நீங்கள் அக்கிரமத்தை வெறுக்கிறீர்களா?
‘[இயேசு] அக்கிரமத்தை வெறுத்தார்.’—எபி. 1:9.
1. அன்பைப் பற்றி இயேசு என்ன கற்பித்தார்?
இயேசு கிறிஸ்து தம் சீடர்களுக்கு அன்பின் ஆழத்தை அழுத்திக் காட்டினார்; அப்போது, “நீங்கள் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுங்கள்; நான் உங்கள்மீது அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அப்படிப்பட்ட அன்பை ஒருவர்மீது ஒருவர் காட்டினால், நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்றார். (யோவா. 13:34, 35) ஆம், ஒருவருக்கொருவர் சுயதியாக அன்பைக் காட்டும்படி இயேசு தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார். அந்த அன்பே அவர்களை அடையாளம் காட்டும் சின்னமாக இருக்கும். அதோடு, “உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” என்றும் அறிவுறுத்தினார்.—மத். 5:44.
2. கிறிஸ்துவின் சீடர்கள் எதை வெறுக்க வேண்டும்?
2 அன்பு காட்ட வேண்டும் என்று மட்டுமா இயேசு கற்றுக்கொடுத்தார், எதை வெறுக்க வேண்டும் என்றும் கற்றுக்கொடுத்தார். “நீ நீதியை நேசித்தாய், அக்கிரமத்தை வெறுத்தாய்” என்று இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்டது. (எபி. 1:9; சங். 45:7) அப்படியானால், நாம் நீதியை நேசிப்பதோடு, அக்கிரமத்தை, அதாவது பாவத்தை, வெறுக்கவும் வேண்டும். “பாவம் செய்துவருகிற ஒவ்வொருவனும் சட்டத்தை மீறி நடக்கிறான்; சட்டத்தை மீறுவதே பாவம்” என்று அப்போஸ்தலன் பவுல் அழுத்தி சொன்னது கவனிக்க வேண்டிய விஷயம்.—1 யோ. 3:4.
3. அக்கிரமத்தை வெறுப்பது சம்பந்தமாக நாம் சிந்திக்கப்போகும் நான்கு விஷயங்கள் யாவை?
3 அப்படியென்றால், ‘அக்கிரமத்தை நான் வெறுக்கிறேனா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்வது நல்லது. நாம் அக்கிரமத்தை வெறுக்கிறோம் என்பதைப் பின்வரும் விஷயங்களில் எப்படிக் காட்டலாமென இப்போது சிந்திப்போம்: (1) அளவுக்கு மீறி குடிப்பது பற்றிய நம் மனநிலை, (2) மாயமந்திரத்தைப் பற்றிய நம் கருத்து, (3) ஒழுக்கக்கேடு பற்றிய நம் மனப்பான்மை, (4) அக்கிரமத்தை நேசிப்பவர்களைப் பற்றிய நம் கண்ணோட்டம்.
மதுவுக்கு மயங்கிவிடாதீர்
4. குடிவெறியைக் குறித்து ஏன் இயேசுவால் தயக்கமின்றி எச்சரிக்க முடிந்தது?
4 இயேசு சில சமயங்களில் திராட்சமது அருந்தினார், அதைக் கடவுள் தந்த அன்பளிப்பாகக் கருதினார். (சங். 104:14, 15) ஆனாலும், அவர் ஒருபோதும் அளவுக்கு மீறி குடித்து அந்த அன்பளிப்பைத் தவறாகப் பயன்படுத்தவில்லை. (நீதி. 23:29-33) இதனால், குடிப்பழக்கத்தைக் குறித்து இயேசுவால் தயக்கமின்றி எச்சரிக்க முடிந்தது. (லூக்கா 21:34-ஐ வாசியுங்கள்.) மிதமிஞ்சி குடிப்பது படு மோசமான பாவங்களில் விழச் செய்துவிடலாம். அதனால்தான், அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்களைச் சீரழிக்கும் குடிவெறியைத் தவிர்த்து, கடவுளுடைய சக்தியினால் எப்போதும் நிரப்பப்படுங்கள்.” (எபே. 5:18) ‘திராட்சமதுவுக்கு அடிமையாகாதீர்கள்’ என்று சபையிலிருந்த முதிர்வயது பெண்களுக்கும் அவர் அறிவுரை கூறினார்.—தீத். 2:3.
