பைபிள் மாணாக்கர் தங்கள் படிப்புக்குத்தயார்செய்ய உதவுங்கள்
1 ஒவ்வொரு வாரமும் தங்கள் படிப்புக்குத் தயார்செய்கிற பைபிள் மாணாக்கர் படிப்பில் மெய்யான அக்கறையைக் காட்டுகிறார்கள், மேலும் தயார்செய்யாதவர்களைவிட சாதாரணமாக மிக விரைவான ஆவிக்குரிய வளர்ச்சியடைகிறார்கள். சில சமயங்களில் ஒரு மாணாக்கர் எவ்வாறு தயார்செய்வது என்று தெரியாததால் தயார்செய்யாமலிருக்கலாம். எவ்வாறு தயார்செய்வது என்பதைக் கற்றுக்கொடுப்பது அவசியமாக இருக்கலாம். இதை எவ்வாறு செய்யலாம்?
2 தயார்செய்வது தனிப்பட்ட படிப்பை உட்படுத்துகிறது என்பதை மாணாக்கர் புரிந்துகொள்வதை நிச்சயப்படுத்திக்கொள்ள ஆரம்பத்திலிருந்தே சிறிது நேரமெடுத்துக்கொள்ளுங்கள். அநேகருக்கு வாசிக்க முடிகிறபோதிலும், எவ்வாறு படிப்பது என்பது கற்பிக்கப்படவில்லை. தேவராஜ்ய ஊழியப்பள்ளி துணைநூலிலுள்ள (Theocratic Ministry School Guidebook) பக்கங்கள் 33-43, தேவையானபோது மாணாக்கருக்கு நீங்கள் சொல்லக்கூடிய அநேக பயனுள்ள ஆலோசனைகளை அளிக்கிறது.
3 மாணாக்கருக்கு படிப்பின் மதிப்பைக் காண்பியுங்கள்: முக்கிய வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களைக் குறித்துவைத்திருக்கிற அல்லது அடிக்கோடிட்டிருக்கிற உங்களுடைய படிப்புப் புத்தகத்தை நீங்கள் மாணாக்கருக்குக் காண்பிக்கலாம். குறித்துவைக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சிறிது கண்ணோட்டமிடுவது தன்னுடைய சொந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தி சொல்லக்கூடிய விஷயங்களை எவ்வாறு நினைப்பூட்டும் என்பதை அவர் அறிந்துகொள்ளட்டும். இதன்மூலம் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது முழுப் பகுதிகளையும் வாசிப்பதற்கு அவர் தூண்டப்படமாட்டார். இந்த நிலையில் அவருக்குத் தகுந்த பயிற்சியளிப்பது, பின்பு சபைக் கூட்டங்களில் அர்த்தமுள்ள குறிப்புகளைச் சொல்வதற்கு அவருக்கு உதவிசெய்யும். அவருடைய குறிப்புகள் கலந்தாலோசிக்கப்படுகிற விஷயத்திற்கான போற்றுதலையும் அவருடைய புரிந்துகொள்ளுதலின் ஆழத்தையும் பிரதிபலிக்கும்.
4 பைபிளைப் பயன்படுத்த அவருக்குக் கற்பியுங்கள்: படிப்புப் பொருளில் குறிக்கப்பட்டுள்ள வசனங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை மாணாக்கர் கற்றுக்கொள்வது அவசியம். இதை அவர் திறம்பட்ட விதத்தில் செய்யக்கூடியவராக இருக்கும்போது, உண்மையில் தான் ஒரு பைபிளின் மாணாக்கர் என்பதை அவர் அதிக முழுமையாக மதித்துணருவார். முதலில் அவர் பைபிளின் முற்பக்கத்திலுள்ள பைபிள் புத்தகங்களின் பட்டியலைப் பயன்படுத்துவது அவசியமாக இருந்தபோதிலும், மாணாக்கர் 66 பைபிள் புத்தகங்களின் வரிசைக்கிரமத்தோடு பழக்கப்பட்டவராக ஆகும்படி உற்சாகப்படுத்தப்படவேண்டும். அவர் ஒரு வசனத்தை எடுத்துப் பார்த்து வாசிக்கும்போது, கலந்தாலோசிக்கிற பாராவில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புக்கு ஆதரவாயுள்ள பகுதியை அடையாளங்கண்டுகொள்ளவும் தற்போதைய படிப்புக்கு நேரடியாகப் பொருந்தாத பகுதிகளினால் கவனம் சிதறாதபடிக்கும் அவருக்கு உதவிசெய்யுங்கள்.
5 மாணாக்கர் முன்னேறிவருகையில், பைபிளை ஆரம்பத்திலிருந்து முடிவுவரை வாசிக்கும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள். முழு பைபிளும் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதையும் உண்மை கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய விதமாக அதனால் போஷிக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்துங்கள்.—மத். 4:4; 2 தீ. 3:16, 17.
6 மற்ற தேவராஜ்ய தகவல் மூலங்களை அறிமுகப்படுத்துங்கள்: மாணாக்கர் போதுமானளவு முன்னேற்றமடைந்திருக்கும்போது, மற்ற தேவராஜ்ய தகவல் மூலங்களைப் பயன்படுத்த அவர் ஆரம்பிக்கலாம். அவர் சபைக் கூட்டங்களுக்கு ஆஜராகும்போது, சங்கத்தின் பிரசுரங்களிலுள்ள கூடுதலான தகவலை எடுத்துப்பார்த்து அதனுடன் அறிமுகமாகும்படிக்குப் பகுத்துணர்வோடு உற்சாகப்படுத்துங்கள். புதிய உலக மொழிபெயர்ப்பின் (New World Translation) விசேஷித்த அம்சங்களாகிய “அட்டவணையிடப்பட்ட பைபிள் வார்த்தைகள்” போன்றவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அவருக்குக் கற்றுக்கொடுங்கள். அவர் தன்னுடைய சொந்த தேவராஜ்ய நூலகத்தை உருவாக்கத் தொடங்குகையில், விரிவான சொற்தொகுதி விளக்கப்பட்டியல் (Comprehensive Concordance), வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல், அட்டவணை (Index), உட்பார்வை (Insight) தொகுதிகள் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் காண்பியுங்கள்.
7 பைபிள் படிப்புக்காக எவ்வாறு தயார்செய்வது என்பதை நாம் பைபிள் மாணாக்கருக்குக் கற்றுக்கொடுப்போமாகில், அவர்களுக்குத் தனிப்பட்ட வீட்டுப் பைபிள் படிப்பு நடத்துவது முடிவடைந்தபோதிலும்கூட, திறமையுள்ள பைபிள் மாணாக்கராக சத்தியத்தில் தொடர்ந்து முன்னேற்றமடைவதற்கு நாம் அவர்களை ஆயத்தப்படுத்துவோம்.