தப்புக்கணக்குப் போட்டு உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்
தடை செய்யப்பட்டிருந்த மரத்தின் பழத்தை ஏவாள் சாப்பிட்ட பிறகு கடவுள் அவளிடம், “நீ இப்படிச் செய்தது என்ன” என்று கேட்டார். அதற்கு அவள், “சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன்” என்று பதில் சொன்னாள். (ஆதி. 3:13) ஏவாளைக் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போகச் செய்த அந்தத் தந்திரக்கார பாம்பு, அதாவது சாத்தான், ‘உலகம் முழுவதையும் மோசம்போக்குகிற பழைய பாம்பு’ என்று பின்னர் அழைக்கப்பட்டான்.—வெளி. 12:9.
ஆதியாகமத்திலுள்ள இந்தப் பதிவு சாத்தானை நயவஞ்சகன், கவனக் குறைவாய் இருப்பவர்களை ஏமாற்றுவதற்காகப் பொய்களைப் புனைபவன் என்றெல்லாம் சித்தரிக்கிறது. உண்மைதான், அவன் விரித்த ஏமாற்று வலையில் ஏவாள் விழுந்தாள். ஆனால், சாத்தான் மட்டும்தான் நம்மை ஏமாற்றுவான் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. நாமும்கூட ‘நம்மையே ஏமாற்றிக்கொள்ள’ வாய்ப்பிருப்பதாக பைபிள் எச்சரிக்கிறது.—யாக். 1:22.
‘என்னை நானே ஏமாற்றிக்கொள்வதா, அதற்கு வாய்ப்பே இல்லை’ எனத் தோன்றலாம். ஆனால், பைபிள் அந்த எச்சரிப்பைக் கொடுப்பதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கிறது. அதனால், நம்மையே எப்படி ஏமாற்றிக்கொள்ள முடியும், எப்படிப்பட்ட தப்புக்கணக்குப் போடுவது நம்மையே ஏமாற்றிவிடும் என்பதையெல்லாம் சிந்திப்பது நல்லது. இதற்கு ஒரு பைபிள் உதாரணத்தைக் கவனிப்போம்.
தங்களையே ஏமாற்றிக்கொண்டவர்கள்
சுமார் கி.மு. 537-ல் பெர்சிய அரசனாகிய மகா கோரேசு பாபிலோனில் சிறைப்பட்டிருந்த யூதர்களுக்கு ஒரு கட்டளை பிறப்பித்தார்; அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்று ஆலயத்தைத் திரும்ப கட்டும்படி அதில் குறிப்பிட்டிருந்தார். (எஸ்றா 1:1, 2) அதற்கு மறுவருடம், யெகோவாவின் நோக்கத்திற்கு இசைவாக புதிய ஆலயத்திற்கு மக்கள் அஸ்திவாரம் போட்டார்கள். இந்த முக்கியமான கட்டுமானப் பணியின் முதற்கட்ட வேலையை யெகோவா ஆசீர்வதித்ததைக் கண்டு அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள், அவரைப் புகழ்ந்து துதித்தார்கள். (எஸ்றா 3:8, 10, 11) ஆனால், சீக்கிரத்திலேயே இந்தக் கட்டுமானப் பணிக்கு எதிர்ப்பு கிளம்பியது; அதனால், மக்கள் மனமுடைந்து போனார்கள். (எஸ்றா 4:4) அவர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்து சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு, எருசலேமில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் அனைத்திற்கும் பெர்சிய அதிகாரிகள் தடை விதித்தார்கள். அந்தத் தடையுத்தரவை அமல்படுத்த, பிராந்திய அதிகாரிகள் எருசலேமுக்கு வந்து, “பலவந்தத்தோடும் கட்டாயத்தோடும் அவர்களை [யூதர்களை] வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப் போட்டார்கள்.”—எஸ்றா 4:21-24.
அந்தத் தடையுத்தரவைப் பார்த்த யூதர்கள் தப்புக்கணக்குப் போட்டு தங்களையே ஏமாற்றிக்கொண்டார்கள். “கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை” என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். (ஆகா. 1:2) உடனடியாக ஆலயம் கட்டி முடிக்கப்படுவதைக் கடவுள் விரும்பவில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு வழி இருக்கிறதா என்று பார்க்காமல், ஆலயம் கட்டுவதை விட்டுவிட்டார்கள்; தங்களுக்கு வீடுவாசல்களைக் கட்டிக்கொள்வதில் மூழ்கிவிட்டார்கள். எனவே, தீர்க்கதரிசியான ஆகாய் அவர்களிடம், “இந்த வீடு [யெகோவாவுடைய ஆலயம்] பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?” என்று நேரடியாகக் கேட்டார்.—ஆகா. 1:4.
