வயல்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன
1. இன்று என்ன முக்கியமான வேலை நடந்துவருகிறது?
1 சமாரியப் பெண்ணிடம் சாட்சிகொடுத்த பிறகு இயேசு தம் சீடர்களிடம், “வயல்களை ஏறிட்டுப் பாருங்கள்; அவை விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன” என்றார். (யோவா. 4:35, 36) ஆம், ஆன்மீக அறுவடையைப் பற்றி இயேசு பேசினார். உலகெங்கும் இன்னும் எவ்வளவு வேலை செய்யப்பட வேண்டியிருக்கிறது என்பதை அவரால் பார்க்க முடிந்தது. இயேசு இன்று பரலோகத்தில் அரசராக இருந்தாலும் இந்த அறுவடை வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். (மத். 28:19, 20) உச்சக்கட்டத்தை எட்டப்போகிற இந்த வேலை, இன்னும் தீவிரமடைந்து வருகிறது என்பதற்கு என்ன அத்தாட்சிகள் இருக்கின்றன?
2. உலகளாவிய அறுவடை வேலை இன்னும் தீவிரமடைந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு என்ன அத்தாட்சிகள் இருக்கின்றன?
2 ஓர் உலகளாவிய அறுவடை: 2009-ஆம் ஊழிய ஆண்டில், உலகளவில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 3.2 சதவீதம் அதிகரித்தது. பிரசங்க வேலை கட்டுப்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் 14 சதவீத அதிகரிப்பு இருந்தது. மாதா மாதம் அறிக்கை செய்யப்பட்ட பைபிள் படிப்புகளின் எண்ணிக்கை 76,19,000-ஐத் தாண்டியது; இது, பிரஸ்தாபிகளின் உச்ச எண்ணிக்கையைவிட அதிகம்; அதோடு, முந்தின ஊழிய ஆண்டில் அறிக்கை செய்யப்பட்டிருந்த பைபிள் படிப்புகளின் எண்ணிக்கையைவிட கிட்டத்தட்ட 5 லட்சம் அதிகம். பல இடங்களில் இந்த அறுவடை வேலை படுமும்முரமாக நடைபெறுவதால், பயிற்சி பெற்ற பயனியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. பல நாடுகளில் வேற்று மொழி பிராந்தியங்கள் நல்ல பலன் தந்திருக்கின்றன. அறுவடையின் இறுதிக் கட்டத்தில் வேலையை யெகோவா தீவிரப்படுத்துகிறார் என்பதையே இது காட்டுகிறது. (ஏசா. 60:22) அப்படியானால், உங்கள் ‘வயல்களும்’ நல்ல பலன் தரும் என்று நினைக்கிறீர்களா?
3. தங்கள் பிராந்தியத்தைக் குறித்து சிலர் என்ன நினைக்கலாம்?
3 உங்கள் பிராந்தியத்தில் அறுவடை: “எங்கள் பிராந்தியத்தில் அந்தளவு பலன் கிடைப்பதில்லை” என்று சிலர் சொல்லலாம். உண்மைதான், சில பிராந்தியங்களைப் பொறுத்தமட்டில், அவை மற்ற பிராந்தியங்களை மாதிரி பலன் தராததுபோல் தெரியும்; அல்லது அவை முன்பு பலன் தந்த அளவுக்கு இப்போது பலன் தராததுபோல் தெரியும். இதைப் பார்த்துச் சில சாட்சிகள்... “எங்கள் பிராந்தியத்தில் ஏற்கெனவே அறுவடை முடிந்துவிட்டதாகத் தெரிகிறது; அப்படியே இருந்தாலும் சிந்திச் சிதறியிருக்கிற சில ‘தானியங்களைத்தான்’ சேகரிக்க வேண்டியிருக்கும்!” என்று நினைக்கலாம். ஆனால், உண்மை அதுதானா?
4. ஊழியம் சம்பந்தமாக என்ன மனநிலையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும், ஏன்?
4 அறுவடை என்று சொன்னாலே... அது ஆரம்பம் முதல் முடிவு வரை மும்முரமாகச் செய்யப்பட வேண்டிய வேலையாகும். இயேசு சொன்ன வார்த்தைகளிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது: “அறுவடை மிகுதியாக இருக்கிறது, வேலையாட்களோ குறைவாக இருக்கிறார்கள். அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் எஜமானரிடம் கெஞ்சிக் கேளுங்கள்.” (மத். 9:37, 38) கடவுளாகிய யெகோவாவே அறுவடையின் எஜமான் என்பதால், எப்போது... எங்கே... பலன் மிகுதியாகக் கிடைக்கும் என்பது அவருக்குத்தான் தெரியும். (யோவா. 6:44; 1 கொ. 3:6-8) அப்படியானால், நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? “காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே [அதாவது, தளர விடாதே]” என்று பைபிள் சொல்கிறது. (பிர. 11:4-6) ஆம், அறுவடை உச்சக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் நம்முடைய கைகளைத் தளர விடக் கூடாது.
5. பலன் தராத பிராந்தியத்திலும் ஏன் பக்திவைராக்கியத்தோடு நற்செய்தியைத் தொடர்ந்து அறிவிக்க வேண்டும்?
