சாட்சிகொடுப்பதிலிருந்து அவர்கள் விலகியிருக்கவில்லை
1 யெகோவாவின் சாட்சிகள் என்ற நம்முடைய பெயர் நம்மை அடையாளங்காட்டுகிறது, மேலும் நாம் என்ன செய்கிறோம் என்பதை விவரிக்கிறது. நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் மகத்துவங்களைக் குறித்து நாம் சாட்சிகொடுக்கிறோம். (ஏசா. 43:10, 12) சபையின் அங்கத்தினராய் ஒருவர் ஆகவேண்டுமானால், ஒவ்வொருவரும் இந்தச் சாட்சிகொடுத்தலில் பங்குகொள்ளவேண்டும். சாட்சிகொடுத்தல் முக்கியமாக நம்முடைய பொது ஊழியத்தின்மூலம் செய்யப்படுகிறது; வீட்டுக்கு வீடு சந்தித்தல், தெரு ஊழியம் செய்தல், மறுசந்திப்புகள் செய்தல், பைபிள் படிப்புகள் நடத்துதல் ஆகியவற்றை அது உட்படுத்துகிறது. நாம் அனைவரும் ஒரு முழு பங்கை அடைய நாடும்படி சரியாகவே உற்சாகப்படுத்தப்படுகிறோம்.—1 கொ. 15:58.
2 இருப்பினும், சபையிலுள்ள சில அங்கத்தினர்கள் தாங்கள் எந்தளவுக்கு செய்யமுடியும் என்பதில் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். கவலைக்கிடமான வியாதியோ உடல் பலவீனமோ அவர்களைக் கட்டுப்படுத்தி வைக்கக்கூடும். எதிர்ப்புதெரிவிக்கிற உறவினர்கள் சமாளிக்கமுடியாத தடைகளைக் கொண்டுவரலாம். இளைஞராக இருக்கும் ஒருவர், விசுவாசத்தில் இல்லாத ஒரு பெற்றோரால் தடைவிதிக்கப்படலாம். போக்குவரத்து வசதியில்லாமல் ஒதுக்குப்புறமான பகுதிகளில் வாழ்ந்துவருகிற தனிப்பட்ட ஆட்கள் சாட்சிகொடுப்பதை பெரும்பாலும் சாத்தியமற்றதாக கருதலாம். இயல்பாக ஏற்படுகிற வெட்கம் பயப்படுகிறவர்களைத் தயங்கும்படி செய்விக்கலாம். இப்படிப்பட்ட அல்லது இதுபோன்ற சூழ்நிலைமைகளில் இருப்பதாகத் தங்களைக் காண்கிற பிரஸ்தாபிகள் சிலர், கிறிஸ்தவர்களாகத் தங்களுக்கு தேவையான தகுதிகள் இல்லை என்று உணரலாம்; ஏனென்றால் தங்களால் செய்யமுடிகிறதெல்லாம் மற்றவர்கள் செய்வதிலிருந்து மிகவும் குறைவாக இருக்கிறது, மேலும் அவர்கள் உண்மையில் செய்யவிரும்புகிறதைவிட குறைவாக இருக்கிறது என்று உணருகின்றனர். அவர்கள் தங்களுடைய சொந்த முயற்சிகளைக் குறைத்துக்கொள்வதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை. (கலா. 6:4) எப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் இருந்தாலும், தங்களால் முடிந்த மிகச் சிறந்ததைக் கொடுக்கும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார் என்பதை அறிந்துகொள்வதில் அவர்கள் ஆறுதலடையலாம்.—லூக். 21:1-4.