5. மது அருந்த விரும்பும் ஒருவர் என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்?
5 நீங்கள் மது அருந்த விரும்பினால், சில கேள்விகளையும் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘அளவுக்கு மிஞ்சி குடிக்கும் விஷயத்தில் இயேசுவின் மனநிலை எனக்கும் இருக்கிறதா? அப்படிக் குடிக்கிற ஒருவருக்கு என்னால் தயக்கமின்றி அறிவுரை கொடுக்க முடியுமா? கவலைகளை மறந்து நிம்மதியாய் இருக்கத்தான் குடிக்கிறேனா? ஒவ்வொரு வாரமும் எவ்வளவு குடிக்கிறேன்? நான் நிறைய குடிக்கிறேன் என்று யாராவது சொன்னால், அதை எப்படி எடுத்துக்கொள்கிறேன்? “நான் அப்படியெல்லாம் இல்லை” என்று சொல்லி அவர்களிடம் சாதிக்கிறேனா அல்லது எரிந்துவிழுகிறேனா?’ குடிக்கு அடிமையானால் சிந்திக்கும் திறன் சிதைந்துவிடும், சரியான தீர்மானங்களையும் எடுக்க முடியாமல் போய்விடும். ஆனால், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் தங்களுடைய சிந்திக்கும் திறனைக் காத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.—நீதி. 3:21, 22, NW.
மாயமந்திர பழக்கங்களை ஒழிப்பீர்
6, 7. (அ) சாத்தானையும் பேய்களையும் இயேசு என்ன செய்தார்? (ஆ) மாயமந்திரப் பழக்கங்கள் இன்று ஏன் உலகெங்கும் பரவி வருகின்றன?
6 இயேசு பூமியில் இருந்தபோது சாத்தானையும் பேய்களையும் தீவிரமாய் எதிர்த்தார். உத்தமத்தை முறிக்க சாத்தான் கொண்டுவந்த நேரடி தாக்குதல்களைத் தகர்த்தெறிந்தார். (லூக். 4:1-13) தம் சிந்தையையும் செயல்களையும் செல்வாக்கு செலுத்த சாத்தான் பயன்படுத்திய மறைமுக சூழ்ச்சிகளையும் அவர் இனம் கண்டுகொண்டு, அவற்றை எதிர்த்தார். (மத். 16:21-23) பேய்களின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த நல்லோருக்கு உதவினார்.—மாற். 5:2, 8, 12-15; 9:20, 25-27.
7 இயேசு 1914-ல் ராஜாவாக பதவி ஏற்ற பின், சாத்தானையும் பேய்களையும் பரலோகத்திலிருந்து விரட்டியடித்து, அவர்களுடைய ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டினார். விளைவு? ‘உலகம் முழுவதையும் மோசம்போக்க’ சாத்தான் இன்று படுதீவிரமாகச் செயல்படுகிறான். (வெளி. 12:9, 10) அதனால்தான், உலகெங்கும் மாயமந்திர பழக்கங்கள் பரவி வருவதையும் மக்களுக்கு அவற்றில் ஆர்வம் அதிகமாகி வருவதையும் பார்த்து நாம் ஆச்சரியப்படுவதில்லை. அப்படியானால், அவற்றில் சிக்கிவிடாதிருக்க நாம் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?
8. பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?
8 ஆவியுலகத் தொடர்பில் இருக்கும் ஆபத்துகளைக் குறித்து பைபிள் நமக்குத் தெளிவாக எச்சரிக்கிறது. (உபாகமம் 18:10-12-ஐ வாசியுங்கள்.) மாயமந்திரப் பழக்கங்களை ஊக்குவிக்கும் திரைப்படங்கள், புத்தகங்கள், வீடியோ கேம்ஸ் ஆகியவற்றின் மூலம் இன்று மக்களின் மனதை சாத்தானும் பேய்களும் கெடுத்து வருகிறார்கள். ஆகவே, பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும்போது நாம் ஒவ்வொருவரும் இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘கடந்த சில மாதங்களாக, மாயமந்திர திரைப்படங்களை, டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறேனா? மாயமந்திர வீடியோ கேம்ஸ் விளையாடுகிறேனா, அப்படிப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேனா? அவற்றைத் தவிர்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்கிறேனா அல்லது அலட்சியம் செய்கிறேனா? இப்படிப்பட்ட பொழுதுபோக்கில் ஈடுபட்டால் யெகோவா என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்று யோசித்தாவது பார்த்திருக்கிறேனா? யெகோவா மீதும் அவருடைய நீதிநெறிகள் மீதும் உள்ள அன்பின் காரணமாக இப்படிப்பட்ட பழக்கங்களில் ஈடுபட வேண்டுமென்ற ஆசையை வேரோடு பிடுங்கி எறிந்துவிடுவேனா?’—அப். 19:19, 20.
