மாபெரும் ஆன்மீக அறுவடையில் முழுமையாய் ஈடுபடுங்கள்
‘நம் எஜமானருடைய வேலையில் அதிகமதிகமாய் ஈடுபடுங்கள்.’—1 கொ. 15:58.
1. இயேசு தம்முடைய சீடர்களுக்கு என்ன அழைப்பை விடுத்தார்?
இயேசு, கி.பி. 30-ஆம் ஆண்டின் இறுதியில் சமாரியா வழியாகப் பயணித்துக்கொண்டிருந்தார்; அப்போது சீகார் என்ற நகரத்திற்கு அருகே உள்ள ஒரு கிணற்றின் பக்கத்தில் ஓய்வெடுப்பதற்காகத் தம் பயணத்தைச் சற்று நிறுத்தினார். அப்போது அவர் தம்முடைய சீடர்களிடம், “வயல்களை ஏறிட்டுப் பாருங்கள்; அவை விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன” என்று சொன்னார். (யோவா. 4:35) அவர் சொல்லர்த்தமான அறுவடையைப் பற்றி இங்கே குறிப்பிடவில்லை; மாறாக, தம்முடைய சீடர்களாக ஆகப்போகிற நல்மனமுள்ளவர்களைக் கூட்டிச் சேர்க்கும் ஆன்மீக அறுவடையைப் பற்றி அவர் குறிப்பிட்டார். சொல்லப்போனால், இந்த அறுவடையில் ஈடுபடும்படியே தம்முடைய சீடர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அதைச் செய்து முடிப்பதற்கு வேலையோ ஏராளம், நேரமோ குறைவு!
2, 3. (அ) நாம் அறுவடைக் காலத்தில் வாழ்கிறோம் என்பதை எது காட்டுகிறது? (ஆ) இந்தக் கட்டுரை எதைக் கலந்தாலோசிக்கும்?
2 அறுவடையைப் பற்றி இயேசு குறிப்பிட்டது நம்முடைய நாளுக்கு விசேஷ அர்த்தத்தைக் கொடுக்கிறது. மனிதர்களெனும் உலக வயல் ‘விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கிற’ காலத்தில் நாம் வாழ்கிறோம். வருடாவருடம், வாழ்வளிக்கும் சத்தியத்தை அறிந்துகொள்வதற்கான அழைப்பை லட்சக்கணக்கானோர் பெறுகிறார்கள்; ஆயிரக்கணக்கான புதிய சீடர்கள் ஞானஸ்நானம் பெறுகிறார்கள். அறுவடையின் எஜமானரான யெகோவா தேவனின் மேற்பார்வையில் நடைபெறுகிற சரித்திரம் காணாத இம்மாபெரும் வேலையில் பங்குகொள்வது நமக்குக் கிடைத்திருக்கும் பாக்கியம். இந்த அறுவடை வேலையில் நீங்கள் ‘அதிகமதிகமாய் ஈடுபடுகிறீர்களா’?—1 கொ. 15:58.
3 பூமியில் இயேசுவின் மூன்றரை வருட ஊழியத்தின்போது, அறுவடை வேலையில் தங்கள் பங்கைச் செய்ய தம்முடைய சீடர்களை அவர் தயார்படுத்தினார். இந்தக் கட்டுரை, இயேசு தம்முடைய சீடர்களுக்குக் கற்பித்த மூன்று முக்கியமான பாடங்களைக் கலந்தாலோசிக்கும். ஒவ்வொரு பாடமும் ஒரு பண்பைச் சிறப்பித்துக் காட்டும்; இந்த நவீன நாளைய கூட்டிச் சேர்க்கும் வேலையில் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய நாம் பாடுபடும்போது, இந்தப் பண்பு நமக்கு மதிப்புமிக்கதாய் இருக்கும். இந்தப் பண்புகளை ஒவ்வொன்றாக நாம் இப்போது கலந்தாலோசிப்போம்.
மனத்தாழ்மை அவசியம்
4. மனத்தாழ்மையின் முக்கியத்துவத்தை இயேசு எப்படிக் காட்டினார்?
