கடவுளுடைய வார்த்தை வல்லமை வாய்ந்தது
1 பைபிள் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையில் பேரளவு செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. மனிதனால் படைக்கப்படக்கூடிய எதையும்விட இதில் சொல்லப்பட்டிருப்பது அதிகம் உந்துவிப்பதாய் இருக்கிறது. (எபி. 4:12) இது நமக்கு எதைச் செய்திருக்கிறதென்று கவனியுங்கள். மெய்யாகவே, அதன் மதிப்பு ஈடிணையற்றதாக இருக்கிறது.
2 யெகோவாவின் சாட்சிகள் பைபிள் மாணாக்கர்களாகவும் பைபிளின் ஆதரவாளர்களாகவும் முன்னணியில் இருக்கின்றனர். பைபிள் வாசித்தலை நம்முடைய முறையான தேவராஜ்ய அட்டவணையின் ஒரு இன்றியமையாத பாகமாகக் கருதவேண்டும். தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் இதர பொழுதுபோக்கு ஈடுபாடுகளைவிட இதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.
3 அதை ஒரு கிரமமான பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்: கிரமமான பைபிள் வாசிப்புக் கொண்டிருக்கக்கூடிய வல்லமை வாய்ந்த செல்வாக்கை யெகோவாவின் ஜனங்கள் மதித்துணர்ந்திருக்கின்றனர். புரூக்லினில் உள்ள நம்முடைய அச்சுத் தொழிற்சாலைக் கட்டடங்கள் ஒன்றின்மேல் பல வருடங்களாக ஒரு பெரிய அறிவிப்பு அடையாளம் காணப்படுகிறது. இது அவ்வழியில் போவோரையும் வருவோரையும் “கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளை தினமும் வாசியுங்கள்” என்று உற்சாகப்படுத்தி வருகிறது. பெத்தேல் குடும்பத்தில் புதிதாக சேரும் அங்கத்தினர்கள் தங்களுடைய பெத்தேல் சேவையின் முதல் வருடத்தின்போது முழு பைபிளையும் வாசித்து முடிக்கும்படி கேட்கப்படுகின்றனர்.
4 உங்களுக்கு எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும், தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணையில் ஆலோசனையாகக் கொடுக்கப்பட்டிருக்கும் வாராந்தர பைபிள் வாசிப்புப் பகுதிகளைத் தவறாமல் வாசித்து வருகிறீர்களா? இவ்வாறு வாசிப்பதை நீங்கள் கஷ்டமானதாகக் கண்டிருந்தால், நவம்பர் மாதத்தின்போது முன்னேற்றம் செய்ய ஏன் உழைக்கக்கூடாது? முழு மாதத்திற்குமான பைபிள் வாசிப்புப் பகுதி சங்கீதம் 63-77. இதற்கு ஒரு வாரத்திற்கு சுமார் மூன்று அல்லது நான்கு பக்கங்கள் வாசிப்பது தேவையாய் இருக்கிறது. சிலர் தினமும், ஒருவேளை அதிகாலையிலோ இரவில் படுக்கைக்குச் செல்லுமுன்னோ சிறிதுநேரம் வாசிப்பதைத் தெரிந்துகொள்கின்றனர். இதை நீங்கள் எவ்வழியில் வாசித்தாலும்சரி, முக்கியமான காரியம் என்னவென்றால் கடவுளுடைய வார்த்தையைக் கிரமமாக வாசிப்பதன்மூலம் பெறக்கூடிய முழுமையான பலன்களை நீங்கள் அறுவடை செய்யவேண்டும் என்பதே.
5 நவம்பர் மாதத்தின்போது பைபிளை அளியுங்கள்: அநேகர் பைபிளை மதிக்கின்றனர். ஆகவே நாம் அதிலிருந்து அவர்களுக்கு வாசித்துக் காட்டும்போது கேட்பதற்கு விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றனர். நவம்பர் மாதத்தின்போது நாம் பெரும்பாலும் புதிய உலக மொழிபெயர்ப்பு (New World Translation) மற்றும் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (The Bible—God’s Word or Man’s?) என்பவற்றை அளிக்கவிருக்கிறோம். உண்மை மனதுள்ளோருக்குக் கடவுளுடைய வார்த்தையின் மதிப்பைக் காண்பிப்பதற்கான மிகச் சிறந்த ஒரு வாய்ப்பை இது அளிக்கிறது. அவ்வாறு காண்பிப்பதில் ஊக்கமுடன் இருங்கள்.
6 புதிய உலக மொழிபெயர்ப்பை மக்கள் பெற்றுக்கொள்வதற்கான ஆர்வத்தைத் தூண்டிவிடக்கூடிய, தனித்தன்மை வாய்ந்த அம்சங்களின்மீது சில குறிப்புகளை நன்கு யோசித்துத் தயாரியுங்கள். அதன் நடைமுறைப் பயனைச் சிறப்பித்துக் காட்டி, அதை பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? என்ற புத்தகத்தின் அளிப்போடு தொடர்புபடுத்துங்கள். பைபிள் வார்த்தைகளின் 92-பக்க அட்டவணையின் மதிப்பை எடுத்துக் காட்டுங்கள். அல்லது “பிற்சேர்க்கை,” “பைபிள் புத்தகங்களின் பட்டியல்” ஆகிய இரண்டில் ஒன்றை சிறப்பித்துக் காட்டுங்கள். பைபிள் படிப்பில் இது எவ்வளவு பயனுள்ளதாய் இருக்கிறது என்பதைக் காண்பிப்பதன் மூலம் இதைச் செய்யுங்கள். புதிய உலக மொழிபெயர்ப்பு தற்கால ஆங்கிலத்தில் இருக்கிறது என்பதையும் இது புரிந்துகொள்வதை எளிதாக்குகிறது என்பதையும் சுட்டிக்காட்டுங்கள். புதிய உலக மொழிபெயர்ப்பு கடவுளுடைய பெயராகிய யெகோவா என்பதை 7,210 முறை உபயோகிக்கிறது என்பதைக் குறிப்பிடுங்கள்.
7 வீட்டுக்காரருக்கு ஆங்கிலம் தெரியவில்லையென்றாலோ புதிய உலக மொழிபெயர்ப்பு அளிப்பு மறுக்கப்பட்டாலோ, ஒரு சிற்றேட்டை அல்லது 192-பக்க புத்தகத்தை அளிக்கலாம். ஆனால் இந்தப் பிரசுரத்தில் காணப்படும் நற்செய்தியும் வழிநடத்துதலும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டவை; ஆதலால் நடைமுறையானவை என்ற உண்மையைச் சிறப்பித்துக் காட்ட தவறாதீர்கள்.
8 ஆம், பைபிள் கடவுளுடைய வார்த்தைதான். நாம் அதை வாசித்து, நம்பி, நம்முடைய வாழ்க்கையில் அதன் அறிவுரைகளைப் பொருத்திப் பிரயோகிப்போமானால், பேரளவு பலன்களை நாம் அறுவடை செய்வோம். நமக்குப் போதனையையும் நம்பிக்கையையும் கொடுப்பதற்காகவே இது எழுதப்பட்டது. (ரோ. 15:4) ஒவ்வொரு நாளும் நாம் அதை வாசிப்பதும், மற்றவர்களுக்குப் போதிக்க அதைப் பயன்படுத்துவதற்குத் தயாராயிருப்பதும் இன்றியமையாததாக இருக்கிறது.