அறிவு புத்தகத்தை பயன்படுத்தி எவ்வாறு சீஷர்களை உண்டுபண்ணுவது
1 மற்றவர்களுக்கு சத்தியத்தைக் கற்பிப்பதும் ‘நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டிருப்போரை’ சீஷராக்குவதுமே எல்லா கிறிஸ்தவர்களுடைய விரும்பத்தக்க இலக்கு. (அப். 13:48; மத். 28:19, 20) இதைச் செய்துமுடிப்பதற்கு யெகோவாவின் அமைப்பு நம் கைகளில் ஓர் அருமையான கருவியை ஒப்படைத்திருக்கிறது—நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகம். அதன் தலைப்பு வீட்டு பைபிள் படிப்புகளின் பெரும் முக்கியத்துவத்தை சிறப்பித்துக் காண்பிக்கிறது, ஏனென்றால், ஒரே மெய்க்கடவுளாகிய யெகோவாவைப் பற்றியும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அறிவை எடுத்துக்கொள்வதன் பேரில்தானே நித்திய ஜீவன் சார்ந்துள்ளது.—யோவா. 17:3.
2 வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துவதற்கு அறிவு புத்தகம் இப்போது சங்கத்தால் பயன்படுத்தப்படும் முக்கிய பிரசுரம். அதை உபயோகித்து நாம் சத்தியத்தை எளிதாகவும், தெளிவாகவும் சுருக்கமாகவும் கற்பிக்கலாம். இது கற்பிக்கப்படுவோரின் இதயத்தை எட்டுவதற்கு உதவும். (லூக். 24:32) நடத்துபவர் நல்ல போதனா முறைகளை உபயோகிப்பதற்கான தேவை நிச்சயமாகவே உள்ளது. பலன்தருபவையாக நிரூபிக்கப்பட்டிருக்கும் போதனா முறைகளைப் பற்றிய ஆலோசனைகளையும் நினைப்பூட்டுதல்களையும் அளிப்பதற்காக இந்த உட்சேர்க்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பகுத்துணர்வோடும் தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் இங்கே அளிக்கப்பட்டிருக்கும் சில ஆலோசனைகளையோ அல்லது எல்லாவற்றையுமோ நீங்கள் படிப்படியாக பொருத்தலாம். இந்த உட்சேர்க்கையை பத்திரப்படுத்தி அவ்வப்போது எடுத்து படித்துப் பாருங்கள். சீஷர்களை உண்டுபண்ண அறிவு புத்தகத்தை உபயோகிப்பதில் மிகவும் திறம்பட்டவர்களாக இருப்பதற்கு இதிலுள்ள பல்வேறு குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.
3 படிப்படியாக முன்னேறும் வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை நடத்துங்கள்: கிறிஸ்தவ சீஷராகவும் ஆவிக்குரிய சகோதரராகவோ அல்லது சகோதரியாகவோ ஆகக்கூடிய திறன் பெற்றுள்ள ஒரு நபராகவும் கருதி மாணாக்கர் பேரில் மெய்யான தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். அன்பாகவும், சிநேகப்பான்மையாகவும், உற்சாகமாகவும் இருங்கள். நன்றாக செவிகொடுத்துக் கேட்பவராக இருப்பதன் மூலம், நீங்கள் அந்த நபரின் பின்னணி, வாழ்க்கை நிலை ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம், ஆவிக்குரியப்பிரகாரமாய் அவருக்கு எவ்வாறு சிறந்தவிதத்தில் உதவிசெய்யலாம் என்பதை கண்டுணருவதற்கு அது உங்களுக்கு உதவும். மாணாக்கருக்காக உங்களையே அளிக்க மனமுள்ளவர்களாய் இருங்கள்.—1 தெ. 2:8.
4 படிப்பை நிலைநாட்டியவுடன், அறிவு புத்தகத்திலுள்ள அதிகாரங்களை எண் வரிசையில் படிப்பது விரும்பத்தக்கது. மாணாக்கர் சத்தியத்தை படிப்படியாக விளங்கிக்கொள்வதற்கு இது அனுமதிக்கும், ஏனென்றால் இப்புத்தகம் பைபிள் பொருள்களை மிகவும் நியாயமான முறையில் ஒன்றன் பின் ஒன்றாக விளக்குகிறது. படிப்பை எளிமையானதாகவும் ஆர்வத்துக்குரியதாகவும் வையுங்கள், அப்போது அது சுவாரஸ்யமாயும் முன்னேறிச்செல்வதாயும் இருக்கும். (ரோ. 12:11) படிப்பை அவசரமாக நடத்தாமல், மாணாக்கரின் சூழ்நிலை, கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகியவற்றைச் சார்ந்து ஒருமணி நேரம் அடங்கிய படிப்புப்பகுதிகளில் பெரும்பாலான அதிகாரங்களை முடித்துவிடலாம். ஒவ்வொரு வாரமும் கற்பிப்பவரும் மாணாக்கரும் தவறாது படித்தால் மாணாக்கர்கள் நல்ல முன்னேற்றத்தைச் செய்வர். இப்படியாக பெரும்பாலான நபர்களோடு புத்தகத்திலுள்ள 19 அதிகாரங்களையும் சுமார் ஆறு மாதங்களில் முடித்துவிடலாம்.
