தைரியமாக, என்றாலும் சாதுரியமாகப் பிரசங்கித்தல்
“சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. ஏனென்றால், . . . [மனிதர்கள்] ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல் . . . போகுங் காலம் வரும்,” என்று அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு புத்திமதி கூறினார். (2 தீ. 4:2-4) கையாளுவதற்குக் கடினமான இந்தக் கடைசி நாட்களுக்குள் நாம் ஆழமாகச் செல்கையில், அதிகரித்துவரும் எண்ணிக்கையான ஆட்கள் பைபிளின் ஆரோக்கியமான உபதேசங்களைப் பொறுக்க மனமில்லாமல் ஆகிவருகின்றனர். சிலசமயங்களில் இந்த மனநிலையானது, நாம் அவர்களுக்கு அளிக்கிற சத்தியங்களை வெறுமனே அசட்டைசெய்வதில் வெளிப்படுத்தப்படுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட பகுதி மேலுமாகச் சொல்கிறபடி, “செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்”கொள்வதை விரும்பித் தெரிவுசெய்கின்றனர். என்றாலும் மற்ற சமயங்களில், அகந்தையுள்ளவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், மற்றும் கொடுமையுள்ளவர்களாயும்கூட இருப்பதன்மூலம் தீர்க்கதரிசனத்தை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள்; இது, நமக்கு ஒப்புவிக்கப்பட்ட வேலையை நிறைவேற்றுவதை கடினமாக்குகிறது. நாம் இந்த வேலையை, “சமயம் வாய்க்காவிட்டாலும்” தொடர்ந்து துரிதமாகவுங்கூட செய்யவேண்டியிருப்பதால், நாம் எவ்வாறு தைரியமாக, என்றாலும் சாதுரியமாகப் பிரசங்கிக்க முடியும்?—2 தீ. 3:1-3.
2 யெகோவாவின் ஊழியர்களுக்கு எதிர்ப்பு ஏதோ புதியதல்ல. ஆபேல் தன்னுடைய தேவபக்திக்காக கொலைசெய்யப்பட்ட ஆரம்ப காலத்திலிருந்தே, யெகோவாவின் உண்மையுள்ள வணக்கத்தார் சாத்தானுடைய கூட்டத்தின் கைகளில் துன்புறுத்துதலை அனுபவித்திருக்கின்றனர். மேலும் இயேசுவின் சீஷர்கள் துன்புறுத்தப்படுவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிற மிகப்பல தீர்க்கதரிசனங்கள் வேதாகமங்களில் இருக்கின்றன. (மத். 23:34) விசேஷமாக இந்தக் கடைசி காலத்தில், சாத்தான் தன்னால் முடிந்த எல்லா யெகோவாவின் ஊழியர்களையும் விழுங்குவதற்குச் சுற்றித்திரிகிற சிங்கத்தைப்போல நடந்துகொள்கிறான் என்பதை நாம் காண்கிறோம், ஏனென்றால் “தனக்கு கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு” பூமிக்கு அருகாமையில் அவன் இருக்கிறான். (1 பே. 5:8; வெளி. 12:12) அதே சமயத்தில், நாம் சோதனைக்குரிய அனுபவங்களை உடையவர்களாயிருப்போம் என்பதை அறிந்திருக்கிற போதிலும், தொந்தரவை வரவழைப்பதற்கோ துன்புறுத்துதலுக்கான வழியில் நம்மை தேவையில்லாமல் வைப்பதற்கோ நாம் விரும்புகிறதில்லை. ஆகையால், எதிர்க்கிற ‘மனிதர்களுக்கு எதிராக சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாய் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ என்று இயேசு நமக்குப் புத்திமதி கூறினார். நாம் எவ்வாறு அவ்விதமாக இருக்கமுடியும்?—மத். 10:16, NW.
3 இயேசுவின் முன்மாதிரி: இந்தப் பிரபஞ்சத்திலுள்ள மிகச் சிறந்த சுவிசேஷகராக, தைரியம் மற்றும் சாதுரியம் சம்பந்தமாக இயேசு நமக்கு என்ன முன்மாதிரியை வைத்தார்? யெகோவாவின் நியாயப்பிரமாணத்தை தகாதவிதமாக பயன்படுத்திக்கொண்டு, அதை இலாபந்தரும் ஒரு வழியாக மாற்றிய ஆலயத்தின் வியாபாரிகளை விரட்டுவதற்கு அவர் வெளிப்படையாகச் செயல்பட்ட இரண்டு சம்பவங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? (யோவா. 2:13-17; மத். 21:12, 13. மிகப் பெரிய மனிதர் புத்தகத்திலுள்ள 16 மற்றும் 103-ம் அதிகாரங்களைப் பாருங்கள்.) வேதபாரகர் மற்றும் பரிசேயர்களுடைய வணக்கத்தின் மாய்மாலத்திற்காகவும் உண்மையற்றத் தன்மைக்காகவும் எவ்வளவு அடிக்கடி அவர்களைக் கண்டனம்பண்ணிப் பேசினார்—சிலசமயங்களில் உவமைகளின்மூலமும் சிலசமயங்களில் தெளிவான வார்த்தைகளின்மூலமும்.—மத். 16:6, 12; அதிகாரம் 23.
