“உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது”
“விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால், உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது.”—மத். 25:13.
1-3. (அ) இயேசு சொன்ன இரண்டு உவமைகளிலுள்ள குறிப்பைப் புரிந்துகொள்ள எந்தக் கற்பனைச் சம்பவங்கள் உதவுகின்றன? (ஆ) என்ன கேள்விகளுக்கு நாம் பதில் தெரிந்துகொள்ளப் போகிறோம்?
இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் தன்னை அழைத்துச் செல்லும்படி அரசு அதிகாரி ஒருவர் உங்களிடம் கேட்கிறார். அவரை அழைத்துச் செல்ல ஒருசில நிமிடங்களே இருக்கும்போது காரில் போதியளவு பெட்ரோல் இல்லை என்பதைக் கவனிக்கிறீர்கள். உடனே பெட்ரோல் போட விரைகிறீர்கள். நீங்கள் அந்தப் பக்கம் போக, அதிகாரி இந்தப் பக்கம் வந்துவிடுகிறார். சுற்றிமுற்றிப் பார்க்கிறார். உங்களைக் காணவில்லை. காத்திருக்க அவருக்கு நேரமில்லை. அதனால், தன்னை அழைத்துச் செல்லும்படி வேறொருவரிடம் கேட்கிறார். நீங்கள் அடித்துப்பிடித்து வந்து சேருகிறீர்கள், அவரோ புறப்பட்டுப் போய்விட்டார். உங்களுக்கு எப்படி இருக்கும்?
2 இப்போது இப்படிக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள்தான் அதிகாரி. ஒரு முக்கியமான வேலைக்காக மூன்று பேரைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். அவர்கள் ரொம்பத் திறமைசாலிகள். அந்த வேலையைப் பற்றிய எல்லா விவரங்களையும் அவர்களுக்குச் சொல்கிறீர்கள். மூவரும் அதைச் செய்ய ஒப்புக்கொள்கிறார்கள். பின்பு, கொஞ்ச நாட்களுக்கு நீங்கள் எங்கோ போய்விட்டு திரும்பி வருகிறீர்கள். வந்து பார்த்தால் அந்த மூவரில் இருவர் மட்டுமே நீங்கள் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். மூன்றாவது ஆள் எதையும் செய்யவில்லை, போதாக்குறைக்கு சாக்குப்போக்குகள் வேறு சொல்கிறார். நீங்கள் கொடுத்த வேலையைச் செய்ய அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. உங்களுக்கு எப்படி இருக்கும்?
3 முடிவுகாலத்தில், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் சிலர் ஏன் உண்மையுள்ளவர்களாகவும் விவேகமுள்ளவர்களாகவும் இருப்பார்கள், மற்றவர்கள் ஏன் அதற்கு நேர்மாறாக இருப்பார்கள் என்பதை விளக்குவதற்கு, மேலே சொல்லப்பட்டதைப் போன்ற சம்பவங்களையே இயேசு குறிப்பிட்டார்;a ஆம், கன்னிகைகள் மற்றும் தாலந்துகள் பற்றிய உவமைகளில் குறிப்பிட்டார். (மத். 25:1-30) இந்த உவமைகளில் இயேசு அடிக்கோடிட்டுக் காட்டிய விஷயம் இதுதான்: “விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால், உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது.” ஆகவே, சாத்தானுடைய உலகிற்கு அழிவு வரப்போகும் அந்த நாளும், அந்த நேரமும் சீடர்களுக்குத் திட்டவட்டமாகத் தெரியாது என்பதால் விழிப்புடன் இருக்கும்படி இயேசு சொன்னார். (மத். 25:13) அந்த ஆலோசனையை நாமும் பின்பற்ற வேண்டும். இயேசு சொன்னது போல் விழிப்புடன் இருந்தால் நாம் எப்படிப் பயனடையலாம்? யார் அப்படி விழிப்புடன் இருந்திருக்கிறார்கள்? விழிப்புடன் இருக்க இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
விழிப்புடன் இருந்து பயனடையுங்கள்
4. ‘விழிப்புடன் இருப்பதற்கு’ அந்த நாளையும் நேரத்தையும் நாம் தெரிந்திருப்பது ஏன் அவசியமில்லை?