5 பொருளின் பேரில் ஆர்வத்தைத் தூண்டும் சுருக்கமான குறிப்புகளுடன் ஒவ்வொரு பகுதியையும் அறிமுகப்படுத்துங்கள். ஒவ்வொரு அதிகாரத்தின் தலைப்பும் அதன் பொருளாக இருப்பதால் அதை அழுத்தியுரைப்பதற்கான தேவையை நீங்கள் கவனிப்பீர்கள். ஒவ்வொரு உபதலைப்பும் ஒரு முக்கிய குறிப்பைத் தனிப்படுத்திக் காண்பித்து, அந்த அதிகாரத்தின் பொருளை மையமாக வைப்பதற்கு உங்களுக்கு உதவுகிறது. அளவுக்குமீறி பேசுவதைத் தவிர்ப்பதற்கு கவனமாயிருங்கள். மாறாக, மாணாக்கரின் கருத்துக்கள் வெளிக்கொணரப்படுவதற்கு முயற்சி செய்யுங்கள். மாணாக்கர் ஏற்கெனவே அறிந்திருக்கும் விஷயங்களின் பேரில் திட்டவட்டமான வழிநடத்தும் கேள்விகளை கேளுங்கள், அவர் விஷயங்களை நியாயமான முறையில் ஆராய்ந்து பார்த்து சரியான முடிவுகளுக்கு வருவதற்கு அவருக்கு உதவும். (மத். 17:24-26; லூக். 10:25-37; பள்ளி துணைநூல், பக்கம் 51, பாரா 10-ஐக் காண்க.) அறிவு புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவலை மட்டும் சிந்தியுங்கள். கூடுதலான தகவலை அளிப்பது, முக்கிய குறிப்புகள் தெளிவாகச் சொல்லப்படாமலும் அல்லது வேறு வழியில் திருப்புவதாயும் படிப்பை நீட்டிப்பதாயும் இருக்கக்கூடும். (யோவா. 16:12) படித்துக்கொண்டிருக்கும் பொருளுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி எழுப்பப்படுமென்றால், நீங்கள் பெரும்பாலும் அந்தக் கேள்விக்கு பதிலை அப்படிப்பின் முடிவில் கொடுக்கலாம். இது வேறு காரியங்களுக்கு கவனத்தைச் செலுத்தாமல் அந்த வாரத்துக்குரிய பாடத்தை முடிப்பதற்கு உங்களை அனுமதிக்கும். அவருடைய பெரும்பாலான தனிப்பட்ட கேள்விகள், தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் நிச்சயமாகவே பதிலளிக்கப்படும் என்பதை மாணாக்கரிடம் விளக்குங்கள்.—பள்ளி துணைநூல் பக்கம் 94, பாரா 14-ஐக் காண்க.
6 திரித்துவம், ஆத்துமா சாவாமை, நரக அக்கினி அல்லது அதுபோன்ற மற்ற பொய் கோட்பாடுகளை மாணாக்கர் மிகவும் உறுதியாக நம்பினால், அறிவு புத்தகத்தில் அளிக்கப்பட்டிருக்கும் தகவல் அவரை திருப்திப்படுத்தவில்லையென்றால், அப்பொருளை பற்றி கலந்தாலோசிக்கும் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தையோ அல்லது வேறொரு பிரசுரத்தையோ அளிக்கலாம். வாசித்தவற்றைக் குறித்து அவர் யோசித்துப் பார்த்தப் பின்னர், அவரோடு அந்தப் பொருளை நீங்கள் கலந்தாலோசிப்பதாக சொல்லுங்கள்.
7 படிப்பை ஆரம்பிப்பதற்கு முன்னும் முடித்த பிறகும் ஜெபம் செய்து யெகோவாவின் வழிநடத்துதலுக்காகவும் ஆசீர்வாதத்துக்காகவும் கேட்பது, அப்படிப்புக்கு மதிப்புக்கொடுத்து, ஒருவரை மரியாதைக்குரிய மனநிலையில் வைத்து யெகோவாவே மெய்யான போதகர் என்பதன் பேரில் கவனத்தை ஈர்க்கிறது. (யோவா. 6:45) அந்த மாணாக்கர் தொடர்ந்து புகையிலை உபயோகித்துக்கொண்டிருந்தால், படிப்பின்போது அவர் அதைவிட்டு விலகியிருக்கும்படி நீங்கள் பின்னர் கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியமிருக்கலாம்.—அப். 24:16; யாக். 4:3.
8 வேத வசனங்கள், உதாரணங்கள், மறுபார்வைக்கான கேள்விகள் ஆகியவற்றை உபயோகித்து திறம்பட்டவிதத்தில் கற்றுக்கொடுங்கள்: கற்பிப்பவர் அதற்கு முன்பு எத்தனை தடவை பொருளை படித்திருந்தாலும், ஒரு தேர்ச்சிபெற்ற கற்பிப்பவர் குறிப்பிட்ட மாணாக்கரை மனதில் வைத்து, ஒவ்வொரு பாடத்தையும் மறுபார்வை செய்வார். மாணாக்கரிடமிருந்து சில கேள்விகளை எதிர்பார்ப்பதற்கு இது உதவுகிறது. திறம்பட்டவிதத்தில் கற்பிப்பதற்கு, அதிகாரத்திலுள்ள முக்கிய குறிப்புகளை தெளிவாக விளங்கிக்கொள்ளுங்கள். வேதவசனங்கள் பொருளுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதை பார்த்து, படிப்பின்போது எந்த வசனங்கள் வாசிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானியுங்கள். உதாரணங்களையும் அதிகாரத்தின் முடிவில் உள்ள மறுபார்வைக்கான கேள்விகளையும் உபயோகித்து நீங்கள் எவ்வாறு கற்பிக்கலாம் என்று சிந்தித்துப் பாருங்கள்.
