“காலங்களையும் சமயங்களையும்” அறிந்த யெகோவாமீது நம்பிக்கை வையுங்கள்
“அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்.” —தானி. 2:21.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
யெகோவா காலம் தவறாதவர் என்பதைப் படைப்பும், நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும் எப்படிக் காட்டுகின்றன?
யெகோவா “காலங்களையும் சமயங்களையும்” அறிந்தவர் என்பதை நாம் புரிந்திருப்பதால் என்ன செய்ய வேண்டும்?
உலகில் என்ன நடந்தாலும்... மனிதர்கள் என்ன திட்டமிட்டாலும்... யெகோவா தீர்மானித்திருக்கிறபடிதான் காரியங்கள் நடந்தேறும் என்று ஏன் சொல்கிறோம்?
1, 2. காலத்தைப் பற்றி யெகோவா மிகத் துல்லியமாக அறிந்திருக்கிறார் என்று ஏன் சொல்லலாம்?
மனிதனைப் படைப்பதற்கு வெகு காலம் முன்பே காலத்தைக் கணக்கிட யெகோவா தேவன் வழிசெய்தார். படைப்பின் நான்காம் நாளின்போது, “பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது” என்று அவர் சொல்ல, அப்படியே நடந்தது.—ஆதி. 1:14, 19, 26.
2 என்றாலும், காலம் என்றால் என்ன என்பதைக் குறித்து அறிவியல் அறிஞர்கள் இன்றுவரை விவாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். “உலகின் மிகச் சிக்கலான புரியாப் புதிர்களில் காலமும் ஒன்று. யாரும் அதைத் துல்லியமாக வரையறுக்க முடியாது” என்று ஓர் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. ஆனால், காலத்தைப் பற்றி யெகோவா மிகத் துல்லியமாக அறிந்திருக்கிறார். ஏனென்றால், அவரே ‘வானங்களைச் சிருஷ்டித்தவர் . . . பூமியை . . . படைத்து, அதை உருவேற்படுத்தினவர்.’ அதோடு, ‘அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறவர்.’ (ஏசா. 45:18; 46:10) யெகோவா மீதும் அவரது வார்த்தையாகிய பைபிள் மீதும் நமது நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்ள இப்போது இரண்டு விஷயங்களைப் பற்றிச் சிந்திப்போம்: (1) படைப்புகள், (2) நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள். யெகோவா காலம் தவறாதவர் என்பதற்கு அவை அத்தாட்சி அளிக்கின்றன.
நம்பிக்கையைப் பலப்படுத்தும் படைப்புகள்
3. இயற்பியல் உலகில் மிகத் துல்லியமாகச் செயல்படும் படைப்புகளுக்கு உதாரணம் தருக.
3 இயற்பியல் உலகில்... யெகோவாவின் படைப்புகள் பல, அவை சின்னஞ்சிறியவையாக இருந்தாலும்சரி பிரம்மாண்டமானவையாக இருந்தாலும்சரி, காலம் தவறாமல் மிகத் துல்லியமாகச் செயல்படுகின்றன. உதாரணத்திற்கு, அணுக்கள் இம்மியும் பிசகாமல் ஒரே சீராக அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. விசேஷக் கடிகாரங்களில் இந்த அணுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இக்கடிகாரங்கள், 80 கோடி வருடங்கள் ஆனாலும்கூட ஒரு நொடியும் பிசகாமல் துல்லியமாய் நேரம் காட்டும். வான வீதியில் வலம் வரும் கோளங்களும் நட்சத்திரங்களும்கூட தங்கள் தங்கள் பாதைகளில் சீராகப் பயணிப்பதால் அவற்றின் நிலையைத் துல்லியமாக முன்கணிக்க முடிகிறது. அதனால்தான், காலங்களை அறிந்துகொள்ளவும் சரியான திசையில் பயணிக்கவும் நம்மால் முடிகிறது. நம்பகமான இந்த இயற்கை “கடிகாரங்களை” யெகோவா படைத்திருப்பதால், உண்மையிலேயே அவர் “மகா வல்லமை” உள்ளவர், நம் புகழுக்கெல்லாம் பாத்திரர்.—ஏசாயா 40:26-ஐ வாசியுங்கள்.
4. யெகோவா காலம் தவறாதவர் என்பதற்கு உயிரியல் உலகம் எப்படி அத்தாட்சி அளிக்கிறது?
