கேள்விப் பெட்டி
◼ சபையாரிடம் தீர்மானங்களைக் கொண்டுவருகையில் என்ன முறையைப் பின்பற்றவேண்டும்?
சொத்து வாங்குதல், ராஜ்ய மன்றம் ஒன்றை புது மாதிரியாக அமைத்தல் அல்லது கட்டுதல், சங்கத்திற்கு விசேஷித்த நன்கொடைகள் அனுப்புதல், அல்லது வட்டாரக் கண்காணியின் செலவுகளைக் கவனித்துக் கொள்ளுதல் போன்ற முக்கியமான காரியங்களைப் பற்றி முடிவெடுக்கவேண்டிய சமயத்தில் ஒரு தீர்மானம் தேவைப்படுகிறது. வழக்கமாக, சபையின் நிதிகள் செலவழிக்கப்படுகிற ஒவ்வொரு சமயத்திலும் அங்கீகாரத்துக்காக ஒரு தீர்மானத்தை முன்வைப்பது மிக நல்லது.
ஒரு விதிவிலக்காக, உலகளாவிய பிரசங்க வேலைக்கு ஏற்கெனவே நன்கொடை அளித்துக்கொண்டிருக்கிற ஒவ்வொரு தனிநபர்களோடுகூட, ஒவ்வொரு மாதமும் சங்கத்திற்குத் திட்டவட்டமான ஒரு தொகையை நன்கொடையாக அளிப்பதற்கு சபையானது ஒருமுறை தீர்மானிக்கலாம். அதோடு, பொதுவாகப் பயன்படும் பொருட்கள், சுத்தப்படுத்துவதற்கான பொருட்கள் போன்ற ராஜ்ய மன்றத்தை நடத்துவதற்குரிய வழக்கமான செலவுகள் ஒரு தீர்மானத்தை தேவைப்படுத்தாது.
ஒரு தேவையானது தெளிவாகத் தெரியும்போது, மூப்பர் குழு அந்தக் காரியத்தை முற்றுமுழுக்க கலந்துபேச வேண்டும். ஏதோவொன்று செய்யப்படவேண்டியதன் அவசியத்தைக் குறித்து பெரும்பாலானோர் ஒத்திருப்பார்களேயானால், மூப்பர்களில் ஒருவர், ஒருவேளை சபை ஊழியக் குழுவின் அங்கத்தினர் ஒருவர், ஊழியக் கூட்டத்தில் முன்வைப்பதற்காக எழுத்துமூலமான ஒரு தீர்மானத்தைத் தயார்செய்ய வேண்டும்.
அக்கிராசனராகச் செயல்படுகிற மூப்பர், தற்போதிருக்கிற தேவையையும் அதைக் கவனிப்பதற்காக மூப்பர் குழு எதைச் சிபாரிசுசெய்கிறது என்பதையும் சுருக்கமாக ஆனால் தெளிவாக விளக்கவேண்டும். பின்பு சபையானது பொருத்தமான கேள்விகளைக் கேட்பதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. காரியம் சிக்கலானதாய் இருந்தால், அதைப் பற்றி சிந்திப்பதற்கு ஒவ்வொருவருக்கும் நேரமளிப்பதற்காக அடுத்த ஊழியக் கூட்டம் வரையாக வாக்கெடுப்பை தாமதிப்பது மிகச் சிறந்ததாய் இருக்கலாம். சாதாரணமாக வாக்கெடுப்பானது கைகளை உயர்த்துவதன் மூலமாக எடுக்கப்படுகிறது.
கார்ப்ரேஷன் விஷயங்கள் அல்லது ராஜ்ய மன்ற கடனுதவிகளை உட்படுத்துகிற விஷயங்களில் செய்யப்படுவதுபோல, சட்டப்பூர்வமான தேவைகள் உட்பட்டிருந்தால் தவிர, மற்றபடி தீர்மானத்தின்பேரில் வாக்களிப்பது சபையிலுள்ள ஒப்புக்கொடுக்கப்பட்டு, முழுக்காட்டப்பட்ட அங்கத்தினர்களுக்கே மட்டுப்பட்டதாய் இருக்கிறது. மற்ற சபைகளிலிருந்து கலந்துகொள்ள வருகிற பார்வையாளர்களுக்கு இது பொருத்தமானதாய் இருக்காது.
தீர்மானம் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, அது தேதியிடப்பட்டு, கையொப்பமிடப்பட்டு, சபையின் கோப்பில் வைக்கப்பட வேண்டும்.