அது பலனளித்தால், அதைப் பயன்படுத்துங்கள்!
1 ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு, நம் ராஜ்ய ஊழியம் நமக்கு வெவ்வேறு பிரசங்கங்களை தொடர்ந்து ஆலோசனையாக அளித்துவருகிறது. இது, ராஜ்ய செய்தியில் அக்கறையை வளர்ப்பது எவ்வாறு என்பதன்பேரில் புதிய கருத்துக்களை நமக்கு வழங்குகிறது. நீங்கள் ஒவ்வொரு மாதமும் இந்தப் பிரசங்கங்களில் ஏதாவதொன்றையோ சிலவற்றையோ கற்றுக்கொள்ள ஒருவேளை முயற்சித்துவரலாம். என்றாலும், இவற்றில் ஒன்றை சில தடவை பயன்படுத்துவதற்குள்ளாகவே, நம் ராஜ்ய ஊழியத்தின் புதிய பிரதியில் புதிய பிரசங்கங்கள் வந்துவிடுகின்றனவே என சில பிரஸ்தாபிகள் நினைக்கலாம். ஒரு பிரசங்கத்தை அளிப்பதில் சரளமாவதற்குமுன் மற்றொரு புதிய பிரசங்கத்தை கற்றுக்கொள்வதென்பது, எல்லாராலும் செய்ய முடியாத ஒன்று என்பது ஒப்புக்கொள்ள வேண்டியதே.
2 ஆயிரக்கணக்கான பயனியர்களும் மற்ற பிரஸ்தாபிகளும் வெளி ஊழியத்தில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. மேலும், அநேக சபைகள் அவற்றின் பிராந்தியம் முழுவதையும் ஒருசில வாரங்களுக்குள்ளாகவே மீண்டும் மீண்டும் செய்து முடிக்கின்றன. இந்தச் சூழ்நிலைகளில், செய்தியை அளிப்பதில் புதிய அணுகுமுறைகளையும் கருத்துக்களையும் பிரஸ்தாபிகள் வரவேற்கின்றனர். திறமைகளை முன்னேற்றுவிக்க இது அவர்களுக்கு உதவுகிறது. மேலும் இது அவர்களது ஊழியத்தை அதிக ஆர்வமிக்கதாயும் பலனளிப்பதாயும் ஆக்குகிறது; அவர்கள் எதிர்ப்படும் சவால்களை சமாளிப்பதற்கும் அது உதவுகிறது.
3 சூழ்நிலை என்னவாயிருந்தாலும், ஆர்வத்தைத் தூண்டும் ஒரு திறம்பட்ட பிரசங்கத்தை நீங்கள் தயாரித்திருந்தால், எந்தத் தயக்கமுமில்லாமல் அதைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள்! பலன் தரும் ஒரு திறம்பட்ட பிரசங்கத்தை, பயன்படுத்தாமல் இருக்க வேண்டியதில்லை. அந்த மாதத்திற்குரிய பிரசுர அளிப்பிற்கு ஏற்றவாறு அதை வெறுமனே சற்று மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்படும் ஆலோசனைகளை நீங்கள் படிக்கையில், உங்கள் பிரசங்கத்தில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஆர்வமிக்க குறிப்புகள் எவையேனும் இருக்கின்றனவா என பாருங்கள்.
4 ஆகவே நம் ராஜ்ய ஊழியத்தின் ஒரு புதிய பிரதியை நீங்கள் பெற்றுக்கொள்கையில், அதில் கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்கள் வெறும் ஆலோசனைகளே என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை நீங்கள் பயன்படுத்தினால் நல்லதே. ஆனால் உங்கள் பிராந்தியத்தில் ஒரு பிரசங்கம் ஏற்கெனவே பலனளித்துவருகிறது என நீங்கள் கண்டால், அதையே பயன்படுத்துங்கள்! நல்ல விதத்தில் ‘உங்கள் ஊழியத்தை முழுவதும் நிறைவேற்றுவதே’ முக்கியம்; அதாவது, தகுதிவாய்ந்தவர்களைக் கண்டுபிடித்து, சீஷர்களாவதற்கு அவர்களுக்கு உதவுவதே முக்கியம். —2 தீ. 4:5, திருத்திய மொழிபெயர்ப்பு.