9 வேத வசனங்களை திறம்பட்ட விதத்தில் உபயோகிப்பதன் மூலம், மாணாக்கர் உண்மையிலேயே பைபிளை படித்துக்கொண்டிருக்கிறார் என்பதை அவர் போற்றுவதற்கு நீங்கள் உதவி செய்வீர்கள். (அப். 17:11) அறிவு புத்தகம், பக்கம் 14-ல் “உங்கள் பைபிளை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்ற பெட்டியை உபயோகித்து வேதவசனங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை அவருக்கு கற்பியுங்கள். பாடத்தில் மேற்கோளாக கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை அவருக்கு காண்பியுங்கள். நேரம் அனுமதிக்குமேயானால், மேற்கோளாகக் கொடுக்கப்பட்டிராமல் இடக்குறிப்பு செய்யப்பட்ட வசனங்களை எடுத்து வாசியுங்கள். அவ்வசனங்கள் எவ்வாறு பாராவில் கொடுக்கப்பட்டிருப்பவற்றை ஆதரிக்கின்றன அல்லது தெளிவாக்குகின்றன என்பதன் பேரில் மாணாக்கர் குறிப்பு சொல்லும்படி அனுமதியுங்கள். வசனங்களின் முக்கிய பகுதிகளை அழுத்திக் காண்பியுங்கள், அப்போது பாடத்தின் முக்கிய குறிப்புகளுக்கான காரணங்களை அவர் மதித்துணருவார். (நெ. 8:8) பொதுவாக, புத்தகத்தில் இருக்கும் வசனங்களுக்கு மேலாக கூடுதலான வசனங்களை கற்பிப்பவர் கலந்தாலோசிப்புக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. பைபிள் புத்தகங்களின் பெயர்களையும் வரிசைப்படியும் அறிந்திருப்பதன் மதிப்பின் பேரில் குறிப்பு சொல்லுங்கள். ஆங்கில காவற்கோபுரம், ஜூன் 15, 1991, பக்கங்கள் 27-30 வரை வாசிப்பது மாணாக்கருக்கு உதவியளிப்பதாய் இருக்கக்கூடும். பொருத்தமான சமயங்களில் ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பை பயன்படுத்தும்படி உற்சாகப்படுத்துங்கள். பைபிள் வார்த்தைகளின் பொருளடக்க அட்டவணை, துணைக்குறிப்புகள் போன்ற அதன் பல்வேறு அம்சங்களை எவ்வாறு உபயோகிப்பது என்பதை நீங்கள் படிப்படியாக நடைமுறையில் எடுத்துக் காண்பிக்கலாம்.
10 உதாரணங்கள், ஒருவருடைய சிந்திக்கும் செயல்முறைகளைத் தூண்டி புதிய கருத்துக்கள் கிரகித்துக்கொள்வதை எளிதாக்கிவிடுகின்றன என்று தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல் புத்தகத்தில் படிப்பு 34 விளக்குகிறது. அவை அறிவுப்பூர்வமான கவர்ச்சியை உணர்ச்சிப்பூர்வமான வலிமையோடு இணைக்கின்றன, அதன் காரணமாக வெறுமனே எளிய உண்மைக் கூற்றுகளால் பெரும்பாலும் எடுத்துச்செல்லப்பட முடியாத அதிக வலிமையோடு செய்தியை எடுத்துச் செல்வதற்கு முடிகிறது. (மத். 13:34) அறிவு புத்தகத்தில் அநேக கற்பிக்கும் உதாரணங்கள் உள்ளன, அவை எளியவையாய் இருந்தாலும் வலிமைவாய்ந்தவையாய் இருக்கின்றன. உதாரணமாக, கிறிஸ்தவ சபையின் மூலம் எவ்வாறு ஆவிக்குரிய அர்த்தத்தில் யெகோவா உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை ஏற்பாடு செய்கிறார் என்பதற்கான போற்றுதலை வளர்ப்பதற்கு 17-ஆம் அதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஓர் உதாரணம் உதவுகிறது. அறிவு புத்தகத்தில் உள்ள அழகான படங்களோடுகூடிய உதாரணங்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு திறம்பட்டவிதத்தில் உபயோகிக்கப்படலாம். பக்கம் 185-ல் “சந்தோஷமான உயிர்த்தெழுதல்” என்ற உபதலைப்பின் கீழ் பாரா 18-ல் உள்ள விஷயம், பக்கம் 86-ல் உள்ள படத்தை மாணாக்கர் பார்க்கும்படியாக செய்வதன் மூலம் உறுதிப்படுத்தப்படும். கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் உயிர்த்தெழுதல் உண்மையாய் நடக்கப்போகும் செயல் என்பதை சிந்தித்துப் பார்ப்பதற்கு இது அவரை உந்துவிக்கக்கூடும்.
11 ஒவ்வொரு பாடத்தை முடிக்கையிலும் பைபிள் மாணாக்கர் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்ய வேண்டும். இதன் காரணமாக, ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும் “உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்” என்ற பெட்டியில் உள்ள மறுபார்வை கேள்விகளைக் கேட்க தவறாதீர்கள். படித்த காரியங்களிலிருந்து சரியான பதிலைப் பெற்றுக்கொள்வதோடு திருப்தியடைந்து விடாதீர்கள். இதயத்திலிருந்து தனிப்பட்ட பிரதிபலிப்பை வெளிக்கொண்டு வரும்விதத்தில் இந்தக் கேள்விகளில் பல அமைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, பக்கம் 31-ல் மாணாக்கரிடம் கேட்கப்படும் கேள்வியைப் பாருங்கள்: “யெகோவா தேவனின் என்ன பண்புகள் விசேஷமாக உங்களைக் கவருவதாக இருக்கின்றன?”—2 கொ. 13:5.
