சபை புத்தகப்படிப்பு ஏற்பாடு
பகுதி 4: ஒருவரையொருவர் தொடர்ந்து கட்டியெழுப்புங்கள்
1 சபை புத்தகப்படிப்பு தொகுதியில் இருக்கும் ஒவ்வொருவரும் தொகுதியில் இருக்கும் மற்றவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சியில் ஓர் அர்த்தமுள்ள பாகத்தை வகிக்கலாம். ‘நாளானது சமீபித்து வருகிறதை பார்க்கும் போது, அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்ற வேதப்பூர்வ கட்டளைக்கு நாம் அனைவரும் கீழ்ப்படிய விரும்புவோம்.—எபி. 10:24, 25.
2 ஒருவருக்கொருவர் உதவி செய்தல்: புத்தகப் படிப்பில் அனலான, சிநேகப் பான்மையான சூழ்நிலை உருவாவதற்கு அனைவரும் உதவி செய்யலாம். நம்மில் ஒவ்வொருவரும் மற்ற அங்கத்தினர்களில் தனிப்பட்ட அக்கறை காண்பிக்கும் போது, இது அந்தத் தொகுதியின் ஒற்றுமைக்கு உதவியளிக்கிறது. கலாத்தியர் 6:10-ல் “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத் தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மை செய்யக்கடவோம்” என்று நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். உதாரணமாக சிலர் வியாதியின் காரணமாக புத்தகப்படிப்புக்கு ஆஜராகாமல் இருந்தால், அதை நீங்கள் கவனிக்கிறீர்களா? நீங்கள் ஒருவேளை அவர்களோடு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது தனிப்பட்ட விதமாக அவர்களை சந்திக்கலாம். அப்படிப்பட்ட ஆவி ஒரு புத்தகப் படிப்பு தொகுதியில் இருக்கும் சகோதரர்களை ஒன்றாக இணைக்கிறது.
3 அன்றாடக அழுத்தங்கள், குடும்ப உத்தரவாதங்கள் அல்லது மற்ற பிரச்னைகளின் காரணமாக சிலருக்கு உற்சாகம் தேவைப்படுகிறதா? உதவி செய்வதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? கூட்டங்களில் மற்றவர்களை வரவேற்று வணக்கம் மட்டும் தெரிவிக்காமல் சம்பாஷணையில் ஈடுபடுத்துவதற்கு விசேஷ முயற்சி எடுங்கள். சிலர் ஒருவேளை கூச்சப்படுகிற சுபாவமுடையவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் யாராவது ஒருவரோடு பேசுவதற்காக பார்த்துக் கொண்டிருக்கலாம், நாம் அவர்களிடம் சென்று பேசினால் அவர்கள் பேசுவார்கள். (UW பக். 137–8) “ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்தி சொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினான். (1 தெச. 5:14) யாராவது ஒருவர் வியாதியாகவோ அல்லது உற்சாகமிழந்தோ இருக்கும் போது நண்பர்கள் அவரை சென்று பார்த்தோ அல்லது உதவியோ அளித்தால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும்! அநேகமாக, மற்றவர்கள் தங்கள் மேல் அக்கறையாயிருக்கின்றனர் என்பதை அறிந்திருப்பது தான் தேவைப்படுகிறது.
4 வெளி ஊழிய ஏற்பாடுகளோடும்கூட நாம் ஒத்துழைக்க விரும்புவோம். தொகுதியில் இருக்கும் வித்தியாசப்பட்ட நபர்களோடு வேலை செய்ய நாம் முயற்சி செய்ய வேண்டும். (2 கொரி. 6:11–13; 12–15) சில சமயங்களில் யாராவது ஒருவருக்கு உதவி செய்யும்படி புத்தகப்படிப்பு நடத்துபவர் நம்மை கேட்கலாம். நாம் எவ்வாறு பிரதிபலிக்கிறோம்? பிரசங்கிப்பது மற்றும் சீஷராக்கும் வேலையின் பல்வேறு அம்சங்களில் பிரஸ்தாபிகளும் பயனியர்களும் ஒருவரோடொருவர் வேலை செய்யும்போது புத்தகப்படிப்பு தொகுதி அதிக பலப்படுகிறது.
5 தனிப்பட்ட முன்மாதிரி: புத்தகப்படிப்பு ஏற்பாட்டுக்கு நீங்கள் உதவியளிக்கக்கூடிய மற்ற வழிகளும் இருக்கின்றன. உங்களுடைய நல்ல முன்மாதிரி முக்கியமானது. உதாரணமாக, ராஜ்ய மன்றத்தில் ஒரு கூட்டத்தில் ஆஜராகும் போது உடுத்துவதைப் போன்று நீங்கள் உடுத்தினால், நீங்கள் மரியாதையைக் காண்பிக்கிறீர்கள். சற்றே கவனக்குறைவாக உடுத்தும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டவர்களுக்கு நீங்கள் ஓர் உடன்பாடான முன்மாதிரியை வைக்கிறீர்கள். கவனத்தைக் கலைக்காமல் இருக்கும்பொருட்டு கூட்டத்துக்கு நேரத்துக்கு வருவதை நீங்கள் ஒரு பழக்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்களா?
6 சபை புத்தகப்படிப்பு ஏற்பாடு நம்முடைய முழு ஆதரவையும் தேவைப்படுத்தும் யெகோவாவிடமிருந்து வரும் அன்பான ஏற்பாடு. (ஏசா. 40:11) தனிப்பட்ட உதவியை நாம் பெற்றுக்கொள்ளும் ஓர் இடமாக அது இருக்கிறது, மற்றவர்களின் ஆவிக்குரிய புத்துணர்ச்சிக்கு உதவியளிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. இந்த ஏற்பாட்டை முழுவதுமாக ஆதரிப்பதன் மூலம் “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி” நாம் அனைவரும் செய்வோமாக.—1 தெச. 5:11.