4 அதுபோலவே இன்று, ஊழியத்தில் நாம் தைரியமுள்ளவர்களாய் இருப்பது அவசியம். பொய் வணக்கத்தின் சிலைகளை வெளிப்படையாக இடித்துத்தள்ள ஆரம்பிப்பதற்கு நாம் அதிகாரமளிக்கப்படவில்லை, இப்படிப்பட்ட வணக்கத்தில் பங்குகொள்கிற தனிநபர்களை நாம் கண்டனம்செய்வதுமில்லை என்பது உண்மைதான். என்றபோதிலும் பொய்யை வெட்டிவீழ்த்தவும் அழிக்கவும் கடவுளுடைய வார்த்தையை பட்டயமாகப் பயன்படுத்த எப்பொழுதும் நாம் ஆயத்தமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். (எபே. 6:17; எபி. 4:12) யெகோவாவை ஆவியோடும் உண்மையோடும் சேவிப்பதே மனிதர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வழி என்பதை நாம் தைரியமாக அறிவிக்கிறோம். மனிதர்களைப் பிரியப்படுத்த, அல்லது எந்தவிதமான கலப்புவிசுவாச நடவடிக்கைகளில் பங்குகொள்வதன்மூலம் நம்முடைய நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்க, அல்லது எந்த விதத்திலாவது பொய் வணக்கத்தை ஆதரிப்பதன்மூலம் செய்தியின் வலிமையை நாம் ஒருபோதும் குறைப்பதில்லை. இந்தத் தைரியமானது நம்மோடு ஒத்துப்போகாத மனிதர்களுடன் நம்மை முரண்பாட்டுக்குள் கொண்டுவருகிறது. அப்பொழுது என்ன?
5 சாதுரியமாக இருத்தல்: மறுபடியும், நாம் இயேசுவின் முன்மாதிரியை நோக்குவோமாக. ஓய்வுநாளில் சூம்பிய கையுடைய மனிதனை இயேசு சுகப்படுத்துவாரா என்பதைப் பார்ப்பதற்கு குறைகாணுகிற கண்ணோடு வேதபாரகர்களும் பரிசேயர்களும் கவனித்துக்கொண்டிருப்பதை அவர் அறிந்திருந்த சம்பவத்தை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இயேசு தைரியமாக அந்த மனிதனை தேவாலயத்தின் “நடுவே” அழைத்து சுகப்படுத்தவில்லையா? ஆனால் அவர்கள் “மூர்க்கவெறிகொண்டு” அவரைக் கொலைசெய்வதற்கு சதிசெய்துகொண்டிருந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தபோது, துன்புறுத்துதலை அனுபவிக்க தாம் மனமுள்ளவராய் இருக்கவேண்டும் என்று அவர் நியாயங்காட்டினாரா? இல்லை! ‘இயேசு அவ்விடம்விட்டு விலகிப்போனார்.’—மத். 12:14-17; லூக். 6:6-11. மிகப் பெரிய மனிதர் புத்தகம் அதிகாரங்கள் 32 மற்றும் 33-ஐயும் பாருங்கள்.
6 பின்பு, ஆலயத்தில் பரிசேயர்களை வன்மையாகக் கண்டித்து, அவர்கள் தங்களுடைய பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள் என்று அவர் சொன்ன சமயம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவரைநோக்கி எறிவதற்கு அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டபோது, இயேசு துணிவுடன் நின்றுகொண்டு கல்லெறியப்பட தம்மை அனுமதிக்கவில்லை. மாறாக, தலைமறைவாகி பிறகு அமைதலாக ஆலயத்தைவிட்டுச் சென்றார். (யோவா. 8:37-59) யெகோவாவோடு உள்ள தம்முடைய உறவை அவர் வெளிப்படையாக அறிவித்தபோது, ‘யூதர்கள் அவர்மேல் கல்லெறியும்படி, கற்களை எடுத்துக்கொண்ட’ சந்தர்ப்பத்தைப் பற்றியென்ன? அவர்களுக்கு நியாயங்காட்டிப் பேச அவர் விரும்பினார், ஆனால் அவர்கள் “மறுபடியும் அவரைப் பிடிக்கத் தேடி”னபோது, ஓடிச்செல்வது தம்முடைய மதிப்புக்கு குறைவானது என்பதாக அதை அவர் கருதவில்லை, ஆனால் அவர்களுக்குத் தப்பி, “அவர்கள் வரமுடியாத இடத்துக்குப் போனார்.” உண்மையில் அந்தச் சமயத்தில், அந்தப் பட்டணத்தைவிட்டே செல்வதுதான் பொருத்தமானது என்று கண்டார்.—யோவா. 10:24-42, NW; ஒப்பிடவும் மத். 10:23. மிகப் பெரிய மனிதர் புத்தகத்திலுள்ள அதிகாரங்கள் 69 மற்றும் 81-ஐப் பாருங்கள்.
