கூட்டங்களுக்கு ஆஜராதல்—ஒரு பொறுப்புள்ள உத்தரவாதம்
1 கூட்டங்களுக்கு ஆஜராவதை நீங்கள் எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக்கொள்கிறீர்கள்? அது துருவி ஆராயும் கேள்வியாக இருக்கிறது, அல்லவா? நாம் கூட்டங்களைப் போற்றுகிறோம் என்பதை நம்மில் பெரும்பாலானோர் உணருகிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. என்றபோதிலும், சமீபகாலமாக சில சபைகளில் கூட்டங்களுக்கு ஆஜராவது படிப்படியாக குறைந்திருக்கிறது என்பதை அறிக்கைகள் காட்டுகின்றன. காரணம் என்னவாக இருக்கலாம்? அநாவசியமான உலகப்பிரகார வேலை, சோர்வு, வீட்டுவேலை, சரீரப்பிரகாரமாக சற்று சுகவீனம் அல்லது சிறிதளவு மோசமான சீதோஷ்ணம் ஆகியவை கூட்டங்களுக்கு ஒழுங்காக ஆஜராவதற்கான நம்முடைய கடமையுடன் குறுக்கிடும்படி நம்மில் சிலர் அனுமதித்துவருகிறோமா? (உபா. 31:12) இது வேதப்பூர்வமான ஒரு தேவையாக இருப்பதால், நாம் ஒவ்வொருவரும் இந்தக் கேள்வியை ஜெபத்தோடு சிந்தித்துப்பார்க்கவேண்டும், கூட்டங்களுக்கு ஆஜராவதை நான் எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக்கொள்கிறேன்?
2 நம்முடைய சகோதரர்களில் சிலர், கூட்டங்களுக்கு ஆஜராவதற்காக தூசிபடிந்த சாலைகளில் மணிக்கணக்காக நடந்தும் முதலை வந்து தாக்கக்கூடிய நதிகளைக் கடந்தும் வருகிறார்கள். மிக மோசமான உடல்நலப் பிரச்னைகள், சரீரப்பிரகாரமான ஊனங்கள், தாங்கள் வேலைசெய்கிற இடத்தில் பிழிந்தெடுக்கும் வேலைச் சுமை, அல்லது பள்ளியில் தேவைப்படுத்துகிற பாடங்கள் ஆகியவற்றின் மத்தியிலும்கூட, “ஒருபோதும் தவறாமல்” வருகிற உண்மையுள்ளவர்கள் உங்களுடைய சபையிலேயே இருக்கலாம். (லூக். 2:37) ஆஜராவதற்கு அவர்கள் ஏன் முயற்சியெடுக்கிறார்கள்? இந்த அழுத்தம் நிறைந்த உலகத்தின் சவால்களை தங்களுடைய சொந்த பலத்தில் எதிர்ப்படமுடியாது என்பதை அவர்கள் அறிந்திருப்பதன் காரணமாகும். கடவுள் அளிக்கிற பலத்தின்மீது அவர்கள் சார்ந்திருக்கவேண்டும்.—2 கொ. 12:9, 10.
3 ஜெபிப்பதற்கு, அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு, கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கு ஒழுங்காகச் சந்தித்த ஆரம்பகால கிறிஸ்தவர்கள் வைத்த மாதிரியை இன்று நாம் பின்பற்றுகிறோம். (அப். 4:23-30; 11:4-18; கொலோ. 4:16) வேதப்பூர்வமான நியமங்களைக் கவனமாகப் பொருத்திப் பிரயோகிப்பதன்மூலம் இப்பொழுது நம்முடைய வாழ்க்கையை முன்னேற்றுவிப்பதன்பேரில் காலத்திற்கேற்ற புத்திமதிகளோடுகூட, பைபிள் தீர்க்கதரிசனம் மற்றும் கோட்பாடு, தேவபக்திக்குரிய நடத்தை மற்றும் கிறிஸ்தவ ஒழுக்கநெறிகள் ஆகியவற்றின்பேரில் நாம் போதனைகளைப் பெறுகிறோம். (1 தீ. 4:8) மேலும், பிரச்னைகளுக்கும் வேதனைகளுக்கும் ஒருநாள் முடிவிருக்கும் என்ற நம்பிக்கை நமக்கு நினைப்பூட்டப்படுகிறது. இந்த நம்பிக்கையை உயிர்ப்புடன் காத்துக்கொள்வது இன்றியமையாததாகும்.—எபி. 6:19.