4 சொல்லப்போனால், உயிரியல் உலகில்கூட... யெகோவாவின் படைப்புகள் காலம் தவறாமல் மிகத் துல்லியமாகச் செயல்படுகின்றன. ஆம், பல தாவரங்களும் விலங்குகளும் தங்களுக்குள் ஏதோ உயிரியல் கடிகாரம் இருப்பதுபோல் செயல்படுகின்றன. உதாரணத்திற்கு, பறவைகள் பல எப்போது இடப்பெயர்ச்சி செய்ய வேண்டும் என்பதை இயல்புணர்ச்சியால் அறிந்திருக்கின்றன. (எரே. 8:7) மனிதர்களுக்குள்ளும் உயிரியல் கடிகாரம் இருக்கிறது. உதாரணத்திற்கு, பகலையும் இரவையும் நமது உடல் புரிந்துகொண்டு செயல்படுகிறது. அதனால்தான்... ஒருவர் கண்டம்விட்டு கண்டம் பறக்கையில் அவரது உடல் புதிய நேரத்திற்குப் பழகிக்கொள்ள ஒருசில நாட்கள் தேவைப்படுகின்றன. ஆம், யெகோவா “காலங்களையும் சமயங்களையும்” அறிந்தவர், மகா வல்லமையுள்ளவர், ஞானமுள்ளவர் என்பதற்கு அவருடைய படைப்புகளில் பல சாட்சியம் கூறுகின்றன. (சங்கீதம் 104:24-ஐ வாசியுங்கள்.) உண்மைதான், காலம் தவறாதவரான யெகோவா ஈடிணையில்லா ஞானமும் எல்லையில்லா வல்லமையும் படைத்தவர். எனவே, தமது நோக்கங்களை அவர் நிறைவேற்றியே தீருவார் என்று முழுமையாக நம்பலாம்!
நம்பிக்கையைப் பலப்படுத்தும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்
5. (அ) எந்தப் புத்தகத்தைப் புரட்டினால் மட்டுமே மனிதனின் எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்? (ஆ) எப்போது, என்ன நடக்கும் என்பதை யெகோவாவால் எப்படி முன்னமே சொல்ல முடிகிறது?
5 படைப்பு புத்தகத்தைப் புரட்டும்போது யெகோவாவின் ‘காணமுடியாத பண்புகளை’ பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மனிதனின் எதிர்காலத்தைப் பற்றிய முக்கியக் கேள்விகளுக்கு அதிலிருந்து பதிலைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. (ரோ. 1:20) பைபிளின் பக்கங்களைப் புரட்டினால் மட்டுமே அதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள முடியும். குறித்த காலத்தில் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதற்கு அதில் ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. யெகோவாவால் எதிர்காலத்தைத் துல்லியமாக முன்னறிய முடியும் என்பதால், பின்னால் நடக்கப்போகிறவற்றைப் பற்றி அவரால் முன்னமே சொல்ல முடிகிறது. அதோடு, தமது நோக்கத்திற்கும் கால அட்டவணைக்கும் இசைய சம்பவங்கள் நடக்கும்படி அவரால் செய்ய முடியும் என்பதால், பைபிள் தீர்க்கதரிசனங்கள் எப்போதும் குறித்த காலத்தில் நிறைவேறுகின்றன.
6. பைபிள் தீர்க்கதரிசனங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென யெகோவா விரும்புகிறார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
6 தமது ஊழியர்கள் பைபிள் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொண்டு அவற்றிலிருந்து பயனடைய வேண்டுமென யெகோவா விரும்புகிறார். காலத்தைப் பொறுத்ததில் அவருடைய கண்ணோட்டத்திலிருந்து நம்முடைய கண்ணோட்டம் பெருமளவு வேறுபடுகிறது. இருந்தாலும், ஒரு சம்பவம் எப்போது நடக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர் தெரியப்படுத்தியிருக்கிறார். (சங்கீதம் 90:4-ஐ வாசியுங்கள்.) உதாரணத்திற்கு, ‘மனிதர்களில் மூன்றிலொரு பகுதியினரைக் கொல்வதற்குரிய நேரத்திற்கும் நாளுக்கும் மாதத்திற்கும் வருடத்திற்கும் தயார்படுத்தப்பட்டிருந்த நான்கு தேவதூதர்களை’ பற்றி வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது; இந்தக் காலக்கூறுகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதுதானே. (வெளி. 9:14, 15) குறித்த காலத்தில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களைப் பற்றிப் படிக்கும்போது, “காலங்களையும் சமயங்களையும்” அறிந்த கடவுள் மீதும் அவரது வார்த்தை மீதும் நம் நம்பிக்கை பலப்படுகிறது. சில உதாரணங்களை இப்போது சிந்திப்போம்.
