நம் வரலாற்றுச் சுவடுகள்
நம் வரலாற்றுச் சுவடுகள் ‘உங்களை எதுவுமே தடுத்து நிறுத்த கூடாது!’
அது 1931-வது வருஷம், வசந்த காலம். பாரிசில் இருக்கிற பிலேயல் என்ற இசை அரங்கத்துக்கு 23 நாடுகளில் இருந்து மக்கள் கூட்டங்கூட்டமாக வருகிறார்கள். எல்லாரும் அழகான ஆடைகளை அணிந்துகொண்டு பெரிய பெரிய டாக்ஸியில் வந்து இறங்குகிறார்கள். அரங்கம் கிட்டத்தட்ட 3,000 பேரால் நிரம்பி வழிகிறது. அவர்கள் ஏதோ இசை நிகழ்ச்சியைக் கேட்க வரவில்லை, சகோதரர் ரதர்ஃபோர்டின் பேச்சைக் கேட்க வந்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் அவர்தான் ஊழிய வேலையை வழிநடத்தி வந்தார். அவருடைய பேச்சுகள் ஒரே சமயத்தில் பிரெஞ்சு, ஜெர்மன், போலிஷ் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. ரதர்ஃபோர்டுடைய கம்பீர குரல் அரங்கம் முழுவதும் எதிரொலிக்கிறது.
பாரிசில் நடந்த அந்த மாநாட்டை யாராலும் மறக்கவே முடியாது. ஏனென்றால், அந்த மாநாட்டுக்குப் பிறகு பிரான்சில் நடந்த ஊழிய வேலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பல நாடுகளிலிருந்து வந்திருந்த எல்லாரையும் பிரான்சில் கால்பார்ட்டர்களாக, அதாவது பயனியர்களாக, சேவை செய்யும்படி ரதர்ஃபோர்ட் உற்சாகப்படுத்தினார்; முக்கியமாக இளைஞர்களை உற்சாகப்படுத்தினார். ‘இளைஞர்களே, நீங்க பயனியரா ஆகுறத எதுவுமே தடுத்து நிறுத்த கூடாது!’ என்று சொன்னார்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இங்கிலாந்திலிருந்து வந்திருந்த ஜான் கூக் என்ற இளம் சகோதரர் இந்த வார்த்தைகளை மறக்கவே இல்லை!
மக்கெதோனியாவில் சேவை செய்யும்படி வந்த அழைப்பை பவுல் ஏற்றுக்கொண்டதுபோல, அந்த மாநாட்டுக்கு வந்த நிறைய பேர் பிரான்சில் பயனியர் செய்யும்படி வந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். ஜான் கூக்கும் அதை ஏற்றுக்கொண்டு, ஒரு மிஷனரியாக ஆனார். (அப். 16:9, 10) பிரான்சிலிருந்த பயனியர்களின் எண்ணிக்கை ஒரு வருஷத்திலேயே எதிர்பார்க்காத அளவுக்கு அதிகமானது. 1930-ல், 27 பயனியர்கள்தான் இருந்தார்கள். ஆனால், 1931-ல் 104 பயனியர்கள் இருந்தார்கள். இருந்தாலும், அவர்களில் நிறைய பேருக்கு பிரெஞ்சு மொழி தெரியவில்லை. அவர்களுக்குப் போதுமான அடிப்படை வசதிகளும் இருக்கவில்லை. மற்ற பயனியர்களை விட்டு ரொம்ப தூரத்தில் இருந்ததும் அவர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. இதையெல்லாம் அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள்?
மொழி பிரச்சினையைச் சமாளித்தார்கள்
மற்ற நாடுகளிலிருந்து வந்த பயனியர்கள் ஊழியம் செய்ய பிரசங்க அட்டையை நம்பியிருந்தார்கள். ஜெர்மன் மொழி பேசும் ஒரு சகோதரர் பாரிசில் தைரியமாக ஊழியம் செய்தார். அவர் சொல்கிறார், “நம்ம கடவுளுக்கு நிறைய சக்தி இருக்குனு தெரியும். இருந்தாலும், ஊழியத்தில பேசும்போது எங்களுக்கு படப்படனு இருக்கும். நாங்க மனுஷங்களுக்கு பயப்படல. ‘வுலே-வு லீர் செத் கார்த், சில் வு ப்லே?’ [அதாவது, தயவு செஞ்சு இந்த அட்டையில இருக்கிறத கொஞ்சம் வாசிக்கிறீங்களா?] என்ற பிரெஞ்சு வார்த்தைகளை சொல்ல மறந்துடுவோமோனு பயந்தோம். நாங்க செய்ய வேண்டிய வேலை எந்தளவு முக்கியம்னு புரிஞ்சி வைச்சிருந்தோம்.”
