என்றும் வாழலாம் புத்தகத்தைக் கொண்டு மெய்ஞானத்தை அறிவியுங்கள்
1 அழகான பூமிக்குரிய பரதீஸில் பரிபூரணமான நிலையில் நித்திய ஜீவன்! யெகோவாவிடம் இருந்து வரும் என்னே ஒரு சிறப்பு வாய்ந்த பரிசு! நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை உபயோகித்து நம்முடைய பிராந்தியத்தில் இருக்கும் ஜனங்களோடே இந்த நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்வதற்கு அவருடைய அன்பு நம்மை உந்துவிக்கவேண்டும். இது விரைவில் நம்முடைய இந்திய பிராந்தியத்தில் உபயோகிப்பதற்குப் பத்து மொழிகளில் கிடைக்கிறது.
2 பூமியில் பரதீசில் என்றும் வாழலாம் என்ற பொருளை கலந்தாலோசிப்பதற்குத் தகுதியுள்ளவர்களாக ஆவதற்கும், புத்தகத்தை அளிப்பதற்கும், அதன் பொருளடக்கத்தை நாமே முதலில் முழுவதுமாக நன்றாக அறிந்திருக்க வேண்டும். அக்கறைக்குரிய வெளி உழிய குறிப்புகளை நீங்கள் வைத்திருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவைகளைச் சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளோடு உபயோகப்படுத்தலாம். நித்திய ஜீவன் என்ற யெகோவாவின் வாக்கில் அவர்களுடைய அக்கறையைத் தூண்டுவதற்கு எந்த அதிகாரங்கள் அல்லது திட்டவட்டமான குறிப்புகள் உபயோகப்படுத்தப்படலாம் என்பதை நிர்ணயிக்க, நம்முடைய பிராந்தியத்தில் எப்படிப்பட்ட ஜனங்கள் வசிக்கின்றனர் என்பதை அறிந்திருப்பது நமக்கு உதவி செய்யும். சத்தியத்தினிடமாக வீட்டுக்காரரின் அக்கறையைக் கவரும் படங்களைக் குறித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பிராந்தியத்தில் இப்புத்தகத்தை அளிக்கையில் இவைகளை மனதில் வையுங்கள்.
3 ஒரு மிகச் சிறந்த படிப்புப் புத்தகம்: எதிர்கால கூட்டிச்சேர்க்கும் வேலையில் என்றும் வாழலாம் புத்தகம் ஒரு பெரிய பங்கை வகிக்கப்போகும் முதன்மை வாய்ந்த பைபிள் படிப்பு உதவி புத்தகமாக இருக்கும் என்று நாம் ஏன் நம்பிக்கையாக இருக்கலாம்? ஏனெனில் “தேவனே சத்தியபரர்” [“Let God Be True”] மற்றும் “நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியம்” போன்ற வெற்றிகரமான பைபிள் படிப்பு உதவி புத்தகங்களை உபயோகித்ததன் மூலம் அறிந்தவைகளின் அடிப்படையில் இப்புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆக, இப்புத்தகம் அடிப்படையாக அதே வேதாகமப் பொருளைக் கொண்டிருக்கிறது. அந்தப் பழைய புத்தகங்களில் காணப்படுகிற சிறந்த கற்பிக்கும் முறைகளும் இதில் இருக்கின்றன.
4 பல்வேறு பைபிள் கோட்பாடுகள் எவ்வாறு தெளிவாகவும், குறிப்பாகவும் விளக்கப்படலாம் என்பதற்கு அதிகக் கவனம் கொடுக்கப்பட்டது. காணக்கூடிய படங்களையும் சொற்களால் விவரிக்கப்பட்ட உதாரணங்களையும் அதிகத் திறம்பட்டவையாக ஆக்குவதற்கும் சோதித்து அறியக்கூடிய கேள்விகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் நேரம் செலவழிக்கப்பட்டது. மாணாக்கரின் இருதயத்தைச் சென்றெட்டுவதுதான் நிலையான நோக்கமாக இருந்தது. ஒரு பிரஸ்தாபி இவ்வாறு எழுதுகிறார்: “விஷயங்கள் அழகாக எடுத்துரைக்கப்பட்டிருப்பது, ஏராளமான படங்கள் ஆகியவற்றிற்கு மேலாக வேத வசனங்களும் கேள்விகளும் அதிக வலிமையுடன் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதையும்—எல்லாக் காரியங்களையும் யெகோவாவோடு தனக்கு இருக்கும் உறவோடு சம்பந்தப்படுத்திப் பார்க்க மாணாக்கனைச் செய்விப்பதற்குத் தனிப்பட்ட அணுகுமுறையையும் நான் அதிகம் விரும்புகிறேன். ஜனங்கள் தீர்மானங்கள் செய்வதற்கும், தங்கள் நம்பிக்கைகள், நடத்தை, மனநிலைகள், மதம் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்வதற்கென தேவையைக் காணும்படி அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தெளிவான வேறுபாடுகள் உதவி செய்ய வேண்டும்.”
5 மேலும் விரிவான பொருளடக்கம்: பைபிள் சத்தியங்களை அளிப்பதில் அதனுடைய மேம்படுத்தப்பட்ட, திறம்பட்ட விதத்தோடுகூட நம்முடைய முந்திய படிப்பு உதவிப் புத்தகங்களைவிட இப்புத்தகம் ஒரு விரிவான பொருளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. மாணாக்கன் பயனடைவதற்காக புதியவர்களுக்கு முக்கியமானதாயிருக்கும் தகவல் சேர்க்கப்ட்டிருக்கிறது. உதாரணமாக, சமீப காலங்களில் ஒழுக்க சம்பந்தமான நடத்தை சத்தியத்தில் முன்னேறுவதிலிருந்து புதியவர்களைத் தடை செய்யும் ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறது. ஆகையால் இந்த விஷயம் முழுவதுமாக கலந்தாலோசிக்கப்பட்டிருக்கிறது. என்ன தவறான காரியங்களைத் தவிர்க்க வேண்டும், அவற்றை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி நேரடியான ஆலோசனை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சரியான காரியங்களைச் செய்வதற்கு உற்சாகம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
6 வீட்டுக்கு வீடு ஊழியம், தெரு ஊழியம் ஆகியவற்றில் ஈடுபடும்போது—என்றும் வாழலாம் புத்தகத்தில் ஒன்று அல்லது அதற்கும் அதிகமானப் பிரதிகளை ஒவ்வொரு பிரஸ்தாபியும் எடுத்துச் செல்லும்படி சிபாரிசு செய்யப்படுகிறது. இப்புத்தகம் இல்லாமல் வெளி ஊழியத்திற்குச் செல்லாதீர்கள். இப்புத்தகத்தை அளிப்பதில் உங்களுடைய உடன்பாடான மனநிலை, அதன் பொருளடக்கத்தை விவரித்து அதை அளிப்பது ஆகியவை அனேக புதிய வீட்டு பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு வழிவகுக்கும்.
7 இந்த இறுதி நாட்களில் ராஜ்ய சத்தியத்தைத் தொடர்ந்து அறிவிக்குமாறு யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் சிலாக்கியத்தை அனுகூலப்படுத்திக்கொண்டு, ஜனவரி மாதத்தின்போது என்றும் வாழலாம் புத்தகத்தை நாம் உற்சாகத்தோடு அளிப்போமாக.