7. யெகோவா காலம் தவறாதவர் என்பதை எரேமியாவின் தீர்க்கதரிசனம் எப்படி நிரூபிக்கிறது?
7 முதலாவதாக, கி.மு. ஏழாம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவத்தை எடுத்துக்கொள்வோம். ‘யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாலாம் வருஷத்தில்’ காலம் தவறாத கடவுளிடமிருந்து ‘யூதாவின் ஜனம் அனைத்தையும் குறித்து எரேமியாவுக்கு’ வாக்கு அருளப்பட்டது. (எரே. 25:1) எருசலேம் அழிக்கப்படும் என்றும் யூதாவில் உள்ள யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என்றும் யெகோவா சொன்னார். அங்கே அவர்கள் “எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்” என்றும் சொன்னார். அவர் சொன்னபடியே, கி.மு. 607-ல் பாபிலோனிய படைகள் எருசலேமை அழித்தன. யூதாவிலிருந்த யூதர்களையும் பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் சென்றன. ஆனாலும், அந்த 70 வருடங்களின் முடிவில் என்ன நடக்குமென்று யெகோவா சொல்லியிருந்தார். ‘பாபிலோனிலே எழுபது வருஷம் நிறைவேறின பின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பி வரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்’ என்பதாக எரேமியா தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார். (எரே. 25:11, 12; 29:10) இந்தத் தீர்க்கதரிசனம் யெகோவா சொன்னபடி சரியான சமயத்தில் நிறைவேறியது. அதாவது கி.மு. 537-ல் மேதிய பெர்சியர்கள் வந்து பாபிலோனிலிருந்த யூதர்களை விடுதலை செய்த சமயத்தில் நிறைவேறியது.
8, 9. யெகோவா “காலங்களையும் சமயங்களையும்” அறிந்தவர் என்பதை தானியேலின் தீர்க்கதரிசனங்கள் எப்படி மெய்ப்பித்துக் காட்டுகின்றன?
8 இரண்டாவதாக, பூர்வ காலத்தில் கடவுளுடைய மக்களை உட்படுத்திய மற்றொரு தீர்க்கதரிசனத்தைச் சிந்திப்போம். பாபிலோனிலிருந்து யூதர்கள் விடுதலையாவதற்குச் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு தானியேல் தீர்க்கதரிசி மூலம் மேசியாவின் வருகையைப் பற்றி யெகோவா சொல்லியிருந்தார். எருசலேமின் மதிற்சுவரை மீண்டும் கட்டுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு 483 வருடங்கள் கழிந்தபின் மேசியா வருவாரெனச் சொல்லியிருந்தார். அந்த ஆணையை கி.மு. 455-ல் மேதிய பெர்சிய ராஜா பிறப்பித்தார். சரியாக 483 வருடங்கள் கழிந்தபின், அதாவது கி.பி. 29-ல், மேசியா வந்தார். ஆம், நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டார், அப்போது மேசியா ஆனார்.a—நெ. 2:1, 5-8; தானி. 9:24, 25; லூக். 3:1, 2, 21, 22.
9 இப்போது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பைபிள் முன்னுரைத்ததைக் கவனியுங்கள். 1914-ல் கிறிஸ்து பரலோகத்தில் ராஜாவாக ஆவாரென அது சுட்டிக் காட்டியது. உதாரணத்திற்கு, இயேசுவின் வருகைக்கான ‘அடையாளத்தை’ பைபிள் கொடுத்தது. அந்தச் சமயத்தில் சாத்தான் பரலோகத்திலிருந்து தள்ளப்படுவான் என்பதால் பூமியில் பெரும் துன்பங்கள் தலைதூக்கும் என்றும் அது சொன்னது. (மத். 24:3-14; வெளி. 12:9, 12) அதோடு, 1914-ல் ‘புறதேசத்தாருக்குக் குறிக்கப்பட்ட காலங்கள் நிறைவேறும்’ என்றும் கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் ஆட்சியை ஆரம்பிக்கும் என்றும் பைபிள் தீர்க்கதரிசனம் துல்லியமாய் முன்னுரைத்தது.—லூக். 21:24; தானி. 4:10-17.b
10. எதிர்காலத்தில் என்னென்ன சம்பவங்கள் நிச்சயம் நடக்கப்போகின்றன?