4 உதாரணத்திற்கு, நாம் ஒரு கம்பெனியில் வேலை செய்தாலோ... ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டியிருந்தாலோ... பஸ்ஸில் அல்லது ரயிலில் பயணிக்க வேண்டியிருந்தாலோ... குறிப்பிட்ட நேரத்திற்குள் போக வேண்டும். ஆனால் வேறு சில வேலைகளைச் செய்யும்போது, உதாரணத்திற்கு தீயணைப்பு பணியில் அல்லது நிவாரணப் பணியில் ஈடுபடும்போது, ‘மணி ஆயிடுச்சா’ என்று அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது கவனத்தைச் சிதறடிக்கலாம் அல்லது விபரீத விளைவைக்கூட ஏற்படுத்தலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட செய்கிற வேலையில் கவனம் செலுத்துவது முக்கியம். இந்தப் பொல்லாத உலகிற்கு முடிவு அதிவேகமாய் நெருங்கிவரும் இந்தக் காலகட்டத்தில் மனிதகுலத்தை மீட்பதற்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பற்றி மக்களுக்குச் சொல்வதுதான் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை. எனவே, விழிப்புடன் இருந்து இந்த வேலையைச் செய்வதற்கு முடிவு வரும் நாளையும் நேரத்தையும் நாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. சொல்லப்போனால், அது நமக்குத் திட்டவட்டமாகத் தெரியாமல் இருப்பது குறைந்தது ஐந்து விதங்களில் நன்மை அளிக்கிறது.
5. அந்த நாளும் நேரமும் நமக்குத் தெரியாமல் இருப்பது நம் இருதயத்தில் உள்ளதை வெளிப்படுத்த எப்படி வாய்ப்பளிக்கிறது?
5 முதலாவதாக, அந்த நாளும் நேரமும் நமக்குத் தெரியாமல் இருப்பது... நம் இருதயத்தில் உள்ளதை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது. எப்படி? வரவிருக்கும் அழிவிலிருந்து தப்பிப்பிழைக்க நாம் ஆவலோடு காத்திருந்தாலும் யெகோவாமீது உள்ள அன்பினால்தான் நாம் அவருக்குச் சேவை செய்கிறோம், முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக மட்டுமே அல்ல என்பதைக் காட்ட வாய்ப்பளிக்கிறது. (சங்கீதம் 37:4-ஐ வாசியுங்கள்.) அந்த நாளை யெகோவா நமக்குத் தெரியப்படுத்தாமல் இருப்பதன் மூலம் நம்மைக் கௌரவிக்கிறார், அவருக்கு உண்மையாய் இருக்கிறோமென நிரூபிக்க வாய்ப்பளிக்கிறார். அவருடைய சித்தத்தைச் செய்வது நமக்கு உண்மையிலேயே சந்தோஷம் அளிக்கிறது. நாம் பயனடைய வேண்டும் என்பதற்காகத்தான் அவர் நமக்குப் போதிக்கிறார் என்பதையும் நாம் புரிந்துகொள்கிறோம். (ஏசா. 48:17) அவருடைய கட்டளைகளை நாம் ஒருபோதும் பாரமாகக் கருதுவதில்லை.—1 யோ. 5:3.
6. அன்பின் காரணமாக கடவுளுக்கு நாம் சேவை செய்யும்போது அவர் எப்படி உணர்கிறார், ஏன்?
6 இரண்டாவதாக, அந்த நாளோ நேரமோ நமக்குத் தெரியாமல் இருப்பது... யெகோவாவுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்த நமக்கு வாய்ப்பளிக்கிறது. அழிவு நெருங்கிவிட்டது என்பதற்காகவோ முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காகவோ அல்லாமல் யெகோவாமீதுள்ள அன்பின் காரணமாக நாம் அவருக்குச் சேவை செய்யும்போது சாத்தானின் சவாலுக்குச் சரியான பதிலடி கொடுக்க அவருக்கு உதவுகிறோம். (யோபு 2:4, 5; நீதிமொழிகள் 27:11-ஐ வாசியுங்கள்.) சாத்தான், இன்றைக்கு உலகத்தில் எவ்வளவு வேதனையையும் வலியையும் உண்டாக்கியிருக்கிறான் என்று நமக்கு நன்றாகத் தெரியும். எனவே, சாத்தானின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்க்கவும் யெகோவாவின் பேரரசாட்சியை ஆதரிக்கவும் நாம் உளமார விரும்புகிறோம்.
