வீட்டுக்கு வீடு ஊழியத்தைப் பலன்தரும் முறையில் செய்தல்
1 “நற்செய்தி” இன்று பூமி முழுவதிலும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. (மத். 24:14) இது பிரதானமாக வீட்டுக்கு வீடு ஊழியத்தின் மூலம் செய்யப்பட்டு வருகிறது.—அப். 20:20, 21.
2 நாம் சந்திக்கிற ஆட்களுக்கு நம்முடைய பிரசங்கங்கள் மெய்யான உட்பொருளை கொண்டிருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள், வாலிபர்கள் ஆகிய ஒவ்வொருவரும் வித்தியாசப்பட்ட விஷயங்களின்பேரில் அக்கறையுடையோராய் இருக்கின்றனர். ஆகவே நம்முடைய பிராந்தியத்திலுள்ள ஜனங்களுடைய கவனத்தை கவர்ந்திழுக்கும்படி பல்வேறு பைபிள் பொருள்களின்பேரில் தயாரித்துவைப்பது நல்லது.
3 இந்தப் பிரசுரங்களை முழுமையாய் உபயோகியுங்கள்: என்றும் வாழலாம் புத்தகம் எல்லா இடங்களிலும் வாழ்ந்துவரும் அநேக ஜனங்களுக்கு அக்கறையூட்டுமாறு பல்வேறுபட்ட பொருள்களின்பேரில் சிந்திக்கிறது. விளக்கப்படங்களும் விரிவுரைகளும் பயனார்ந்த உதவிகளாயிருக்கின்றன. இந்தப் புத்தகம் இருதயத்தைக் கவருவதாயிருக்கிறது. ஜனங்கள் தீர்மானங்களை எடுப்பதற்கான அவசியத்தை காண்பதற்கும் உதவுகிறது, ஆம், தங்களுடைய நம்பிக்கைகளையும், நடத்தையையும், மனப்பான்மையையும், வாழ்க்கைமுறையையும் மாற்றிக்கொள்ள அவர்களுக்கு உதவுகிறது. என்றும் வாழலாம் புத்தகத்திலுள்ள விஷயங்களை முற்றிலுமாக தெரிந்துவைத்திருப்பது பல்வேறுபட்ட பொருள்களின்பேரில் நாம் ஜனங்களோடு பலன்தரும் விதத்தில் சம்பாஷிக்க உதவிசெய்யும். வீட்டுக்காரர் எந்தளவுக்கு அக்கறையுடையவராயிருக்கிறார் என்பதைப் பகுத்துணர்ந்துகொள்ள நமக்கு இது உதவிசெய்யும்.
4 நாம் ஊழியத்தை பயன்தரும் முறையில் செய்வதற்கு, தனிப்பட்ட அக்கறையை காட்டுவது அவசியம். (பிலிப். 2:4) சம்பாஷணை, அந்த நபரையும் அவருடைய தேவைகளையும் உட்படுத்துகிற ராஜ்ய பொருள் ஒன்றன்பேரில் ஊன்றவைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அவர் என்ன நினைக்கிறார் என்பதை மனம்விட்டுச் சொல்வதற்கு அவரிடம் பொருத்தமான கேள்விகளை கேட்டு அவருடைய எண்ணத்தை அறிந்துகொள்ளப்பாருங்கள். அவர் கொடுக்கும் பதில்களுக்கு கவனமாய் செவிகொடுத்து கேளுங்கள். ஒருவேளை அவர் எந்தப் பொருளின்பேரில் அக்கறையுடையவராயிருக்கிறார் என்பதை நீங்கள் பகுத்துணர்ந்துகொள்ள அவர் சொல்லும் காரியங்கள் உங்களுக்கு உதவக்கூடும். ஜனங்கள் ராஜ்ய செய்தியை மதித்துப்போற்ற நாம் அவர்களுக்கு உதவிசெய்யவும் அதைக் குறித்து இன்னுமதிகமாக அறிந்துகொள்வது எவ்வாறென அவர்களுக்குக் காட்டவும் விரும்புகிறோம். ஒரு தம்பதிகள், தங்களைச் சந்தித்த ஒரு சகோதரர் உண்மையான தனிப்பட்ட அக்கறையைத் தங்களிடம் காட்டினதினிமித்தமே தாங்கள் பைபிள் படிப்பை ஒப்புக்கொண்டதாகக் கூறினர்.
5 அடிக்கடி வேலைசெய்த பிராந்தியத்தில்: அடிக்கடி வேலைசெய்த பிராந்தியத்தில் சென்று ஊழியஞ்செய்வதற்கு திறமையை வளர்த்துகொள்வது விசேஷமாய் முக்கியமாயிருக்கிறது. மிகவும் பலன்தரும் முறையில் ஊழியஞ்செய்வது நம் பிராந்தியத்தை விரிவாக்க உதவுவதாயிருக்கும். (w88 7/15 பக். 15-20, ஆங்கிலம்) நாம் முந்தி ஒருபோதும் அந்த வீட்டை சந்தித்ததில்லை என்பதுபோல் நடிப்பதற்கு பதிலாக வீட்டுக்காரர் முன்பு காட்டின மனப்பான்மையை ஒப்புக்கொண்டு அதை நமக்கு ஆதரவாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் முன்பு வந்துசந்தித்ததைக் குறிப்பாகத் தெரிவித்து பிறகு முந்தி சொல்லப்பட்ட காரியங்களின்பேரில் நாம் இன்னும் கூடுதலாக பேசலாம். பிராந்தியத்தின் தேவைகளுக்கேற்ப நம் ராஜ்ய ஊழியத்தின் பழைய பிரதிகளில் கொடுக்கப்பட்டிருந்த பிரசங்கங்களையும், நியாயங்காட்டிப் பேசுதல்-ல் கொடுக்கப்பட்டிருப்பவற்றையும் மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
6 ராஜ்ய ஆசீர்வாதங்களிலிருந்து இன்னுமதிகமான ஜனங்கள் பயன்பெற யெகோவா பொறுமையுடன் கதவை திறந்துவைத்துள்ளார். இயேசு ஜனங்களிடம் அன்பை காட்டியதன் காரணமாக அவருடைய ஊழியம் பலனுள்ளதாயிருந்தது. (மாற்கு 6:34) அவருடைய முன்மாதிரியை பின்பற்றுவதற்கு நம்மால் ஆனதையெல்லாம் செய்கிறோமா? (1 பேதுரு 2:21) வீட்டுக்கு வீடு ஊழியத்தில் முழுமையாகவும் பலன்தரும் முறையிலும் பங்குக்கொள்வதிலிருந்து நாம் பின்வாங்காதிருப்போமாக.—2 தீமோ. 4:5.