யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாய்வைத்துக்கொள்ளுதல்
1 யெகோவாவைச் சேவிப்பதற்கு நாம் உண்மையிலேயே சிலாக்கியம் பெற்றவர்களாய் இருக்கிறோம். அவரைப் பற்றியும், அவருடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவைப்பற்றியும் அறிவைப் பெற்றிருப்பதால், அவருடைய சித்தத்தைச் செய்வதில் நாம் நம்மை முழுவதுமாக ஈடுபடுத்த அன்பால் உந்தப்படுகிறோம். (யோவான் 17:3) நாம் ஒருவேளை களைப்படையலாம், ஆனால் நாம் முழு வல்லமையோடு நிரம்பியிருப்பதற்கு யெகோவா நமக்குப் பெலன் அளிக்கிறார்.—ஏசாயா 40:29.
2 யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் நம்மிடமாகக் காண்பித்திருக்கும் பெரிதான அன்புக்கு நம்முடைய போற்றுதலை நாம் எவ்வாறு காண்பிக்கலாம். (2 கொரி. 5:14, 15) தம்முடைய தகப்பனின் பெயரையும் ராஜ்யத்தைப் பற்றி சோர்வின்றி சாட்சி கொடுத்த இயேசுவைப் பின்பற்றுவது ஒரு முக்கியமான வழியாகும். (1 பேது. 2:21) பலமான விசுவாசம் நமக்கு இருக்குமேயானால் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி கடவுள் கொடுத்த வேலையைச் சுற்றி நம்முடைய வாழ்க்கை இயங்கும்.
3 வெளி ஊழியத்திற்கு நாம் செலவிடும் நேரத்திற்குக் குறைந்தபட்ச அளவு என்று ஏதாவது இருக்கிறதா? சூழ்நிலைமைகள் வேறுபடுகின்றன. முதிர்வயது, உடல்நலமின்மை, அல்லது குடும்ப உத்தரவாதங்கள் ஆகியவை ஒருவேளை நம்மை மட்டுப்படுத்தியிருக்கக்கூடும். என்றபோதிலும் யெகோவாவுக்கு செய்யும் சேவையில் நாம் அனைவரும் முழு இருதயத்தோடு ஈடுபட வேண்டும். ஊழியத்தில் நம்மாலானதைச் செய்வதன் மூலம் நம்முடைய பக்தியின் ஆழத்தையும் நம்முடைய ஒப்புக்கொடுத்தலின் உண்மைத்தன்மையையும் நாம் தனிப்பட்டவர்களாக வெளிக்காட்ட வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. (2 தீமோ. 2:15) நம்முடைய தனிப்பட்ட சூழ்நிலைக்கேற்ப நம்மில் ஒவ்வொருவருக்கும் சந்தர்ப்பம் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டவைகளில் சில யாவை?
4 நம்முடைய ஊழியத்தை விரிவாக்குவதற்கான வழிகள்: நம்முடைய ஊழியத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கு நாம் முதலில் அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒரு போதகராக கூடுதலான திறமையை வளர்த்துக்கொள்வதன் மூலம் இது நிறைவேற்றப்படலாம். வெளி ஊழியத்தில் நாம் அதிக திறம்பட்டவர்களாக ஆவதற்கு உதவி செய்வது தேவராஜ்ய ஊழியப்பள்ளியின் ஒரு முக்கிய நோக்கமாகும். நம்முடைய நியமிப்புகளைத் தயாரிக்கும்போது, வெளி ஊழியத்தின் அடிப்படையில் நாம் சிந்திக்கிறோமா. நம்முடைய தனிப்பட்ட ஊழியத்தை மேம்படுத்துவதற்கு நாம் பெற்றுக்கொள்ளும் ஆலோசனையை நாம் பொறுத்துகிறோமா? (sg பக். 96–9) அதேப் போன்று வெளி ஊழியம் செய்வதற்கு அனேக ஆலோசனைகள் ஊழியக் கூட்டத்தில் கொடுக்கப்படுகின்றன. நம்மால் முடிந்தளவு சீக்கிரமாக இவற்றை நாம் உபயோகிப்போமாக.
5 அடுத்துத் துணைப் பயனியர் வேலை அல்லது ஒழுங்கான பயனியர் வேலையில் பங்குகொள்வதற்கு உங்களுடைய சூழ்நிலைமைகளைத் தக்கவாறு அமைத்துக்கொள்வதற்கு சாத்தியத்தைச் சிந்தித்துப் பாருங்கள். அவ்வாறு செய்வது நம்முடைய தகப்பனாகிய யெகோவாவின் சேவையில் உங்களை நிச்சயமாக சுறுசுறுப்புள்ளவர்களாக வைக்கும். (1 கொரி. 15:58) உங்களால் பயனியர் செய்ய முடியாவிட்டால் என்ன? ஊழியத்திற்கான உண்மையான அன்பையும் பிராந்தியத்தில் இருக்கும் ஜனங்களின்பேரில் ஆழ்ந்த அக்கறையையும் வளர்த்துக்கொள்வதன் மூலம் நீங்கள் பயனியர் ஆவியை வெளிக்காட்டலாம். மறு சந்திப்புகள் செய்வதன் மூலமும், பைபிள் படிப்புகள் நடத்துவதன் மூலமும் உண்மை மனதுள்ள ஆட்கள் யெகோவாவைப் பற்றியும், அவருடைய ஆச்சரியமான நோக்கங்களைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு உதவி செய்ய ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம்.
6 தேவை அதிகமாக இருக்கும் இடத்தில் சேவை செய்வதற்குக் கொடுக்கப்படும் அழைப்புக்குப் பிரதிபலிப்பதும்கூட நம்முடைய முன்னேற்றத்தின் பாகமாக இருக்கலாம். (ஏசாயா 6:8) ஊழியர்கள் குறைவுபடுவதால், உதவி தேவைப்படும் ஒரு சபைக்கு அல்லது அதன் பிராந்தியத்தைச் செய்துமுடிப்பதற்கு உதவிக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சபைக்கு மாறி சென்றிருப்பவர்கள் நிச்சயமாகவே அனேக ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கின்றனர்.
7 நாம் சத்தியத்தை முதலில் கற்றுக்கொண்ட போது, யெகோவா தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்குமான அன்பு நம்முடைய வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைச் செய்வதற்கு நம்மை உந்துவித்தது. இப்போது நம்முடைய பரலோகத் தகப்பனோடு இருக்கும் நம்முடைய உறவிலும் நம்முடைய சார்பாக அவருடைய குமாரன் செய்திருப்பவற்றின் பேரிலும் நம்முடைய போற்றுதலில் நாம் வளருகையில் ஊழியத்தை விரிவாக்குவதற்காக நாம் செய்வதற்கு மற்ற மாற்றங்கள் ஏதாவது இருக்கின்றனவா? யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் நாம் அனைவரும் நம்முடைய வாழ்க்கையை அவருடைய ஊழியத்திற்கென செலவிடுவோமாக.—ரோமர் 12:11.