7. சுய தியாக வாழ்க்கை வாழ வேண்டுமென நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
7 மூன்றாவதாக, எப்போது முடிவு வரும் என்று தெரியாமல் இருப்பது... சுய தியாக வாழ்க்கை வாழ ஊக்குவிக்கிறது. இன்று, உண்மைக் கடவுளைப் பற்றி ஒன்றும் தெரியாத ஆட்கள்கூட இந்த உலகம் போகிற போக்கைப் பார்த்து அது அதிக நாளைக்குத் தாக்குப்பிடிக்காது என்கிறார்கள். சீக்கிரத்தில் ஒரு பேரழிவு வந்து இந்த உலகமே அழிந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். அதனால், “சாப்பிடுவோம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்று காலத்தைக் கழிக்கிறார்கள். (1 கொ. 15:32) நாமோ அப்படிப் பயப்படுவதில்லை. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நம்முடைய சொந்தக் காரியங்களிலேயே மூழ்கிவிடுவதும் இல்லை. (நீதி. 18:1) மாறாக, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க நம்முடைய நேரம், சக்தி என எல்லாவற்றையும் தாராளமாகச் செலவிட்டு நம்மையே அர்ப்பணிக்கிறோம். (மத்தேயு 16:24-ஐ வாசியுங்கள்.) கடவுளுக்குச் சேவை செய்யும்போது, முக்கியமாக அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவும்போது, மனமகிழ்கிறோம்.
8. யெகோவாவையும் அவரது வார்த்தையையும் நாம் முழுமையாய்ச் சார்ந்திருக்க வேண்டும் என்று பைபிளில் உள்ள யாருடைய உதாரணம் காட்டுகிறது?
8 நான்காவதாக, அந்த நாளும் நேரமும் நமக்குத் தெரியாமல் இருப்பது... யெகோவாவை முழுமையாய்ச் சார்ந்திருக்கவும் பைபிள் அறிவுரைகளை ஊக்கமாய்க் கடைப்பிடிக்கவும் துணைபுரிகிறது. பாவத்தின் உடும்புப் பிடியில் சிக்கியிருக்கும் நம் எல்லாரிடமும் உள்ள ஒரு கெட்ட குணம்... நம்மீதே நாம் அளவுகடந்த நம்பிக்கை வைப்பதாகும். “நிற்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறவன் விழுந்துவிடாதபடி ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்” என்று கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பவுல் அறிவுரை கொடுத்தார். யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்குச் சற்றுமுன் அவர்களில் இருபத்து மூவாயிரம் பேர் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போய் உயிரிழந்தார்கள். ‘அவர்களுக்கு நிகழ்ந்தவையெல்லாம் . . . இந்த உலகத்தின் முடிவு காலத்தில் வாழ்கிற நமக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி எழுதப்பட்டிருக்கின்றன’ என்று பவுல் சொன்னார்.—1 கொ. 10:8, 11, 12.
9. துன்புறுத்துதல்கள் நம்மைப் புடமிடுவதோடு, கடவுளிடம் நெருங்கிச் செல்லவும் எப்படி உதவுகின்றன?
9 ஐந்தாவதாக, முடிவு வரும் நாள் நமக்குத் தெரியாமல் இருப்பது... கஷ்டங்களிலிருந்து கற்றுக்கொள்ளவும் நம் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் வழிசெய்கிறது. (சங்கீதம் 119:71-ஐ வாசியுங்கள்.) இந்தக் கடைசி நாட்கள் உண்மையிலேயே ‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களாய்’ இருக்கின்றன. (2 தீ. 3:1-5) சாத்தானின் உலகிலுள்ள பெரும்பாலோர் நம்மை வெறுக்கிறார்கள் என்பதால், நம்முடைய விசுவாசத்தின் காரணமாக நாம் துன்புறுத்தப்படலாம். (யோவா. 15:19; 16:2) அப்படிப்பட்ட சமயங்களில், நாம் மனத்தாழ்மையாய் இருந்து கடவுளுடைய வழிநடத்துதலை நாடினால் நம் விசுவாசம் புடமிடப்படும். துன்பத்தைக் கண்டு துவண்டுபோக மாட்டோம். மாறாக, நினைத்தே பார்த்திராத அளவுக்கு யெகோவாவிடம் நெருங்கிச் செல்வோம்.—யாக். 1:2-4; 4:8.
