சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுக்கும் பத்திரிகைகளை அளியுங்கள்
1 காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது பத்திரிகையும் அதன் துணைப் பத்திரிகையான விழுத்தெழு!வும் ராஜ்ய பிரசங்கிப்பு வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. (மத். 24:14; 28:19, 20) ராஜ்ய சேவையின் வெவ்வேறு அம்சங்களில் ஈடுபடுகையில் காலத்திற்கேற்ற இந்தப் பத்திரிகைகளை மக்களுக்குத் தொடர்ந்து அளித்து வருவதில் நாம் சந்தோஷப்படுகிறோம்.
2 கடந்துபோன வருடங்களில் இந்தப் பத்திரிகைகளின் அளவு, உள்ளடக்கம், வினியோகிக்கும் விதம் ஆகியவற்றில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். பத்திரிகைகள், சுவாரஸ்யமாகவும் பயனளிப்பவையாகவும் இருந்தால்தான் ராஜ்ய செய்தி பல வகையான மக்களின் இருதயத்தையும் தொடும். அப்போதுதான், ‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட்டு, சத்தியத்தை அறிகிற அறிவை அடைய’ அது உதவும். இந்தக் காரணத்திற்காகவே மேற்சொன்ன மாற்றங்கள் பத்திரிகைகளில் செய்யப்பட்டிருக்கின்றன.—1 தீ. 2:4.
3 ஜூலை 2000 முதல், மாதத்திற்கு ஒரே ஒரு முறை வரும் விழித்தெழு!-வை வெவ்வேறு விதங்களில் திறம்பட பேசி அளிப்பதற்கு நாம் பழகிவிட்டோம். அதேபோல், காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது பத்திரிகையின் காலாண்டு இதழைப் பொருத்தவரையிலும் அதையே செய்வோமாக. ஒவ்வொரு பத்திரிகையையும் எப்படி அளிக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனை நம் ராஜ்ய ஊழியத்தின் கடைசி பக்கத்தில் வருகிறது. இந்தப் பகுதியில் பொதுவாக, பத்திரிகையின் ஆரம்ப கட்டுரைகளில் ஏதேனும் ஒன்று சிறப்பித்துக் காட்டப்படும். சில சமயங்களில், மக்களை அதிகம் கவருகிற மற்ற கட்டுரைகளும் சிறப்பித்துக் காட்டப்படும். நம் ராஜ்ய ஊழியத்தில் அளிக்கப்படும் ஆலோசனைகளை சிறந்த விதத்தில் நாம் பயன்படுத்த வேண்டுமென்றால், சிறப்பித்துக் காட்டப்படும் கட்டுரையை நாம் முதலில் நன்றாகப் படித்திருக்க வேண்டும்; பிறகு, நம் பிராந்தியத்திற்கு பொருந்தும் விதத்தில் நம் அணுகுமுறையை மாற்றி, சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி அந்தப் பத்திரிகையை அளிக்க வேண்டும்.
4 நம் ராஜ்ய ஊழியத்தில் ஒவ்வொரு பத்திரிகையை அளிப்பதற்கும் ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் நீங்கள் வேறு ஏதாவது அணுகுமுறையையும் பயன்படுத்தலாம். ஏனென்றால், அதே பத்திரிகையில் உள்ள வேறு ஏதாவது ஒரு கட்டுரை உங்களுடைய பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருக்கலாம். அல்லது, உங்களுக்குப் பிடித்த வேறு ஏதாவது ஒரு கட்டுரையைப் பயன்படுத்தி இன்னும் சிறந்த விதத்தில் பத்திரிகையை அளிக்க முடியும் என்று நீங்கள் யோசிக்கலாம்.
5 பத்திரிகையை அளிக்க எவ்வாறு தயாரிப்பது: முதல்படியாக, நீங்கள் அறிமுகப்படுத்த நினைக்கும் கட்டுரையை நீங்கள் முழுவதுமாகப் படித்திருக்க வேண்டும். ஒரு பத்திரிகையை வெளி ஊழியத்தில் அளிப்பதற்குமுன் அந்தப் பத்திரிகையில் உள்ள எல்லா கட்டுரைகளையும் உங்களால் படிக்க முடியாமல் போகலாம். இருந்தாலும், நீங்கள் எந்தக் கட்டுரைகளை அறிமுகப்படுத்த விரும்புகிறீர்களோ அவற்றை உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் அளிக்க வேண்டும். நீங்கள் பேசப்போகும் விஷயத்தைப்பற்றி நன்றாக அறிந்திருந்தால்தான் அவ்வாறு செய்ய முடியும்.
6 அடுத்ததாக, சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள உதவும் ஆரம்ப வார்த்தைகளை தயார் செய்யுங்கள். கட்டுரையுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட, ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வியைக் கேட்டு உரையாடலை ஆரம்பிக்கலாம். மக்களின் மனதைத் தொடுவதற்கு, எப்போதும் கடவுளுடைய வார்த்தையின் வல்லமையை சார்ந்திருங்கள். (எபி. 4:12) நீங்கள் பேசப்போகும் விஷயத்துக்குப் பொருத்தமான ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள். அந்த வசனம் நீங்கள் அறிமுகப்படுத்தப்போகும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தால் அல்லது மேற்கோள் காட்டப்பட்டிருந்தால் நன்றாக இருக்கும். இப்போது, வசனத்தையும் கட்டுரையையும் எப்படி இணைக்கலாம் என்பதைக் குறித்து யோசியுங்கள்.