4 இந்தக் காட்சியைச் சற்று கற்பனை செய்துபாருங்கள். தங்களில் யார் பெரியவர் என சீடர்கள் அப்போதுதான் வாக்குவாதம் செய்திருந்தார்கள். அவநம்பிக்கையும் பகைமையும் அவர்கள் முகத்தில் இன்னமும் பளிச்சிட்டன. எனவே, இயேசு ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தினார். அந்தப் பிள்ளையை அவர்களுக்குச் சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு சொன்னார்: “தன்னைத்தானே தாழ்த்தி [அல்லது, “தன்னைத்தானே சிறியவனாகக் கருதி,” பையிங்டன்] இந்தச் சிறுபிள்ளையைப் போல் ஆகிறவன் எவனோ அவனே பரலோக அரசாங்கத்தில் மிக உயர்ந்தவனாக இருப்பான்.” (மத்தேயு 18:1-4-ஐ வாசியுங்கள்.) இந்த உலகம் ஒருவரை அவருடைய பதவி, பணம், அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடுகிறது. இயேசுவின் சீடர்கள் அப்படிப்பட்ட கண்ணோட்டத்தைத் தவிர்க்க வேண்டியிருந்தது; மாறாக, மற்றவர்களுடைய பார்வையில் ‘தங்களைத் தாங்களே சிறியவர்களாகக் கருதுவதே’ தங்களை உயர்ந்தவர்களாக ஆக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. உண்மையான மனத்தாழ்மையைக் காட்டினால் மட்டுமே யெகோவா அவர்களை ஆசீர்வதித்து, தம்முடைய வேலையில் பயன்படுத்திக்கொள்வார்.
5, 6. அறுவடை வேலையில் முழுமையாய் ஈடுபடுவதற்கு நீங்கள் ஏன் மனத்தாழ்மையைக் காட்ட வேண்டும்? விளக்குங்கள்.
5 இன்றுவரை, உலகில் அநேகர் பதவி, பணம், அந்தஸ்து ஆகியவற்றை அடைவதற்கே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள். இதனால், ஆன்மீகக் காரியங்களுக்குச் செலவிட அவர்களுக்குக் குறைவான நேரமே இருக்கிறது, அல்லது நேரமே இல்லாதிருக்கிறது. (மத். 13:22) அதற்கு நேர்மாறாக யெகோவாவின் ஜனங்கள், அறுவடையின் எஜமானருடைய ஆசீர்வாதத்தையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்காக, மற்றவர்களுடைய பார்வையில் ‘தங்களைத் தாங்களே சிறியவர்களாகக் கருதுவதில்’ சந்தோஷப்படுகிறார்கள்.—மத். 6:24; 2 கொ. 11:7; பிலி. 3:8.
6 உதாரணத்திற்கு, ஃபிரான்சிஸ்கூ என்பவரை எடுத்துக்கொள்வோம். இவர் தென் அமெரிக்காவில் ஒரு மூப்பராகச் சேவை செய்கிறார். இவர் இளைஞராக இருக்கையில், பயனியர் ஊழியம் செய்வதற்காகக் கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு எனக்காகவும் என் மனைவிக்காகவும் அதிக சம்பளத்தை அள்ளித்தரும் ஒரு வேலையை நான் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால், எங்களுடைய வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டு, தொடர்ந்து முழுநேர ஊழியம் செய்ய நாங்கள் தீர்மானித்தோம். பிறகு, பிள்ளைகள் பிறந்தார்கள், கஷ்டங்களும் அதிகரித்தன. என்றாலும், எங்கள் தீர்மானத்தில் உறுதியாய் இருக்க யெகோவா எங்களுக்கு உதவினார்.” ஃபிரான்சிஸ்கூ இவ்வாறு முடிக்கிறார்: “30 வருடங்களுக்கு மேலாக, மூப்பராகச் சேவை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது; அதோடு, வேறு பல விசேஷப் பொறுப்புகளையும் பெற்றிருக்கிறேன். எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததற்காக ஒருபோதும் நாங்கள் வருத்தப்பட்டதில்லை.”
7. ரோமர் 12:16-லுள்ள அறிவுரையை நீங்கள் எப்படிப் பின்பற்ற முயற்சி செய்கிறீர்கள்?
7 இந்த உலகத்தின் ‘மேட்டிமையான காரியங்களை’ விட்டொழித்து, ‘தாழ்மையான காரியங்களில் ஈடுபட்டால்,’ அறுவடை வேலையில் இன்னுமநேக ஆசீர்வாதங்களும் கூடுதல் பொறுப்புகளும் கிடைக்குமென நீங்களும் எதிர்பார்க்கலாம்.—ரோ. 12:16; மத். 4:19, 20; லூக். 18:28-30.
