நம் ராஜ்ய பிரசங்க வேலையை முன்
னேற்றுவிக்க வழிகள்
1 நம்முடைய பிரசங்க வேலையானது எப்பொழுதும் இருந்ததைப் பார்க்கிலும் மிக அவசரமானதாக இருக்கிறது. ஜனங்கள் வாழ்வார்களா சாவார்களா என்பது நற்செய்திக்கு அவர்கள் பிரதிபலிப்பதையே சார்ந்திருக்கும். (1 பே. 4:5, 6, 17; வெளி. 14:6, 7) இதன் காரணமாக நம்முடைய ராஜ்ய பிரசங்க வேலையை முன்னேற்றுவிப்பதற்கான வழிகளை நாம் எப்பொழுதுமே தேடவேண்டும். முன்னேற்றம் செய்வதற்கான சில வழிகள் யாவை?
2 நன்கு தயாரியுங்கள்: நடப்பு மாத நம் ராஜ்ய ஊழிய இதழிலிருந்து, உங்களுடைய பிராந்தியத்தில் வாழும் பெருவாரியான ஜனங்களைக் கவருவதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு பிரசங்கத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். உள்ளூர் சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு உங்களுடைய குறிப்புகளை மாற்றி அமைத்துக்கொள்வது முக்கியம். அல்லது நீங்கள் தனிப்பட்டவகையில் பலனளிப்பதாகக் கண்டிருக்கும் கருத்துக்களையும் வேதவசனப் பகுதிகளையும் வைத்து, நீங்கள் சொந்தமாக தயாரித்த ஒரு பிரசங்கத்தைத் தெரிந்துகொள்ளலாம். ஆர்வத்தைத் தூண்டும் ஒரு அறிமுகம் உங்களுக்குத் தேவைப்படும். (நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 9-15-ஐப் பாருங்கள்.) ஒருவேளை எண்ணத்தைக் கிளறிவிடும் ஒரு கேள்வியைக் கேட்கவேண்டும் என்றோ உள்ளூர் அக்கறைக்குரிய ஏதேனும் ஒரு செய்தியின் பேரிலான வீட்டுக்காரரின் கருத்தைக் கேட்கவேண்டும் என்றோ நீங்கள் யோசிக்கலாம். மனதில் தயாரித்து வைத்திருக்கும் பிரசங்கத்தை உங்களுடைய முன்னேற்றத்திற்காக ஆலோசனைகளை வழங்கக்கூடிய குடும்ப அங்கத்தினர் ஒருவரோடோ மற்றொரு பிரஸ்தாபியோடோ சேர்ந்து அதை சொல்லிப் பாருங்கள்.
3 மக்களோடு உரையாடுங்கள்: முக்கியமான ஒரு செய்தியைச் சொல்லுவதே நம்முடைய நோக்கமாக இருக்கிறது. நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பவரை அர்த்தமுள்ள ஒரு உரையாடலில் ஈடுபடுத்துவதன் மூலம் இது செய்யப்படலாம். வீட்டுக்காரர் மறுப்புத் தெரிவிப்பாரானால் அல்லது ஒரு அபிப்பிராயத்தைச் சொன்னாரானால், அவர் சொல்வதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேளுங்கள். அவருடைய குறிப்புகளானது உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையைப் பற்றிய ஒரு வேதப்பூர்வமான பதிலைக் கொடுக்க உங்களுக்கு உதவும். (1 பே. 3:15) அவருடைய கருத்து பைபிளுக்கு இசைவானதாக இல்லாமல் இருக்குமானால், “நீங்கள் யோசிக்கிறதைப் போல்தான் அநேகர் யோசிக்கின்றனர். இருப்பினும் இந்த விஷயத்தை இப்படியொரு கோணத்திலும் பார்க்கலாம்,” என்று சாதுரியமாக நீங்கள் சொல்லலாம். பிறகு ஒரு பொருத்தமான வசனத்தை வாசித்து அவருடைய குறிப்பைக் கேளுங்கள்.
4 மாற்றிக்கொள்ளத்தக்க கால அட்டவணையைப் போடுங்கள்: ஜனங்களிடம் உங்களால் பேசமுடியாமல் போய்விட்டால், நீங்கள் நன்கு தயாரித்திருப்பதற்கு அவ்வளவு மதிப்பில்லாமல் போய்விடும். நாம் வீட்டுக்கு வீடு ஊழியத்திற்குப் போகும்போது ஒருசில வீட்டுக்காரர்களையே காண்பது இன்று பொதுவான காரியமாக இருக்கிறது. உங்களுடைய பிராந்தியத்திலும் அப்படித்தான் இருக்கிறதென்றால், அநேக ஆட்கள் வீட்டில் இருக்கும் சமயத்தில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்படி உங்களுடைய அட்டவணையை மாற்றியமைத்துக்கொள்ள முயலுங்கள். ஆட்களை வீடுகளில் சந்திக்க மிகச் சிறந்த சமயம் வாரயிறுதி நாட்கள் என்று நீங்கள் காணலாம்; மற்றவர்களை ஒருவேளை வாரநாட்களில் ஆனால் சாயங்கால நேரங்களில்தான் எளிதில் காணமுடியலாம். சில பகுதிகளில் உலகப்பிரகாரமான விடுமுறை நாட்களில் சாட்சிகொடுப்பதை அனுகூலமானதாக பிரஸ்தாபிகள் கண்டிருக்கலாம், காரணம் என்னவென்றால் அன்றுதான் அநேக ஜனங்களை வீடுகளில் காணமுடிகிறது. அத்தகைய சமயங்களில்தான் மக்கள் பொதுவாகவே கவலையற்ற சாவகாசமான மனநிலையில் இருந்து உரையாடுவதற்கு அதிக விருப்பத்தைக் காட்டுகின்றனர். உங்களுடைய அறிமுகத்தைச் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்து குறிப்புகளை ஒரு வேதப்பூர்வமான விஷயத்தோடு தொடர்புபடுத்துவது நல்லதாக இருக்கும்.
5 உங்களுடைய பிரசங்கம் எந்தளவு பலனுள்ளதாக இருக்கிறது என்று சீர்தூக்கிப்பாருங்கள்: ஒவ்வொரு வீட்டிலும் பேசி முடித்தப் பின்னர், உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் வீட்டுக்காரரின் இருதயத்தைச் சென்றெட்டினேனா? அவர் தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும்படி செய்து, அவர் சொன்ன காரியங்களைக் கவனமாகக் கேட்டேனா? நான் சாதுரியமாக பதில் சொன்னேனா? சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, மிகச் சிறந்த அணுகுமுறையை நான் பயன்படுத்தினேனா?’ ஊழியத்தில் உங்களுடைய சொந்த பலனுள்ள தன்மையை முன்னேற்றுவிக்கும் எண்ணத்தோடு, அனுபவமுள்ள ஒரு பிரஸ்தாபியோடோ ஒரு பயனியரோடோ அவ்வப்போது ஊழியம் செய்வதும், அவருடைய பிரசங்கங்களைக் கூர்ந்து கவனிப்பதும் உதவியாய் இருக்கலாம்.
6 உங்களுடைய வேலையில் திறம்பட்டவராக இருந்தால், ‘உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சிக்கும்’ ராஜ்ய சத்தியங்களை உங்களால் பகிர்ந்துகொள்ளமுடியும்.—1 தீ. 4:16; நீதி. 22:29.