மாதிரி பிரசங்கங்களைப் பயன்படுத்தும் விதம்
1 நம் பத்திரிகைகளையும் பிற பிரசுரங்களையும் அளிப்பதற்கு மாதிரி பிரசங்கங்கள் நம் ராஜ்ய ஊழிய இதழில் தவறாமல் இடம்பெறுகின்றன. ஊழியத்தில் பேசும்போது, அந்தப் பிரசங்கங்களை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டியதில்லை. நாம் என்ன சொல்லலாம் என்பதற்கான ஓர் ஐடியாவைத்தான் அவை தருகின்றன. பொதுவாக அந்தப் பிரசங்கங்களை நம் சொந்த வார்த்தைகளில் சொல்லும்போதே இன்னும் நல்ல பலன்களைப் பெற முடிகிறது. நாம் இயல்பாகப் பேசும்போது வீட்டுக்காரர் சௌவுகரியமாக உணருவார்; அத்துடன் அது நம் உண்மையான அக்கறையையும் உறுதியான நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.—2 கொ. 2:17; 1 தெ. 1:5.
2 சந்தர்ப்பத்திற்கேற்ப மாற்றியமையுங்கள்: நாம் உள்ளூர்ப் பழக்கவழக்கங்களையும் மனதில் வைத்து நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டியுள்ளது. வீட்டுக்காரரைச் சந்திக்கையில் வாழ்த்துப் பரிமாற்றம் செய்துவிட்டு பின்னர் உரையாடலைத் தொடங்கி விஷயத்திற்கு வருகிறீர்களா, அல்லது நேரடியாக விஷயத்தைச் சொல்லும்படி உங்கள் பிராந்தியத்தில் உள்ளவர்கள் எதிர்பார்க்கிறார்களா? இந்தப் பழக்கம் இடத்திற்கு இடம் வேறுபடலாம்; சிலசமயங்களில் ஆளுக்கு ஆள்கூட வேறுபடலாம். கேள்விகளைக் கேட்கும்போதும் பகுத்துணர்வு அவசியம். சில இடங்களில் பொருத்தமானவையாய் இருக்கும் கேள்விகள் பிற இடங்களில் வீட்டுக்காரரை தர்மசங்கடப்படுத்தி விடலாம். எனவே இவ்விஷயத்தில் ஞானமாய் தீர்மானித்து, உள்ளூர்ப் பழக்கங்களுக்கு ஏற்ப பிரசங்கத்தை மாற்றியமைக்க வேண்டும்.
3 அதுமட்டுமல்ல, வெளி ஊழியத்திற்காகத் தயாரிக்கையில், நம் பிராந்தியத்திலுள்ள மக்களின் பின்னணியையும் சிந்தனையையும்கூட மனதில் வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, மத்தேயு 6:9, 10-ஐக் கலந்து பேசப் போவதாக வைத்துக்கொள்ளுங்கள்; “பரமண்டல” ஜெபத்தைப் பற்றி கேள்விப்படாத ஒரு நபரிடம் ஒரு விதமாக பேச வேண்டியிருக்கும், அதே சமயம் தீவிர கத்தோலிக்கராக இருக்கும் ஒருவரிடம் வேறு விதமாக பேச வேண்டியிருக்கும். சற்றே முன்யோசனையுடன், ஊழியத்தில் சந்திக்கும் ஆட்களிடம் இன்னும் ஏற்கத் தகுந்த விதத்தில் பேசுவதற்குப் பெரும்பாலும் நம் பிரசங்கங்களை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.—1 கொ. 9:20-23.
4 கிட்டத்தட்ட மாதிரி பிரசங்கத்தில் உள்ளவாறே பேசப்போவதாக இருந்தாலும்கூட, நல்ல தயாரிப்புக்கு நிகர் ஏதுமில்லை. நாம் காட்ட நினைத்துள்ள கட்டுரையை அல்லது அதிகாரத்தைக் கவனமாய் வாசிக்க வேண்டும்; அதில் ஆர்வத்தைத் தூண்டும் குறிப்புகளைத் தேட வேண்டும். இவற்றை நம் பிரசங்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நம் பிரசுரங்களிலுள்ள முத்தான தகவலை நன்கு தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே உற்சாகத்துடன் பேசி அவற்றை அளிக்க முடியும்.
5 வேறு விதங்களில் பேசுதல்: மாதிரி பிரசங்கங்களைத்தான் நாம் உபயோகிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதாவது இருக்கிறதா? இல்லை. வேறு விதத்தில் பேசுவது அல்லது வேறொரு வசனத்தைப் பயன்படுத்துவது உங்களுக்குச் சுலபமாக இருக்குமென்றால், அப்படியும் செய்யலாம். முக்கியமாக, பத்திரிகைகளை அளிக்கையில், உங்கள் பிராந்தியத்தில் உள்ளவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு அட்டைப்படக் கட்டுரை தவிர பிற கட்டுரைகளையும் சிறப்பித்துக் காட்டலாம். வெளி ஊழியத்தில் பயன்படுத்தும் மாதிரி பிரசங்கங்களை ஊழியக் கூட்டத்தில் நடித்துக் காட்டுகையில் சபைக்குரிய பிராந்தியத்தில் பலன் தருகிற பொருத்தமான பிரசங்கங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இது நற்செய்தியைத் திறம்பட்ட விதத்தில் பேசுவதற்கு எல்லாருக்குமே உதவியாய் இருக்கலாம்.
[கேள்விகள்]
1. மாதிரியாக கொடுக்கப்படும் பிரசங்கங்களை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும்?
2. பிரசங்கங்களைத் தயாரிக்கையில் உள்ளூர்ப் பழக்கவழக்கங்களையும் ஏன் மனதில் வைத்திருக்க வேண்டும்?
3. நாம் சந்திக்கும் ஆட்களின் பின்னணியையும் சிந்தனையையும் ஏன் மனதில் வைத்திருக்க வேண்டும்?
4. ஏன் நல்ல தயாரிப்பு அவசியம்?
5. வேறு பிரசங்கங்களையும் ஏன் தயாரிக்கலாம், இதை எப்படிச் செய்யலாம்?