கடின உழைப்பு பலன் தரும்
8, 9. (அ) தாலந்துகளைப் பற்றிய இயேசுவின் உவமையைச் சுருக்கமாகச் சொல்லுங்கள். (ஆ) இந்த உவமை யாருக்கு முக்கியமாய் ஊக்கமளிக்கலாம்?
8 அறுவடை வேலையில் முழுமையாய் ஈடுபட நமக்குத் தேவைப்படுகிற மற்றொரு பண்பு, கடினமாக உழைப்பதாகும். இதை, தாலந்து பற்றிய உவமையில் இயேசு விளக்கிக் காட்டினார்.a இந்த உவமையில் ஓர் எஜமான் தூரதேசத்திற்குப் புறப்பட்டுப் போவதற்கு முன்பு, தன் அடிமைகள் மூவரிடம் தன் உடமைகளை ஒப்படைத்தார். முதலாம் அடிமை ஐந்து தாலந்துகளையும் இரண்டாம் அடிமை இரண்டு தாலந்துகளையும் மூன்றாம் அடிமை ஒரு தாலந்தையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள். அந்த எஜமான் புறப்பட்டுப் போன பிறகு, முதல் இரண்டு அடிமைகளும் கடினமாய் உழைத்தார்கள்; அவர்கள் உடனடியாக அந்தத் தாலந்துகளை வைத்து ‘வியாபாரம் செய்தார்கள்.’ அந்த மூன்றாவது அடிமையோ ‘சோம்பேறியாக’ இருந்தான். அவன் தன்னிடம் கொடுக்கப்பட்டிருந்த தாலந்தைக் குழிதோண்டிப் புதைத்து வைத்தான். அந்த எஜமான் திரும்பி வந்த பிறகு, “நிறைய காரியங்களைக் கவனித்துக்கொள்ள” முதல் இரண்டு அடிமைகளை நியமித்ததன் மூலம் அவர்களுக்கு வெகுமதி அளித்தார். மூன்றாம் அடிமையிடம் கொடுத்திருந்த தாலந்தை அவனிடமிருந்து அவர் எடுத்துக்கொண்டு, அவனை வீட்டைவிட்டே வெளியேற்றினார்.—மத். 25:14-30.
9 இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட, கடின உழைப்பாளிகளான அந்த அடிமைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், சீடராக்கும் வேலையில் முடிந்தவரை முழுமையாய்ப் ஈடுபட வேண்டும் என்றும் நீங்கள் மனதார ஆசைப்படுவீர்கள் என்பது உண்மைதான். ஆனால், இப்போது நீங்கள் செய்து வருகிற ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய முடியாதளவுக்குச் சூழ்நிலைகள் பெரும் தடையாக இருந்தால் என்ன செய்வது? கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, குடும்பத்தைப் பராமரிக்க நீங்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கலாம். அல்லது இளமைப் பருவத்திலிருந்த சக்தியும், நல்ல உடல் ஆரோக்கியமும் இப்போது இல்லாதிருக்கலாம். அப்படியென்றால், தாலந்துகளைப் பற்றிய உவமையில் உங்களுக்கு ஊக்கமளிக்கும் செய்தி ஒன்று உள்ளது.
10. தாலந்தைப் பற்றிய உவமையில் வரும் எஜமான் எப்படி நியாயமாக நடந்துகொண்டார், இது ஏன் உங்களுக்கு ஊக்கமளிக்கிறது?