5 அறுவடையில் தொடர்ந்து ஈடுபடுங்கள்: நம்முடைய பிராந்தியத்தில் நாம் அடிக்கடி ஊழியம் செய்திருக்கலாம்; அங்குள்ளவர்கள் நற்செய்திக்குச் செவிசாய்க்காதவர்கள்போல் தோன்றலாம். அப்படியிருந்தாலும், பக்திவைராக்கியத்தோடும் அவசர உணர்வோடும் ஊழியம் செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. (2 தீ. 4:2) ஏனென்றால், உலகளவில் ஏற்படும் அதிரடி மாற்றங்களைப் பார்த்து மக்களின் மனநிலை மாறலாம்; அதனால் எதிர்காலத்தைக் குறித்து அவர்கள் தீவிரமாக யோசிக்க ஆரம்பிக்கலாம். இளைஞர்கள் வளர்ந்து வரும்போது வாழ்க்கையில் தங்களுக்குப் பாதுகாப்பும் மனநிம்மதியும் தேவையென்று உணரலாம். நாம் விடாமுயற்சியோடு ஊழியம் செய்வதைப் பார்த்தும் சிலர் சத்தியத்தினிடம் ஈர்க்கப்படலாம். ஆம், முன்பு நற்செய்திக்குச் செவிசாய்க்காமல் இருந்தவர்களும் இப்போது செவிசாய்க்கலாம். நாம் சொல்கிற செய்தியை வேண்டுமென்றே மறுப்பவர்களும்கூட எச்சரிக்கப்பட வேண்டும். மறுபட்சத்தில்... பிராந்தியத்தில் அநேகர் நம் செய்திக்குச் செவிசாய்க்காதவர்களாக இருப்பதோடு அதை எதிர்ப்பவர்களாகவும் இருந்தால் நாம் மிகவும் ஜாக்கிரதையாக ஊழியம் செய்ய வேண்டும்.—எசே. 2:4, 5; 3:19.
6. நம் பிராந்தியத்தில் பிரச்சினை ஏற்பட்டாலும் ஊழியத்தில் தொடர்ந்து ஆர்வமாய் ஈடுபட நாம் என்னென்ன செய்யலாம்?
6 நம் பிராந்தியத்தில் பிரச்சினைகள் ஏற்படும்போது ஊழியத்தில் தொடர்ந்து ஆர்வமாய் ஈடுபட நாம் என்னென்ன செய்யலாம்? வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யத் திட்டமிடுவதோடு வேறு விதங்களிலும் ஊழியம் செய்ய நாம் திட்டமிடலாம். உதாரணத்திற்கு, வியாபார பிராந்தியங்களில் சாட்சிகொடுப்பது, டெலிபோனில் சாட்சிகொடுப்பது போன்ற வித்தியாசமான முறைகளில் ஊழியம் செய்யலாம். அல்லது வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தி மக்களிடம் சாட்சி கொடுக்கலாம். ‘முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை உடையவர்களை’ தேடிக் கண்டுபிடிக்கையில் நாம் விவேகமாயும் சாதுரியமாயும் நடந்துகொள்வது அவசியம். (அப். 13:48) வழக்கமாக ஊழியம் செய்கிற நேரத்தைத் தவிர்த்து வேறு சமயங்களில் ஊழியம் செய்யலாம். ஆட்கள் பெரும்பாலும் வீட்டில் இருக்கிற நேரங்களில், அதாவது மாலை நேரங்களில் அல்லது மற்ற நேரங்களில் ஊழியம் செய்யலாம். இன்னும் நிறையப் பேரிடம் சாட்சிகொடுப்பதற்காக, முடிந்தால் வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ளலாம். நம் ஊழியத்தை விரிவாக்க விரும்பினால் ஓர் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்யலாம். அல்லது, அறுவடைக்கு வேலையாட்கள் குறைவாக இருக்கிற பிராந்தியங்களுக்கு மாறிச்சென்று ஊழியம் செய்யலாம். மொத்தத்தில், அறுவடை வேலையின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்தால்... நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முழுமையாக இந்த வேலையில் ஈடுபடுவோம்.
7. அறுப்பு வேலையில் நாம் எதுவரை ஈடுபட வேண்டும்?
7 அறுவடை காலத்தில் விவசாயிகளுக்குச் சமயம் மிகக் குறைவாக இருக்குமென்பதால் அதற்குள் மளமளவென்று பயிர்களை அறுத்துக் களத்தில் சேர்க்க வேண்டியிருக்கும்; அதனால், அறுவடை முடியும்வரை அவர்கள் கைகளைத் தளரவிட மாட்டார்கள். ஏனோதானோவென்று நிதானமாகவும் செயல்பட மாட்டார்கள். ஆன்மீக அறுவடையிலும் நமக்கு அதே அவசர உணர்வு தேவை. இந்த அறுப்பு வேலையில் நாம் எதுவரை ஈடுபட வேண்டும்? “இந்த உலகத்தின் முடிவுகாலம்” முழுக்க... “முடிவு” வரை... ஈடுபட வேண்டும்! (மத். 24:14; 28:20) யெகோவாவின் பிரதான ஊழியரைப் போலவே நாமும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் வேலையைச் செய்து முடிக்க வேண்டும். (யோவா. 4:34; 17:4) ஆகவே, ஊழியத்தில் நாம் ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும், நம்பிக்கையான மனநிலையோடும் ஈடுபடுவோமாக; முடிவுவரை தொடர்ந்து ஈடுபடுவோமாக. (மத். 24:13) ஏனென்றால், அறுவடை இன்னும் முடியவில்லை!
[பக்கம் 2-ன் சிறுகுறிப்பு]
அறுவடை என்று சொன்னாலே... அது ஆரம்பம் முதல் முடிவு வரை மும்முரமாகச் செய்யப்பட வேண்டிய வேலையாகும்