இதில் நமக்கென்ன பாடம்? கடவுளுடைய நோக்கம் நிறைவேறும் காலம் சம்பந்தமாக நாம் தப்புக்கணக்குப் போடுகிறோமா? அப்படிச் செய்தால், ஆன்மீகக் காரியங்களுக்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம்; சொந்த காரியங்களிலேயே மூழ்கிவிடுவோம். இதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். விருந்தாளிகள் வர நீங்கள் காத்திருக்கிறீர்கள். காத்திருக்கும் அதே வேளையில், அவர்கள் சௌகரியமாகத் தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் நீங்கள் அரக்கப்பரக்கச் செய்துகொண்டிருக்கிறீர்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் வரத் தாமதமாகும் என்ற செய்தியைக் கேள்விப்படுகிறீர்கள். அப்போது செய்துகொண்டிருக்கிற வேலைகளை அப்படியே நிறுத்திவிடுவீர்களா?
காலம் கடத்தாமல் ஆலயத்தைக் கட்டி முடிக்கும்படியே யெகோவா இன்னமும் விரும்புகிறார் என்பதை யூதர்களுக்குப் புரிய வைக்க ஆகாயும் சகரியாவும் முயற்சி எடுத்ததைச் சற்று யோசித்துப் பாருங்கள். “தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள்” என்று ஆகாய் உற்சாகப்படுத்தினார். (ஆகா. 2:4) கடவுளுடைய சக்தி தங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையோடு அந்தக் கட்டுமான வேலையை அவர்கள் தொடர வேண்டியிருந்தது. (சக. 4:6, 7) யெகோவாவுடைய நாள் வருவது சம்பந்தமாகத் தப்புக்கணக்குப் போடாதிருக்க இந்த உதாரணம் நமக்கு உதவும், அல்லவா?—1 கொ. 10:11.
தெளிவாய்ச் சிந்தியுங்கள்
யெகோவா, ‘புதிய வானத்தையும் புதிய பூமியையும்’ ஏற்படுத்தப்போகும் காலத்தைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு தன் இரண்டாவது கடிதத்தில் குறிப்பிட்டார். (2 பே. 3:13) கேலி செய்கிறவர்கள் சிலர், மனித விவகாரங்களில் கடவுள் தலையிடுவாரா என்ற சந்தேகத்தைக் கிளப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார். “உலகம் தோன்றிய காலத்திலிருந்தே எல்லாம் இருந்தபடிதான் இருக்கிறது” என்றும் அதனால் எதுவும் நடக்காதென்றும் அவர்கள் விதண்டாவாதம் செய்தார்கள். (2 பே. 3:4) இப்படித் தப்புக்கணக்குப் போடுகிறவர்களுக்குப் பதிலடி கொடுக்க பேதுரு விரும்பினார். எனவே அவர், “சிலவற்றை நினைப்பூட்டி தெளிவாகச் சிந்திக்கும் உங்கள் மனத்திறனை தூண்டியெழுப்புகிறேன்” என்று எழுதினார். கேலி செய்தவர்கள் தப்புக்கணக்குப் போட்டிருந்ததை சக கிறிஸ்தவர்களுக்கு அவர் நினைப்பூட்டினார். முன்னர், கடவுள் மனித விவகாரங்களில் தலையிட்டு ஜலப்பிரளயத்தால் உலகை அழித்தார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.—2 பே. 3:1, 5-7.