ஒழுக்கக்கேடு பற்றிய இயேசுவின் எச்சரிப்புக்குச் செவிகொடுப்பீர்
9. ஒருவர் எவ்வாறு தன் உள்ளத்தில் அக்கிரமத்தை நேசிக்கக் கூடும்?
9 பாலியல் சம்பந்தமான யெகோவாவின் நெறிகளை இயேசு ஆதரித்தார். “கடவுள் ஆரம்பத்தில் மனிதர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? ‘இதன் காரணமாக, ஒருவன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான், அவர்கள் இருவராக அல்ல ஒரே உடலாக இருப்பார்கள்’ என்று அவர் சொன்னதையும் நீங்கள் வாசிக்கவில்லையா? அதனால், அவர்கள் இருவராக அல்ல, ஒரே உடலாக இருப்பார்கள். எனவே, கடவுள் இணைத்திருப்பதை எந்த மனிதனும் பிரிக்காதிருக்கட்டும்” என்றார். (மத். 19:4-6) நாம் பார்க்கும் விஷயங்கள் நம் இருதயத்தைப் பாதிக்கும் என்பதை இயேசு அறிந்திருந்தார். அதனால், மலைப்பிரசங்கத்தில் இவ்வாறு சொன்னார்: “‘மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது’ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், காம உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் இருதயத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்.” (மத். 5:27, 28) இயேசுவின் இந்த எச்சரிக்கையை அசட்டை செய்கிறவர்கள் தங்கள் உள்ளத்தில் அக்கிரமத்தை நேசிக்கிறார்கள் என்பதே உண்மை.
10. ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்திலிருந்து ஒருவர் வெளியில் வர முடியும் என்பதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.
10 ஆபாசப் படங்களின் மூலம் பாலியல் ஆசைகளை மக்களின் மனதில் சாத்தான் விதைக்கிறான். நாம் வாழும் இந்த உலகில் ஆபாசத்திற்குப் பஞ்சமே இல்லை. ஆபாசத்தைப் பார்ப்பவர்கள் அந்தக் காட்சிகளைத் தங்கள் மனதிலிருந்து அழிக்க முடியாமல் தவிக்கிறார்கள். அதற்கு அடிமையாகியும் விடுகிறார்கள். ஒரு கிறிஸ்தவருக்கு என்ன ஆனது என்று பாருங்கள். அவர் சொல்கிறார்: “ஆபாசப் படங்களை நான் இரகசியமாய் பார்த்து வந்தேன். கற்பனை உலகில் மிதந்தேன்; அதே சமயத்தில் ஆன்மீக காரியங்களிலும் ஈடுபட்டேன். இது தப்பு என்று எனக்கு நன்றாகத் தெரிந்தது; இருந்தாலும், என்னுடைய சேவையைக் கடவுள் ஏற்றுக்கொள்வார் என்று நினைத்தேன்.” இந்தச் சகோதரருடைய மனதை எது மாற்றியது? “மூப்பர்களிடம் சொல்வது எனக்கு மகா கஷ்டமாக இருந்தாலும் நான் போய் சொன்னேன்” என்கிறார். இந்தக் கெட்ட பழக்கத்திலிருந்து அந்தச் சகோதரர் கடைசியில் வெளியில் வந்தார். “இந்தப் பாவத்தை அடியோடு விட்டுவிட்ட பிறகு எனக்கு சுத்தமான மனசாட்சி கிடைத்தது” என்று அவர் சொல்கிறார். அக்கிரமத்தை வெறுக்கிறவர்கள் ஆபாசத்தை வெறுக்க வேண்டும்.
