அன்றாடக ஆவிக்குரிய உணவு—கிறிஸ்தவகுடும்பத்துக்கு இன்றியமையாதது
1 “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” (மத். 4:4) இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையாயிருக்கின்றன! ஒவ்வொரு நாளும் நமக்கு சரீரப்பிரகாரமான உணவு தேவைப்படுவது போலவே ஆவிக்குரிய உணவையும் நாம் அன்றாடம் உட்கொள்ள வேண்டும். கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஒழுங்காக போஷிக்கப்படுவதற்கு நமக்கு உதவ தினந்தோறும் வேதவசனங்களை ஆராய்தல் என்கிற ஒரு சிறு புத்தகத்தை சங்கம் வெளியிட்டிருக்கிறது. ஒரு கிறிஸ்தவ குடும்பமாக, நீங்கள் தின வசனத்தை ஒவ்வொரு நாளும் சிந்திப்பதற்கு நேரத்தை ஒதுக்குகிறீர்களா?
2 பெற்றோர் முன்மாதிரியை வைக்க வேண்டும்: செய்வதற்கு அநேக வேலைகள் இருப்பதன் காரணமாக, தின வசனத்தை பின்னர் சிந்தித்துக்கொள்ளலாம் என்று நினைத்து அதை தள்ளிப்போடுவது சுலபம். ஆனால் குடும்பத்தின் ஆவிக்குரிய தேவையைக் குறித்து பெற்றோர் உணர்வுள்ளவர்களாயிருந்தால், அதற்காக அவர்கள் நேரத்தை கண்டடைவார்கள், ஆம், குடும்ப அங்கத்தினர்கள் எல்லாருமே ஒன்றாக இருக்கும்போது அதைச் சிந்திக்க அவர்கள் ஒவ்வொரு நாளும் நேரத்தை எடுத்துக்கொள்வார்கள். (மத். 5:3) அவர்கள் பிள்ளைகளோடு சேர்ந்து தின வசனத்தை வாசிப்பது மட்டுமல்லாமல் காவற்கோபுரத்திலிருக்கிற குறிப்புகளை அவர்கள் முக்கியப்படுத்திக் காட்டி, கொடுக்கப்பட்டுள்ள விஷயமும் ஆலோசனையும் எப்படி நடைமுறையில் பொருந்தும் என்பதை கலந்தாராயவும் செய்வார்கள். இதை நடைமுறைப்படுத்துவது பிரயாசையையும் அப்பியாசித்தலையும் அவசியப்படுத்துவது உண்மைதான், ஆனால் இதனால் வரக்கூடிய நன்மைகள் பலன்தரக்கூடியவை. (அப்போஸ்தலர் 17:11, 12-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) ஆகவே, பெற்றோர்களே, ஒரு சிறந்த முன்மாதிரியை வைக்க கடினமாய் பிரயாசப்படுங்கள்!
3 வசதியான நேரத்தில் நடத்துங்கள்: தின வசனத்தை சிந்திப்பது ஒரு திட்டமிடப்படாத காரியமாக ஆகிவிடாதபடி குடும்பத்தில் உள்ள எல்லாரும் ஒன்றாக கூடி சிந்திப்பதற்கான சிறந்த நேரம் எது? ஒரு பைபிள் வசனத்தை சிந்திப்பதோடு நாளை துவங்குவதில் பிரயோஜனம் இருக்கிறது. உலக முழுவதும் இருக்கிற பெத்தேலிலும் மிஷனரி வீடுகளிலும் நாளானது காலை வணக்கத்தோடு துவங்குகிறது, இதில் தின வசனம் கொஞ்சம் நேரம் சிந்திக்கப்படும். அந்த நாளை ஒரு நல்ல துவக்கத்தோடு ஆரம்பிக்க இது சகோதரர்களுக்கு உதவுகிறது, அன்றாடம் யெகோவாவுடைய நினைப்பூட்டுதல்களின் பேரில் சிந்தித்துப் பார்க்க உதவுகிறது.—சங். 1:1, 2; பிலி. 4:8.
4 அதேவிதமாகவே, கிறிஸ்தவ குடும்பங்கள் காலை பைபிள் கலந்தாலோசிப்புகளிலிருந்து பயனடைய முடியும். ஆவிக்குரிய காரியங்கள் சம்பந்தமாக பள்ளியிலிருந்து வரும் பயமுறுத்தல்களை கையாள பிள்ளைகளுக்கு உதவி கொடுக்கப்படலாம். ஒருசில காலத்துக்கு குடும்பத்தாரெல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து தின வசனத்தை சிந்திக்க முடியவில்லையென்றால், பெற்றோர் வேறேதாகிலும் ஏற்பாடுகள் செய்ய முடியுமா என்று யோசித்துப் பார்க்க வேண்டும், அப்போது இந்த முக்கியமான ஆவிக்குரிய போஷாக்கை அவர்கள் தவறவிட மாட்டார்கள். உதாரணமாக, பிள்ளைகள் காலையில் எழுவதற்கு முன்பே தகப்பன் வேலைக்கு செல்வதாயிருந்தால், பிள்ளைகளோடு தின வசனத்தை சிந்திப்பதற்கு தாய் ஒருவேளை கொஞ்சம் நேரத்தை செலவுசெய்யலாம். மறுபட்சத்தில், சில குடும்பங்கள் சாயங்காலங்களில் அவர்களெல்லாரும் ஒன்றாக இருப்பதன் காரணமாக வசனத்தை அப்போது சிந்திக்க ஏற்பாடு செய்கின்றனர். ஒவ்வொரு குடும்பமும் அதனதனுடைய சூழ்நிலைமைக்கு சரியாக பொருந்தும் ஓர் அட்டவணையை தயாரிப்பது நல்லது.
5 ஒரு கிறிஸ்தவ குடும்பத்துக்கு அன்றாடக ஆவிக்குரிய போஷாக்கு இன்றியமையாதது. தின வசனத்தை சிந்திப்பதற்கு முதலிடம் கொடுங்கள். (பிலி. 1:10, NW) ஒவ்வொரு நாளும் ஒரு பைபிள் வசனத்தை சிந்திப்பது யெகோவாவுடைய நீதியான நியமங்களையும் சட்டங்களையும் கடைப்பிடிக்க நமக்கு உதவும். ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் தங்களுடைய பங்கில் ஒத்துழைப்பதன் மூலம் எல்லாருமே இந்த ஏற்பாட்டிலிருந்து அதிக நன்மையடையலாம்.