சைக்கிள்களிலும் மோட்டார் சைக்கிள்களிலும் பயனியர்கள் ஊழியம் செய்தார்கள்
பொதுவாக, அடுக்கு மாடி வீடுகளைப் பராமரிக்க சிலர் இருப்பார்கள். அங்கு ஊழியம் செய்பவர்களை அவர்கள் விரட்டிவிடுவார்கள். ஒருநாள் இங்கிலாந்தைச் சேர்ந்த 2 சகோதரிகள் அடுக்கு மாடி வீடுகளில் ஊழியம் செய்துகொண்டிருந்தார்கள். அந்தச் சகோதரிகளுக்கு அவ்வளவாக பிரெஞ்சு மொழி தெரியாது. அங்கிருந்த ஒருவர் சகோதரிகளிடம் ரொம்ப கோபமாக, ‘நீங்க யாரை பார்க்கணும்?’ என்று கேட்டார். ஒரு கதவில் இருந்த ‘தூர்னே ல பூத்தான்’ [அதாவது, பெல்லை அழுத்துங்கள்] என்ற பிரெஞ்சு வார்த்தை நம் சகோதரியின் கண்ணில் பட்டது. அது அந்த வீட்டில் இருப்பவருடைய பெயர் என்று அந்தச் சகோதரி நினைத்துக்கொண்டார். அவரைச் சமாதானப்படுத்துவதற்காக, “நாங்க, மேடம் ‘தூர்னே ல பூத்தான்’-ஐ பார்க்க வந்திருக்கோம்” என்று சொன்னார். இப்படி நகைச்சுவை உணர்வோடு நடந்துகொண்டது அந்த பயனியர்களுக்கு உதவியாக இருந்தது.
மற்ற பிரச்சினைகளையும் சமாளித்தார்கள்
1930-களில் பிரான்சிலிருந்த நிறைய மக்கள் மோசமான சூழ்நிலைகளில் வாழ வேண்டியிருந்தது. மற்ற நாடுகளிலிருந்து வந்த பயனியர்களும் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான் வாழ்ந்தார்கள். ஆங்கிலம் பேசிய மோனா போஸ்காவும் அவரோடு இருந்த இன்னொரு பயனியர் சகோதரியும் சில பிரச்சினைகளைச் சந்தித்தார்கள். அதைப் பற்றி மோனா இப்படிச் சொல்கிறார்: “சாதாரணமான ஒரு ரூம்லதான் நாங்க இருந்தோம். எங்களுக்கு இருந்த ஒரு பெரிய பிரச்சினை குளிர் காலத்தில ரூம்மை கதகதப்பா வைச்சிக்கிறதுதான். நிறைய நேரங்கள்ல உறைஞ்சுபோற குளிர்ல இருக்க வேண்டியிருக்கும். ஜக்ல இருக்க தண்ணீர் ஐஸ் கட்டியா உறைஞ்சிடும். தினமும் காலையில அந்த ஐஸ் கட்டியை உடைச்சுதான் முகம் கழுவுவோம்.” இந்த மாதிரியான பிரச்சினைகளால் அன்றிருந்த பயனியர்கள் சோர்ந்துவிடவில்லை. அவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்று ஒரு சகோதரர் இப்படிச் சொன்னார்: “எங்களுக்குன்னு எதுவுமே சொந்தமா இல்லன்னாலும் நாங்க எந்த குறையும் இல்லாம இருந்தோம்.”—மத். 6:33.
