச் சிதறல்களைத் தவிருங்கள்; மற்றவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துங்கள். அப்போது, மனச்சோர்வின் மத்தியிலும் சகித்திருப்பதற்கான பலத்தை நீங்கள் பெறுவீர்கள்.—கலா. 6:1, 2.
உபத்திரவத்திலிருந்து புதிய உலகிற்கு
13. அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்களுக்கு என்ன வேலை காத்திருக்கிறது?
13 அர்மகெதோனுக்குப் பிறகு, உயிர்த்தெழுப்பப்படுகிற திரளான அநீதிமான்கள் யெகோவாவின் வழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். (அப். 24:15) இயேசுவின் மீட்கும் பலியைப்பற்றி அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்; அதோடு, அந்தப் பலியின் நன்மைகளைப் பெறுவதற்கு அதில் விசுவாசம் வைப்பதைப் பற்றியும் அவர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டியிருக்கும். முன்னர் நம்பிவந்த பொய்மத கருத்துக்களை எல்லாம் அவர்கள் ஒதுக்கித்தள்ள வேண்டியிருக்கும்; மேலும் தங்களுடைய முந்தைய வாழ்க்கை முறையை விட்டுவிட வேண்டியிருக்கும். உண்மைக் கிறிஸ்தவர்களை அடையாளம் காட்டுகிற புதிய ஆள்தன்மையை தரிப்பதற்கு அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். (எபே. 4:22-24; கொலோ. 3:9, 10) அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கிற வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வேலை இருக்கும். தற்போதைய பொல்லாத உலகம் தரும் தொல்லைகளும் கவனச் சிதறல்களும் இல்லாமல் யெகோவாவுக்கு இத்தகைய சேவையைச் செய்வது என்னே பேரானந்தத்தைத் தரும்!
14, 15. மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்பவர்களும் உயிர்த்தெழுந்து வரும் நீதிமான்களும் என்னென்ன விஷயங்களைக் குறித்து உரையாடுவார்கள்?
14 பூமியில் இயேசு தம் ஊழியத்தைத் துவங்குவதற்கு முன்பு மரித்த உண்மையுள்ள ஊழியர்களும்கூட அச்சமயத்தில் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட வித்துவுக்காக காத்திருந்தும் அவரைப் பார்க்க முடியாமற்போனார்கள்; இப்போது அவர் யார் என்பதைக் கற்றுக்கொள்வார்கள். யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்ள தாங்கள் மனமுள்ளவர்களாக இருப்பதை உயிருடன் இருந்தபோதே அவர்கள் வெளிக்காட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவது நமக்கு எப்பேர்ப்பட்ட கௌரவத்தையும் சந்தோஷத்தையும் தரும்; உதாரணமாக, தானியேல் அநேக தீர்க்கதரிசனங்களை எழுதியும் அவற்றை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை; அந்தத் தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறின என்பதை அவருக்கு விளக்குவது நமக்கு எப்பேர்ப்பட்ட கௌரவத்தையும் சந்தோஷத்தையும் தரும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!—தானி. 12:8, 9.
15 உயிர்த்தெழுந்து வருகிறவர்கள் நம்மிடமிருந்து அநேக விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள்தான்; அதே சமயத்தில் நாமும் அவர்களிடம் நிறைய கேள்விகளைக் கேட்டு விஷயங்களைத் தெரிந்துகொள்வோம். பைபிளில் விலாவாரியாகச் சொல்லப்படாத சம்பவங்களைப்பற்றி அவர்கள் நமக்கு விளக்கமாகச் சொல்லித்தர முடியும். இயேசுவைப் பற்றிய தகவல்களை அவருடைய உறவினரான முழுக்காட்டுபவராகிய யோவானிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது எவ்வளவு உற்சாகமூட்டுவதாக இருக்கும்! அத்தகைய உண்மையுள்ள சாட்சிகளிடம் நாம் நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளும்போது, கடவுளுடைய வார்த்தையிலிருந்து நாம் இப்போது புரிந்திருக்கும் விஷயங்கள் இன்னும் தெளிவாகும் என்பதில் சந்தேகமில்லை. இந்த முடிவு காலத்தில் மரிக்கிற திரள் கூட்டத்தாரோடுகூட கடந்தகாலத்தில் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் மரித்த ஊழியர்கள் அனைவரும் ‘மேன்மையான உயிர்த்தெழுதலைப்’ பெற்றுக்கொள்வார்கள். சாத்தானின் ஆதிக்கத்திலுள்ள உலகில் அவர்கள் யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால், புதிய உலகில் மிகச் சிறந்த சூழ்நிலைகளில் தங்களுடைய சேவையைத் தொடர்வது அவர்களுக்கு என்னே ஆனந்தத்தைத் தரும்!—எபி. 11:35; 1 யோ. 5:19.