11, 12. இசையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அக்கிரமத்தை வெறுக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
11 இசையும் பாடல் வரிகளும் நம் உணர்ச்சிகள்மீது பலமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால், நம் அடையாளப்பூர்வ இருதயமும் பாதிக்கப்படலாம். இசை கடவுள் தந்த ஒரு பரிசு; பல காலங்களாக உண்மை வழிபாட்டிலும் இது இன்றியமையாத இடத்தை வகித்து வந்திருக்கிறது. (யாத். 15:20, 21; எபே. 5:19) ஆனால், சாத்தானின் பொல்லாத உலகம் இசையைப் பயன்படுத்தி ஒழுக்கக்கேட்டை ஊக்குவிக்கிறது. (1 யோ. 5:19) நீங்கள் கேட்கும் இசை உங்கள் மனதைக் கறைபடுத்துகிறதா இல்லையா என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?
12 நீங்கள் இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘நான் கேட்கும் பாடல்கள் கொலை, ஆபாசம், ஒழுக்கக்கேடு, கேலிப்பேச்சு போன்றவற்றை ஊக்குவிக்கின்றவா? அந்தப் பாடல் வரிகளை யாரிடமாவது பாடிக் காட்டினால் நான் அக்கிரமத்தை வெறுக்கிறவன் என்று அவர் நினைப்பாரா அல்லது நான் கறைபட்டவன் என்று நினைப்பாரா?’ இதுபோன்ற பாடல்களை ரசித்துக்கொண்டே அக்கிரமத்தை வெறுக்கிறேன் என்று மனதார சொல்ல முடியாது. ஏனென்றால், “வாயிலிருந்து வருவதெல்லாம் இருதயத்திலிருந்து வருகின்றன; அவையே ஒரு மனிதனைத் தீட்டுப்படுத்துகின்றன. உதாரணமாக, இருதயத்திலிருந்தே கெட்ட எண்ணம், கொலை, மணத்துணைக்குத் துரோகம், பாலியல் முறைகேடு, திருட்டு, பொய்சாட்சி, நிந்தனை ஆகிய எல்லாத் தீமைகளும் வெளிவருகின்றன” என்று இயேசு சொன்னார்.—மத். 15:18, 19; யாக்கோபு 3:10, 11-ஐ ஒப்பிடுங்கள்.
அக்கிரமத்தை நேசிப்பவர்களே இயேசுவின் சிந்தையை வளர்ப்பீர்
13. பாவத்திலேயே ஊறிப்போய் இருந்தவர்களை இயேசு எப்படிக் கருதினார்?
13 பாவிகளை, அதாவது அக்கிரமக்காரரை, மனந்திரும்பும்படி அழைக்கவே வந்தேன் என்று இயேசு சொன்னார். (லூக். 5:30-32) ஆனால், பாவத்திலேயே ஊறிப்போய் இருந்தவர்களை அவர் எப்படிக் கருதினார்? அவர்களைக் கடுமையாகக் கண்டனம் செய்தார். (மத். 23:15, 23-26) அதோடு, “என்னை நோக்கி, ‘கர்த்தாவே, கர்த்தாவே’ என்று சொல்கிறவர்கள் பரலோக அரசாங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்கிறவர்களே அதில் அனுமதிக்கப்படுவார்கள். அந்நாளில் பலர் என்னிடம், ‘கர்த்தாவே, கர்த்தாவே, உங்கள் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா, உங்கள் பெயரில் பேய்களைத் துரத்தினோம் அல்லவா, உங்கள் பெயரில் எத்தனையோ அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?’ என்பார்கள்” என்றும் இயேசு நேரடியாகவே சொன்னார். வேண்டுமென்றே தொடர்ந்து பாவம் செய்கிறவர்களைப் பார்த்து, “என்னைவிட்டுப் போய்விடுங்கள்” என்று சொல்லி ஒதுக்கித் தள்ளுவார். (மத். 7:21-23) ஏன் இப்பேர்ப்பட்ட ஒரு நியாயத்தீர்ப்பு? ஏனென்றால், அவர்கள் தங்கள் அக்கிரமச் செயல்களால் கடவுளை அவமதிக்கிறார்கள்; அதோடு மற்றவர்களுக்கும் கேடு விளைவிக்கிறார்கள்.
14. மனந்திரும்பாத பாவி ஏன் சபை நீக்கம் செய்யப்படுகிறார்?
14 மனந்திரும்பாத பாவியை சபை நீக்கம் செய்ய வேண்டும் என்று பைபிள் கட்டளையிடுகிறது. (1 கொரிந்தியர் 5:9-13-ஐ வாசியுங்கள்.) குறைந்தபட்சம் பின்வரும் மூன்று காரணங்களுக்காக ஒருவர் சபை நீக்கம் செய்யப்படுகிறார்: (1) யெகோவாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படாதிருக்க... (2) சபை கறைபடாதிருக்க... (3) பாவம் செய்தவர் மனந்திரும்பி வர வாய்ப்பளிக்க... ஒருவர் சபை நீக்கம் செய்யப்படுகிறார்.
