கேள்விப் பெட்டி
◼ சபைக்கு தீர்மானங்களை அளிக்கும்போது என்ன முறையானது பின்பற்றப்பட வேண்டும்?
சபை சம்பந்தப்பட்ட அநேக விஷயங்களை சபையின் மூப்பர் குழு தீர்மானிக்கிறது. இந்தப் பொறுப்புவாய்ந்த சகோதரர்கள் பைபிள் நியமங்களின் பேரிலும் சங்கம் கொடுக்கும் ஆலோசனைகளின் பேரிலும் வழிநடத்துதலின் பேரிலும் தீர்மானங்களை செய்ய வழிநடத்தப்படுகின்றனர். என்றாலும், சில தீர்மானங்களில் சபையும் பங்கேற்கிறது, இது சபையாக தீர்மானம் எடுப்பதை அவசியப்படுத்துகிறது. கூட்டம் நடத்துவதற்கு நல்ல ஓர் இடத்தை வாங்குவது, நிலத்தை வாங்குவது, ராஜ்ய மன்றத்தை புதுப்பிப்பது அல்லது கட்டுவது, ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிக்க சங்கத்துக்கு நன்கொடைகளை அனுப்புவது போன்ற காரியங்களை இது உட்படுத்துகிறது. சபையை நடத்துவதற்கு சாதாரணமாக உண்டாகும் செலவுகள் ஒரு தீர்மானத்தை தேவைப்படுத்தாது, ஆனால் அதிக செலவை அல்லது அசாதாரண செலவை உட்படுத்தும் காரியங்கள் தீர்மான வடிவில் சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
தீர்மானங்கள் எப்படி தயாரித்து, அளிக்கப்படுகின்றன? மூப்பர் குழு, சபையின் மற்றும் ராஜ்ய வேலையின் மிகச் சிறந்த அக்கறையையும் கருத்தில்கொண்டு அந்தக் காரியத்தைப் பற்றி முழுவதுமாக கலந்து பேசுகின்றனர். அவர்கள் யாவரும் ஒப்புக்கொண்ட பிறகு, பெரும்பாலும் சபையின் ஊழிய குழுவின் அங்கத்தினராயிருக்கும் ஒரு மூப்பர், தீர்மானத்தை எழுத்து வடிவில் தயார் செய்வார், அதில் மூப்பர்களின் சிபாரிசுகள் தெளிவாக எழுதப்படும். ஊழியக் கூட்டத்தின்போது பொருத்தமான செய்திகளும் முன்மொழியப்படும் தீர்மானமும் கலந்து பேசப்படும். இதை கையாளக்கூடிய மூப்பர், சபை அங்கத்தினர்களுக்கு அந்தக் காரியத்தின் சம்பந்தமாக ஏதாகிலும் தெளிவாகயில்லையென்றால் கேள்விகள் கேட்க வாய்ப்பை கொடுப்பார். ஒரு பெரிய தீர்மானம் உட்பட்டிருந்தால், சபை அதை ஒப்புக்கொள்வதற்கு முன்பாக ஒரு வாரம்போல அதைக் குறித்து யோசித்துப்பார்த்து சொல்லுமாறு மூப்பர்கள் சொல்லுவார்கள். மேலுமான கலந்தாலோசிப்பின்றி அளிக்கப்பட்ட பிரகாரம் தீர்மானத்தை ஒப்புக்கொள்ள சபை விரும்பியதென்றால், தீர்மானத்தை ஒப்புக்கொள்பவர்கள் கைகளை உயர்த்துமாறும் பின்னர் அதை ஒப்புக்கொள்ளாதவர்கள் யாராகிலும் இருந்தால் அவர்களும் கைகளை உயர்த்துமாறு நடத்துனர் அழைப்பார். ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகளில் பெரும்பான்மையர் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் சார்பாக இருந்தார்களேயானால் மூப்பர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பேரில் செயல்பட ஆரம்பிக்கலாம்.
சில காரியங்களில் சட்டப்பூர்வமான அதிகாரங்கள் வேறுவகையாக தீர்மானம் எடுப்பதை தேவைப்படுத்தினால் தவிர, எல்லா ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகளும் தீர்மானத்தில் எடுக்கப்பட்ட காரியங்களின் பேரில் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள்.
மாநகராட்சி சம்பந்தப்பட்ட விஷயங்கள், ராஜ்ய மன்ற கடன்கள் போன்ற விஷயங்களைப் பற்றி சிந்திக்கையில், சட்டப்பூர்வமான தேவைகளுக்கிசைவாகவும் மாநகராட்சியின் துணைவிதிகளுக்கிசைவாகவும் செயற்பட பாராளுமன்ற முறையை பயன்படுத்துவது அவசியமாயிருக்கலாம். (இந்தியாவில், நில உரிமையைப் பெறுவது, ராஜ்ய மன்ற உரிமையைப் பெறுவது போன்ற காரியங்களுக்கு சபைகள் சட்டப்பூர்வ உள்ளுர் சங்கங்களை அமைத்ததென்றால் அப்போது இது பொருந்தும்.) உதாரணமாக, ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு கோரிக்கையை முன்மொழிந்த சகோதரருடைய பெயரையும் அதை வழிமொழிந்த சகோதரருடைய பெயரையும் மேலும் அதன் சார்பாக எவ்வளவு பேர் இருந்தனர் அதன் சார்பாக இல்லாத ஆட்கள் எவ்வளவு பேர் இருந்தனர் என்ற விவரங்களையும் பதிவு செய்து வைப்பது அவசியமாயிருக்கலாம். இப்படிப்பட்ட பாராளுமன்ற முறை நேரடியாக அவசியமாயில்லையென்றால், சபையோடு அந்தக் காரியத்தை சிந்தித்தப் பிறகு குறிப்பிட்ட அந்தக் காரியத்தின் பேரில் விருப்பத்தை தெரிவிக்குமாறு அழைப்பு விடுப்பது மட்டும் போதுமானது. எப்படியிருந்தாலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட, எழுத்து வடிவில் உள்ள தீர்மானங்கள் சபையின் பதிவுக் கோப்பில் வைக்கப்படுவதற்கு முன்பாக பொறுப்புள்ள மூப்பர்களால் தேதியிடப்பட்டு கையொப்பமிடப்பட வேண்டும்.