10 உவமையில் குறிப்பிடப்பட்ட அந்த எஜமான் தன்னுடைய அடிமைகள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்பட்ட திறமைகள் இருந்ததை அறிந்திருந்தார் என்பதைக் கவனியுங்கள். “அவனவனுடைய திறமைக்கு ஏற்ப” அந்தத் தாலந்துகளை அவர் கொடுத்ததிலிருந்து அது தெரிகிறது. (மத். 25:15) அவர் எதிர்பார்த்தபடியே முதலாம் அடிமை, இரண்டாம் அடிமையைவிட அதிகமாகவே சம்பாதித்திருந்தான். என்றாலும், அந்த இரண்டு பேருடைய கடின முயற்சிகளையும் உயர்வாய் மதிப்பதைக் காட்டும் விதத்தில் அந்த எஜமான் அவர்களை “உண்மையுள்ள நல்ல அடிமை” என அழைத்து, ஒரேவிதமான வெகுமதிகளைக் கொடுத்தார். (மத். 25:21, 23) அதேபோல், ஊழியத்தில் ஈடுபட உங்கள் சூழ்நிலைகள் எந்தளவு இடமளிக்குமென அறுவடையின் எஜமானரான யெகோவா தேவனும் அறிந்திருக்கிறார். அவருக்குச் சேவை செய்ய நீங்கள் முழுமூச்சோடு எடுக்கிற முயற்சிகளை அவர் நிச்சயம் அறிந்திருக்கிறார், அதற்கேற்ப அவர் பலனளிப்பார்.—மாற். 14:3-9; லூக்கா 21:1-4-ஐ வாசியுங்கள்.
11. கஷ்டமான சூழ்நிலைகளிலும் கடினமாய் உழைக்கும்போது அபரிமிதமான பலன்கள் கிடைக்கும் என்பதற்கு உதாரணம் கொடுங்கள்.
11 பிரேசில் நாட்டைச் சேர்ந்த சல்மிரா என்ற சகோதரியின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர், சாதகமான சூழ்நிலைகள் இல்லாவிட்டாலும் கடவுளுடைய சேவையில் கடினமாய் உழைக்க முடியும் என்பதைக் காட்டுகிறார். இருபது வருடங்களுக்கு முன்பு, அவருடைய கணவர் திருடர்களால் கொல்லப்பட்டார். இதனால், மூன்று குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு சல்மிராவின் தலையில் விழுந்தது. அவர் வீட்டு வேலை செய்து வந்ததால் நீண்ட நேரம் பாடுபட வேண்டியிருந்தது; போதாக்குறைக்கு, கூட்டம் நிரம்பி வழியும் பஸ்ஸில் அலுத்துக் களைத்துப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இத்தனை கஷ்டங்கள் இருந்தாலும், ஒழுங்கான பயனியராகச் சேவை செய்வதற்காகத் தன்னுடைய வேலைகளையெல்லாம் ஒழுங்குபடுத்தியிருந்தார். அவருடைய மகள்களில் இருவர் பின்னர் அவரோடு சேர்ந்து பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள். அவர் இவ்வாறு சொல்கிறார்: “இத்தனை வருடங்களில், 20-க்கும் அதிகமானோருக்கு பைபிள் படிப்பு நடத்தியிருக்கிறேன்; அவர்கள் என் ‘குடும்பத்தின்’ அங்கத்தினர்களாக ஆகியிருக்கிறார்கள். இன்றுவரை நான் அவர்களுடைய அன்பையும் நட்பையும் ருசிக்கிறேன். எத்தனை பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் சம்பாதிக்க முடியாத சொத்து இது.” சல்மிராவின் கடின உழைப்புக்கு அறுவடையின் எஜமானர் எப்பேர்ப்பட்ட பலன் அளித்திருக்கிறார்!
12. ஊழியத்தில் நாம் கடினமாய் உழைக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
12 தற்போதைய சூழ்நிலைகள், ஊழியத்தில் அதிக நேரம் செலவிட முடியாதபடி உங்களைத் தடுக்கின்றனவா? அப்படித் தடுத்தாலும், உங்கள் ஊழியத்தை மிகுந்த பயனளிப்பதாய் ஆக்குவதன் மூலம் அறுவடை வேலையில் இன்னும் அதிகம் பங்குகொள்ள முயற்சி செய்யலாம். வாராந்தர ஊழியக் கூட்டத்தில் கொடுக்கப்படும் ஆலோசனைகளை நீங்கள் கவனமாய்ப் பொருத்தினால், ஊழியத் திறமைகளில் முன்னேற்றம் செய்வீர்கள், சாட்சிகொடுக்க புதிய முறைகளை முயன்று பார்ப்பீர்கள். (2 தீ. 2:15) அதோடு, சபை செய்கிற ஊழிய ஏற்பாடுகளில் தவறாமல் கலந்துகொள்வதற்காக, முடிந்தால் முக்கியமற்ற காரியங்களில் ஈடுபடாதிருப்பீர்கள் அல்லது அவற்றை வேறு சமயத்தில் செய்வீர்கள்.—கொலோ. 4:5.