கி.மு. 520-ல், மனமுடைந்து போய் ஆலயக் கட்டுமானப் பணியை நிறுத்திவிட்டிருந்த யூதர்களுக்கு ஆகாய் இத்தகைய ஊக்கமூட்டுதலைத்தான் கொடுத்தார். “உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்” என்று அறிவுரை வழங்கினார். (ஆகா. 1:5) தன்னுடைய சக வணக்கத்தார் தெளிவாகச் சிந்திக்கும்படி அவர்களுடைய மனத்திறனைத் தூண்டியெழுப்புவதற்காக, கடவுளுடைய நோக்கங்களையும் அவருடைய ஜனங்களுக்கு அவர் கொடுத்துள்ள வாக்குறுதிகளையும் நினைப்பூட்டினார். (ஆகா. 1:8; 2:4, 5) இத்தகைய உற்சாகமூட்டுதலைப் பெற்ற ஜனங்கள், தடையுத்தரவின் மத்தியிலும் ஆலயத்தை மீண்டும் கட்ட ஆரம்பித்தார்கள். கட்டுமானப் பணியை நிறுத்துவதற்கு எதிரிகள் திரும்பவும் முயற்சி செய்தார்கள்; ஆனால், தோல்வியையே தழுவினார்கள். தடையுத்தரவு நீக்கப்பட்டது, ஐந்து வருடங்களில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.—எஸ்றா 6:14, 15; ஆகா. 1:14, 15.
நம்முடைய வழிகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
ஆகாயின் காலத்திலிருந்த யூதர்களைப் போலவே, நாமும் கஷ்டங்கள் வரும்போது மனமுடைந்து போய்விட வாய்ப்பிருப்பதாக நினைக்கிறீர்களா? அப்படி மனமுடைந்துபோனால், பக்திவைராக்கியத்துடன் நம்மால் நற்செய்தியைத் தொடர்ந்து அறிவிக்க முடியாது. எது நம்மை மனமுடைந்துபோகச் செய்யலாம்? ஒருவேளை நாம் இந்த உலகின் அநியாயத்தில் அடிபட்டு அவதிப்பட்டுக்கொண்டிருக்கலாம். ஆபகூக்கை நினைத்துப் பாருங்கள்; அவர், “இன்னும் எத்தனை காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்புவேன்; நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்?” என்று கேட்டார். (ஆப. 1:2, பொது மொழிபெயர்ப்பு) மற்றவர்கள் நினைப்பது போல ஒரு கிறிஸ்தவரும் கடவுள் காலம் தாழ்த்துவதாக நினைத்துக்கொண்டு, அவசர உணர்வை இழந்து, சொகுசான வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். நீங்களும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? ஆம் என்றால், நம்மையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். ‘நம்முடைய வழிகளைச் சிந்தித்துப் பார்க்கும்படியும்’ ‘தெளிவாகச் சிந்திக்கும் நம் மனத்திறனை தூண்டியெழுப்பும்படியும்’ சொல்லப்பட்ட பைபிள் அறிவுரைக்குக் கீழ்ப்படிவது அதிக முக்கியம், அல்லவா? ‘இந்தப் பொல்லாத உலகம் நான் நினைத்தைவிட இன்னும் நீண்ட நாட்களுக்கு நீடித்தால் அதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டுமா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்.
காத்திருக்க வேண்டிய காலம்
இந்த உலகத்தின் முடிவு சம்பந்தமாக இயேசு சொன்ன வார்த்தைகளைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். கடைசி நாட்களைக் குறித்து இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தில் விழிப்புடன் இருக்கும்படி அவர் திரும்பத் திரும்பச் சொன்னதை மாற்கு எழுதிய பதிவு காட்டுகிறது. (மாற். 13:33-37) அர்மகெதோனில் முடிவடையும் யெகோவாவின் மகா நாள் பற்றிய தீர்க்கதரிசன விவரிப்பின் இடையே இதே போன்ற எச்சரிப்பைப் பார்க்கிறோம். (வெளி. 16:14-16) இந்த எச்சரிப்பு ஏன் திரும்பத் திரும்பக் கொடுக்கப்பட்டிருக்கிறது? நீண்ட காலம் காத்திருப்பதாகத் தோன்றுகையில் மக்கள் அவசர உணர்வை இழந்துவிட வாய்ப்பிருப்பதால் இத்தகைய நினைப்பூட்டுதல்கள் தேவைப்படுகின்றன.
இந்த உலகின் முடிவுவர காத்திருக்கிற நாம் எப்போதும் விழிப்புடன் இருப்பது அவசியமென இயேசு விளக்கினார். ஒருவருடைய வீடு கொள்ளையடிக்கப்பட்டதைப் பற்றி இயேசு குறிப்பிட்டார். அவர் அதை எப்படித் தடுத்திருக்கலாம்? விடியவிடிய விழித்திருப்பதன் மூலம் தடுத்திருக்கலாம். “தயாராக இருங்கள்; நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வரப்போகிறார்” என்ற புத்திமதியோடு அந்த உவமையை இயேசு முடித்தார்.—மத். 24:43, 44.