10. நேரம் எப்போது மின்னல் வேகத்தில் கடப்பது போல் இருக்கும்?
10 நேரம் மின்னல் வேகத்தில் கடப்பதும்... நத்தை வேகத்தில் நகருவதும்... நம் கையில்தான் இருக்கிறது. கடிகாரத்தைப் பார்க்காமல் வேலையில் மூழ்கிப் போயிருந்தால் நேரம் மின்னல் வேகத்தில் கடப்பது போல் இருக்கும். அதேபோல், யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் சுவாரஸ்யமான வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்துவந்தால் அந்த நாளும் அந்த நேரமும் நாம் நினைத்ததைவிட சீக்கிரமாகவே வந்துவிட்டது போல் இருக்கும். இந்த விஷயத்தில், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் பெரும்பாலோர் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்கள். 1914-ல் இயேசு ராஜாவான பிறகு என்ன நடந்தது என்றும், அப்போது சிலர் ஏன் தயாராய் இருந்தார்கள், சிலர் ஏன் தயாராய் இருக்கவில்லை என்றும் சுருக்கமாகப் பார்ப்போம்.
பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் விழிப்புடன் இருந்தார்கள்
11. எஜமானர் வர தாமதிப்பதாகப் பரலோக நம்பிக்கையுள்ள சிலர் ஏன் 1914-க்குப் பிறகு நினைத்தார்கள்?
11 கன்னிகைகள் மற்றும் தாலந்துகள் பற்றி இயேசு சொன்ன உவமைகளை மீண்டும் சிந்தித்துப் பார்ப்போம். அந்த உவமைகளில் குறிப்பிடப்பட்ட கன்னிகைகளுக்கும் அடிமைகளுக்கும் மணமகன், தங்களுடைய எஜமானர், எப்போது வருவார் என்பது தெரிந்திருந்தால் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆனால், அவர் எப்போது வருவார் என்பது தெரியாதிருந்ததால் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியிருந்தது. 1914 ஒரு முக்கிய வருடமாக இருக்கும் என்று பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் பல வருடங்களாக நம்பினார்கள். ஆனால் அந்தச் சமயத்தில் என்ன நடக்கும் என்று அவர்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் எதிர்பார்த்த காரியங்கள் நடக்காமல் போனபோது, மணமகன் வர தாமதமாகும் என்று அவர்களில் சிலர் நினைத்தார்கள். “[1914] அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நாங்கள் எல்லாரும் பரலோகத்திற்குப் போய்விடுவோம் என்று எங்களில் சிலர் உறுதியாக இருந்தோம்” என்று ஒரு சகோதரர் பிற்பாடு சொன்னார்.
12. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எப்படி உண்மையாகவும் விவேகமாகவும் நடந்துகொண்டார்கள்?
12 முடிவு வந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அது வராமல் போனபோது எவ்வளவு ஏமாற்றமாய் இருந்திருக்கும்! அதுமட்டுமல்ல, முதல் உலகப் போரின்போது சகோதரர்கள் பலவிதமான எதிர்ப்புகளையும் சந்தித்தார்கள். பிரசங்க வேலை கிட்டத்தட்ட நின்றே போய்விட்டது. சொல்லப்போனால், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் அந்தச் சமயத்தில் தூங்கிவிட்டதுபோல் இருந்தது. ஆனால், 1919-ல் அவர்கள் விழித்துக்கொள்ள வேண்டியிருந்தது! கடவுளுடைய ஆன்மீக ஆலயத்தை சோதிக்க இயேசு வந்திருந்தார். சிலர் அந்தச் சோதனையில் தவறிவிட்டார்கள். அதனால், எஜமானருக்காக வேலை செய்யும் பாக்கியத்தை இழந்துவிட்டார்கள். (மத். 25:16) இவர்கள் அந்தப் புத்தியில்லாத கன்னிகைகளைப் போல்தான் இருந்தார்கள். ஆம், ஆன்மீக ரீதியில் தங்கள் பாத்திரங்களில் உள்ள எண்ணெய் தீரும்போது அவற்றை நிரப்பாமல் மெத்தனமாக இருந்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல, சோம்பேறி அடிமையைப் போல் இருந்தார்கள், ஆம் கடவுளுடைய அரசாங்கத்திற்காகத் தியாகம் செய்ய மனதில்லாதிருந்தார்கள். என்றாலும், பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் பெரும்பாலோர் போரின் உக்கிரத்திலும் தங்கள் எஜமானருக்குப் பற்றுமாறாமல் நடந்துகொண்டார்கள், அவருக்குச் சேவை செய்ய மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.