13. கடினமாய் உழைக்கும் பண்பை வளர்த்துக்கொண்டு, அதை விட்டுவிடாதிருக்க எந்த மிக முக்கிய அம்சம் உதவுகிறது?
13 கடவுள்மீது நமக்கு அன்பும் நன்றியுணர்வும் இருந்தால் ஊழியத்தில் கடினமாய் உழைப்போம் என்பதை நினைவில் வையுங்கள். (சங். 40:8) இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட மூன்றாம் அடிமை தன்னுடைய எஜமானைக் கண்டு பயப்பட்டான்; அவரைக் கறாரானவர், நியாயமற்றவர் என்று நினைத்தான். அதனால், தன்னிடம் கொடுக்கப்பட்ட தாலந்தைப் பயன்படுத்தி எஜமானின் உடமையை அதிகரிப்பதற்குப் பதிலாக, அந்தத் தாலந்தை அவன் குழிதோண்டிப் புதைத்து வைத்தான். அத்தகைய அலட்சியப் போக்கு நம்மைத் தொற்றிக்கொள்ளாதிருக்க வேண்டுமானால், அறுவடையின் எஜமானராகிய யெகோவாவிடம் நாம் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்வதும் அதை விட்டுவிடாதிருப்பதும் அவசியம். அவருடைய அன்பு, பொறுமை, இரக்கம் போன்ற பொன்னான பண்புகளைப் பற்றி ஆழ்ந்து படிப்பதற்கும், தியானிப்பதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள். இந்த விதத்தில், அவருடைய சேவையில் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நீங்கள் இதயப்பூர்வமாய்த் தூண்டுவிக்கப்படுவீர்கள்.—லூக். 6:45; பிலி. 1:9-11.
‘நீங்கள் பரிசுத்தராக இருக்க வேண்டும்’
14. அறுவடை வேலையாட்களாய் ஆக விரும்புகிறவர்கள் என்ன முக்கியத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்?
14 அப்போஸ்தலன் பேதுரு, எபிரெய வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டி, தம்முடைய பூமிக்குரிய ஊழியர்களைக் குறித்ததில் கடவுளுடைய சித்தத்தை இவ்வாறு தெரிவித்தார்: “உங்களை அழைத்தவர் பரிசுத்தராக இருப்பது போலவே நீங்களும் உங்கள் நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தராக இருங்கள். ‘நான் பரிசுத்தர், அதனால் நீங்களும் பரிசுத்தராக இருக்க வேண்டும்.’” (1 பே. 1:15, 16; லேவி. 19:2; உபா. 18:13) அறுவடை வேலையாட்கள் ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் சுத்தமாய் இருக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்திக் காட்டுகிறது. அடையாள அர்த்தத்தில், சுத்தமாக இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்த முக்கியத் தேவையைப் பூர்த்தி செய்யலாம். அதை எப்படிச் செய்யலாம்? கடவுளுடைய சத்திய வார்த்தையின் உதவியோடு செய்யலாம்.
15. கடவுளுடைய சத்திய வார்த்தைக்கு என்ன செய்வதற்கான சக்தி இருக்கிறது?
15 கடவுளுடைய சத்திய வார்த்தை, சுத்தப்படுத்தும் தண்ணீருக்கு ஒப்பாக இருக்கிறது. உதாரணமாக, பரலோக நம்பிக்கை உள்ள கிறிஸ்தவர்கள் அடங்கிய சபை, கடவுளுடைய பார்வையில் கிறிஸ்துவின் கற்புள்ள மணமகளைப் போல சுத்தமாய் இருப்பதாக அப்போஸ்தலன் பவுல் எழுதினார்; அந்தச் சபையை “எந்தவொரு கறையோ எந்தவொரு குறையோ இல்லாமல்,” “கடவுளுடைய வார்த்தையாகிய தண்ணீரினால்” கிறிஸ்து சுத்தப்படுத்தியதாக அவர் எழுதினார். (எபே. 5:25-27) அதற்கும் முன்னர், இயேசுவும்கூட தாம் அறிவித்து வந்த கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்திற்குச் சுத்தப்படுத்தும் சக்தி இருப்பதாகக் குறிப்பிட்டார். தம்முடைய சீடர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “என்னுடைய வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே சுத்தமாகியிருக்கிறீர்கள்.” (யோவா. 15:3) எனவே, கடவுளுடைய வார்த்தையாகிய சத்தியத்திற்கு ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் சுத்தப்படுத்தும் சக்தி இருக்கிறது. கடவுளுடைய சத்தியம் இவ்விதமாய் நம்மைச் சுத்தப்படுத்துவதற்கு அனுமதித்தால் மட்டுமே நம் வழிபாட்டை அவர் ஏற்றுக்கொள்வார்.
