உங்களுடைய பிள்ளைகள் பிரஸ்தாபிகளா?
1 நம்முடைய சபைகளுடன் கூட்டுறவுகொண்டு யெகோவாவைத் துதிப்பவர்களாய் ஆகிவருகிற அநேக பிள்ளைகளில் நாங்கள் அக்கறைகொள்கிறோம். உங்களுடைய பிள்ளைகளுக்கும் அந்த விருப்பம் இருக்கிறதா? அப்படியென்றால், படிப்படியான மற்றும் நடைமுறையான பயிற்றுவிப்பை உடனடியாக ஆரம்பிப்பது அவசியம். நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்வதற்கும் முயன்று பெறுவதற்கும் மிகச் சிறந்த காலம், ஒருவர் இளம்பருவத்தினராய் இருக்கும்போதேயாகும்.
2 வீட்டில் உங்களுடைய பிள்ளைகளின் நடத்தையும் பழக்கங்களும் யாவை? பிள்ளைகள் தங்களுடைய பெற்றோருக்கு கீழ்ப்படிகிறார்கள் என்றால், அவர்கள் சபையின் மற்ற அங்கத்தினர்களுக்கும் தங்கள் பள்ளி ஆசிரியர்களுக்குங்கூட மரியாதை காட்டுவார்கள். உங்களுடைய பிள்ளைகள் தங்களுடைய உடமைகளையும் அறைகளையும் நேர்த்தியாக வைத்து, பொருட்களை கவனித்துப்பேணுகிறார்களா? இதன் சம்பந்தமாக பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்கள் இருந்தால், வெளி ஊழியத்தில் இருக்கும்போது, யெகோவா தேவனைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஓர் ஊழியராக மற்றவர்களுடைய உடமைகளுக்கும் சொத்துக்கும் நன்மதிப்புக் காண்பித்து, ஒரு முன்மாதிரியான முறையில் தங்களை நடத்திக்கொள்வார்கள்.
3 உங்களுடைய பிள்ளைகள் ஊழியஞ்செய்யும் ஆவியைக் கொண்டிருக்க ஆரம்பிக்கும்போது, தயக்கமில்லாமல், தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்துகொள்ளும்படி அவர்களை ஊக்கப்படுத்துங்கள். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்துகொள்வதற்கு, ஒரு குறிப்பிட்ட வயதை அடையவேண்டிய அவசியமில்லை; ஆனால் அன்றாடக நல்ல பழக்கங்களாலும் ஒரு பிரஸ்தாபியாக ஆவதற்கான ஆசையினாலும் ஆதரிக்கப்பட்ட முன்மாதிரியான நடத்தையைக் கொண்டிருப்பது அவசியம். பள்ளிக் கண்காணி வெறுமனே பிள்ளையினுடைய பைபிள் வாசிப்பிலும் பேச்சிலுமே அக்கறைகொள்ளமாட்டார்; ஆனால் ஒரு பிரஸ்தாபியாக ஆவதற்கான இலக்கைப்பற்றி பெற்றோர், பிள்ளை ஆகிய இருவரிடத்திலும் ஆரம்பத்திலேயே அவர் பேசியிருந்தாராகில் நல்லது.