12 படிப்புக்காக தயார்செய்வதற்கு மாணாக்கரை பயிற்றுவியுங்கள்: பாடத்தை முன்பாகவே வாசித்து, பதில்களை குறித்து வைத்து, அவற்றை தன் சொந்த வார்த்தைகளில் எவ்வாறு சொல்வது என்பதை சிந்திக்கும் மாணாக்கர் விரைவில் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வார். உங்கள் முன்மாதிரி, உற்சாகம் ஆகியவற்றின் மூலம் படிப்புக்காக தயாரிப்பதற்கு நீங்கள் அவரைப் பயிற்றுவிக்கலாம். உங்கள் புத்தகத்தில் நீங்கள் கோடிட்டுள்ள முக்கியமான சொற்களையும் சொற்றொடர்களையும் அவருக்குக் காண்பியுங்கள். அச்சடிக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு நேரடியான பதில்களை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை விளக்குங்கள். ஒன்றுசேர்ந்து ஓர் அதிகாரத்தை தயாரிப்பது மாணாக்கருக்கு உதவியாயிருக்கலாம். தன் சொந்த வார்த்தைகளில் எடுத்துக்கூறும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள். அவர் பொருளை விளங்கிக்கொண்டிருக்கிறாரா என்பது அப்போதுதான் தெளிவாகும். அவர் தன் பதிலை புத்தகத்திலிருந்து வாசித்தால், தன் சொந்த வார்த்தைகளில் அந்தக் குறிப்பை வேறொருவருக்கு எவ்வாறு விளக்குவார் என்று அவரிடம் கேட்பதன் மூலம் நீங்கள் அவருடைய சிந்தனையைத் தூண்டலாம்.
13 அவருடைய வாராந்தர தயாரிப்பின் பாகமாக, இடக்குறிப்பு செய்யப்பட்டிருக்கும் வசனங்களை வாசித்துப் பார்க்கும்படி மாணாக்கரை உற்சாகப்படுத்துங்கள், ஏனென்றால் படிப்பின்போது எல்லா வசனங்களையும் வாசிப்பதற்கு நேரம் இருக்காது. பாடங்களைத் தயாரிப்பதற்கு அவர் எடுக்கும் முயற்சிகளுக்காக அவரைப் பாராட்டுங்கள். (2 பே. 1:5; பைபிள் படிப்பின்போது அதிகமாக கற்றுக்கொள்வதற்கு கற்பிப்பவரும் மாணாக்கரும் என்ன செய்யலாம் என்பதன் பேரில் கூடுதலான ஆலோசனைகளுக்கு காவற்கோபுரம், ஆகஸ்ட் 15, 1993, பக்கங்கள் 13-14 பாருங்கள்.) இந்த விதத்தில், தயாரிப்பதற்கும் சபை கூட்டங்களில் அர்த்தமுள்ள குறிப்புகள் சொல்வதற்கும் மாணாக்கர் பயிற்றுவிக்கப்படுகிறார். அறிவு புத்தகத்தில் தனிப்பட்ட பைபிள் படிப்பை முடித்தவுடன் சத்தியத்தில் தொடர்ந்து முன்னேற்றம் செய்வதற்கு, நல்ல தனிப்பட்ட படிப்பு பழக்கங்களை எவ்வாறு விருத்தி செய்துகொள்வது என்பதை அவர் கற்றுக்கொள்வார்.—1 தீ. 4:15; 1 பே. 2:2.
14 யெகோவாவின் அமைப்பினிடமாக மாணாக்கரை வழிநடத்துங்கள்: மாணாக்கரின் ஆர்வத்தை யெகோவாவின் அமைப்பினிடமாக வழிநடத்துவது, சீஷர்களை உண்டுபண்ணுபவரின் பொறுப்பு. அமைப்பை உயர்வாய் மதித்து, போற்றுதல் காண்பித்து, அதன் பாகமாக ஆவதற்கான தேவையை உணர்ந்தால், மாணாக்கர் மிகவும் சீக்கிரத்தில் ஆவிக்குரிய முதிர்ச்சிக்கு முன்னேறுவார். கடவுளுடைய ஜனங்களோடு கூட்டுறவுகொள்வதிலும் ராஜ்ய மன்றத்தில் நம்மோடு இருப்பதிலும் அவர் சந்தோஷப்பட நாம் விரும்புகிறோம், அங்கே அவர் கிறிஸ்தவ சபை அளிக்கும் ஆவிக்குரிய ஆதரவையும் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவையும் பெற்றுக்கொள்ளலாம்.—1 தீ. 3:15.