7 சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம்: ஓர் அணுகுமுறை பயனளிக்கும் விதத்தில் அமைய வேண்டுமென்றால், அதைப் பயன்படுத்த வேண்டும். சனிக்கிழமையில் சபையுடன் சேர்ந்து பத்திரிகை ஊழியத்தில் ஈடுபடுங்கள். ஏற்கெனவே மற்ற பிரசுரங்களை ஏற்றுக்கொண்டவர்களிடம் பத்திரிகைகளை அளியுங்கள். நீங்கள் பைபிள் படிப்பு நடத்தும் மாணாக்கர்களிடம் எப்போதும் பத்திரிகைகளை அளியுங்கள்; நீங்கள் மறுசந்திப்புக்குச் செல்கையில் அங்கு வேறு யாராவது இருந்தால், அவர்களிடமும் பத்திரிகைகளை அளியுங்கள். நீங்கள் கடைக்குச் செல்கையில், பயணம் செய்கையில், அல்லது மருத்துவ மனையில் மருத்துவருக்காக காத்திருக்கையில் அங்குள்ள மக்களிடம் பேசி பத்திரிகைகளை அளிக்கலாம். அந்த மாதம் முழுவதும் உங்களுடைய அணுகுமுறைகளை வெவ்வேறு விதங்களில் சொல்லி இன்னும் சிறப்பாக ஆக்க முயலுங்கள்.
8 காவற்கோபுர, விழித்தெழு! பத்திரிகைகள் தனித்தன்மை வாய்ந்தவை. யெகோவாவே உன்னத பேரரசர் என்று அவை அறிவிக்கின்றன. (அப். 4:24) கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அளித்து, மக்கள் மனதை ஆறுதல்படுத்துகின்றன, அதோடு, இயேசு கிறிஸ்துமீது விசுவாசத்தை வளர்க்கவும் உதவுகின்றன. (மத். 24:14; அப். 10:43) அதுமட்டுமல்ல, பைபிள் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுகிற உலக சம்பவங்களையும் அவை கவனமாய் ஆராய்கின்றன. (மத். 25:13) உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பத்திரிகைகளைக் கொடுக்க தயாராய் இருப்பதன்மூலம், உங்கள் பிராந்தியத்திலுள்ள மக்கள் இந்தப் பத்திரிகைகளைப் படித்து பயனடைய உதவுங்கள்!
9 யாரிடமாவது பத்திரிகையை அளித்திருக்கிறீர்கள் என்றால் அல்லது யாரிடமாவது ஆன்மீக விஷயங்களைக் குறித்து சாதாரணமாக பேசியிருக்கிறீர்கள் என்றால் அவர்களிடம் ஒரு கேள்வியையோ சிந்தனையைத் தூண்டும் வேறெதாவது ஒரு விஷயத்தையோ சொல்லுங்கள். இப்படிச் செய்வதன்மூலம் மறுசந்திப்புக்கு நீங்கள் அடித்தளம் போடுகிறீர்கள். இன்னொரு முறை அந்த நபரிடம் ஆன்மீக விஷயங்களைக் குறித்து பேச வழிவகுக்கிறீர்கள். சத்தியத்தின் விதைகளை விதைப்பதில் நாம் மும்முரமாக ஈடுபட்டால், யெகோவாவை அறிந்துகொண்டு அவரை சேவிக்க உண்மையாய் விரும்புகிற ஆட்களின் மனதை அவர் நிச்சயம் திறப்பார் என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம்.—1 கொ. 3:6.
[கேள்விகள்]
1. காவற்கோபுர, விழித்தெழு! பத்திரிகைகள் என்ன பங்கு வகிக்கின்றன?
2. காவற்கோபுர, விழித்தெழு! பத்திரிகைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன, ஏன்?
3. ஊழியத்தில் இந்தப் பத்திரிகைகள் எவ்வாறு பயன்படுத்தப்படும்?
4. நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் போக மற்ற அணுகுமுறைகளைப் பயன்படுத்துவது ஏன் பயனுள்ளதாக இருக்கலாம்?
5. ஒரு பத்திரிகையை அளிப்பதற்குத் தயாரிக்கும் முன் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
6. நம்முடைய சொந்த அணுகுமுறைகளை எப்படித் தயாரிக்கலாம்?
7. நம்முடைய அணுகுமுறையை இன்னும் எப்படிச் சிறப்பாக்கலாம்?
8. காவற்கோபுர விழித்தெழு! பத்திரிகைகள் எவ்விதங்களில் தனித்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன?
9. மறுசந்திப்புக்கு நாம் எவ்வாறு அடித்தளம் போடலாம்?