15. நாம் யெகோவாவுக்கு உத்தமமாய் இருக்க விரும்பினால் என்ன முக்கியமான கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
15 மனந்திரும்பாத பாவியை இயேசு பார்க்கும் விதமாக நாமும் பார்க்கிறோமா? இதற்கு பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்வது அவசியம்: ‘சபைநீக்கம் செய்யப்பட்ட ஒருவரோடு அல்லது சபையிலிருந்து தன்னை விலக்கிக்கொண்ட ஒருவரோடு நான் கூட்டுறவு கொள்வேனா? ஒருவேளை அவர் எனது நெருங்கிய உறவினராக, ஆனால் என் வீட்டில் வசிக்காதவராக இருந்தால், என்ன செய்வேன்?’ இதுபோன்ற சூழ்நிலையில் நீதியை நேசிப்பதும் யெகோவாவுக்கு உத்தமமாய் இருப்பதும் ஒரு சோதனையாக இருக்கலாம்.a
16, 17. ஒரு கிறிஸ்தவ தாய் என்ன இக்கட்டான சூழ்நிலையை எதிர்ப்பட்டார், மனந்திரும்பாத பாவிகளைச் சபை நீக்கம் செய்யும் ஏற்பாட்டிற்கு ஆதரவு காட்ட எது அவருக்கு உதவியது?
16 ஒரு சகோதரியின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவருடைய மகன் முன்பு சத்தியத்தில் இருந்தான். ஆனால், பிறகு வேண்டுமென்றே பாவ வழியில் செல்ல ஆரம்பித்தான். அதனால், சபை நீக்கம் செய்யப்பட்டான். அந்தச் சகோதரி யெகோவாவை நேசித்தார்; தன் மகனையும் நேசித்தார். எனவே, அவனோடு அதிகம் ஒட்டுறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்ற வேதப்பூர்வ கட்டளைக்குக் கீழ்ப்படிவது அவருக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது.
17 இந்தச் சகோதரிக்கு நீங்கள் என்ன ஆலோசனை கொடுத்திருப்பீர்கள்? அவருடைய வேதனையை யெகோவா நிச்சயம் புரிந்துகொள்வார் என்று சொல்லி ஒரு மூப்பர் அவரைத் தேற்றினார். தேவபுத்திரர் சிலர் கலகம் செய்தபோது யெகோவாவுக்கு எவ்வளவு மன வேதனையாய் இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கும்படி அவர் சொன்னார். நாம் படும் வேதனையை யெகோவா அறிந்திருந்தாலும் மனந்திரும்பாத பாவிகளைச் சபை நீக்கம் செய்ய வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார் என்பதை அந்தச் சகோதரிக்குப் பக்குவமாக எடுத்துச் சொன்னார். அந்த அறிவுரைகளை அவர் ஏற்றுக்கொண்டதோடு, சபை நீக்க ஏற்பாட்டை உண்மையோடு ஆதரித்தார்.b இப்படி உண்மையாய் இருப்பது யெகோவாவின் இதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறது.—நீதி. 27:11.
18, 19. (அ) பாவ வழியில் தொடர்ந்து நடப்பவருடன் உள்ள உறவை துண்டித்துக்கொள்ளும்போது எதை வெறுப்பதைக் காட்டுகிறோம்? (ஆ) யெகோவாவுக்கும் அவருடைய ஏற்பாட்டிற்கும் உண்மையோடு இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?
18 இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நீங்கள் எதிர்ப்பட்டால், யெகோவா உங்களைப் புரிந்துகொள்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். சபை நீக்கம் செய்யப்பட்ட ஒருவரோடு அல்லது சபையிலிருந்து விலகிக்கொண்ட ஒருவரோடு உள்ள உறவைத் துண்டித்துக் கொள்வதன் மூலம் அந்த நிலைக்கு வழிநடத்திய மனப்பான்மையையும் செயல்களையும் நீங்கள் வெறுப்பதைக் காட்டுகிறீர்கள். அதோடு, அந்த நபரை நேசிப்பதையும் அவருக்கு நல்லது செய்யவே விரும்புகிறீர்கள் என்பதையும் காட்டுகிறீர்கள். நீங்கள் யெகோவாவுக்கு உண்மையோடு இருந்தால், சிட்சையைப் பெற்ற நபர் மனந்திரும்பி யெகோவாவிடம் திரும்பி வர அதிக வாய்ப்பு இருக்கிறது.