15 யெகோவா இன்று தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு உபயோகிக்கும் ஒரே அமைப்பைக் குறித்து தனிப்பட்ட நபர்கள் தெரிந்துகொள்வதற்கு, யெகோவாவின் சாட்சிகள்—ஒற்றுமையுடன் உலகம் முழுவதிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள் என்ற சிற்றேடு பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. படிப்பை நிலைநாட்டியவுடன், அந்தச் சிற்றேட்டை மாணாக்கருக்கு ஏன் அளிக்கக்கூடாது? ஆரம்பத்திலிருந்தே, கூட்டங்களுக்கு வரும்படி மாணாக்கரை தொடர்ந்து அழைத்துக்கொண்டு இருங்கள். கூட்டங்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதை விளக்குங்கள். வரப்போகும் பொது பேச்சின் தலைப்பை சொல்லுங்கள் அல்லது காவற்கோபுர படிப்பில் கலந்தாலோசிக்கப்படப்போகும் கட்டுரையை காண்பியுங்கள். கூட்டங்கள் நடைபெறாத சமயத்தில் நீங்கள் ராஜ்ய மன்றத்தைப் பார்ப்பதற்கு அவரைக் கூட்டிச்செல்லலாம், ஒரு புதிய இடத்துக்கு முதல் முறையாக செல்வதைக் குறித்து அவர் கொண்டிருக்கும் கவலையைக் குறைப்பதற்கு நீங்கள் அவ்வாறு செய்யலாம். கூட்டங்களுக்குச் செல்ல போக்குவரத்து வசதியை நீங்கள் செய்துகொடுக்கலாம். அவர் கூட்டங்களுக்கு ஆஜராகும்போது, வரவேற்கப்பட்டவராகவும் சௌகரியமாகவும் உணரும்படி செய்யுங்கள். (மத். 7:12) மூப்பர்கள் உட்பட மற்ற சாட்சிகளுக்கு அவரை அறிமுகப்படுத்துங்கள். அப்போது அவர் சபையை தன் ஆவிக்குரிய குடும்பமாக கருத ஆரம்பிப்பார். (மத். 12:49, 50; மாற். 10:29, 30) ஒவ்வொரு வாரமும் ஒரு கூட்டத்துக்கு ஆஜராகும்படி நீங்கள் அவருக்காக ஓர் இலக்கை ஏற்படுத்திக் கொடுக்கலாம், படிப்படியாக அந்த இலக்கை அதிகரிக்கலாம்.—எபி. 10:24, 25.
16 அறிவு புத்தகத்தின் வாயிலாக வீட்டு பைபிள் படிப்பு முன்னேறிக்கொண்டிருக்கையில், கூட்டங்களில் சபையோடு ஒழுங்காக கூடிவருவதற்கான தேவையை சிறப்பித்துக் காண்பிக்கும் பகுதிகளை அழுத்திக் காட்டுங்கள். விசேஷமாக பக்கங்கள் 52, 115, 137-9, 159, அதோடுகூட அதிகாரம் 17-ஐ கவனியுங்கள். யெகோவாவுடைய அமைப்பின் பேரில் உங்களுக்கு இருக்கும் உங்கள் சொந்த ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள். (மத். 24:45-47) உள்ளூர் சபையைப் பற்றியும் கூட்டங்களில் நீங்கள் கற்றுக்கொள்ளும் காரியங்களைக் குறித்தும் நல்லவிதத்தில் பேசுங்கள். (சங். 84:10; 133:1-3) சங்கத்தின் வீடியோக்கள் ஒவ்வொன்றையும் மாணாக்கர் பார்ப்பது நல்லது, யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பு என்ற ஆங்கில வீடியோவை முதலாவது பார்க்கலாம். அமைப்பினிடமாக ஆர்வத்தை எவ்வாறு திருப்புவது என்பதன் பேரில் கூடுதலான கருத்துக்களுக்கு ஆங்கில காவற்கோபுரம், நவம்பர் 1, 1984, பக்கங்கள் 14-18, நம் ராஜ்ய ஊழியம், ஏப்ரல் 1993 உட்சேர்க்கையைப் பாருங்கள்.
17 மற்றவர்களுக்கு சாட்சி கொடுக்கும்படி மாணாக்கர்களை உற்சாகப்படுத்துங்கள்: ஜனங்களோடு நாம் படிப்பதன் முக்கிய இலக்கு, யெகோவாவுக்கு சாட்சி கொடுப்பதற்கு சீஷர்களை உண்டுபண்ணுவதாகும். (ஏசா. 43:10-12) பைபிளிலிருந்து அவர் கற்றுக்கொண்டிருப்பவற்றைக் குறித்து மற்றவர்களிடம் பேசும்படி கற்பிப்பவர் மாணாக்கரை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதை அது அர்த்தப்படுத்துகிறது. “இந்தச் சத்தியத்தை உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்?” அல்லது “ஒரு நண்பரிடம் இதை நிரூபிப்பதற்கு எந்த வசனத்தை நீங்கள் உபயோகிப்பீர்கள்?” என்று வெறுமனே கேட்பதன் மூலம் இதை செய்யலாம். அறிவு புத்தகத்தில் பக்கங்கள் 22, 93-5, 105-6 அதோடுகூட அதிகாரம் 18 ஆகியவற்றில் சாட்சிகொடுக்கும்படி உற்சாகப்படுத்தப்பட்டிருக்கும் முக்கிய பகுதிகளை அழுத்திக் காண்பியுங்கள். பொருத்தமாயிருந்தால் மற்றவர்களுக்கு சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்காக மாணாக்கரிடம் சில துண்டுப்பிரதிகளை கொடுக்கலாம். அவருடைய படிப்பில் கலந்துகொள்ள அவர் தன் குடும்ப அங்கத்தினர்களை அழைக்கலாம் என்று ஆலோசனை கூறுங்கள். படிப்பதற்கு விருப்பமாயிருக்கும் நண்பர்கள்கூட அவருக்கு இருக்கிறார்களா? ஆர்வமிருக்கும் நபர்களை குறித்து உங்களிடம் சொல்லும்படி குறிப்பிடுங்கள்.
