பத்திரிகை அளிப்புக்கு சொந்தமாகவே தயாரியுங்கள்
1 காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் காலத்துக்கேற்ற, தகவல்நிறைந்த கட்டுரைகளைக் கொண்டிருப்பதால் அவற்றை நாம் போற்றுகிறோம்; அவை உலக பிரச்சினைகள் முதல் ‘தேவனுடைய ஆழங்கள்’ வரை, எல்லா விஷயங்களையும் உள்ளடக்குகின்றன. (1 கொ. 2:10) இப் பத்திரிகைகளிலிருந்து நாம் வாசித்திருக்கும் புதிய மற்றும் கட்டியெழுப்பும் விஷயங்கள் பலவற்றை நாம் அனைவருமே நினைவுபடுத்திப் பார்க்கிறோம். சத்தியத்தைப் படிப்படியாக வெளிப்படுத்துவதில் யெகோவா இப் பத்திரிகைகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். (நீதி. 4:18) ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தனிப்பிரதியாகவும் சந்தாவாகவும் அளிப்பதன் மூலம் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்குப் பரவலாக அவற்றை விநியோகிப்பதில் ஆவலாயிருக்க நாம் விரும்புகிறோம்.
2 உங்கள் பிராந்தியத்தை ஆராயுங்கள்: உங்கள் பகுதியில் எப்படிப்பட்ட ஜனங்கள் வசிக்கின்றனர்? அவர்கள் எப்பொழுதுமே அவசரத்தில் இருந்தால், சுருக்கமானதும், குறிப்பானதுமான ஓர் அளிப்பை நீங்கள் தயாரிக்க வேண்டியதாய் இருக்கலாம். சாவகாசமான வாழ்க்கையை நடத்தும் ஜனங்கள் வசிக்கின்ற ஒரு பிராந்தியமாய் இருந்தால், உங்களால் நிறைய பேச முடியலாம். வீட்டுக்காரரில் பெரும்பாலானோர் பகல் நேரத்தில் வேலைக்குச் செல்பவர்களாய் இருந்தால், பிந்திய பிற்பகலில் அல்லது முந்திய மாலைப்பொழுதில் அவர்களின் வீடுகளில் அவர்களைச் சந்திப்பதில் அதிக வெற்றியை நீங்கள் அடையலாம். தெரு ஊழியம் செய்வதன் வாயிலாகவோ கடைக்குக் கடை ஊழியம் செய்வதன் வாயிலாகவோ பகல் நேரத்தில் சிலரிடம் நீங்கள் தொடர்புகொள்ளலாம். பஸ் நிலையங்கள் அல்லது இரயில் நிலையங்களுக்கு அருகிலும் பூங்காக்களிலும் ஜனங்களை சந்தர்ப்பவசமாக அணுகுவதன் மூலம் சில பிரஸ்தாபிகள் நல்ல பலன்களைப் பெறுகின்றனர்.
3 பத்திரிகைகளில் உள்ளவற்றை நன்கு தெரிந்து வைத்திருங்கள்: ஒவ்வொரு இதழையும் நீங்கள் பெற்றவுடனேயே வாசியுங்கள். உங்கள் பிராந்தியத்திலுள்ள ஜனங்களுக்குப் பொருத்தமாய் இருக்கலாம் என்பதாய் நீங்கள் நினைக்கும் கட்டுரைகளைத் தெரிந்தெடுங்கள். எப்படிப்பட்ட விஷயங்கள் அவர்களின் அக்கறையைத் தூண்டுகின்றன? நீங்கள் சிறப்பித்துக் காட்ட திட்டமிடும் கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டுவதற்கு ஒரு திட்டவட்டமான குறிப்பைத் தேடிப்பாருங்கள். ஆர்வத்தைத் தூண்டுவதற்காக நீங்கள் எழுப்பக்கூடிய ஒரு கேள்வியைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள். வாய்ப்பு கிடைத்தால், வீட்டுக்காரருக்கு வாசித்துக் காட்ட, சந்தர்ப்பத்துக்கேற்ற ஒரு வேதவசனத்தைத் தெரிந்தெடுங்கள். வீட்டுக்காரர் ஒரு சந்தாவைப் பெற்றுக்கொள்வதற்கு அவரைத் தூண்டுவிக்க நீங்கள் என்ன சொல்லலாம் என்பதைப் பற்றியும், ஒரு மறுசந்திப்புக்கான அஸ்திவாரத்தை எவ்வாறு போடலாம் என்பதைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள்.