19 சபை நீக்கம் செய்யப்பட்டு பின்பு மனந்திரும்பி வந்த ஒருவர் இவ்வாறு எழுதினார்: “யெகோவா தம் மக்களை நேசிப்பதால்தான் சபை சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்; இது என் மனதுக்குச் சந்தோஷமாக இருக்கிறது. உலகத்தாருக்கு இந்த ஏற்பாடு இரக்கமற்ற செயலாகத் தெரியலாம்; ஆனால், இது ஒரு நல்ல ஏற்பாடு அதேசமயத்தில், அன்பான ஓர் ஏற்பாடு.” கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இவர் சபை நீக்கம் செய்யப்பட்ட சமயத்தில் சபையாரும் குடும்பத்தாரும் இவருடன் தொடர்ந்து கூட்டுறவு வைத்திருந்தால் இவரால் இப்படிச் சொல்லியிருக்க முடியுமா? சபை நீக்கம் பற்றிய வேதப்பூர்வ ஏற்பாட்டிற்கு நாம் ஆதரவு காட்டுவதன் மூலம் நீதியை நேசிக்கிறோம் என்றும் ஒழுக்க நெறிகளை வகுக்க யெகோவாவுக்கு உரிமை இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் காட்டுகிறோம்.
‘தீமையை வெறுத்திடுவீர்’
20, 21. அக்கிரமத்தை வெறுப்பது ஏன் ரொம்ப முக்கியம்?
20 “தெளிந்த புத்தியுடன் இருங்கள், விழித்திருங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு எச்சரிக்கிறார். ஏன்? ஏனென்றால், “உங்கள் எதிரியான பிசாசு கர்ஜிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று அலைந்து திரிகிறான்.” (1 பே. 5:8) சாத்தான் விழுங்க நினைக்கும் ‘எவனோ’ ஒருவன் நீங்களாக இருக்கலாமா? இந்தக் கேள்விக்கு பதில் நீங்கள் அக்கிரமத்தை எந்தளவு வெறுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே இருக்கிறது.
21 அக்கிரமத்தை வெறுப்பது அப்படி ஒன்றும் சுலபமல்ல. நாம் பிறப்பிலேயே பாவிகள்தான்; இந்த உலகமும் உடலின் இச்சைகளைத் திருப்தி செய்துகொள்ளவே நம்மை ஊக்குவிக்கிறது. (1 யோ. 2:15-17) இருந்தாலும், நாம் இயேசுவைப் பின்பற்றி யெகோவா மீதுள்ள அன்பை வளர்த்தோம் என்றால் அக்கிரமத்தை வெறுக்க முடியும். ஆகவே, யெகோவா உத்தமரைக் “காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்” என்பதில் முழு நம்பிக்கை வைத்து, ‘தீமையை வெறுக்க’ தீர்மானமாய் இருப்போமாக!—சங். 97:10.
[அடிக்குறிப்புகள்]
a கூடுதல் தகவலுக்கு செப்டம்பர் 15, 1981 ஆங்கில காவற்கோபுர இதழில் பக்கங்கள் 26-31–ஐப் பாருங்கள்.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• மது அருந்தும் விஷயத்தில் நம் மனப்பான்மையை ஆராய்ந்து பார்க்க எது உதவும்?
• மாயமந்திர பழக்கங்களில் சிக்கிவிடாதிருக்க நாம் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?
• ஆபாசம் ஏன் ஆபத்தானது?
• நமக்கு நேசமானவர் சபை நீக்கம் செய்யப்படும்போது அக்கிரமத்தை வெறுக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
[பக்கம் 29-ன் படம்]
நீங்கள் மது அருந்த விரும்பினால் எதை யோசித்துப் பார்க்க வேண்டும்?
[பக்கம் 30-ன் படம்]
பொழுதுபோக்கு விஷயத்தில் சாத்தானின் செல்வாக்கைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்
[பக்கம் 31-ன் படம்]
ஆபாசத்தைப் பார்ப்பவர் எதை நேசிக்கிறார்?