4 உங்களுடைய குடும்பம் கூட்டங்களுக்கு ஆஜராவதை எவ்வளவு பொறுப்புணர்ச்சியோடு எடுத்துக்கொள்கிறது? உணவுநேரம் அல்லது உலகப்பிரகாரமான வேலையைப்போல உங்களுடைய அட்டவணையின் பாகமாக அது இருக்கிறதா? கூட்டத்திற்கான இரவுகளில், ஆஜராவதா வேண்டாமா என்று ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருப்பதாக உங்களை நீங்கள் காண்கிறீர்களா அல்லது உங்களுடைய குடும்பத்திலுள்ள உங்களுடைய சகோதரர்களோடு ஒழுங்காக கூட்டுறவுகொள்வது கட்டாயத்திற்குரியதாக இருக்கிறதா? அநேக பிரஸ்தாபிகள் தாங்கள் வளர்ந்துவந்தபோது தங்களுடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட பெற்றோர்கள் வைத்த முன்மாதிரியை நினைவுகூருகிறார்கள். “அப்பாவைப் பற்றிய ஒரு விஷயம் என்னவென்றால், குடும்பத்தினர் கூட்டங்களுக்குச் செல்வதை அவர் எப்பொழுதும் நிச்சயப்படுத்திக்கொண்டதாகும். யாராவது வியாதியாக இருந்தால், எங்களில் ஒருவர் அவரோடு வீட்டில் தங்குவோம், ஆனால் மீதிபேர் கூட்டங்களுக்குச் சென்றோம்!” என்று ஒரு மூப்பர் அன்போடு நினைவுகூருகிறார்.
5 தொடர்ந்துவருகிற நம் ராஜ்ய ஊழிய இதழ்களில், இந்த ஆவிக்குரிய ஏற்பாடுகளுக்கான போற்றுதலைக் கட்டியெழுப்புவதற்கு உதவும் நோக்கத்துடன் ஒவ்வொரு சபை கூட்டத்தின் மதிப்பையும் நாம் கலந்தாராய்வோம். நீங்கள் கூட்டங்களுக்கு ஆஜராவது மிகவும் ஒழுங்கானதாக இருந்தால், நீங்கள் எதை தவறவிடுகிறீர்கள் என்பதை உணர்வதற்கு அந்தக் கட்டுரைகள் உங்களுக்கு உதவிசெய்யும் என்பதைக்குறித்து நாங்கள் நிச்சயமாயிருக்கிறோம். கூட்டங்களை நடத்துகிறவர்களுக்காக பயனுள்ள நினைப்பூட்டுதல்களும் அதற்காகத் தயார்செய்யும்போது மற்றும் அவற்றில் பங்குகொள்ளும்போது நாம் அனைவரும் பொருத்திப் பிரயோகிக்கக்கூடிய ஆலோசனைகளும் அவற்றில் அடங்கும். குடும்பமாக உட்கார்ந்து, கூட்டங்களுக்கு ஆஜராவதற்கான உங்களுடைய மாதிரியை ஏன் நீங்கள் ஜெபத்தோடு சிந்தித்துப் பார்க்கக்கூடாது? பின்பு உங்களுடைய அட்டவணையில் தேவையான மாற்றங்கள் ஏதாவது செய்யுங்கள். ஒழுங்காக கூட்டங்களுக்கு ஆஜராவது நம்முடைய தேவாட்சிக் கல்வியின் இன்றியமையாத பாகமாயிருக்கிறது, உண்மையில் அதிகப் பொறுப்புணர்ச்சியுடன் எடுக்கப்படவேண்டும்.