தினந்தோறும் யெகோவாவைத் துதியுங்கள்
1 நம்முடைய கடவுளாகிய யெகோவா, அற்புதமான, அன்பான சிருஷ்டிகர், எல்லா உயிருக்கும் சந்தோஷத்திற்கும் ஊற்றுமூலர். அவருடைய மகத்துவத்தின் காரணமாக, அவருடைய எல்லா சிருஷ்டிப்பினிடமிருந்தும் துதியைப் பெறுவதற்கு உண்மையாகவே அவர் பாத்திரராயிருக்கிறார். தனிப்பட்டவிதமாக, சங்கீதக்காரன் சொன்ன விதமாகவே சொல்ல நாம் விரும்புகிறோம்: “நானோ . . . மேன்மேலும் உம்மைத் துதிப்பேன். என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்.” (சங். 71:14, 15) இதைச் செய்வதற்கு, நாம் நாள்தோறும் யெகோவாவைத் துதிப்பதற்கான வழிகளைத் தேடவேண்டும். மேலுமாக அவரைக் குறித்தும், அவருடைய நீதியைக்குறித்தும், இரட்சிப்பிற்கான அவருடைய ஏற்பாடுகளைக் குறித்தும் நல்ல விதத்தில் பேச நாம் உந்துவிக்கப்பட வேண்டும்.
2 யெகோவாவைத் துதிப்பதில் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் ஒரு நல்ல முன்மாதிரியை வைத்தனர். பெந்தெகொஸ்தே நாளன்று முழுக்காட்டுதல் பெற்ற 3,000 பேரைக்குறித்து, அப்போஸ்தலர் 2:46, 47-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, . . . தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.” அவர்கள் யெகோவாவைக் குறித்தும் அவருடைய மேசியாவைக் குறித்தும் அற்புதமான சத்தியங்களைக் கற்றுக்கொண்டு வந்தார்கள். அவர்களுடைய சந்தோஷம் பரவக்கூடியதாக இருந்தது, கேட்டுக் கற்றுக்கொள்ளும்படியாகவும், யெகோவாவைத் துதிக்கும்படியாகவும் இன்னும் மற்றவர்களை உற்சாகப்படுத்தியது.
3 ஒவ்வொரு நாளும் வாய்ப்புகள் கிடைக்கின்றன: இன்று அநேகம்பேர் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதன் மூலமாக தினந்தோறும் யெகோவாவைத் துதிக்கலாம் என்பதைக் கண்டிருக்கின்றனர். முன்கூட்டியே திட்டமிடுவது அவர்கள் அதிக பலன்தரக்கூடியவர்களாயிருக்க உதவுகிறது. சந்தர்ப்ப சாட்சியில் பங்குகொள்ளத் தீர்மானமாயிருந்த ஒரு சகோதரி தன்னுடைய காரின் இரண்டு ஜன்னல்களையும் யாரோ ஒருவர் நொறுக்கி உட்புகுந்திருப்பதைக் கண்டார். ஒர்க்ஷாப்பிற்கு போன் செய்தார். பிறகு மெக்கானிக்கிடம் சாட்சி கொடுக்கத் தயார் செய்தார். வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் ஜெபிப்பது அவருடைய தயாரிப்பில் உட்பட்டிருந்தது. இதன் விளைவாக, அவர் அந்த மெக்கானிக்கிடம் ஒரு மணிநேரம் சாட்சி கொடுத்து என்றும் வாழலாம் புத்தகத்தையும் அவரிடம் அளித்தார்.
4 தங்களுடைய நாய்களைக் கூட்டிக்கொண்டு இருவருமாக உலாவச் செல்லும்போதெல்லாம் மற்றுமொரு சகோதரி தன்னுடைய அடுத்த வீட்டுப்பெண்ணை எப்போதும் சந்தித்தார். ஒரு சந்திப்பின்போது, வாழ்க்கையினுடைய பிரச்சினைகளைக் குறித்து கருத்தார்ந்த விதத்தில் அவர்கள் உரையாடினர், அது இன்னும் அதிகமான கலந்தாலோசிப்புகளுக்கு வழிநடத்தினது. காலப்போக்கில், ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆர்வத்தைத் தூண்டும்விதமாக, அந்த அடுத்த வீட்டுப்பெண் தான் கடவுளின் மீதோ பைபிளின் மீதோ நம்பிக்கையற்றவளாயிருந்ததன் காரணமாக யெகோவாவின் சாட்சிகள் அவளுடைய வீட்டிற்கு வந்திருப்பார்களேயானால் தான் செவிகொடுத்திருக்கமாட்டாள் என்பதாகப் பின்பு ஒப்புக்கொண்டார்.
5 சிலர் தங்களுடைய வீட்டிற்கு விற்பனையாளர்கள் அல்லது மற்றவர்கள் வரும்போது அவர்களிடம் சாட்சிகொடுப்பதைக் கூடுமானதாகக் கண்டிருக்கின்றனர். அயர்லாந்தில் லைஃப் இன்ஷ்யூரன்ஸ் விற்கும் ஒரு நபர் ஒரு சகோதரியைச் சந்தித்தார். அவள் நித்திய ஜீவனை அனுபவிப்பதை எதிர்நோக்கியிருப்பதாக விளக்கினாள். ஒரு ரோமன் கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டிருந்த இந்த நபருக்கு, இது முற்றிலும் ஒரு புதிய கருத்தாயிருந்தது. என்றும் வாழலாம் புத்தகத்தை அவர் ஏற்றுக்கொண்டார், பின் தொடர்ந்த வாரத்தில் கூட்டத்தில் கலந்துகொண்டார், ஒரு பைபிள் படிப்பைக் கொண்டிருக்கவும் ஒப்புக்கொண்டார். இப்பொழுது இந்த விற்பனையாளர் ஒரு முழுக்காட்டப்பட்ட சகோதரர்.
6 யெகோவாவைத் தினந்தோறும் துதிப்பதற்கான வாய்ப்புகளுக்காக நாம் அனைவருமே கவனமுள்ளவர்களாயிருக்க வேண்டும். சில பத்திரிகைகளையும் துண்டுப்பிரதிகளையும் பார்வைக்குத் தென்படக்கூடிய மற்றும் சந்திக்கவருபவர்களுக்கு உடனடியாக அளிப்பதற்கு ஏற்றயிடத்தில் வைப்பது உபயோகமானது. சில இடங்களில் பூங்காவிலிருக்கும் இருக்கையில் சிறிது நேரம் செலவிடுவது, அங்கே ஒரு சில நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டுப் போவதற்காக வரும் மற்றவர்களிடம் சாட்சிகொடுக்க அநேக வாய்ப்புகளை உங்களுக்குக் கொடுக்கக்கூடும். இளவயது சாட்சிகள் சிலர் தங்களுடைய பள்ளியில் பைபிள் பிரசுரங்களை தங்கள் மேஜையின் மேல் வைக்கின்றனர். அதைப்பார்த்துக் கேள்விகள் கேட்கும் எவரிடமாவது சம்பாஷணையைத் துவங்குவதற்கான ஒரு வழியாக இது இருக்கிறது. நீங்கள் பயன்படுத்துவதற்காக ஓரிரண்டு வேதவசனக்குறிப்புகளை நினைவில் வையுங்கள். உங்களுக்கு உதவி செய்யும்படியாக யெகோவாவிடம் கேளுங்கள். அவ்வாறு செய்வதற்காக நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.—1 யோ. 5:14.