காத்திருப்பதன் அவசியத்தை, அதுவும் நீண்ட காலம் காத்திருப்பதன் அவசியத்தை அந்த உவமை சுட்டிக்காட்டுகிறது. நாம் எதிர்பார்த்ததைவிட அதிக காலத்திற்கு இந்தப் பொல்லாத உலகம் நீடித்திருக்கிறதே என நினைத்து நாம் மட்டுக்குமீறி கவலைப்படக் கூடாது. யெகோவாவுடைய ‘ஏற்ற காலம் இன்னும் வரவில்லை’ என்று தப்புக்கணக்குப் போட்டு நம்மை ஏமாற்றிக்கொள்ளாதிருக்க வேண்டும். இப்படித் தப்புக்கணக்குப் போடுவது, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தணித்துவிடும்.—ரோ. 12:11.
தப்புக்கணக்குகளைக் களைந்தெறியுங்கள்
கலாத்தியர் 6:7-லுள்ள பின்வரும் நியமம், தப்புக்கணக்குப் போடாதிருக்க உதவுகிறது: “ஏமாந்துவிடாதீர்கள்; . . . ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.” பயிரிடாமல் நிலத்தை தரிசாகப் போட்டு வைத்தால் சீக்கிரத்தில் களைகள் மண்டிவிடும். அதேபோல, தெளிவாகச் சிந்திக்கும் நம் மனத்திறனைத் தூண்டியெழுப்பாமல் இருந்தால், தப்புக்கணக்குப் போடும் எண்ணம் நம் மனதில் முளைத்துவிடும். உதாரணத்திற்கு, ‘யெகோவாவின் நாள் கண்டிப்பாக வரும், ஆனால் உடனடியாக வராது’ என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்ளலாம். இப்படி யோசிக்க ஆரம்பித்தால் கடவுளுடைய காரியங்களில் ஏனோதானோவென ஈடுபடுவோம். காலப்போக்கில், வழிபாடு சம்பந்தப்பட்ட காரியங்களைப் புறக்கணிக்க ஆரம்பிப்போம். எதிர்பாராத சமயத்தில் யெகோவாவின் நாள் திடீரென வருகையில் நாம் மாட்டிக்கொள்வோம்.—2 பே. 3:10.
மாறாக, “நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய சித்தம்” என்னவென்பதை நமக்கு நாமே எப்போதும் நிச்சயப்படுத்திக்கொண்டிருந்தால் தப்புக்கணக்குப் போடும் எண்ணம் நம் மனதில் வேரூன்றாதபடி பார்த்துக்கொள்வோம். (ரோ. 12:2) இதற்கு பைபிளைத் தவறாமல் படிப்பது பெரிதும் உதவுகிறது. யெகோவா எப்போதுமே உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கிறார் என்ற நம்பிக்கையை பைபிள் மேலும் வலுப்படுத்துகிறது.—ஆப. 2:3.
ஆழ்ந்து படிப்பது, ஜெபம் செய்வது, தவறாமல் கூட்டங்களுக்குச் செல்வது, ஊழியம் செய்வது ஆகியவற்றோடு கனிவான செயல்களைச் செய்வது ‘யெகோவாவின் நாளை நாம் எப்போதும் மனதில் வைக்க’ உதவும். (2 பே. 3:11, 12) நாம் இதையெல்லாம் தவறாமல் செய்வதை யெகோவா பார்க்கிறார். அதனால் அப்போஸ்தலன் பவுல் நமக்கு இவ்வாறு நினைப்பூட்டுகிறார்: “நன்மை செய்வதை நாம் விட்டுவிடாமல் இருப்போமாக; நாம் சோர்ந்துபோகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுவடை செய்வோம்.”—கலா. 6:9.
சொல்லப்போனால், யெகோவாவின் நாள் வரத் தாமதிக்கும் என்று தப்புக்கணக்குப் போடுவதற்கு இது காலமே அல்ல. மாறாக, யெகோவாவின் நாள் நெருங்கி வருவதால், நம்முடைய இருதயத்தைத் திடப்படுத்திக் கொள்வதற்கான காலம் இது.
[பக்கம் 4-ன் படம்]
ஆலயத்தைக் கட்டும்படி ஆகாயும் சகரியாவும் யூதர்களைத் தூண்டினார்கள்
[பக்கம் 5-ன் படம்]
திருடன் வரும் நேரத்தை வீட்டு எஜமான் அறிந்திருந்தால் என்ன செய்வார்?