16. ஆன்மீக ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் நம்மை எப்படிச் சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்?
16 இவ்வாறு, ஆன்மீக அறுவடையின் வேலையாட்களாக ஆவதற்கு, நாம் முதலில் ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் நம்மை அசுத்தப்படுத்துகிற பழக்கங்கள் அனைத்தையும் விட்டொழிக்கிறோம். ஆம், அறுவடையின் வேலையாளாக இருக்கும் பாக்கியத்திற்கு எப்போதும் தகுதியுள்ளவர்களாய் இருப்பதற்கு, ஒழுக்கம், ஆன்மீகம் சம்பந்தமாக யெகோவாவின் உயர்ந்த நெறிகளைக் கடைப்பிடிப்பதில் நாம் முன்மாதிரியாய்த் திகழ வேண்டும். (1 பேதுரு 1:14-16-ஐ வாசியுங்கள்.) உடல் சுத்தத்திற்கு நாம் எப்போதும் கவனம் செலுத்துவதைப் போலவே, கடவுளுடைய சத்திய வார்த்தை நம்மைச் சுத்தப்படுத்துவதற்கு எப்போதும் அனுமதிக்க வேண்டும். இது, நாம் பைபிளை வாசிப்பதையும், சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதையும் உட்படுத்துகிறது. கடவுளுடைய நினைப்பூட்டுதல்களை நம்முடைய வாழ்க்கையில் பொருத்துவதற்கு ஊக்கமாய் முயற்சி எடுப்பதையும் இது உட்படுத்துகிறது. இப்படிச் செய்வது, நம்முடைய பாவச் சிந்தைகளையும் இந்த உலகத்தின் கறைபடுத்தும் செல்வாக்குகளையும் எதிர்த்துப் போராட நமக்கு உதவுகிறது. (சங். 119:9; யாக். 1:21-25) ஆம், கடவுளுடைய சத்திய வார்த்தையின் உதவியோடு படு மோசமான பாவத்திலிருந்தும்கூட நாம் ‘கழுவப்பட’ முடியும் என்பதை அறிவது எவ்வளவாய் ஆறுதலளிக்கிறது!—1 கொ. 6:9-11.
17. நாம் எப்போதும் சுத்தமாயிருக்க என்னென்ன பைபிள் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்?
17 கடவுளுடைய சத்திய வார்த்தை உங்களைச் சுத்தப்படுத்துவதை மனதார ஏற்றுக்கொள்கிறீர்களா? உதாரணத்திற்கு, இந்த உலகின் கீழ்த்தரமான பொழுதுபோக்குகளால் வரும் ஆபத்துகளைக் குறித்து எச்சரிக்கப்படும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள்? (சங். 101:3) உங்கள் மத நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத பள்ளித் தோழர்களுடனும் சக பணியாளர்களுடனும் தேவையற்ற சகவாசத்தைத் தவிர்ப்பீர்களா? (1 கொ. 15:33) கடவுளுடைய பார்வையில் உங்களை அசுத்தமானவர்களாக ஆக்குகிற பலவீனங்களை மேற்கொள்ள மனதார முயற்சி செய்கிறீர்களா? (கொலோ. 3:5) இந்த உலகின் அரசியல் பூசல்களிலிருந்தும், தேசாபிமானத்தை ஊக்குவிக்கிற அநேக போட்டி விளையாட்டுகளிலிருந்தும் நீங்கள் விலகியிருக்கிறீர்களா?—யாக். 4:4.
18. ஒழுக்க ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் சுத்தமாயிருப்பது, பலன்தரும் அறுவடை வேலையாட்களாக இருக்க நமக்கு எப்படி உதவும்?