4 உங்கள் அறிமுகத்தைத் தயாரியுங்கள்: உங்களை அறிமுகம் செய்வதிலும் ஒரு சம்பாஷணையைத் துவங்குவதிலும் நீங்கள் பயன்படுத்த திட்டமிடும் வார்த்தைகளைக் கவனத்துடன் தெரிந்தெடுங்கள். சிலர் இந்த ஆரம்பக் குறிப்புகளைக் கூறுவதன் மூலம் வெற்றி கண்டிருக்கின்றனர்: “இந்தப் பத்திரிகையில் சுவாரஸ்யமான ஒரு கட்டுரையை நான் படித்தேன். அதைப் பற்றி மற்றவர்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்.” பலர் தாங்கள் பயன்படுத்தத் திட்டமிடும் பேச்சுக்குறிப்பின்மீது கவனத்தை ஈர்க்கும் ஒரு கேள்வியுடன் ஆரம்பிக்கின்றனர். உதாரணமாக:
5 குற்றச்செயல் பெருகியிருப்பதாகக் கூறும் ஒரு கட்டுரையைச் சிறப்பித்துக் காட்டுவதாய் இருந்தால், நீங்கள் இவ்வாறு கேட்கலாம்:
◼ “ராத்திரி நேரத்தில் எவராவது நம் வீட்டைக் கொள்ளையடித்து விடுவார்கள் என்றோ, அல்லது நமக்கு ஏதாவது கெடுதல் ஏற்பட்டுவிடும் என்றோ பயப்படாமல், நாம் நிம்மதியாய்த் தூங்குவதற்காக என்ன செய்யப்பட வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” இப் பிரச்சினைக்கான ஒரு பரிகாரத்தைப் பற்றிய ஒரு தகவல் உங்களிடம் இருப்பதாக விளக்குங்கள். அப் பரிகாரம், மற்றெல்லாவித சமூக சீர்குலைவையும் விரைவில் நீக்கப்போகிறது. அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை அளிக்கும் ஏதாவது ஒன்றை அந்தப் பத்திரிகையிலிருந்து குறிப்பிட்டுக் காட்டுங்கள். நீங்கள் மறுபடியும் செல்லுகையில், அறிவு புத்தகத்தின் முதல் அதிகாரத்திற்கு வீட்டுக்காரரின் கவனத்தை ஈர்க்கலாம்.
6 குடும்ப வாழ்க்கையைப் பற்றிக் கூறும் ஒரு கட்டுரையைக் காட்டுகையில், நீங்கள் இவ்வாறு கூறலாம்:
◼ “இந்தக் காலத்தில் ஒரு குடும்பத்தை நடத்துவதென்பது உண்மையிலேயே ஒரு சவாலாய் இருப்பதாக பெற்றோர்களில் நிறைய பேர் நினைக்கிறார்கள். இப் பொருளின் பேரில் பல புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன; ஆனால் அப்படிப்பட்ட நிபுணர்களும்கூட ஒரேவிதமான கருத்துள்ளவர்களாய் இருப்பதில்லை. இல்லையா? அப்படியானால், நம்பத்தகுந்த வழிகாட்டுதலைக் கொடுக்கிறமாதிரி யாராவது இருக்கிறார்களா?” பைபிளில் காணப்படும் ஞானமான புத்திமதியை மெய்ப்பித்துக் காட்டும் ஒரு திட்டவட்டமான குறிப்பை அந்தப் பத்திரிகையிலிருந்து தெரியப்படுத்துங்கள். நீங்கள் மறுசந்திப்பு செய்கையில், பிள்ளைகளை வளர்ப்பது சம்பந்தமாக அறிவு புத்தகம், பக்கங்கள் 145-8-ல் கூறப்பட்டுள்ள வேதப்பூர்வமான குறிப்புகளைக் கலந்தாலோசியுங்கள்.
7 சமூக பிரச்சினை ஒன்றைப் பற்றிக் கூறும் ஒரு கட்டுரையைச் சிறப்பித்துக் காட்டுகையில், நீங்கள் இவ்வாறு கூறலாம்:
◼ “நாம் கஷ்டகாலத்தில் வாழ்ந்து வருவதினால், பலர் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியெல்லாம் நாம் தவித்துக்கொண்டு இருக்கவேண்டும் என்றுதான் கடவுள் திட்டமிட்டிருந்தார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” இன்றைய பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது என்பதைக் காட்டும் அல்லது கவலையிலிருந்து விடுபட்டிருக்கும் ஓர் எதிர்காலத்துக்காகக் காத்திருப்பதற்கான காரணங்களை அளிக்கும் ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். உங்களுடைய அடுத்த சந்திப்பில், அறிவு புத்தகத்தின் பக்கங்கள் 4-5-ல் உள்ள விளக்கத்தையும் தலைப்பையும் கலந்தாலோசித்து, அதன் பிறகு நேரடியாக ஒரு வீட்டு பைபிள் படிப்பைத் தொடங்குங்கள்.