13. 1914-க்குப் பிறகு அடிமை வகுப்பாரின் மனப்பான்மை எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கிறது?
13 1914-க்குப் பிறகு பரலோக நம்பிக்கையுள்ள பெரும்பாலோரின் மனப்பான்மையைப் பற்றி ஓர் ஆங்கில காவற்கோபுர இதழ் விளக்கியது. அவர்களில் சரியான மனப்பான்மையோடு இருந்தவர்கள் ஏமாற்றம் அடையவில்லை என்று அது குறிப்பிட்டது. இவ்வாறும் குறிப்பிட்டது: “எங்களுடைய விருப்பப்படிதான் எல்லாம் நடக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே, அக்டோபர் 1914-ல் எங்களுடைய எதிர்பார்ப்பு தவறு என்பதைப் புரிந்துகொண்டபோது எங்களுக்காக எஜமானர் தம் திட்டத்தை மாற்றிக்கொள்ளாததை நினைத்து சந்தோஷப்பட்டோம். அவர் அப்படி மாற்றிக்கொள்ள வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கவுமில்லை. அவருடைய திட்டங்களையும் நோக்கங்களையும் புரிந்துகொள்ளவே நாங்கள் விரும்புகிறோம்.” இன்றும்கூட, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களிடம் அதேபோன்ற மனத்தாழ்மையும், பக்தியும் இருக்கிறது. கடவுளுடைய சக்தியால் தாங்கள் ஏவப்பட்டிருப்பதாக அவர்கள் சொல்லிக்கொள்வதில்லை, மாறாக, பூமியில் தங்கள் எஜமானருக்காக வேலை செய்ய தீர்மானமாய் இருக்கிறார்கள். பூமிக்குரிய நம்பிக்கையை உடைய ‘வேறே ஆடுகளை’ சேர்ந்த ‘திரள் கூட்டமான மக்களும்’ அவர்களைப் போலவே விழிப்புடன் இருந்து ஊழியத்தில் சுறுசுறுப்பாய் ஈடுபடுகிறார்கள்.—வெளி. 7:9; யோவா. 10:16.
தயாராய் இருப்பதைக் காட்டுகிறோம்
14. உண்மையும் விவேகமும் உள்ள அடிமையின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவது நமக்கு ஏன் நல்லது?