18 தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்கும் ஊழியக் கூட்டத்துக்கும் ஆஜராவதன் மூலம், சீஷராகப்போகும் நபர் கூடுதலான பயிற்றுவிப்பையும் தூண்டுதலையும் பெற்றுக்கொள்ளலாம், அது நற்செய்தியின் பிரஸ்தாபியாக ஆவதற்கு அவருக்கு உதவிசெய்யும். பள்ளியில் சேர்ந்துகொள்வதற்கோ அல்லது முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக ஆவதற்கோ அவர் விருப்பத்தைத் தெரிவித்தால், நம் ஊழியம் புத்தகம் பக்கங்கள் 98, 99-ல் உள்ள நியமங்கள் பொருந்தும். அவருடைய வாழ்க்கையின் ஓர் அம்சம் அவர் தகுதிபெறுவதை தடைசெய்தால், அந்த விஷயத்தைக் குறித்து சங்கத்தின் பிரசுரங்களில் உள்ள உதவியளிக்கும் தகவலை ஆராய்ச்சி செய்து அவரோடு அதைப் பகிர்ந்துகொள்ளலாம். உதாரணமாக, புகையிலை அல்லது மற்ற போதைப்பொருட்களுக்கு அடிமையாயிருக்கும் பழக்கத்தை மேற்கொள்வதற்கு ஒரு மாணாக்கர் கஷ்டப்படலாம். அப்படிப்பட்ட தீங்கிழைக்கும் பழக்கங்களை கிறிஸ்தவர்கள் ஏன் தவிர்க்கின்றனர் என்பதன் பேரில் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பலமான வேதப்பூர்வமான காரணங்களை குறிப்பிடுகிறது, மற்றவர்கள் அப்படிப்பட்ட பழக்கங்களை விட்டுவிட உதவிசெய்வதற்கு பக்கம் 112-ல் வெற்றிகரமானதாய் நிரூபித்திருக்கும் ஒரு வழி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விஷயத்தைக் குறித்து அவரோடு ஜெபியுங்கள், உதவிக்காக யெகோவாமீது சார்ந்திருக்கும்படி அவருக்கு கற்பியுங்கள்.—யாக். 4:8.
19 பொது ஊழியத்தில் பங்குகொள்வதற்கு ஒருவர் தகுதி பெற்றிருக்கிறாரா என்பதை தீர்மானிப்பதற்கு பின்பற்ற வேண்டிய முறை காவற்கோபுரம், ஜனவரி 15, 1996, பக்கம் 16, பாரா 6-ல் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாணாக்கர் தகுதி பெறுகையில், வெளி ஊழியத்தில் முதல் நாள் பங்குகொள்வதற்காக தயாராகும்போது, ஊழியத்துக்காக பழகிக்கொள்வதற்கு நேரத்தை ஒதுக்கிவைப்பது உதவியளிக்கும். உங்கள் பிராந்தியத்தில் சாதாரணமாக காணப்படும் ஜனங்களின் பிரதிபலிப்புகளையும் ஆட்சேபணைகளையும் உடன்பாடான முறையில் கலந்தாலோசியுங்கள். முதலில் மாணாக்கரை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்குகொள்ள செய்யுங்கள், பின்னர் படிப்படியாக ஊழியத்தின் மற்ற அம்சங்களில் அவரை பயிற்றுவியுங்கள். நீங்கள் உங்கள் அளிப்பை சுருக்கமாகவும் எளிமையாகவும் வைத்தால், அதைப் பார்த்து பின்பற்றுவதற்கு அவருக்கு சுலபமாக இருக்கும். கட்டியெழுப்புகிறவர்களாகவும் உற்சாகமூட்டுபவர்களாகவும் இருந்து வேலையில் நீங்கள் காணும் மகிழ்ச்சியை பரவச்செய்யுங்கள், அப்போது அவர் உங்கள் மனநிலையை பெற்றுக்கொண்டு அதைப் பிரதிபலிப்பார். (அப். 18:25) நற்செய்தியை ஒழுங்காக வைராக்கியத்தோடு பிரசங்கிக்கும் பிரஸ்தாபியாக ஆக வேண்டும் என்பதே புதிய சீஷரின் இலக்காக இருக்க வேண்டும். ஒருவேளை ஊழியத்துக்காக நடைமுறையான அட்டவணையைத் தயாரிக்க நீங்கள் அவருக்கு உதவலாம். மற்றவர்களுக்கு சாட்சி கொடுப்பதில் தன் திறமையை வளர்த்துக்கொள்வதற்கு, அவர் ஆங்கில காவற்கோபுரம் இதழ்கள் ஆகஸ்ட் 15, 1984, பக்கங்கள் 15-25; ஜூலை 15, 1988, பக்கங்கள் 9-20; ஜனவரி 15, 1991, பக்கங்கள் 15-20; ஜனவரி 1, 1994 (தமிழ்), பக்கங்கள் 20-5-ஐ வாசிக்கும்படி நீங்கள் ஆலோசனை கூறலாம்.
