சபை புத்தகப் படிப்பு—ஏன் நமக்குத் தேவை
1 பைபிள் மாணாக்கர்கள் என்று முன்பு அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளது படிப்புத் தொகுதிகள் 1895-ல், டான் சர்கில்ஸ் ஃபார் பைபிள் ஸ்டடி என்று அறியப்படலாயின. தொகுதி தொகுதியாக பிரசுரிக்கப்பட்டிருந்த மில்லெனியல் டான் புத்தகங்களே அந்தப் படிப்பில் பயன்படுத்தப்பட்டன. பின்னர் இந்தப் படிப்புத் தொகுதிகள் பெரோயன் சர்கில்ஸ் ஃபார் பைபிள் ஸ்டடி என்று அழைக்கப்பட்டன. (அப். 17:11) பெரும்பாலும் அவர்கள், சிறிய தொகுதிகளாக தங்களுக்கு வசதியான மாலை வேளையில் தனியார் வீடுகளில் கூடிவந்தனர். இந்தக் கூட்டங்களே சபை புத்தகப் படிப்பிற்கு முன்னோடிகளாக திகழ்ந்தன.
2 உற்சாகமும் உதவியும்: புத்தகப் படிப்புத் தொகுதிகள் காரணத்துடன்தான் சிறிய அளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன; இதனால், அத்தொகுதியிலுள்ளவர்கள் தங்கள் விசுவாசத்தை வெளிப்படையாக அறிவிக்க நிறைய வாய்ப்பு கிடைக்கிறது. இது, ‘ஒருவர் மற்றவரின் விசுவாசத்தால் . . . பரஸ்பர உற்சாகம்’ பெற வழிவகுக்கிறது.—ரோ. 1:12, NW.
3 புத்தகப் படிப்புக் கண்காணியின் போதிக்கும் முறையை உன்னிப்பாக கவனிப்பது, ‘சத்திய வசனத்தை சரியாக கையாள’ நமக்கு உதவும். (2 தீ. 2:15, NW) வேதப்பூர்வ அடிப்படையில் விஷயம் கலந்தாராயப்படும் விதத்தை அவர் வலியுறுத்துகையில் அதைக் கூர்ந்து கவனித்து கற்றுக்கொள்ளுங்கள். படிக்கும் பிரசுரத்திற்குப் பொருத்தமாக இருந்தால், அவர் பைபிளை மட்டும் உபயோகித்து முக்கிய குறிப்புகளை முடிவுரையில் சிறப்பித்துக் காட்டலாம். அவருடைய சிறந்த முன்மாதிரி, கிறிஸ்தவ ஊழியத்திலே நாம் போதிக்கும் விதத்தில் முன்னேற்றம் செய்ய நமக்கு உதவும்.—1 கொ. 11:1.
4 புத்தகப் படிப்புக் கண்காணி அந்த வாரப் பாடத்தை நடத்துவதுடன், பிரசங்க ஊழியத்திலும் முன்நின்று வழிநடத்துவார். ஊழியக் கண்காணியுடன் ஒத்துழைத்து, வெளி ஊழியத்திற்கு பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்வார். நற்செய்தியைப் பிரசங்கித்து சீஷராக்கும் கிறிஸ்தவ பொறுப்பை நிறைவேற்றுவதற்கு புத்தகப் படிப்புத் தொகுதியிலுள்ள அனைவருக்கும் உதவுவதற்கான வழிகளை சிந்திப்பார்.—மத். 28:19, 20; 1 கொ. 9:16.
5 தொகுதியிலுள்ள ஒவ்வொருவரின் ஆவிக்குரிய நலனிலும் புத்தகப் படிப்புக் கண்காணி அக்கறை காட்டுகிறார். இதை, சபைக் கூட்டங்களிலும், வெளி ஊழியத்தில் அவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்கையிலும் காட்டுகிறார். ஆவிக்குரிய உற்சாகம் அளிப்பதற்கு சகோதர சகோதரிகளை அவர்களது வீடுகளில் சந்திப்பதற்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக் கொள்கிறார். தொகுதியிலுள்ள அனைவரும் தங்களுக்குத் தேவை ஏற்படும் போதெல்லாம் ஆவிக்குரிய உதவியைப் பெறுவதற்காக புத்தகப் படிப்புக் கண்காணியை தாராளமாக அணுகலாம்.—ஏசா. 32:1, 2.
6 ஒருவரையொருவர் பலப்படுத்துங்கள்: கடவுளுடைய ஜனங்களின் வேலைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நாடுகளில், சகோதர சகோதரிகள் பெரும்பாலும் சிறு சிறு தொகுதிகளாகவே கூடிவருகின்றனர். ஒரு சகோதரர் தெரிவித்ததாவது: “கிறிஸ்தவ நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டபோதிலும், முடிந்தபோதெல்லாம் 10, 15 பேராக கூடிவந்து வாராந்தர கூட்டங்களை நடத்தினோம். அவற்றிலிருந்து ஆவிக்குரிய பலத்தைப் பெற்றோம்; பைபிள் படிப்பிலிருந்து மட்டுமல்ல, படிப்புக்குப் பின் அனுபவித்த கூட்டுறவிலிருந்தும் பலம் பெற்றோம். எப்படியெனில், ஒவ்வொருவரும் எதிர்ப்பட்ட பிரச்சினைகளை ஒப்பிட்டுப் பார்ப்போம்; இது, நாங்கள் எல்லாரும் ஒரே விதமான பாடுகளையே அனுபவிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள உதவியது.” (1 பே. 5:9) ஆகவே, நாமும் சபை புத்தகப் படிப்பு ஏற்பாட்டை முழுமையாக ஆதரிப்பதன் மூலம் ஒருவரையொருவர் பலப்படுத்துவோமாக.—எபே. 4:16.
[கேள்விகள்]
1. சபை புத்தகப் படிப்பு ஏற்பாடு எவ்வாறு ஆரம்பமானது?
2. புத்தகப் படிப்பில் ஒருவருக்கொருவர் ‘பரஸ்பர உற்சாகம்’ பெற நம் பங்கை எப்படி செய்யலாம்?
3, 4. புத்தகப் படிப்பு ஏற்பாடு நம் ஊழியத்தை நிறைவேற்ற எப்படி உதவுகிறது?
5. புத்தகப் படிப்பின் வாயிலாக ஒவ்வொருவருக்கும் என்ன உதவி கிடைக்கிறது?
6. (அ) சில நாடுகளில் நம் சகோதர சகோதரிகள் சிறு சிறு தொகுதிகளாக கூடிவருவதன் மூலம் எவ்வாறு பலப்படுத்தப்பட்டுள்ளனர்? (ஆ) புத்தகப் படிப்பு ஏற்பாட்டிலிருந்து நீங்கள் தனிப்பட்ட விதத்தில் எப்படி பயனடைந்திருக்கிறீர்கள்?