இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி தினந்தோறும் சத்தியத்தை அறிவித்தல்
1 இயேசு பூமிக்கு வந்தபோது அவர் நிறைவேற்ற வேண்டிய ஒரு திட்டவட்டமான வேலை இருந்தது. அது குறிப்பிடத்தக்க விதத்தில் எளிமையாக இருந்தது: ‘சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுப்பதாகும்.’ (யோவா. 18:37) தம்முடைய தகப்பனின் அற்புதமான குணங்களையும் நோக்கங்களையும் அவர் அறிவித்தார். இந்த வேலை அவருக்கு போஜனத்தைப் போல இருந்தது; அவருடைய முழு வாழ்க்கையும் அதைச் சுற்றியே இருந்தது. (யோவா. 4:34) இயேசு ‘நாடோறும் தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தார்,’ என்று லூக்கா அறிவிக்கிறார். (லூக். 19:47) கிடைத்த சமயத்தை இயேசு உச்ச அளவுக்கு பயன்படுத்தினார். (யோவா. 9:4) தம்முடைய மரணத்திற்குச் சற்று முன்பாக, தம்முடைய தகப்பனிடம் அவர் இவ்வாறு கூறக்கூடியவராக இருந்தார்: “பூமியில் நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.”—யோவா. 17:4.
2 யெகோவா செய்திருக்கிற எல்லாவற்றுக்கும் நம் இருதயங்கள் நன்றியுடன் நிறைந்திருக்கும்போது, தினந்தோறும் அவரைப்பற்றிப் பேசுவதற்கு நாம் கட்டாயப்படுத்தப்பட்டவர்களாக மேலும் உணருகிறோம். “நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே,” என்று இயேசுவின் சீஷர்கள் தைரியமாக அறிவித்ததைப்போலவே, நாமும் இருக்கிறோம். (அப். 4:20) ‘தினந்தோறும் . . . இடைவிடாமல்,’ என்று பதிவு கூறுகிறபடி யெகோவாவைப் பற்றி அவர்கள் பேசுவது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருந்தது. (அப். 5:42) ‘என் போதகரான இயேசுவை நான் பின்பற்றுகிறேனா?’ என்று நம்மைநாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
3 அவசர உணர்வுடன் பிரசங்கிப்பது: ராஜ்யத்தினுடைய சுவிசேஷம் பூமியெங்கும் அறிவிக்கப்பட்ட “பிறகு முடிவு வரும்,” என்று இயேசு முன்னறிவித்தார். (மத். 24:14, NW) இது நம் வேலையின் முக்கியத்துவத்தையும் அவசரத்தன்மையையும் பற்றிய ஆழமான பாதிப்பை நம்மேல் உண்டாக்க வேண்டும். சொல்லர்த்தமாகவே, லட்சக்கணக்கானவர்களின் உயிர்கள் ஆபத்தில் இருக்கும்போது, வேறு எந்தச் செயலையும் இதைவிட முக்கியமானதாகவோ அல்லது பயனுள்ளதாகவோ கருதக்கூடாது. இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு நெருங்கிவந்துகொண்டிருப்பதால், இந்த வேலையை நிறைவேற்றத் தேவைப்படுகிற அவகாசம் குறைந்துவருகிறது!
4 செம்மறியாடு போன்றவர்களை கூட்டிச்சேர்க்கும் வேலையை யெகோவா தீவிரமாய் நடப்பிக்கிறார் என்று அறிக்கைகள் காண்பிக்கின்றன. (ஏசா. 60:22) உலகத்தின் பல்வேறு பாகங்களிலும், சத்தியத்தினிடமாக மக்கள் சொல்லர்த்தமாகவே திரண்டுவந்து, மகிழ்ச்சியுடன் மெய்யாகவே இவ்வாறு அறிவிக்கிறார்கள்: “தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால், உங்களோடேகூடப் போவோம்”! (சக. 8:23) முந்தி எந்தச் சமயத்திலும் இல்லாதளவுக்கு, இயேசுவின் பின்வரும் வார்த்தைகள் உண்மையாயுள்ளன: “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; . . . அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.” (மத். 9:37, 38) ‘நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்த’ இயேசுவின் சீஷர்களைப் போல வைராக்கியத்துடன் இருப்பதற்கு அது நம்மை உந்துவிக்கவில்லையா?—லூக். 24:53.
5 தினந்தோறும் சத்தியத்தை தெரியப்படுத்துங்கள்: தினந்தோறும், சத்தியத்தை மற்றவர்களுக்கு அறிவிக்கக்கூடிய வழிகளை நாம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். வாய்ப்புகள் உடனடியாக கிடைக்கின்றன. நீங்கள் கடைக்கு செல்லும்போது, கடைக்காரரிடம் ஒரு துண்டுப்பிரதியை அளிக்கும் எண்ணம் உங்களுக்கு வந்திருக்கிறதா? அல்லது, வீட்டில் பார்க்க இயலாமல்போன ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதலாம் அல்லவா? ஒரு நண்பரோ அல்லது அறிமுகமான ஒருவரோ கருத்துக்களை ஏற்றுக்கொள்ளக்கூடியவர் என்று நீங்கள் நினைத்தால், சில நிமிடங்கள் அவரிடம் தொலைபேசியில் பேசமுடியுமா? இதேபோல, உங்களுடைய நம்பிக்கையை மற்றவர்களுடன் தினந்தோறும் பகிர்ந்துகொள்ளக்கூடிய மற்ற பல வாய்ப்புகளை நீங்கள் நினைத்துப் பார்க்கலாம். நீங்கள் முயற்சி எடுத்து, சிறிது தைரியத்தை காண்பித்தால், யெகோவா உங்களுக்கு உதவி செய்வார்.—1 தெ. 2:2.
6 ஆகையால், ஒவ்வொரு நாளின் நடவடிக்கைகளையும் நாம் ஆரம்பிக்கும்போது, ‘இன்று ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய நம்பிக்கையை யாராவது ஒருவருடன் பகிர்ந்துகொள்ள முன்முயற்சி எடுப்பேனா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ளவேண்டும். ‘தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்க வேண்டும்,’ என்று தாம் பூமிக்கு அனுப்பப்பட்ட காரணத்தை விளக்கிய இயேசுவின் மனப்பான்மையைப் பின்பற்றுங்கள். (லூக். 4:43) நம்முடைய போதகரைப்போல இருக்கவேண்டுமானால், நாமும் இதையேதான் செய்வோம்.—லூக். 6:40.