20 ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறும்படி மாணாக்கர்களை உந்துவியுங்கள்: அறிவு புத்தகத்தை படிப்பதன் மூலம் போதுமான அளவு கற்றுக்கொண்டு, கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதலுக்காக தகுதிபெறுவது, நேர்மை இதயமுள்ள மாணாக்கர் ஒருவருக்கு கூடியகாரியமாய் இருக்க வேண்டும். (ஒப்பிடுக: அப்போஸ்தலர் 8:27-39; 16:25-34.) என்றபோதிலும், ஒரு நபர் தன்னை ஒப்புக்கொடுக்க உந்துவிக்கப்படுவதற்கு முன்பு யெகோவாவின்மீது பக்தியை வளர்த்துக்கொள்வது அவசியம். (சங். 73:25-28) படிப்புகள் நடத்தும்போதெல்லாம் யெகோவாவின் பண்புகள் பேரில் போற்றுதலை வளர்ப்பதற்கு சந்தர்ப்பங்களுக்காக எதிர்பார்த்திருங்கள். கடவுள் பேரில் உங்களுக்கு இருக்கும் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள். யெகோவாவோடு ஓர் அனலான, தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளும்விதத்தில் சிந்திக்கும்படி மாணாக்கருக்கு உதவிசெய்யுங்கள். அவர் உண்மையிலேயே கடவுளை அறிந்து அவரில் அன்புகூர்ந்தால், கடவுளை உண்மைத்தன்மையோடு சேவிப்பார், ஏனென்றால் தேவபக்தி என்பது, யெகோவாவைப் பற்றி ஒரு நபராக நாம் எவ்வாறு உணருகிறோம் என்பதன் பேரிலேயே சார்ந்துள்ளது.—1 தீ. 4:7, 8; பள்ளி துணைநூல், பக்கம் 76, பாரா 11-ஐக் காண்க.
21 மாணாக்கரின் இதயத்தை எட்டுவதற்கு முயற்சி செய்யுங்கள். (சங். 119:11; அப். 16:14; ரோ. 10:10) சத்தியம் எவ்வாறு அவரை தனிப்பட்டவிதத்தில் பாதிக்கிறது என்பதையும் அவர் கற்றுக்கொண்டிருக்கும் விஷயங்களை வைத்து அவர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். (ரோ. 12:2) ஒவ்வொரு வாரமும் அவருக்கு அளிக்கப்படும் சத்தியத்தை அவர் உண்மையிலேயே நம்புகிறாரா? (1 தெ. 2:13) அதைத் தெரிந்துகொள்வதற்காக, இதுபோன்ற பகுத்தறியும் நோக்குநிலை கேள்விகளை கேட்பதன் மூலம் நீங்கள் மாணாக்கரின் குறிப்புகளைத் தெரிந்துகொள்ளலாம்: இதைக் குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? இதை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எவ்வாறு பொருத்தலாம்? அவருடைய இதயத்தை எட்டுவதற்கு கூடுதலான உதவி எங்கே தேவைப்படுகிறது என்பதை அவருடைய குறிப்புகளிலிருந்து நீங்கள் கண்டுணரலாம். (லூக். 8:15; பள்ளி துணைநூல், பக்கம் 52, பாரா 11-ஐக் காண்க.) அறிவு புத்தகத்தில் பக்கங்கள் 172, 174-ல் உள்ள படங்களின் மீதுள்ள தலைப்புகள் பின்வருமாறு கேட்கின்றன: “ஜெபத்தில் கடவுளுக்கு நீங்கள் ஒப்புக்கொடுத்தலைச் செய்துவிட்டீர்களா?” “முழுக்காட்டப்படுவதிலிருந்து உங்களை தடைசெய்வது என்ன?” இப்படிப்பட்ட கேள்விகள் மாணாக்கர் செயல்படுவதற்கு திறம்பட்டவிதத்தில் உந்துவிக்கலாம்.
22 முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி முழுக்காட்டுதல் பெற விரும்பும்போது பின்பற்ற வேண்டிய முறை, காவற்கோபுரம், ஜனவரி 15, 1996, பக்கம் 17, பாரா 9-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் ஊழியம் புத்தகத்தின் பிற்சேர்க்கையில் உள்ள “முழுக்காட்டப்பட விரும்புகிறவர்களுக்குக் கேள்விகள்” என்ற பகுதியில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க ஒரு நபர் தகுதிபெற வேண்டும் என்ற எண்ணத்தோடு அறிவு புத்தகம் எழுதப்பட்டது, அதை மூப்பர்கள் அவரோடு மறுபார்வை செய்வர். அறிவு புத்தகத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் அழுத்தியுரைத்திருந்தால், முழுக்காட்டப்படுவதற்கு தயாராகையில் மூப்பர்கள் நடத்தும் கேள்வி கேட்கும் பகுதிகளுக்கு மாணாக்கர் நன்கு தயாராயிருக்க வேண்டும்.
23 வீட்டு பைபிள் படிப்பை முடித்தவர்களுக்கு உதவிசெய்யுங்கள்: ஒரு நபர் அறிவு புத்தகத்தை படித்து முடித்தவுடன், கடவுளைச் சேவிப்பதில் அவருக்கு இருக்கும் உண்மைத்தன்மையும் ஆழமான அக்கறையும் வெளிப்படையாகத் தெரிய வரும் என்பதை எதிர்பார்க்க வேண்டும். (மத். 13:23) அதன் காரணமாகத்தான் அப்புத்தகத்தின் கடைசி உபதலைப்பு, “நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கிறது. கடவுளோடு மாணாக்கர் வளர்த்திருக்க வேண்டிய உறவு, தான் கற்றுக்கொண்டிருக்கும் அறிவை பொருத்துவதற்கான தேவை, யெகோவாவின் பேரில் அன்பை வெளிப்படுத்திக் காண்பிப்பதற்கு உடனடியாக செயல்பட வேண்டிய தேவை ஆகியவற்றின் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்தும்படி முடிவான பாராக்கள் மாணாக்கருக்கு வேண்டுகோள் விடுக்கின்றன. அறிவு புத்தகத்தை படித்து முடிப்பவர்கள், கூடுதலான பிரசுரங்களை படிப்பதற்கான ஏற்பாடு எதுவும் இல்லை. கடவுளைப் பற்றிய அறிவுக்கு பிரதிபலிக்கத் தவறும் மாணாக்கரிடம், ஆவிக்குரியப்பிரகாரமாய் முன்னேறுவதற்கு அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை தயவாகவும் தெளிவாகவும் விளக்குங்கள். நீங்கள் அவ்வப்போது அவரோடு தொடர்பு வைத்துக்கொள்ளலாம், நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் படிகளை எடுப்பதற்கான வழியைத் திறந்து வைக்கலாம்.—பிர. 12:13.
