நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—ஜெபசிந்தையுடன்
1 அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியர்களுக்கு உற்சாகப்படுத்தும் விதமாய் எழுதினான், “என்னைப் பெலப்படுத்துகிற அவராலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு.” (பிலி. 4:13, NW) நற்செய்தியை தைரியமாக அளிப்பதில் யெகோவாவின் மேல் பலத்திற்காக முழுமையாக நாமும் சார்ந்திருக்க வேண்டும். இதை நாம் எவ்வாறு செய்யலாம்?
2 நாம் “சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டிய” தேவையை இயேசு அழுத்தியுரைத்தார். (லூக். 18:1) “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” என்று பவுல் அறிவுறுத்தினான். (1 தெச. 5:17) ஆம், ஜெபத்திலிருந்து பலம் வருகிறது. நற்செய்தியை ஜெபசிந்தையுடன் நாம் அளிக்க வேண்டும். மற்றவர்களுக்கு சாட்சி கொடுப்பதற்கு சந்தர்ப்பங்களுக்காகவும், வீட்டுக்கு வீடு வேலையில் ஞானம் மற்றும் விவேகத்திற்காகவும், நம் பைபிள் மாணாக்கர்களின் இருதயங்களை எட்டுவதில் வெற்றியடைவதற்கும் நாம் ஜெபிக்கலாம். முடிவு வருவதற்கு முன்பு ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கான அவசர தேவை இருப்பதனால், ராஜ்ய அக்கறைகள் உலகமுழுவதும் முன்னேற்றுவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும். (மத். 24:14) ஆவிக்குரிய உறக்க நிலையைத் தவிர்ப்பதற்கும், யெகோவாவின் நோக்கங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேசும் சிலாக்கியத்திற்கான நம் போற்றுதலை அதிகரிக்கவும் நாம் ஜெபத்தில் ‘விழிப்பாய் நிலைத்திருக்க’ வேண்டும்.—கொலோ. 4:2; W62 பக். 497.
பைபிள் படிப்புகளின் பேரில்
3 ஒரு பைபிள் படிப்பை நடத்தும்போது ஜெபம் ஏன் அவ்வளவு முக்கியமானது? படிப்பை ஜெபத்தோடு ஆரம்பிப்பது நம்மை சரியான மனநிலையில் வைக்கிறது, என்ன சொல்லப்படுகிறதோ அதன் முக்கியத்துவத்தை மாணாக்கர் உணரும்படியாக அது உதவிசெய்கிறது. வழிநடத்துதலுக்காக யெகோவாவை நோக்கியிருக்க அவர் கற்றுக்கொள்கிறார். நம்முடைய முன்மாதிரியின் மூலம் எவ்வாறு ஜெபிப்பது என்பதையும் மாணாக்கர் கற்றுக்கொள்கிறார்.—லூக். 11:1.
4 வீட்டு பைபிள் படிப்புகளில் செய்யப்படும் ஜெபங்களில் சேர்க்கப்படக்கூடிய பொருத்தமான சில காரியங்கள் யாவை? இயேசுவின் மாதிரி ஜெபமும், பிலிப்பியர்கள் சார்பாக பவுல் செய்த ஜெபமும் மிகச் சிறந்த உதாரணங்களாகும். (மத். 6:9–13; பிலி. 1:9–11) நம்முடைய ஜெபங்கள் நீண்டதாக இருக்க அவசியமில்லை, ஆனால் அவைகள் திட்டவட்டமான காரியங்களோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். யெகோவாவுடைய எண்ணற்ற மிகச் சிறந்த கிரியைகளுக்காக அவருக்குப் பொருத்தமான துதிகளாலான கூற்றுகளை நாம் சேர்த்துக் கொள்வது முக்கியமானது. அவருடைய மகத்துவம், கம்பீரம் மற்றும் பரிபூரணமான குணங்கள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் கூற்றுகளை நாம் வெளிப்படுத்தலாம். (சங். 145:3–5) பைபிள் மாணாக்கரின் பெயரை குறிப்பிட்டு, ஒருவேளை அவருடைய சூழ்நிலைகளைச் சொல்லி அவர் ஆவிக்குரிய முன்னேற்றமடைவதற்காக ஜெபிப்பது பயனுள்ளதாய் இருக்கும். அவர் முன்னேற்றமடைகையில், கூட்டங்களுக்கு ஆஜராவதற்கும், அவர் கற்றுக்கொண்டிருக்கும் சத்தியத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கும், அவர் எடுக்கும் முயற்சிகளின் பேரில் யெகோவாவின் ஆசீர்வாதத்தை நாம் கேட்கலாம். உலகளாவிய பிரசங்க வேலையின் மீது யெகோவாவின் ஆசீர்வாதத்துக்காக வேண்டுகோள்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நம் சகோதர சகோதரிகளுக்காக
5 யெகோவாவின் ஜனங்கள் எல்லாருமே நம் உடன்வேலையாட்கள். (1 கொரி. 3:9) ஆகையால், உலக அதிகாரிகள் நற்செய்தி பிரசங்கிப்பை குறுக்கிட முற்பட்டால், “ராஜாக்களுக்காகவும் அதிகாரமுள்ள யாவருக்காகவும்” ஜெபிக்கும்படியாக நாம் உந்துவிக்கப்படுகிறோம். என்ன நோக்கத்திற்காக? “நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு.” (1 தீமோ. 2:1, 2) அப்பேர்ப்பட்ட ஜெபங்கள் உண்மையில் உலகமுழுவதிலுமுள்ள நம் சகோதரர்கள் சார்பாக இருக்கின்றன. நம் வேலையின் சம்பந்தமாக அதிகாரிகள் ஆதரவான மனப்பான்மையை காட்டும்படி நாம் ஜெபிக்கிறோம்.
6 கடினமான சூழ்நிலைகளின் கீழ் பிரசங்கிக்கும் நம் சகோதரர்களும், ஆவிக்குரிய வியாதிப்பட்டிருப்பவர்களும், ஊழியத்தில் அவர்கள் முழுமையாக பங்குகொள்ளும்படி பலத்திற்காக ஜெபத்தின் மூலம் நாம் கேட்கலாம். (2 தெச. 3:1, 2) சபை மூப்பர்கள், பயணக் கண்காணிகள், ஆளும் குழு போன்ற “உங்களுக்குள்ளே கடினமாக உழைக்கும்” எல்லாருக்காகவும் ஜெபிப்பது நல்லது.—1 தெச. 5:12.
7 எல்லா சமயங்களிலும் யெகோவா மேல் நம் பாரத்தை வைத்துவிட வேண்டும். (சங். 55:22; 1 பேதுரு 5:7) நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுப்பார் என்று நாம் உறுதியளிக்கப்பட்டிருக்கிறோம். (1 யோ. 5:14) ஆகையால் நம் ஊழியத்தை முழுவதுமாக நிறைவேற்றுவதற்கு யெகோவாவின் உதவிக்காக நாம் ஜெபித்தால், அவர் செவிகொடுத்து நம் வழியை வெற்றியடையச் செய்வார் என்று நாம் நம்பிக்கையாயிருக்க வேண்டும்.—2 தீமோ. 4:5.