10 இயேசு முன்னறிவித்த “மிகுந்த உபத்திரவம்” சீக்கிரத்தில் வரவிருக்கிறது. அதன் பிறகு அவருடைய ஆயிரவருட அரசாட்சி ஆரம்பமாகப் போகிறது. இந்தச் சம்பவங்கள் எல்லாம் குறித்த காலத்தில் நிறைவேறும் என்பதில் சந்தேகமே இல்லை. இயேசு பூமியிலிருந்த சமயத்திலேயே இந்தச் சம்பவங்கள் நிறைவேற வேண்டிய ‘அந்த நாளையும் அந்த நேரத்தையும்’ யெகோவா தீர்மானித்துவிட்டார்.—மத். 24:21, 36; வெளி. 20:6.
“பொன்னான நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்”
11. முடிவுகாலத்தில் வாழ்கிறோம் என்பதை அறிந்திருப்பதால் நாம் என்ன செய்ய வேண்டும்?
11 கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டதையும் ‘முடிவுகாலத்தில்’ வாழ்கிறோம் என்பதையும் அறிந்திருப்பதால் நாம் என்ன செய்ய வேண்டும்? (தானி. 12:4) உலக நிலைமை மோசமாகி வருவதை அநேகர் பார்க்கிறார்களே தவிர பைபிள் சொல்கிறபடி அவை கடைசி நாட்களுக்கான அடையாளங்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாதிருக்கிறார்கள். இந்த நிலைமைகள் ஒருநாள் கைமீறிப் போய்விடும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். இன்னும் சிலர், மனிதர்களே எப்படியாவது ‘சமாதானத்தையும் பாதுகாப்பையும்’ கொண்டுவருவார்கள் என்று நம்புகிறார்கள். (1 தெ. 5:3) சாத்தானுடைய உலகத்திற்கு அழிவு நெருங்கிவிட்டதை நாம் நம்புகிறோமா? அப்படியென்றால், “காலங்களையும் சமயங்களையும்” அறிந்த கடவுளுக்குச் சேவை செய்ய எஞ்சியிருக்கும் நாட்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமல்லவா? (2 தீ. 3:1) நம்முடைய நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைக் குறித்து நாம் ஞானமாய்த் தீர்மானிக்க வேண்டும்.—எபேசியர் 5:15-17-ஐ வாசியுங்கள்.
12. நோவாவின் நாளைக் குறித்து இயேசு கொடுத்த எச்சரிப்பிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
12 நம்முடைய கவனத்தைச் சிதறடிக்க இந்த உலகில் நிறைய விஷயங்கள் இருப்பதால், ‘பொன்னான நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வது’ அவ்வளவு சுலபமல்ல. “நோவாவின் நாட்களில் எப்படி நடந்ததோ அப்படியே மனிதகுமாரனின் பிரசன்னத்தின்போதும் நடக்கும்” என்று இயேசு எச்சரித்தார். நோவாவின் நாட்கள் எப்படி இருந்தன? அந்த உலகம் ஒரு முடிவுக்கு வருமென நோவாவிடம் யெகோவா சொல்லியிருந்தார். அன்றிருந்த பொல்லாதவர்களை ஜலப்பிரளயத்தில் அழிக்கப்போவதாகவும் சொல்லியிருந்தார். ‘நீதியைப் பிரசங்கித்து வந்த நோவா’ தன்னுடைய காலத்தில் வாழ்ந்தவர்களுக்குக் கடவுளுடைய செய்தியை உண்மையுடன் அறிவித்தார். (மத். 24:37; 2 பே. 2:5) அவர்களோ, “சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் பெண் எடுத்துக்கொண்டும் பெண் கொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். பெருவெள்ளம் வந்து எல்லாரையும் அடித்துக்கொண்டு போகும்வரை அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை.” எனவே, இயேசு தமது சீடர்களிடம், ‘நீங்கள் தயாராக இருங்கள்; நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வரப்போகிறார்’ என்று எச்சரித்தார். (மத். 24:38, 39, 44) நாம் நோவாவைப் போல் இருக்க வேண்டும், அவருடைய காலத்தில் வாழ்ந்த மக்களைப் போல் அல்ல. நாம் தயாராக இருக்க நமக்கு எது உதவும்?
