இதோ, உங்கள் ஊழியத்தை விரிவாக்க வழிகள்!
1 “உங்களால் முடிந்த மிகச்சிறந்ததைச் செய்கிறீர்களா?” சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கில காவற்கோபுரம், ஜனவரி 15, 1955 இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையின் தலைப்புதான் இது. யெகோவாவின் ஜனங்கள் தங்கள் தனிப்பட்ட ஊழியத்தை விரிவாக்கும் வகையில் இன்னும் சிறப்பாக எப்படி செயல்படலாம் என்பதை அக்கட்டுரை அழகாக சுட்டிக்காட்டியது. நம்மாலான மிகச்சிறந்ததை நாம் செய்ய நினைக்கிறோம். எனவே அப்போது கொடுக்கப்பட்ட நல்ல ஆலோசனை இப்போதும் பொருந்துகிறது.
2 நாம் செய்யும் ஊழியம் அனைத்தும் பின்வரும் முக்கியமான கட்டளையால் உந்தப்பட்டதாகவே இருக்க வேண்டும்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.” (மாற். 12:30) யெகோவாவின் ராஜ்ய வேலையில் முன்னேறும் வகையில், நமக்குள்ள வாய்ப்புகள் அனைத்தையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் யெகோவாவிடம் நமக்கிருக்கும் அன்பை முழுமையாக வெளிக்காட்டலாம். உங்கள் ஊழியத்தை விரிவாக்க பின்வரும் வழிகளை கவனியுங்கள்.
3 பொறுப்பை ஏற்பீர்: ஒப்புக்கொடுத்த சகோதரர்கள் உதவி ஊழியராவதற்கு தகுதியைப் பெற உழைக்கலாம். அதன் பிறகு மூப்பர்களாக சேவிப்பதற்கு முன்னேறலாம். காவற்கோபுரம், மே 1, 1991 இதழில் வெளிவந்த, “நீங்கள் தகுதிபெற நாடுகிறீர்களா?,” “சேவை செய்ய நீங்கள் தகுதி பெற்றிருக்கிறீர்களா?” என்ற கட்டுரைகள் அநேக சகோதரர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. இதனால் அவர்கள் சபைகளில் பொறுப்புகளை ஏற்றுள்ளனர். நீங்கள் தகுதியை நாடி அதைப் பெற வேண்டுமா? இதற்குத் தேவையான ஆலோசனைகளை உங்கள் சபை மூப்பர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
4 திருமணமாகாத மூப்பர்களும் உதவி ஊழியர்களும் ஊழியப் பயிற்சி பள்ளிக்குச் செல்ல விண்ணப்பிப்பதைப் பற்றி சீரியஸாக சிந்திக்கலாம். இந்தப் பள்ளியைப் பற்றி தெரிந்துகொள்ள, 1986-1995, 1996, 1997 வருடங்களுக்கான காவற்கோபுர பிரசுரங்களின் அட்டவணைகள் (ஆங்கிலம்)-ல், “ஊழியப் பயிற்சி பள்ளி” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை வாசித்துப் பார்க்கலாம். உங்களுக்காக ‘பெரிதும் அநுகூலமுமான கதவு திறக்கப்பட்டிருப்பதை’ காண்கிறீர்களா? (1 கொ. 16:9அ) இந்தக் கதவின் வழியே சென்ற அநேக சகோதரர்கள், தாங்கள் பயிற்சி பெற்ற பிறகு என்னென்ன ஊழிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் இப்பொழுது பார்க்க வேண்டுமே! அவர்கள் பெத்தேல் ஊழியர்களாகவோ, விசேஷ பயனியர்களாகவோ, மிஷனரிகளாகவோ, வட்டார கண்காணிகளாகவோ மகிழ்ச்சியுடன் சேவை செய்கின்றனர்.
5 முழுநேர ஊழியத்திற்கு தகுதிபெறுவீர்: பள்ளிப்படிப்பை முடிக்கும் இளைஞர்கள், இல்லத்தரசிகள், வேலையிலிருந்து ஓய்வு பெறும் வயதை எட்டியவர்கள் இவர்களெல்லாம் பயனியர் சேவையைப் பற்றி தீர சிந்திக்க வேண்டும். நம் ராஜ்ய ஊழியம், ஜூலை 1998 இதழில் வந்த உட்சேர்க்கையை மறுபடியும் படித்துப் பாருங்கள். பிறகு உங்கள் வாழ்க்கைச் சூழ்நிலைக்கு ஒத்த சூழ்நிலையில் இருந்த பயனியர்களிடம் பேசுங்கள். அவ்வாறு பேசுகையில், பயனியர் செய்வதன்மூலம் நீங்களும் அவர்களைப் போலவே உங்கள் ஊழியத்தை விரிவாக்கும்படி உந்துவிக்கப்படலாம். (1 கொ. 11:1) மாதத்திற்கு 70 மணிநேரம் ஊழியம் செய்து, ஒழுங்கான பயனியர் அணியில் சேர்ந்து உங்கள் ஊழியத்தை விரிவாக்க வாய்ப்பு இருக்கிறதா?