24 சத்தியத்தை தழுவிக்கொண்டு முழுக்காட்டுதல் பெறும் ஒரு புதிய சீஷன் விசுவாசத்தில் முழுவதுமாக திடப்படுவதற்கு அறிவிலும் புரிந்துகொள்ளுதலிலும் இன்னும் அதிகமாக வளர வேண்டியிருக்கிறது. (கொலோ. 2:6, 7) அறிவு புத்தகத்தை முடித்தவுடன், அவருடைய வீட்டு பைபிள் படிப்பை தொடருவதற்கு பதிலாக, ஆவிக்குரியப்பிரகாரமாய் முதிர்ச்சியடைய அவருக்குத் தேவைப்படும் எந்தத் தனிப்பட்ட உதவியும் அளிக்க தயாராயிருங்கள். (கலா. 6:10; எபி. 6:1) அவருடைய பங்கில், பைபிளை தினந்தோறும் வாசிப்பதன் மூலமும், ‘உண்மையுள்ள அடிமையின்’ காவற்கோபுரம் மற்றும் வேறு பிரசுரங்களை தனிப்பட்டவிதமாக படிப்பதன் மூலமும், கூட்டங்களுக்காகத் தயாரித்து ஆஜராவதன் மூலமும், சத்தியத்தை உடன் விசுவாசிகளோடு கலந்தாலோசிப்பதன் மூலமும் அவர் தன் புரிந்துகொள்ளுதலை முழுமையாக்கிக்கொள்ளலாம். (மத். 24:45-47, NW; சங். 1:2; அப். 2:41, 42; கொலோ. 1:9, 10) நம் ஊழியம் புத்தகத்தை வாசித்து அதில் அடங்கியிருப்பவற்றை அவர் பொருத்துவது, தன் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கென தேவராஜ்ய முறையில் ஒழுங்கமைப்பதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கும்.—2 தீ. 2:2; 4:5.
25 கற்பிக்கும் கலையை வளர்த்துக்கொள்ளுங்கள்: “சகல ஜாதிகளையும் சீஷராக்கி . . . உபதேசம்பண்ணுங்கள்,” என்று நமக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறது. (மத். 28:19, 20) கற்பிக்கும் கலை பிரிக்கமுடியாத வகையில் சீஷர்களை உண்டுபண்ணுவதோடு இணைக்கப்பட்டிருப்பதால், கற்பிப்பவர்களாக இருப்பதில் முன்னேற நாம் முயற்சி செய்ய வேண்டும். (1 தீ. 4:16; 2 தீ. 4:2) போதிக்கும் கலையை எவ்வாறு வளர்ப்பது என்பதன் பேரில் கூடுதலான ஆலோசனைகளுக்கு நீங்கள் பின்வருபவற்றை வாசிக்க விரும்பலாம்: பள்ளி துணைநூல்-ல் படிப்பு 10 மற்றும் 15-ல் “போதிக்கும் கலையை வளர்த்தல்” மற்றும் “உங்கள் கேட்போரின் இருதயத்தைச் சென்றெட்டுதல்”; உட்பார்வை, (ஆங்கிலம்) தொகுதி 2-ல் “போதனையாளர், போதித்தல்”; காவற்கோபுர ஆங்கில கட்டுரைகள் “தீ எதிர்த்துத் தடுக்கும் பொருட்களைக் கொண்டு கட்டுதல்” மற்றும் “நீங்கள் போதிக்கும்போது, இதயத்தை எட்டுங்கள்,” ஆகஸ்ட் 1, 1984 (ஆங்கிலம்); “வேதாகமத்திலிருந்து நீங்கள் திறம்பட்டவிதத்தில் நியாயங்காட்டிப் பேசுகிறீர்களா?,” மார்ச் 1, 1986 (ஆங்கிலம்); “சீஷராக்கும் ஊழியத்தில் எவ்வாறு மகிழ்ச்சியைக் கண்டடைவது,” பிப்ரவரி 15, 1996.
26 அறிவு புத்தகத்தை உபயோகித்து சீஷர்களை உண்டுபண்ணுவதற்கு நீங்கள் முயற்சியெடுக்கையில், ராஜ்ய நற்செய்தியை எடுத்துச்சென்று மனித இதயங்களை எட்டுவதில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை, ‘விளையச்செய்கிற’ யெகோவா ஆசீர்வதிக்கும்படி எப்போதும் ஜெபியுங்கள். (1 கொ. 3:5-7) மற்றவர்கள் புரிந்துகொள்வதற்கும், போற்றுதலை காண்பிப்பதற்கும், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவின் பேரில் செயல்படுவதற்கும் உங்கள் போதிக்கும் வேலையில் சந்தோஷத்தை அனுபவிப்பீர்களாக!