14 கடவுள், உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பாரைத் தேர்ந்தெடுத்து திரள் கூட்டத்தினருக்கு ஆன்மீக உணவை வழங்கி வருகிறார். அதாவது, தமது வார்த்தையிலிருந்தும் சக்தியிலிருந்தும் எப்படிப் பயனடையலாம் என்று போதித்து வருகிறார். திரள் கூட்டத்தினரில் விழிப்பாய் இருக்கிறவர்கள் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களைப் போலவே அந்த அடிமை வகுப்பாரின் போதனைக்குக் கீழ்ப்படிகிறார்கள். இப்படிக் கீழ்ப்படிவது, அவர்கள் தங்களுடைய விளக்குகளில் எண்ணெயை நிரப்பிக்கொள்வது போல் உள்ளது. (சங்கீதம் 119:130-ஐயும் யோவான் 16:13-ஐயும் வாசியுங்கள்.) இவ்வாறு, பலப்படுத்தப்படுகிற திரள் கூட்டத்தினர் கிறிஸ்து நியாயந்தீர்க்க வரும்போது தயாராயிருப்பார்கள். அதோடு, கடுமையான சோதனைகளை எதிர்ப்படும் சமயங்களிலும் உண்மையாய் நிலைத்திருக்க பலம் பெற்றிருப்பார்கள். இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: நாசிக்களின் சிறை முகாமில் சகோதரர்களிடம் ஒரு பைபிள்தான் இருந்தது. அதனால், கூடுதலாக ஆன்மீக உணவு தங்களுக்குக் கிடைக்க வழிசெய்யுமாறு கடவுளிடம் ஜெபம் செய்தார்கள். கொஞ்ச நாட்களுக்குள், அந்த முகாமிற்குக் கொண்டுவரப்பட்ட ஒரு சகோதரர் புதிய காவற்கோபுர பத்திரிகையின் சில பிரதிகளைத் தன்னுடைய கட்டைக்காலில் மறைத்து எடுத்துவந்திருப்பது அவர்களுக்குத் தெரியவந்தது. நாசிக்களின் முகாமில் படாதபாடுகள் பட்டு உயிர்தப்பிய சகோதரர் எர்ன்ஸ்ட் வாவர் (பரலோக நம்பிக்கையைப் பெற்றிருந்தவர்) பின்பு இவ்வாறு சொன்னார்: “அந்தக் கட்டுரைகளில் இருந்த உற்சாகமூட்டும் வரிகளை நினைவில் வைத்துக்கொள்ள யெகோவாதான் எங்களுக்கு அற்புதமாய் உதவி செய்தார்.” அவர் மேலும் சொன்னதாவது: “இப்போதெல்லாம் ஆன்மீக உணவுக்குப் பஞ்சமே இல்லை, ஆனால் நாம் எப்போதும் அதை ஆசை ஆசையாய்ப் படிக்கிறோமா? யெகோவாவை நம்பி, அவருக்கு உண்மையாயிருந்து அவருடைய மேஜையிலிருந்து புசிப்பவர்களுக்கு அவர் அளவிலா ஆசீர்வாதங்களை வாரி வழங்குவார். அதில் எனக்குச் சந்தேகமே இல்லை.”
15, 16. ஊழியத்தில் ஆர்வமாய் ஈடுபட்ட ஒரு தம்பதிக்கு என்ன பலன் கிடைத்தது, அப்படிப்பட்டவர்களுடைய அனுபவங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
15 வேறே ஆடுகளும் எஜமானருடைய வேலையில் சுறுசுறுப்பாய் இருப்பதன் மூலம் கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு முழு ஆதரவு கொடுக்கிறார்கள். (மத். 25:40) இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட சோம்பேறி அடிமையைப் போல் இருக்காமல் கடவுளுடைய அரசாங்கத்திற்கு முதலிடம் கொடுக்க தியாகங்கள் செய்யவும் கடினமாய் உழைக்கவும் தயாராய் இருக்கிறார்கள். ஜான், மஸக்கோ தம்பதியின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கென்யாவில் உள்ள சீன மொழி பிராந்தியத்தில் பிரசங்கிக்கும்படி இந்தத் தம்பதியிடம் சொல்லப்பட்டது. முதலில் தயங்கினாலும், ஊக்கமாய் ஜெபம் செய்து யோசித்துப் பார்த்தார்கள். கடைசியில், அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள்.