8 வீட்டுக்காரருக்கு ஏற்றவாறு மாற்றியமையுங்கள்: வித்தியாசமான அக்கறைகளையும் பின்னணிகளையும் கொண்டிருக்கும் ஜனங்களை நீங்கள் சந்திப்பீர்கள். ஒவ்வொரு வீட்டுக்காரருக்கும் ஏற்றவாறு நீங்கள் மாற்றிக்கொள்ளும் வகையில் ஓர் அடிப்படை அளிப்பைத் தயாரியுங்கள். ஓர் ஆண், ஒரு பெண், ஒரு முதியவர் அல்லது ஓர் இளைஞன் ஆகியோருக்கு ஏற்றவாறு நீங்கள் எவ்வாறு மாற்றியமைத்துக்கொள்ளலாம் என்பதை மனதில் யோசித்து வைத்திருங்கள். நீங்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதைப் பற்றிய கெடுபிடியான சட்டங்கள் எவையும் இல்லை. எதெல்லாம் உங்களுக்கு வசதியாயும் பலனளிப்பதாயும் தோன்றுகிறதோ, அதையெல்லாம் சொல்லுங்கள். என்றபோதிலும், உற்சாகமுள்ளவராய் இருங்கள், இருதயத்திலிருந்து பேசுங்கள், நன்கு செவிகொடுத்துக் கேட்கும் ஒருவராயும் இருங்கள். ‘சரியான மனப்போக்கிலுள்ளவர்கள்’ உங்களுடைய உள்ளார்ந்த தன்மையைப் புரிந்துகொண்டு, சாதகமாய்ப் பிரதிபலிப்பார்கள்.—அப். 13:48, NW.
9 ஒருவருக்கொருவர் உதவியாய் இருங்கள்: ஒருவரோடொருவர் கருத்துக்களைப் பரிமாற்றம் செய்துகொள்வதன் மூலம், நாம் சொல்லவிருப்பதைத் தெரிவிக்கப் புதிய வழிகளை கற்றுக்கொள்கிறோம். நம் அளிப்புகளைச் சேர்ந்து பழகிக்கொள்வது, நமக்கு அனுபவத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. (நீதி. 27:17) நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை ஒத்திகை செய்து பார்த்தால், வீட்டுக்குவீடு செல்லும்போது, கூச்சமோ பயமோ இன்றி இருப்பீர்கள். பிள்ளைகள் தயாரிப்பதற்கு உதவி செய்ய பெற்றோர் நேரமெடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அளிப்புகளை அவர்கள் பழகிப் பார்க்கும்போது செவிகொடுங்கள்; முன்னேற்றத்துக்கான ஆலோசனைகளை அளியுங்கள். மிகவும் அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபிகளோடு சேர்ந்து ஊழியம் செய்வதன் மூலம் புதியவர்கள் பலனடையலாம்.
10 பத்திரிகை அளிப்புக்கு சொந்தமாகவே தயாரிப்பது கடினமாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. அது வெறுமனே சொல்லவிருக்கும் ஏதோவொன்றைத் திட்டவட்டமாய் மனதில் வைத்திருப்பதும், பிறகு மனதுக்குக் கவர்ச்சியூட்டும் வகையில் அதைத் தெரிவிப்பதுமே ஆகும். முன்முயற்சியுடனும், முன்யோசனையுடனும், ஒரு சாதகமான பிரதிபலிப்பைப் பெறும் ஒரு நேர்த்தியான அளிப்பை உங்களால் தயாரிக்க முடியும்.
11 உலகளவில் ராஜ்ய செய்தியை நாம் பரப்புவதற்கு பத்திரிகை விநியோகம் முக்கியத்துவம் வாய்ந்த வழிகளில் ஒன்றாய் இருக்கிறது. உண்மை மனமுள்ள ஜனங்களிடம், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை தனிப்பிரதியாகவோ சந்தாக்களாகவோ நீங்கள் அளிக்க முடிந்தால், மற்றவற்றை அப் பத்திரிகைகளே பேச முடியும். அவற்றின் மதிப்பையும், அவற்றின் செய்தி உயிர்களைக் காக்கவல்லது என்பதையும் எப்பொழுதும் நினைவில் வையுங்கள். இந்த வகையில் ‘நன்மை செய்வதும், உங்களுக்குள்ளதைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதும்தான்’ யெகோவாவை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது.—எபி. 13:16, NW.