13, 14. மனிதகுமாரனுக்காகக் காத்திருக்கையில் யெகோவாவைப் பற்றி எதை மனதில் வைத்திருப்பது அவருக்குச் சேவை செய்ய நமக்கு உதவும்?
13 நாம் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார் என்றாலும், குறித்த காலத்தில் யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவார் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். உலகில் என்ன நடந்தாலும்... மனிதர்கள் என்ன திட்டமிட்டாலும்... யெகோவா தீர்மானித்திருக்கிறபடிதான் காரியங்கள் நடந்தேறும். நேரத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் யெகோவா வைத்திருக்கிறார். தமது சித்தத்திற்கு இசைய காரியங்கள் நடக்கும்படி பார்த்துக்கொள்கிறார். (தானியேல் 2:21-ஐ வாசியுங்கள்.) சொல்லப்போனால், ‘ராஜாவின் இருதயம் யெகோவாவின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்’ என்று நீதிமொழிகள் 21:1 குறிப்பிடுகிறது.
14 குறித்த காலத்தில் தமது நோக்கம் நிறைவேறும் விதத்தில் சம்பவங்கள் நடந்தேறும்படி யெகோவாவால் பார்த்துக்கொள்ள முடியும். இன்றைய உலகில் நிகழும் மாபெரும் மாற்றங்கள் பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதற்கு வழிசெய்திருக்கின்றன. முக்கியமாக, கடவுளுடைய அரசாங்கத்தின் நற்செய்தி உலகெங்கும் அறிவிக்கப்படுவதற்கு வழிசெய்திருக்கின்றன. சோவியத் யூனியனின் வீழ்ச்சியையும் அதன் விளைவுகளையும் பற்றிச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அத்தகைய மாபெரும் அரசியல் மாற்றங்கள் சட்டென நிகழுமென யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். என்றாலும், அந்த மாற்றங்களால் இன்று பல நாடுகளில்... ஒரு காலத்தில் தடையுத்தரவின் கீழிருந்த நாடுகளில்... நற்செய்தி அறிவிக்கப்பட்டு வருகிறது. எனவே, “காலங்களையும் சமயங்களையும்” அறிந்த கடவுளுக்கு உண்மையாய்ச் சேவை செய்ய இந்தப் பொன்னான நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வோமாக!
காலம் தவறாத யெகோவாமீது நம்பிக்கை வையுங்கள்
15. அமைப்பு மாற்றங்களைச் செய்யும்போது நாம் எப்படி நம்பிக்கையை வெளிக்காட்டலாம்?
15 இந்தக் கடைசி நாட்களில் நற்செய்தியைத் தொடர்ந்து அறிவிப்பதற்கு... யெகோவா காலம் தவறாதவர் என்பதில் நம்பிக்கை வைப்பது அவசியம். உலக நிலைமை மாறிவருவதால் நற்செய்தியை நாம் அறிவித்து வரும் விதத்திலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். நாம் திறம்பட்ட விதத்தில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு உதவியாக யெகோவாவின் அமைப்பு சில சமயங்களில் மாற்றங்களைச் செய்யலாம். அத்தகைய மாற்றங்களை நாம் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ளும்போது... ‘சபைக்குத் தலையாக இருக்கும்’ இயேசுவின்கீழ் உண்மையாய்ச் சேவை செய்யும்போது... “காலங்களையும் சமயங்களையும்” அறிந்த யெகோவாமீது நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறோம்.—எபே. 5:23.
16. தக்க சமயத்தில் யெகோவா உதவி செய்வார் என்பதில் நாம் ஏன் நம்பிக்கையாய் இருக்கலாம்?
16 ‘தக்க சமயத்தில் உதவி’ செய்வார் என்ற முழு நம்பிக்கையோடு தயங்காமல் நாம் அவரை அணுக வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். (எபி. 4:16) நம் ஒவ்வொருவர் மீதும் அவர் மிகுந்த அன்பும் அக்கறையும் வைத்திருப்பதை அது காட்டுகிறதல்லவா? (மத். 6:8; 10:29-31) தவறாமல் யெகோவாவிடம் ஜெபம் செய்யும்போது... நம்முடைய ஜெபத்திற்கும் அவருடைய வழிநடத்துதலுக்கும் ஏற்ப நடக்கும்போது... அவர்மீது நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறோம். அதோடு, நம் சக வணக்கத்தாருக்காகவும் நாம் மறக்காமல் ஜெபம் செய்கிறோம்.