16. நியாயத்தீர்ப்பு நாளில் என்ன நடக்குமென தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருக்கிறது?
16 நியாயத்தீர்ப்பு நாளின் ஏதோவொரு காலக்கட்டத்தில் சுருள்கள் திறக்கப்படும். அப்போது உயிர்வாழும் அனைவரும் பைபிளிலும், அச்சுருள்களிலும் எழுதப்பட்டிருப்பவற்றின் அடிப்படையில் நித்திய ஜீவனைப் பெறுவதற்குத் தகுதியுள்ளவர்களா இல்லையா என நியாயந்தீர்க்கப்படுவார்கள். (வெளிப்படுத்துதல் 20:12, 13-ஐ வாசிக்கவும்.) நியாயத்தீர்ப்பு நாள் முடிவடைவதற்குள், சர்வலோக பேரரசுரிமையைக் குறித்த விவாதத்தில் தாங்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்கு ஒவ்வொருவருக்கும் போதுமான வாய்ப்பு கிடைத்திருக்கும். கடவுளுடைய ராஜ்யத்தின் ஏற்பாடுகளுக்கு ஆதரவளித்து, ஆட்டுக்குட்டியானவர் தன்னை ‘ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு வழிநடத்துவதை’ அவர் ஏற்றுக்கொள்வாரா? அல்லது கடவுளுடைய ராஜ்யத்தின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிய மறுத்து அதை எதிர்ப்பாரா? (வெளி. 7:17; ஏசா. 65:20) அச்சமயத்திற்குள், சொந்தத் தீர்மானம் செய்வதற்கு பூமியிலுள்ள எல்லாருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்; வழிவழியாக கடத்தப்பட்ட பாவமோ தீய சுற்றுச்சூழலோ அத்தகைய தீர்மானம் எடுப்பதற்கு அவர்களுக்குத் தடையாக இருக்காது. யெகோவாவின் இறுதித் தீர்ப்பு சரியானதுதானா என்று கேள்வி எழுப்ப யாருக்கும் தகுதியிராது. துஷ்டர் மட்டுமே என்றென்றைக்குமாக அழிக்கப்படுவார்கள்.—வெளி. 20:14, 15.
17, 18. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் வேறே ஆடுகளும் என்ன சந்தோஷமான எதிர்பார்ப்போடு நியாயத்தீர்ப்பு நாளை எதிர்நோக்குகிறார்கள்?
17 இன்றுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ராஜ்யத்தைப் பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாக எண்ணப்பட்டிருக்கிறார்கள்; அவர்கள் நியாயத்தீர்ப்பு நாளில் ஆட்சி செய்வதற்கு ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறார்கள். இது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் மகத்தான பாக்கியம், அல்லவா? இந்த மாபெரும் எதிர்பார்ப்பு முதல் நூற்றாண்டில் வாழ்ந்த சகோதரர்களுக்கு பேதுரு அளித்த அறிவுரையைப் பின்பற்ற அவர்களைத் தூண்டுகிறது: “உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள் [“முழுமுயற்சி செய்யுங்கள்,” பொது மொழிபெயர்ப்பு]; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.”—2 பே. 1:10, 11.
18 அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களுடன் சேர்ந்து வேறே ஆடுகள் களிகூருகிறார்கள். அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவு காட்ட அவர்கள் தீர்மானமாய் இருக்கிறார்கள். இன்று கடவுளுடைய நண்பர்களாய், அவருடைய சேவையில் முழுமூச்சுடன் ஈடுபடுவதற்கு அவர்கள் தூண்டப்படுகிறார்கள். நியாயத்தீர்ப்பு நாளில், இயேசு அவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; அப்போது, கடவுளுடைய ஏற்பாடுகளை முழு இருதயத்தோடு ஆதரிப்பதில் அவர்கள் பேரானந்தம் அடைவார்கள். முடிவில், என்றென்றுமாக யெகோவாவின் பூமிக்குரிய ஊழியர்களாக இருப்பதற்குத் தகுதியுள்ளவர்களாக எண்ணப்படுவார்கள்.—ரோ. 8:20, 21; வெளி. 21:1-7.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• இயேசுவின் உடமைகள் யாவை?
• திரள் கூட்டத்தார் தங்களுடைய அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களை எவ்வாறு ஆதரிக்கிறார்கள்?
• திரள் கூட்டத்தார் முன்பு எப்பேர்ப்பட்ட அரிய வாய்ப்புகளும் எதிர்பார்ப்பும் இருக்கின்றன?
• நியாயத்தீர்ப்பு நாளை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்?
[பக்கம் 25-ன் படம்]
திரள் கூட்டத்தார் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தங்களுடைய வஸ்திரத்தை தோய்த்து வெளுத்திருக்கிறார்கள்
[பக்கம் 27-ன் படம்]
உயிர்த்தெழுகிற உண்மையுள்ளோரிடமிருந்து நீங்கள் எதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்?