1931-ல் பாரிசில் நடந்த மாநாட்டுக்கு இங்கிலாந்தில் இருந்து வந்த பயனியர்கள்
இந்த பயனியர்கள் தைரியமாக ஊழியம் செய்தாலும் மற்ற பயனியர்களை விட்டு ரொம்ப தூரத்தில் இருந்தது அவர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. 1930-களின் ஆரம்பத்தில் பிரான்சில் ஊழியத்துக்குப் போனவர்கள் 700 பேர்கூட கிடையாது. அவர்களில் பெரும்பாலோர் பிரான்சு முழுவதும் சிதறி இருந்தார்கள். இருந்தாலும் அவர்களால் சந்தோஷமாக இருக்க முடிந்தது. மோனாவும் அவரோடு இருந்த பயனியர் சகோதரியும் இந்தப் பிரச்சினையை எப்படிச் சமாளித்தார்கள் என்று மோனா சொல்கிறார்: “மற்ற பயனியர்களை விட்டு தூரமா இருந்தது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அதை சமாளிக்க நாங்க 2 பேரும் அமைப்பு வெளியிட்ட பிரசுரங்களை தவறாம படிப்போம். அந்த சமயத்துல மறுசந்திப்பு, பைபிள் படிப்பு எல்லாம் கிடையாது. அதனால, குடும்பத்தில இருந்தவங்களுக்கும் மத்த பயனியர்களுக்கும் நாங்க சாயங்காலத்தில கடிதம் எழுதுவோம். எங்களுக்கு கிடைச்ச அனுபவங்களை சொல்லி ஒருத்தர ஒருத்தர் உற்சாகப்படுத்துவோம்.”—1 தெ. 5:11.
இந்த பயனியர்கள் நிறைய தியாகங்கள் செய்திருக்கிறார்கள். பல பத்தாண்டுகளாக பிரான்சில் பயனியர் ஊழியம் செய்தவர்கள் கிளை அலுவலகத்துக்கு நிறைய கடிதங்கள் எழுதினார்கள். பிரச்சினைகள் மத்தியிலும் அவர்கள் நம்பிக்கையாக இருந்தார்கள் என்பதை பல வருஷங்களுக்குப் பிறகு அவர்கள் எழுதிய கடிதங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். ஆனி கிரிஜீன் என்ற பரலோக நம்பிக்கையுள்ள சகோதரி 1931-லிருந்து 1935 வரை அவருடைய கணவரோடு பிரான்சில் இருக்கிற எல்லா இடங்களுக்கும் போயிருக்கிறார். அந்தச் சகோதரி இப்படி எழுதினார்: “எங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா, சுவாரஸ்யமா இருந்தது. பயனியர்களா நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப உதவியா இருந்தோம். ‘நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; ஆனால், கடவுள்தான் வளரச் செய்தார்’னு பவுல் சொன்ன மாதிரியே எங்களாலயும் சொல்ல முடியும். மக்கள் கடவுளை பத்தி தெரிஞ்சிக்க பல வருஷத்துக்கு முன்னாடியே உதவி செஞ்சதை நினைச்சு நாங்க ரொம்ப சந்தோஷப்படுறோம்.”—1 கொ. 3:6.
சகிப்புத்தன்மையோடும் வைராக்கியத்தோடும் அந்த பயனியர்கள் ஊழியம் செய்தார்கள். ஊழியத்தை இன்னும் அதிகமாக செய்ய நினைப்பவர்களுக்கு அவர்கள் நல்ல உதாரணமாக இருக்கிறார்கள். இன்று கிட்டத்தட்ட 14,000 ஒழுங்கான பயனியர்கள் பிரான்சில் இருக்கிறார்கள். அதில் நிறையப் பேர் வேற்று மொழி சபைகளிலும் தொகுதிகளிலும் சேவை செய்கிறார்கள்.b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஆரம்பக் கால பயனியர்களைப் போலவே இன்று இருக்கும் பயனியர்கள் யெகோவாவுக்குச் சேவை செய்வதிலிருந்து அவர்களைத் தடுத்து நிறுத்த எதையும் அனுமதிப்பது கிடையாது.—பிரான்சிலுள்ள வரலாற்றுச் சுவடுகளிலிருந்து.
a போலந்திலிருந்து பிரான்சுக்குக் குடிமாறி வந்தவர்கள் செய்த ஊழிய வேலையைப் பற்றி தெரிந்துகொள்ள, “யெகோவாதான் உங்களை பிரான்சுக்கு கூட்டிட்டு வந்திருக்கார்” என்ற கட்டுரையை ஆகஸ்ட் 15, 2015 காவற்கோபுரத்தில் பாருங்கள்.
b 2014-ல் 900-க்கும் அதிகமான வேற்று மொழி சபைகளையும் தொகுதிகளையும் பிரான்சு கிளை அலுவலகம் பார்த்துக்கொண்டது. 70 மொழிகளில் மக்கள் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ள அந்தச் சபைகளும் தொகுதிகளும் உதவி செய்கின்றன.