மற்றவர்களுக்கு அக்கறை காட்டுங்கள்—பாகம் 2
1 நம்முடைய சமுதாயத்தில் வாழும் ஜனங்களோடு நியாயமாக நம்மால் எந்தளவு முடியுமோ அந்தளவு நல்ல உறவுமுறையைக் காத்துக்கொள்ள விரும்புகிறோம். அப்படியானால் அவர்களுடைய உரிமைகளையும் உணர்ச்சிகளையும் நாம் கருத்தில் கொண்டு, அவற்றை மதிக்கவேண்டியது அவசியமாக இருக்கிறது.
2 யெகோவாவின் சாட்சிகள் நன்னடத்தைகளுக்குப் பேர்போனவர்கள். அயலகத்திலும் பள்ளியிலும் வேலை செய்யுமிடத்திலும் நம்முடைய மாநாடுகளிலும்கூட நம் நல்லொழுக்க தராதரங்கள் அநேக பாராட்டுதல்களுக்குரிய விஷயமாக இருந்திருக்கின்றன.—ஜூன் 15, 1989, ஆங்கில காவற்கோபுரம், பக்கம் 20-ஐக் காண்க.
3 சந்தேகமின்றி நன்னடத்தையானது, நேர்மை, ஊக்கம், நல்ல ஒழுக்கங்கள் போன்ற பல காரியங்களை உள்ளடக்குகிறது. நம்முடைய ராஜ்ய மன்றத்தைச் சுற்றி குடியிருக்கும் ஜனங்களோடு மரியாதையோடு நடந்துகொள்வதையும்கூட இது உட்படுத்துகிறது. நம்முடைய அயலகத்தார்மீது அக்கறை காண்பிக்கத் தவறினால், மற்ற அனைத்து விஷயங்களிலும் நாம் காண்பிக்கும் தெய்வ பக்தியோடுகூடிய நடத்தையானது அசட்டை செய்யப்பட்டுவிடும். “சுவிசேஷத்திற்குப் பாத்திரராக . . . நடந்துகொள்ளுங்கள்,” என்று பவுல் நம்மை உந்துவித்தார்.—பிலி. 1:27.
4 அவ்வப்போது, சில ராஜ்ய மன்றங்களுக்கருகில் வாழும் ஜனங்கள் முறையிட்டிருக்கின்றனர். ஏனென்றால் கூட்டத்திற்கு வருபவர்கள் அக்கறை காட்டாதிருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர். சகோதர சகோதரிகள் ராஜ்ய மன்றத்தின் முன் வாயிலில் கூடிநின்று, அடுத்த வீடுகளுக்கெல்லாம் கேட்குமளவுக்கு சத்தம்போட்டு பேசிக்கொண்டிருப்பதைத் தவிர்க்கவேண்டும். பிள்ளைகள் ராஜ்ய மன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் ஓடித்திரியும்படி விடக்கூடாது. யோசனையின்றி கார் கதவுகளைப் படாரென்று சாத்துவதோ ஸ்கூட்டர் ஹார்ன்களை அடிப்பதோ பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தொல்லையாக இருக்கலாம். இத்தகைய நடத்தைகள் சபைக்கு மோசமான அபிப்பிராயத்தையே சம்பாதித்துத் தருகின்றன. மேலும் அந்தப் பகுதியில் உள்ள போக்குவரத்து விதிமுறைகள் அனைத்திற்கும் நாம் கட்டுப்பட்டு நடப்பதும் முக்கியமானதாக இருக்கிறது.—ரோ. 13:1, 2, 5.
5 வண்டிகளை நிறுத்துவது சம்பந்தமாகவும் இதைப்போன்ற பிரச்சினைகள் எழும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கார்களையும் ஸ்கூட்டர்களையும் அல்லது சைக்கிள்களையும்கூட மற்றவர்களுடைய சொந்த இடத்திலோ அல்லது போக்குவரத்தைத் தடைசெய்யும் இடங்களிலோ அல்லது வீடுகள் அல்லது கடைகளின் நுழைவாயிலை மறைக்கும்படியோ நிறுத்தக்கூடாது. பக்கத்தில் இருக்கும் வியாபார ஸ்தாபனங்கள் அனுமதி வழங்கினாலொழிய அவர்களுடைய வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காகப் பராமரித்துவரும் இடங்களை உபயோகிக்கக்கூடாது. மூன்றோ நான்கோ சபைகள் ஒரே ராஜ்ய மன்றத்தை உபயோகிக்கும் இடங்களில், அநேகமாக ஒவ்வொரு நாளும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆகவே மூப்பர் குழுக்கள் மத்தியில் நெருக்கமான ஒத்துழைப்பு தேவையாக இருக்கிறது.—காவற்கோபுரம், டிசம்பர் 1, 1989, பக்கம் 21, பாரா 13-ஐக் காண்க.
6 “எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்,” என்று பைபிள் நம்மை உந்துவிக்கிறது. அது சபைக்கு வெளியிலுள்ள ஆட்களுக்குக் கரிசனை காண்பிப்பதையும் உட்படுத்துகிறது. (1 கொ. 10:31-33) நாம் ‘பிறருடைய அக்கறைகளை மனதில் கொண்டிருந்தோமானால்,’ மற்றவர்களுடைய சொந்த இடத்தில் அனுமதியின்றி நுழையமாட்டோம். (பிலி. 2:4) உள்ளூர் வியாபாரிகளின் வியாபாரத்தில் தலையிடுவதையும் நாம் தவிர்ப்போம்.
7 சபைக்கு உள்ளேயும் வெளியேயும்—மற்றவர்களுக்கு அக்கறை காட்டுவதுதானே—நம்முடைய இருதயத்தில் என்ன உணருகிறோம் என்பதை வெளிக்காட்டுவதாக இருக்கிறது. நாம் செய்வதும் சொல்வதும் ‘நம்மைப் போலவே நம் அயலாரிடத்தில் அன்புகூருகிறோம்’ என்பதை வெளிக்காட்டவேண்டும்.—மத். 7:12; 22:39.