7 நம்முடைய பிராந்தியத்தில்: நாம் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிக்கையில், நம்முடைய செய்தியை அளிப்பதில் நாம் எவ்வளவு சாதுரியமாக இருந்தாலும் சரி, நம்முடைய வேலையை ஆட்சேபிக்கிற வீட்டுக்காரர்களை நாம் எதிர்ப்படுகிறோம். நம்முடைய நிலைநிற்கையை நாம் மரியாதையோடு விளக்கும்போது அந்த நபருடைய மனநிலை மாறவில்லை என்றால், அடக்கத்தோடு அந்தச் சம்பாஷணையை முடித்துக்கொண்டு, புறப்பட்டு அடுத்த வீட்டிற்குச் செல்வது பொதுவாகவே மிகச் சிறந்தது.—மத். 10:14.
8 என்றாலும் எப்பொழுதாவது, கதவண்டையில் கூச்சலிடுகிற ஒருவரை நாம் சந்திக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலைமையில் அந்த நாளில் அந்தப் பிராந்தியத்தை விட்டுவிட்டு, தனிநபருடைய அயலகத்தாரை சந்திப்பதற்கு பிற்பாடு செல்வது விவேகமானதாக இருக்கலாம். மேலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அநேக தடவைகள் நாம் இதுபோன்ற அனுபவத்தை உடையவர்களாக இருந்தால் அப்பொழுது என்ன? ஒருவேளை நமக்குத் தீங்குசெய்வதற்காக பயப்படுத்துகிற கூட்டம் ஒன்றுசேர்ந்து அச்சுறுத்த வந்தால், அப்பொழுது என்ன? அப்பொழுது, கிளர்ச்சி தணியும்வரையாக சில வாரங்களுக்கு, ஒருவேளை மாதங்களுங்கூட, அந்தப் பிராந்தியத்தை செய்துமுடிப்பதிலிருந்து விலகியிருப்பது ஞானமான போக்காக இருக்கும். சில நாட்களுக்குப் பின்பு, அந்த ஆட்களின் மனநிலை மாறியிருக்கிறதா, மேலும் நம்முடைய செய்தியை அதிகம் வரவேற்பவர்களாக இருக்கிறார்களா என்று பார்ப்பதற்கு, நாம் அங்கு எச்சரிக்கையுடன் ஊழியம்செய்ய முயற்சிக்கலாம்.—திட்டவட்டமாக சந்திக்கக்கூடாது அல்லது அதைத் தெரிவிப்பதற்கு தங்களுடைய கதவின்மீது அறிவிப்புகளை வைத்திருக்கிற தனிநபர்கள் நம்மை வேண்டிக்கொள்கிற காரியங்களை எவ்வாறு கையாளுவது என்பதன்பேரிலான ஆலோசனைகளுக்காக, இந்த நம் ராஜ்ய ஊழிய வெளியீட்டிலுள்ள கேள்விப் பெட்டியைப் பார்க்கவும்.
9 முதலிலேயே அதிக சாதுரியமாக இருப்பதன்மூலம் அடிக்கடி இப்படிப்பட்ட சம்பவங்கள் தவிர்க்கப்படலாம். அநேக மக்கள் தங்களுடைய சொந்த மதத்தை ஆதரிப்பதில் அதிகத் தீவிரவாதிகளாக மாறுவதை நாம் அறிந்திருக்கிறோம். இப்படிப்பட்ட ஆட்களின் செல்வாக்கிருக்கிறது என்று நாம் அறிந்திருக்கிற பிராந்தியங்களில், அல்லது ஒரு மதத்தை விளம்பரப்படுத்துகிற மிகப்பல சுலோகங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் ஒரு கதவின்மீது இருப்பதை கவனிக்கையில், நம்முடைய எல்லா வார்த்தைகளையும் நாம் அதிக கவனமாக சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம். ‘பைபிள்’ அல்லது ‘கிறிஸ்தவ’ அமைப்பிலிருந்து வருவதாக நம்மை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, நம்முடைய வேலையின் கல்விக்குரிய தன்மையை நாம் அழுத்திக்காண்பிக்கலாம். கடவுளுடைய வார்த்தையை மக்களுக்குக் காண்பிப்பதை, மேலும் அதிலிருந்து வாசிப்பதை நாம் ஒருபோதும் விட்டுவிட விரும்பாதபோதிலும், பைபிளை பயன்படுத்துவதைக் குறித்து நாம் விழிப்புடன் இருந்து, வசனங்கள், ஏதாவது இருந்தால், எதைக் காண்பிக்கலாம் என்பதைக் கவனமாகத் தெரிவுசெய்யலாம். உணர்ச்சியைப் புண்படுத்தும் என்று நாம் அறிந்திருக்கக்கூடிய வார்த்தைகளாகிய ‘மிஷனரி,’ ‘பிரசங்கம்,’ விசேஷமாக ‘மதமாற்றம்’ போன்ற வார்த்தைகளை அநாவசியமாகப் பயன்படுத்துவதிலிருந்தும்கூட அந்தச் சமயத்தில் நாம் விலகியிருக்கலாம்.