17, 18. (அ) யெகோவா தமது எதிரிகளுக்கு விரோதமாகச் சீக்கிரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பார்? (ஆ) எப்படிப்பட்ட எண்ணம் நம் மனதில் ஒருபோதும் வரக் கூடாது?
17 இது ‘அவநம்பிக்கையுடன்’ இருப்பதற்கான காலமல்ல, ‘விசுவாசத்தில் பலமுள்ளவர்களாக’ இருப்பதற்கான காலம். (ரோ. 4:20) கடவுளுடைய எதிரிகளான சாத்தானும் அவனுடைய கூட்டாளிகளும் இயேசு நமக்குக் கொடுத்த வேலையைச் செய்யவிடாமல் தடுக்க முயற்சி செய்கிறார்கள். (மத். 28:19, 20) பிசாசு நம்மைத் தாக்கினாலும், ‘பலதரப்பட்ட ஆட்களுக்கும் மீட்பராயிருக்கிற, முக்கியமாக விசுவாசமிக்க ஆட்களுக்கு மீட்பராயிருக்கிற உயிருள்ள கடவுளான’ யெகோவா நம் பக்கம் இருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறோம். ‘தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுவிப்பது’ எப்படி என்று அவருக்குத் தெரியும்.—1 தீ. 4:10; 2 பே. 2:9.
18 இந்தப் பொல்லாத உலகிற்கு யெகோவா சீக்கிரத்தில் அழிவைக் கொண்டுவரப் போகிறார். இந்த அழிவு எப்படி, எப்போது வரும் என்ற விவரங்கள் எல்லாம் நமக்குத் தெரியாது. என்றாலும், தக்க சமயத்தில் யெகோவாவின் எதிரிகளை கிறிஸ்து அழிப்பார்... யெகோவாவின் பேரரசாட்சியே சரியானது என நிரூபிப்பார்... என்பது மட்டும் நமக்குத் தெரியும். எனவே, நாம் வாழ்கிற இந்தக் “காலங்களையும் சமயங்களையும்” புரிந்து நடக்க வேண்டும், இல்லையென்றால் அது ஆபத்தை விளைவிக்கும். “உலகம் தோன்றிய காலத்திலிருந்தே எல்லாம் இருந்தபடிதான் இருக்கிறது” என்ற எண்ணம் நம் மனதில் ஒருபோதும் வராமல் பார்த்துக்கொள்வோமாக.—1 தெ. 5:1; 2 பே. 3:3, 4.
எப்போதும் கடவுளுக்கு ‘காத்திருங்கள்’
19, 20. நாம் ஏன் எப்போதும் யெகோவாவுக்குக் காத்திருக்க வேண்டும்?
19 யெகோவா மனிதனைப் படைத்தபோது... அவர்கள் தம்மையும் தமது அழகிய படைப்புகளையும் பற்றிக் கற்றுக்கொள்ள காலமெல்லாம் வாழ வேண்டும் என்று விரும்பினார். யெகோவா “சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் [“நித்திய கால நினைவையும்,” NW] அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்” என்று பிரசங்கி 3:11 சொல்கிறது.
20 மனிதருக்கான தமது நோக்கத்தை யெகோவா ஒருபோதும் மாற்றிக்கொள்ளாமல் இருந்ததற்காக நாம் ரொம்பவே சந்தோஷப்படுகிறோம்! (மல். 3:6) யெகோவா “நிழலைப் போல் மாறிக்கொண்டே இருப்பவர் அல்ல.” (யாக். 1:17) நம்மைப் போல பூமியின் சுழற்சியை வைத்து யெகோவா காலத்தைக் கணக்கிடுபவர் அல்ல. ஏனென்றால், அவர் ‘நித்திய ராஜா.’ (1 தீ. 1:17) எனவே, நம் ‘இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்போமாக.’ (மீ. 7:7) ஆம், ‘யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவாராக.’—சங். 31:24.
[அடிக்குறிப்புகள்]
[பக்கம் 19-ன் படம்]
கடவுளது தீர்க்கதரிசனம் நிறைவேறும் என்பதில் தானியேலுக்கு நம்பிக்கை இருந்தது
[பக்கம் 21-ன் படம்]
யெகோவாவின் சித்தத்தைச் செய்ய உங்கள் பொன்னான நேரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறீர்களா?