4 உங்களுடைய பிள்ளைகளை ஊழியத்திற்கு உங்களோடு வெளியே கூட்டிச்செல்கையில், ஒன்றுசேர்ந்து ஊழிய இலக்கை வையுங்கள்; மேலும் ஒன்றுசேர்ந்து தயாரிப்பதன்மூலமும் பழகிக்கொள்வதன்மூலமும் ஊழியத்தில் அவர்களுடைய திறமையை முன்னேற்றுவிப்பதை இலக்காகக் கொள்ளுங்கள். உங்களுடைய பிள்ளையின் திறமைக்கும் வெளி ஊழியத்திலுள்ள சூழ்நிலைமைக்கும் ஏற்றவாறு, வீட்டுக்காரர் சொல்வதைச் செவிகொடுத்துக் கேட்பது, வசனங்களை வாசிக்கையில் அவர்களுடைய இருதயத்தை ஊன்றவைப்பது, துண்டுப்பிரதிகளிலிருந்து ஓர் எளிமையான சாட்சிகொடுப்பது போன்ற இத்தகைய தனிப்பட்ட இலக்குகளை முயன்றடைவதற்கு உழையுங்கள். அதோடுகூட, வீடுகளில் சந்திக்கிற மக்கள் அனைவரிலும் தனிப்பட்ட அக்கறைகொள்வதற்கு உங்களுடைய பிள்ளைகளுக்கு நீங்கள் கற்பிக்கலாம். கனிவு, அன்பு, மற்றும் மனத்தாழ்மையைக் காட்டுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி நீங்கள் அவர்களிடம் பேசுவீர்களானால், அவர்களைச் சிலர் வெறுப்புடன் ஒதுக்கிவிடுகிறபோதிலுங்கூட, அவர்களுடைய சோர்வை மிகக் குறைந்தளவு வைத்துக்கொள்ள அது உதவிசெய்யும். உங்களுடைய பிள்ளைகள் வார இறுதி நாட்களில் ஊழியத்தில் பங்குகொள்வார்களாகில், தங்களுடைய பெற்றோருடன் மட்டுமே ஊழியம் செய்வதற்குப் பதிலாக, முதிர்ச்சியுள்ள பிரஸ்தாபிகளுடனும் மூப்பர்களுடனும் செய்வதன் மூலமும் அவர்கள் இன்னும் நல்ல பயிற்றுவிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.—1 கொ. 4:17.
5 உங்களுடைய பிள்ளைகள் தங்களுடைய சொந்த எண்ணங்களைத் தங்களுடைய சொந்த வார்த்தைகளில் தெரிவிக்கக்கூடுமாகில், அது மிகுதியான பலனளிப்பதாய் இருக்கிறது; மேலும் வீட்டுக்காரருடைய இருதயத்தைத் தூண்டுவிக்கும். அவர்கள் அனுபவத்தைப் பெறுகையில், முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவர்களாக ஆவதற்கும் சுறுசுறுப்பான மற்றும் சந்தோஷமான பிரஸ்தாபிகளாய் இருப்பதற்கும் ஊக்கமூட்டுங்கள். (1 கொ. 14:20) வெறுமனே ஓர் ஒழுங்கான பிரஸ்தாபியாக இருப்பதற்குப் பதிலாக, அவர்கள் மறு சந்திப்புகள் செய்து வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை நடத்தும் இலக்கை வைக்கலாம். அதோடுகூட, யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து வேலைசெய்வதன் சந்தோஷத்தை ருசித்துப்பார்ப்பதற்கு அவர்களுக்கு உதவிசெய்யுங்கள். தகவல் பலகை மற்றும் ஊழியக் கூட்ட அறிவிப்புகளுக்குக் கவனஞ்செலுத்துவதன் மூலம் சபையோடு எவ்வாறு ஒத்துழைப்பது என்பதை அவர்களுக்குக் கற்பியுங்கள். சகோதரர்களிடமிருந்து அவர்கள் பெறுகிற எந்த வேலை நியமிப்பையும் மனப்பூர்வமாகச் செய்வதற்கு உற்சாகப்படுத்துவதும் நல்லது.
6 உங்களுடைய பிள்ளைகள் யெகோவாவைத் துதிப்பவர்களாய் ஆகிய பிறகு இதுவரை அவர்கள் உருவாக்கியிருக்கிற நல்ல பதிவு கறைபடாதபடிக்கு, எழும்பக்கூடிய ஒழுக்கச் சம்பந்தமான எந்தப் பிரச்னைகளுக்கும் நன்கு கவனஞ்செலுத்துங்கள்; மேலும் அவர்கள் தொடர்ந்து தேவனுக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்ள உற்சாகப்படுத்துங்கள்.—2 தீ. 2:22.