3 இயேசுவைப் பற்றிய உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள்
“கடவுள், தம்முடைய ஒரே மகன்மீது விசுவாசம் வைக்கிற எவரும் அழிந்துபோகாமல் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின்மீது அன்பு காட்டினார்.”—யோவான் 3:16.
சவால் என்ன? இயேசு என்ற ஒருவர் உண்மையில் வாழவில்லையெனச் சிலர் உங்களிடம் அடித்துச் சொல்லலாம். மற்றவர்கள், அவர் வாழ்ந்ததாக ஒப்புக்கொள்கிறார்கள்; ஆனால், அவர் முன்னொரு காலத்தில் வாழ்ந்து இறந்துபோன ஒரு சாதாரண மனிதர் என்று சொல்கிறார்கள்.
சவாலைச் சமாளிப்பது எப்படி? இயேசுவின் சீடரான நாத்தான்வேலைப் பின்பற்றுங்கள்.a அவருடைய நண்பரான பிலிப்பு, தான் மேசியாவைக் கண்டுபிடித்துவிட்டதாகச் சொன்னார்; “யோசேப்பின் மகனும் நாசரேத்தைச் சேர்ந்தவருமான இயேசுவே அவர்” என்றும் சொன்னார். ஆனால், பிலிப்பு சொன்னதை நாத்தான்வேல் உடனடியாக நம்பிவிடவில்லை. சொல்லப்போனால், “நாசரேத்திலிருந்து நல்லது ஏதாவது வர முடியுமா?” என்று கேட்டார். என்றாலும், “நீயே வந்து பார்” என்று பிலிப்பு அழைத்தபோது அவர் போய்ப் பார்த்தார். (யோவான் 1:43-51) நீங்களும்கூட இயேசுவைப் பற்றிய அத்தாட்சிகளை ஆராய்ந்து பார்ப்பதால் நன்மை அடைவீர்கள். அப்படியென்றால், நீங்கள் என்ன செய்யலாம்?
இயேசு உண்மையில் வாழ்ந்தவர் என்பதற்கான சரித்திரப்பூர்வ அத்தாட்சியை அலசி ஆராயுங்கள். கிறிஸ்தவர்களல்லாத ஜொஸிஃபஸ், டாஸிடஸ் ஆகிய இருவரும் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மதிப்புக்குரிய சரித்திராசிரியர்கள். இயேசு கிறிஸ்து உண்மையில் வாழ்ந்த ஒருவரென அவர்கள் குறிப்பிடுகிறார்கள். பொ.ச. 64-ல் ரோமில் ஏற்பட்ட தீ விபத்திற்கு கிறிஸ்தவர்களே காரணமென ரோம மன்னர் நீரோ குற்றஞ்சாட்டியதைக் குறித்து டாஸிடஸ் இவ்வாறு எழுதினார்: “தீ விபத்திற்கான பழியைக் கிறிஸ்தவர்கள் என்ற தொகுதியினர்மீது நீரோ சுமத்தினார்; அவர்களுடைய பழக்கவழக்கங்களால் ரோமர்கள் அவர்களை வெறுத்து, கொடூரமாகச் சித்திரவதை செய்தார்கள். கிறிஸ்தவர்கள் என்ற பெயர் தோன்றுவதற்குக் காரணமாயிருந்த கிறிஸ்து, ஆளுநர்களில் ஒருவராகிய பொந்திய பிலாத்துவால் திபேரியு ராயனின் ஆட்சியில் கடுமையான மரண தண்டனையைப் பெற்றார்.”
இயேசுவையும் ஆரம்பகால கிறிஸ்தவர்களையும் குறித்து முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சரித்திராசிரியர்கள் சொன்ன குறிப்புகள் சம்பந்தமாக என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா, 2002 பதிப்பு இவ்வாறு சொல்கிறது: “பூர்வ காலங்களில் கிறிஸ்தவத்தை எதிர்த்தவர்களும்கூட இயேசு உயிர் வாழ்ந்ததை சந்தேகிக்கவில்லை என்பதை இந்தத் தனித்தனி விவரப்பதிவுகள் நிரூபிக்கின்றன; இது பற்றிய சர்ச்சை, போதுமான ஆதாரமில்லாமல், 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் முதன்முறையாகக் கிளம்பியது.” 2002-ல், த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிகையில் வந்த ஒரு தலையங்கக் கட்டுரை இவ்வாறு குறிப்பிட்டது: “எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒருசில நாத்திகர்களைத் தவிர பெரும்பாலான அறிஞர்கள் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவை உண்மையில் வாழ்ந்த ஒரு நபராக ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.”
இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டதற்கான அத்தாட்சியைச் சிந்தித்துப் பாருங்கள். இயேசுவை எதிரிகள் கைது செய்தபோது, அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவரைக் கைவிட்டார்கள்; அவர்களில் ஒருவரான பேதுரு பயந்துபோய், அவரைத் தெரியாதென்றுகூட சொன்னார். (மத்தேயு 26:55, 56, 69-75) இயேசு கைது செய்யப்பட்ட பின்பு அவருடைய சீடர்கள் சிதறிப் போனார்கள். (மத்தேயு 26:31) பின்பு, திடீரென, அவர்கள் மிக மும்முரமாக ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள். பேதுருவும் யோவானும், இயேசுவின் கொலைக்குக் காரணமாக இருந்தவர்களின் முன்பாகக்கூடத் தைரியமாய்ப் பேசினார்கள். இயேசுவின் சீடர்கள் மிகுந்த பக்திவைராக்கியத்தோடு ரோம சாம்ராஜ்யமெங்கும் அவருடைய போதனைகளைப் பரப்பினார்கள்; தங்கள் நம்பிக்கைகளை விட்டுக்கொடுப்பதற்குப் பதிலாக சாகவும் துணிந்தார்கள்.
அவர்களுடைய மனப்பான்மை இப்படித் தலைகீழாக மாறியதற்கு ஒரு காரணம் என்ன? இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டு, “கேபாவுக்கும் [பேதுருவுக்கும்], அதன்பின்பு பன்னிரண்டு பேருக்கும் தோன்றினார்” என அப்போஸ்தலன் பவுல் விளக்கினார். “பின்பு, ஒரே நேரத்தில் ஐந்நூறுக்கும் அதிகமான சகோதரர்களுக்குத் தோன்றினார்” என்றும் விளக்கினார். பவுல் இவ்வார்த்தைகளை எழுதிய சமயத்தில், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குக் கண்கண்ட சாட்சிகளாக இருந்த பெரும்பாலோர் உயிரோடு இருந்தார்கள். (1 கொரிந்தியர் 15:3-7) நேரில் கண்ட ஓரிருவரின் சான்று மட்டுமே இருந்திருந்தால், விமர்சகர்களால் எளிதில் அதைப் பொய்யென ஓரங்கட்டியிருக்க முடியும். (லூக்கா 24:1-11) ஆனால், நேரில் கண்ட ஐந்நூறுக்கும் அதிகமானவர்களுடைய சான்று இருந்ததால், இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டது உண்மையே என்பது நிரூபணமானது.
வெகுமதி என்ன? இயேசுமீது விசுவாசம் வைத்து அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும்; அவர்கள் சுத்தமான மனசாட்சியைப் பெற்றிருக்கவும் முடியும். (மாற்கு 2:5-12; 1 தீமோத்தேயு 1:19; 1 பேதுரு 3:16-22) அவர்கள் இறந்துவிட்டால்கூட, “கடைசி நாளில்” அவர்களுக்கு மீண்டும் உயிரளிக்கப்போவதாக இயேசு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.—யோவான் 6:40. (w09 5/1)
கூடுதலான தகவலுக்கு, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் “இயேசு கிறிஸ்து யார்?” என்ற நான்காம் அதிகாரத்தையும் “மீட்கும்பொருள்—கடவுள் தந்த மாபெரும் பரிசு” என்ற ஐந்தாம் அதிகாரத்தையும் பாருங்கள்.b
[அடிக்குறிப்புகள்]
a மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய சுவிசேஷ எழுத்தாளர்கள் நாத்தான்வேலை பர்த்தொலொமேயு என்ற பெயரில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 7-ன் படம்]
நாத்தான்வேலைப் போல் நீங்களும் இயேசுவைப் பற்றிய அத்தாட்சியை அலசி ஆராயுங்கள்