16 அவர்களுடைய முயற்சிகளை யெகோவா பெருமளவு ஆசீர்வதித்தார். “இந்த இடத்தில் ஊழியம் செய்வது ஒரு சுகமான அனுபவம்” என்றார்கள் ஜானும் மஸக்கோவும். அவர்கள் ஏழு பைபிள் படிப்புகளை நடத்த ஆரம்பித்தார்கள். பல சுவையான அனுபவங்களைப் பெற்று மகிழ்ந்தார்கள். “இங்கு வந்து ஊழியம் செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக யெகோவாவுக்குத் தினம் தினம் நன்றிசொல்கிறோம்” என்று முத்தாய்ப்பாய் முடித்தார்கள். இவர்களைப் போலவே, பல சகோதர சகோதரிகள் ‘முடிவு எப்போது வந்தாலும் சரி, நாங்கள் கடவுளுடைய ஊழியத்தில் சுறுசுறுப்பாய் ஈடுபடுவோம்’ என்று தீர்மானமாய் இருக்கிறார்கள். அதைச் செயலிலும் காட்டியிருக்கிறார்கள். கிலியட் பள்ளியில் பட்டம் பெற்று மிஷனரிகளாகச் சேவை செய்கிற ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளை யோசித்துப் பாருங்கள். மிஷனரி ஊழியத்தைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள... அக்டோபர் 15, 2001 தேதியிட்ட காவற்கோபுரத்தில் “எங்களால் இயன்ற மட்டும் செய்கிறோம்!” என்ற கட்டுரையை வாசித்துப் பாருங்கள். “மிஷனரி ஊழியத்தில் ஒருநாள்” என்ற தலைப்பின்கீழ் உள்ள சுவாரஸ்யமான விஷயங்களை வாசிக்கும்போது, கடவுளுடைய சேவையில் அதிகமாய் ஈடுபட இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்துப் பாருங்கள். அப்படிச் செய்யும்போது கடவுளுக்கு மகிமை சேர்ப்பீர்கள், உங்கள் வாழ்க்கைக்கு மகிழ்ச்சி சேர்ப்பீர்கள்.
நீங்களும் விழிப்புடன் இருங்கள்
17. அந்த நாளும் நேரமும் நமக்குத் தெரியாமல் இருப்பது எந்த விதத்தில் ஓர் ஆசீர்வாதம்?
17 இந்தப் பொல்லாத உலகம் எப்போது முடிவுக்கு வரும் என்று நமக்குத் தெரியாமல் இருப்பது உண்மையிலேயே ஓர் ஆசீர்வாதம்தான். அந்த நாளும் நேரமும் தெரியாது என்பதற்காக நாம் எரிச்சலடைவதுமில்லை, ஏமாற்றமடைவதுமில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் பம்பரமாய்ச் சுழன்றுகொண்டிருக்கிறோம், நம்முடைய அன்பான தகப்பனாகிய யெகோவாவிடம் இன்னும் நெருங்கி வந்திருக்கிறோம். கலப்பையின் மேல் நாம் கை வைத்திருப்பதாலும்... கவனத்தைச் சிதறடிக்கும் காரியங்களில் மனதைச் செலுத்தாமல் இருப்பதாலும்... எஜமானரின் சேவையில் மிகுந்த மகிழ்ச்சி காண்கிறோம்.—லூக். 9:62.
18. நாம் ஏன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக நடந்துகொள்ள வேண்டும்?
18 யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் விரைந்து வந்துகொண்டிருக்கிறது. இந்தக் கடைசி நாட்களில் அவரும் இயேசுவும் நம்மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்து நம்மிடம் ஓர் அரும்பெரும் வேலையை ஒப்படைத்திருக்கிறார்கள். உயிருள்ளவரை அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக நாம் நடந்துகொள்ள வேண்டும், அவர்களை ஏமாற்றிவிடக் கூடாது!—1 தீமோத்தேயு 1:12-ஐ வாசியுங்கள்.
19. நாம் தயாராய் இருப்பதை எப்படிக் காட்டலாம்?
19 நமக்குப் பரலோக நம்பிக்கை இருந்தாலும் சரி பூமிக்குரிய நம்பிக்கை இருந்தாலும் சரி, கடவுள் கொடுத்திருக்கும் பிரசங்க வேலையை முழுமையாய்ச் செய்து முடிக்க நாம் தீர்மானமாய் இருப்போமாக. யெகோவாவின் நாள் என்றைக்கு வரும் என்று நமக்குத் திட்டவட்டமாகத் தெரியாது, அது நமக்குத் தெரிய வேண்டும் என்றில்லை. அது எப்போது வந்தாலும் சரி, நம்மால் தயாராக இருக்க முடியும், தயாராகவும் இருப்போம். (மத். 24:36, 44) யெகோவாமீது முழு நம்பிக்கை வைத்து அவருடைய அரசாங்கத்திற்கு நாம் முதலிடம் கொடுத்தால் அவர் நம்மைக் கைவிடவே மாட்டார். அதில் சந்தேகமே இல்லை!—ரோ. 10:11.
a மார்ச் 1, 2004 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 14-18-ஐப் பாருங்கள்.