6 உலகமுழுவதிலும் 17,000-க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் பெத்தேல் வீடுகளிலும் கிளை அலுவலகங்களிலும் சேவை செய்கின்றனர். இப்படிப்பட்ட சேவைக்காக விண்ணப்பிக்க என்ன தேவை என்பதைப் பற்றி நம் ராஜ்ய ஊழியம், நவம்பர் 1995 இதழ் விரிவாக சொல்கிறது. அந்த உட்சேர்க்கையை வாசித்து பெத்தேலில் சேவை செய்யும் சிறந்த வாய்ப்புக்குத் தகுதியாவோரில் நீங்களும் ஒருவராக முடியுமா என்றுதான் பாருங்களேன்.
7 தேவை அதிகமான இடங்களில் சேவை: நீங்கள், அடிக்கடி ஊழியம் செய்யப்படும் பிராந்தியத்தில் வசிக்கிறீர்களா? அல்லது எல்லாருமாய் சேர்ந்து பிராந்தியத்தைப் பகிர்ந்து முடித்துவிடுமளவுக்கு நிறைய சகோதரர்கள் இருக்கும் பகுதியில் வசிக்கிறீர்களா? அப்படியானால், தேவை அதிகமாக உள்ள இடங்களில் சேவை செய்வதன் மூலம் உங்கள் ஊழியத்தை விரிவாக்குவதைப் பற்றி யோசித்தாலென்ன? ஒருவேளை அதிக வேலையாட்கள் தேவைப்படுகின்ற அருகிலுள்ள கிராமப்புறங்களுக்குச் செல்லலாம். (மத். 9:37, 38) ஆனால் இதைச் செய்வதற்கு அவசரப்பட்டு முடிவெடுத்துவிடக் கூடாது. இதை ஜெபசிந்தையுடன் தீர்மானிப்பது முக்கியம். (லூக். 14:28-30) உங்கள் சூழ்நிலையைக் குறித்து சபை மூப்பர்களிடமும் வட்டார கண்காணியிடமும் பேசுங்கள். இப்பொழுதே அப்படி செல்வதா அல்லது வருங்காலத்தில் அவ்வாறு செல்வதற்குத் தயாராக இருப்பது உசிதமானதா என்று அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள். அவ்வாறு எங்கே மாறிச் செல்வது என்பது பற்றிய ஆலோசனைக்காக சங்கத்திற்கு கடிதம் எழுத நினைத்தால் சபை ஊழிய கமிட்டி கையொப்பமிட்ட கடிதம் ஒன்றையும் உங்கள் கடிதத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.
8 ஊழியத்தின் தரத்தில் முன்னேற்றம் தேவை: வெளி ஊழியத்தில் நம்முடைய தரம் முன்னேற வேண்டும். இதற்கு நாம் ஊழியத்தில் இன்னும் அதிகமாக பங்குகொள்ளலாம். வீட்டுக்கு வீடு ஊழியம், சந்தர்ப்ப சாட்சி கொடுத்தல், மறுசந்திப்பு செய்தல், பைபிள் படிப்பு நடத்துதல் போன்ற ஊழியத்தின் எல்லா அம்சங்களையும் நீங்கள் செய்துவருகிறீர்களா? ஒரு பைபிள் படிப்பு நடத்துகிறீர்களென்றால், உங்கள் கற்பிக்கும் கலையில் முன்னேற்றம் செய்ய முடியுமா? இதன்பேரில் ஆலோசனைகளுக்கு, நம் ராஜ்ய ஊழியம், ஜூன் 1996 இதழில் வெளிவந்த உட்சேர்க்கையை படித்துப் பாருங்கள். உங்கள் மாணாக்கர் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுமளவுக்கு முன்னேற என்ன செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியவரும்.
9 நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் 9-வது அதிகாரத்தில், நம் ஊழியத்தை விரிவாக்கி முன்னேற்றுவிக்க தேவைப்படும் வழிமுறைகள் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன. நாம் எல்லாருமே கடவுளுடைய சேவையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் செய்ய விரும்ப வேண்டும். உங்கள் ஆவிக்குரிய இலக்குகளைப் பற்றி தீர யோசித்துப் பார்த்தாலென்ன? “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக் கொண்டு, இவைகளிலே நிலைத்திரு” என்று 1 தீமோத்தேயு 4:15 சிபாரிசு செய்வதையே நீங்களும் செய்யுங்கள்.