10 நாம் எச்சரிக்கையாய் இருக்கக்கூடிய மற்றொரு அம்சத்திற்கு இது நம்மைக் கொண்டுவருகிறது. தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டபடி, சகல கோத்திரத்தார், பாஷைக்காரர் மற்றும் தேசத்தாரிலிருந்து—மதப் பின்னணிகளிலிருந்து—வருகிற மக்கள் யெகோவாவின் உயர்த்தப்பட்ட வணக்கத்திற்கு திரண்டுவந்துகொண்டிருக்கின்றனர். (ஏசா. 2:2, 3; வெளி. 7:9) அவருடைய ஆசீர்வாதத்தின் அடையாளமாய் இருப்பதாக நாம் இதை எடுத்துக்கொண்டு, சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாய் ஆகிவருகையில் நாம் களிகூருகிறோம். (ஏசா. 60:22) அதே சமயத்தில், உண்மை வணக்கத்திற்காக நிலைநிற்கை எடுத்திருக்கிற ஒருவருடைய மதப் பின்னணியை பரவலாக பிரஸ்தாபப்படுத்துவதற்கு எந்த அவசியமுமில்லை.
11 சகோரர்கள் வீட்டுக்கு வீடு மற்றும் வேறு இடங்களில் புதிய பிரஸ்தாபிகளை அறிமுகப்படுத்துவதற்கு அறியப்பட்டிருக்கின்றனர், விசேஷமாக அவர்களுடைய முந்தைய மதத்தைக் குறிப்பிட்டு அவர்கள் செய்திருக்கிற மாற்றத்தை வீட்டுக்காரருடைய கவனத்திற்குத் திருப்புகிறார்கள். இது வீட்டுக்காரருடைய உணர்ச்சிகளைப் புண்படுத்தி, நம்முடைய முக்கிய நோக்கமே குறிப்பிட்ட ஒரு மதத்தின் ஆட்களை கிறிஸ்தவத்திற்கு ‘மதமாற்றுவது’ என்ற எண்ணப்பதிவைக் கொடுக்கக்கூடும். கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல—அவர்களுடைய மதம் எதுவானாலும் சரி, அவர் எல்லா ஆட்களுக்கும் நம்பிக்கையின் செய்தியை அளிக்கிறார், மேலும் எல்லா பின்னணிகளையுடைய ஆட்களும் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். (அப். 10:34, 35) ஒருவர் யெகோவாவின் வணக்கத்தாராக ஆகும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் அவருடைய மதப் பின்னணி எதுவானாலும் நாம் அவரை வரவேற்கிறோம், ஆனால் அவருடைய முந்தைய மதம், அவர் செய்த மாற்றத்தின் பரிமாணம் ஆகியவற்றை விசேஷித்த ஒன்றாகப் பரவலாக விளம்பரப்படுத்த வேண்டியதில்லை.
12 முடிவு நெருங்கி வருகிறபடியால், அதிகமாக துன்புறுத்தப்படுவதையும் மனிதர்களுடைய நடத்தை மிக மோசமாவதையும் நாம் எதிர்பார்க்கலாம். (2 தீ. 3:12, 13) காலாகாலமாக அப்படித்தான் நம்முடைய பெரும்பாலான உடன் ஊழியக்காரர்கள் வெற்றியுடன் வந்திருக்கிறார்கள். யெகோவாவுடைய ஆவியின் உதவியோடு நாமும்கூட அவ்விதமாகச் செய்யலாம் என்ற விசுவாசத்தை நமக்கு இது கொடுக்கிறது. அதேசமயத்தில், தைரியமாக, என்றாலும் சாதுரியமாகப் பிரசங்கிப்பதன்மூலம், “எல்லா விதமான மனிதர்களுக்கும் இரட்சிப்பைக் கொண்டுவருகிற கடவுளுடைய தகுதியற்ற தயவை” நாம் தொடர்ந்து அறிவிப்போம்.—தீத். 2:11, NW.