3 பங்குபெற ஒரு வழியைக் கண்டுபிடித்தல்: கடினமான சூழ்நிலைமைகளிலுள்ள தனிப்பட்ட நபர்கள், சாட்சிகொடுப்பதிலிருந்து தங்களைத் தடுப்பதற்கு தடைகளை அனுமதிக்கவில்லை என்பதைக் காண்பிக்கிற ஆயிரக்கணக்கான அனுபவங்கள் கூறப்பட்டிருக்கின்றன. ஓர் செயலை ஆரம்பிப்பதில் தங்களுடைய திறமையைப் பயன்படுத்தி, சந்தர்ப்ப சாட்சிகொடுப்பதற்கு மிகவும் பல்வகைப்பட்ட வழிகளை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வீட்டிலேயே அடைபட்டு கிடக்கவேண்டியவர்கள் சாட்சிகொடுப்பதற்கான ஒரு பெரிய வாய்ப்பாக டெலிஃபோனை பயன்படுத்தியிருக்கிறார்கள். சந்திக்கவரும் ஒவ்வொருவரும் நன்கு செவிகொடுத்துக் கேட்பவராகக் கருதப்படுகிறார். எதிர்ப்புதெரிவிக்கும் குடும்பத்தைக்கொண்ட ஒரு மனைவி வீட்டில் சாட்சிகொடுக்க இயலாமல் இருந்தபோதிலும்கூட, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடத்திலோ அவளுடைய அனுதின வேலையில் சந்திக்கிற மற்றவர்களிடத்திலோ பேசுவதற்கான வாய்ப்புகளை அவள் அனுகூலப்படுத்திக்கொள்கிறாள்.
4 ஓர் இளைஞரை நம்முடைய வெளிப்படையான சாட்சிகொடுத்தலில் பங்குகொள்வதை விசுவாசத்தில் இல்லாத பெற்றோர் ஒருவர் தடைசெய்யலாம். மேற்கொள்ளமுடியாத ஒரு தடையாக அதை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக, அவர் தன்னுடைய பள்ளித் தோழர்களையும் ஆசிரிய ஆசிரியைகளையும் தன்னுடைய தனிப்பட்ட “பிராந்தியம்” என்பதாக கருதி, ஒரு நல்ல சாட்சிகொடுப்பவராய் இருக்கலாம். ஒருவேளை பைபிள் படிப்புகள்கூட நடத்தலாம். ஒதுக்குப்புறமான இடங்களில் வசிக்கிற அநேகர் கடிதங்கள் எழுதுவதன்மூலம் பங்குகொள்பவர்களாய் இருந்திருக்கின்றனர். கிறிஸ்தவ வைராக்கியத்தால் தூண்டப்பட்டவர்கள் “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாய்” ஆவதை தவிர்ப்பதற்கு எப்பொழுதுமே ஏதாவதொரு வழியைக் கண்டுபிடிப்பார்கள்.—2 பே. 1:8.
5 சாட்சிகொடுக்கும் வேலையில் நம்முடைய பங்கைக் குறித்ததில், அனைவருக்கும் ஒரேமாதிரியான தராதரத்தை யெகோவா ஏற்படுத்தி வைத்திருக்கிறார், அதாவது நாம் “மனப்பூர்வமாய்” செய்கிறவர்களாய் இருக்கவேண்டும். (கொலோ. 3:24) நாம் செலவழிக்கும் நேரத்தின் அளவும் நாம் செய்துமுடிப்பதும் வித்தியாசப்படுகிறபோதிலும், முக்கியமான உள்நோக்கம் ஒன்றேயாகும்—“முழு இருதயத்”திலிருந்து வருகிற உண்மையான அன்பேயாகும். (1 நா. 28:9, NW; 1 கொ. 16:14) நம்மால் இயன்றதை நாம் அளிப்போமானால், விசுவாசத்தில் குறைவுபடுகிறோம் என்றோ செய்யக்கூடிய அளவு குறைவாக இருப்பதன் காரணமாக சபையின் அங்கத்தினர்களாக பயனற்றவர்களாய் இருக்கிறோம் என்றோ நினைப்பதற்கு எந்தவொரு காரணமும் ஒருபோதும் நமக்கு இருக்காது. பவுலைப் போல, ‘பிரயோஜனமான காரியங்களைச் சொல்வதிலிருந்தோ வெளியரங்கமாக போதிப்பதிலிருந்தோ நாம் விலகியிருக்கவில்லை’ என்று உண்மையோடு சொல்லமுடியும்.—அப். 20:20, NW.