வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை நடத்துதல்
1 பலன்தரத்தக்க வீட்டு பைபிள் படிப்பு ஒன்று எவ்வாறு நடத்தப்படுகிறது? என்ன அடிப்படை முன்மாதிரியை நாம் கொண்டிருக்கிறோம்? படிப்புக் கட்டுரையிலுள்ள வசனங்களை எவ்வாறு கலந்தாலோசிக்கலாம்? பாராக்களை யார் வாசிக்கவேண்டும்? ஒரு படிப்பை நடத்துவதற்கான அடிப்படை செயல்முறையோடுகூட, மாணாக்கர் சத்தியத்தைத் தனதாக்கிக்கொள்ள உதவிசெய்வதற்கு இன்னும் என்ன தேவைப்படுகிறது? தவிர்க்கவேண்டிய படுகுழிகள் யாவை?
2 ஒரு படிப்பை எவ்வாறு நடத்துவது: பொதுவாகச் சொல்லப்போனால், வீட்டு பைபிள் படிப்பு காவற்கோபுர படிப்பு மாதிரியை வழிகாட்டியாகக் கொள்கிறது. முதலாவது, கலந்தாலோசிக்கப்படவேண்டிய பாரா வாசிக்கப்படுகிறது. பிறகு படிப்பு நடத்துபவர் அந்தப் பாராவின்பேரில் அச்சடிக்கப்பட்ட கேள்வியைக் கேட்டு, மாணாக்கர் பதிலளிக்கும்படி அனுமதிக்கிறார். மாணாக்கர் தயங்குவாரானால், பேச்சுப்பொருள் விஷயத்தின்பேரில் பகுத்தறிவைப் பயன்படுத்திச் சரியான முடிவுக்கு வருவதற்கு மாணாக்கரைத் தூண்டுவிக்கத்தக்க வழிநடத்தும் கேள்விகளைக் கேட்க நடத்துபவர் தயாராய் இருக்கவேண்டும்.
3 பாராவிலுள்ள பொருளுக்கு வசனங்கள் எவ்வாறு பொருந்துகின்றன என்பதைக் கவனியுங்கள். மேற்கோள் காட்டப்பட்டுள்ள வசனங்களை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது என்பதை மாணாக்கருக்குக் காண்பித்து, அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதை அவருக்கு நியாயங்காட்டிப் பேசுங்கள். வசனங்கள் இடக்குறிப்புக் கொடுக்கப்பட்டு மேற்கோள் காட்டப்படாமல் இருக்குமாகில், அவை மிக நீளமானதாக இல்லாதிருந்தால், பைபிளில் அவற்றை எடுத்துப்பார்ப்பது நல்லது. பின்பு மாணாக்கர் அவற்றை வாசித்து, பாராவில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவை எவ்வாறு ஆதரிக்கின்றன அல்லது தெளிவாக்குகின்றன என்பதன்பேரில் குறிப்புச்சொல்ல அனுமதியுங்கள்.
4 மாணாக்கர் சத்தியத்தைத் தனதாக்கிக்கொள்ள உதவுங்கள்: படிப்புக்காக நன்கு தயார்செய்ய மாணாக்கர்களை உற்சாகப்படுத்துங்கள். கற்றுக்கொள்ளவதற்கு வாசிப்பது இன்றியமையாதது என்பதை வலியுறுத்துங்கள். மாணாக்கர் எந்தளவுக்குப் படிப்புப் பொருளை வாசித்து அதன்பேரில் தியானிக்கிறாரோ, அந்தளவுக்கு நல்லது. நடத்துபவர்கள் சிலர் பைபிள் படிப்பின்போது அனைத்து பாராக்களையும் மாணாக்கர் வாசிக்கும்படி சொல்லுகிறார்கள். வேறுசிலர் பாராக்களை வாசிப்பதில் மாணாக்கரோடு மாறி மாறிச் செய்கிறார்கள். மாணாக்கரின் ஆவிக்குரிய முன்னேற்றத்தை மனதிற்கொண்டு நல்ல நிதானிப்பைச் செய்யவேண்டும்.
5 படிப்புப் பொருளை வகுப்புப்பாட முறையில் படித்துமுடிப்பது, மாணாக்கர் அறிவைப் பெற உதவக்கூடும்; ஆனால் கற்றுக்கொண்டுவருவதை அவர் நம்புகிறாரா? அவர் சத்தியத்தைத் தனதாக்கிக்கொள்ள வேண்டுமாகில், தனிப்பட்ட விதமாக பொருள் எவ்வாறு அவரைப் பாதிக்கிறது என்பதை அவர் காணவேண்டும். கற்றுக்கொண்டுவருவதைக் குறித்து அவர் எவ்வாறு உணருகிறார்? கற்றிருப்பதை அவர் எவ்வாறு பயன்படுத்த முடியும்? மாணாக்கரின் இருதயத்தைச் சென்றெட்ட அலசி ஆராயக்கூடிய கேள்விகளைப் பயன்படுத்துங்கள்.
6 படுகுழிகளைத் தவிருங்கள்: பைபிள் படிப்பு ஒன்றை நடத்துகையில் தவிர்க்கவேண்டிய படுகுழிகள் இருக்கின்றன. கலந்தாலோசிக்கப்படுகிற விஷயத்துக்குச் சம்பந்தமில்லாத பொருள்கள் வரும்போது, சாதாரணமாக அவற்றைப் படிப்பின் முடிவிலோ மற்றொரு சமயத்திலோ கலந்தாலோசிப்பது மிகச் சிறந்தது. அதோடுகூட, பதில்களைப் புத்தகத்திலிருந்து மாணாக்கர் வாசிப்பதற்குப் பதிலாக, அவருடைய சொந்த வார்த்தைகளில் அவற்றைக் கொடுக்கச்சொல்வது முக்கியமானது. பொருளை மாணாக்கர் புரிந்துகொண்டிருக்கிறாரா என்பதை தீர்மானிப்பதற்கு ஒரு நடத்துபவராக உங்களுக்கு இது உதவிசெய்யும்.
7 குறைந்தபட்சம் ஒரு பைபிள் படிப்பாவது நடத்துவதை உங்களுடைய இலக்காக ஏன் வைத்துக்கொள்ளக்கூடாது? யெகோவாவில் சார்ந்திருந்து காவற்கோபுர படிப்பின் அடிப்படை செயல்முறையைப் பின்பற்றுவீர்களானால், இது ஒரு கடினமான வேலை இல்லை. மற்றவர்களுக்குச் சத்தியத்தைக் கற்பித்து சீஷராக்குவதற்கு மிகவும் பலன்தரத்தக்க வழியானது, வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை நடத்துவதாகும். இதைச் செய்வதன்மூலம், மத்தேயு 28:19, 20-லுள்ள இயேசுவின் கட்டளையை நிறைவேற்றுவதில் முழுப் பங்கைக் கொண்டிருப்பதிலிருந்து வருகின்ற சந்தோஷத்தை நீங்களும் மகிழ்ந்து அனுபவிக்கமுடியும்.