18 இத்தகைய விஷயங்களுக்கு நீங்கள் உண்மையாய்க் கீழ்ப்படியும்போது அவை அருமையான பலன்களை அள்ளிக்கொடுக்கும். பரலோக நம்பிக்கையுள்ள தம்முடைய சீடர்களைத் திராட்சைக் கொடியின் கிளைகளுக்கு ஒப்பிட்டு இயேசு இவ்வாறு சொன்னார்: “என் கிளைகளில் கனிகொடுக்காத கிளை ஒவ்வொன்றையும் அவர் [என் தகப்பன்] வெட்டிவிடுகிறார், கனிகொடுக்கிற கிளை ஒவ்வொன்றையும், அது அதிகமாகக் கனிகொடுக்கும்படி சுத்தம் செய்கிறார்.” (யோவா. 15:2) சுத்தப்படுத்தும் சக்தி படைத்த பைபிள் சத்தியமெனும் தண்ணீரை ஏற்றுக்கொள்ளும்போது நீங்களும்கூட அதிக கனிகளைக் கொடுப்பீர்கள்.
ஆசீர்வாதங்கள்—இன்றும் என்றும்
19. அறுவடை வேலையாட்களாக இயேசுவின் சீடர்கள் எடுத்த முயற்சிகளுக்கு என்ன ஆசீர்வாதங்களைப் பெற்றார்கள்?
19 இயேசு கொடுத்த பயிற்சியிலிருந்து கற்றுக்கொண்ட உண்மையுள்ள சீடர்கள், “பூமியின் கடைமுனைவரையிலும்” சாட்சிகொடுப்பதற்காக கி.பி. 33-ல் கடவுளுடைய சக்தியால் பலப்படுத்தப்பட்டார்கள். (அப். 1:8) அவர்கள் ஆளும் குழுவின் அங்கத்தினர்களாக, மிஷனரிகளாக, பயணக் கண்காணிகளாகச் சேவை செய்ய ஆரம்பித்தார்கள்; “வானத்தின் கீழிருக்கிற எல்லா மக்களுக்கும்” நற்செய்தியை அறிவிப்பதில் அவர்கள் முக்கியப் பங்கு வகித்தார்கள். (கொலோ. 1:23) அவர்கள் பெற்ற ஆசீர்வாதங்களும் அவர்களால் மற்றவர்கள் பெற்ற சந்தோஷமும் எத்தனை, எத்தனை!
20. (அ) ஆன்மீக அறுவடையில் முழுமையாய் ஈடுபடுவதால் என்னென்ன ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்? (ஆ) நீங்கள் என்ன செய்யத் தீர்மானமாய் இருக்கிறீர்கள்?
20 நாம் மனத்தாழ்மையாய் நடந்து, கடினமாய் உழைத்து, கடவுளுடைய வார்த்தையிலுள்ள உயர்ந்த ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுகையில், தற்போது நடைபெற்றுவருகிற மாபெரும் ஆன்மீக அறுவடையில் முழுமையாகவும் அதிகமதிகமாகவும் ஈடுபட்டு எப்போதும் மகிழ்ச்சி காண்போம். பொருள்களை வாங்கிக் குவிப்பதிலும், சுகபோகமாய் வாழ்வதிலும் இந்த உலகின் பாணியைப் பின்பற்றுகிற அநேகர் வேதனையிலும் விரக்தியிலும் அல்லாடும்போது, நாம் உண்மையான மகிழ்ச்சியையும் திருப்தியையும் ருசிக்கிறோம். (சங். 126:6) எல்லாவற்றையும்விட முக்கியமாய் நம் ‘எஜமானருக்காக உழைப்பது வீண்போகாது.’ (1 கொ. 15:58) அறுவடையின் எஜமானரான யெகோவா தேவன், ‘நம்முடைய உழைப்புக்கும் தமது பெயருக்காக நாம் காட்டுகிற அன்புக்கும்’ முடிவில்லா காலத்திற்குப் பலனளிப்பார்.—எபி. 6:10-12.
[அடிக்குறிப்பு]
a தாலந்தைப் பற்றிய உவமை முக்கியமாய், பரலோக நம்பிக்கை உள்ள தம்முடைய சீடர்களுடன் இயேசு வைத்திருந்த உறவோடு சம்பந்தப்பட்டிருக்கிறது; ஆனால், அதிலுள்ள நியமங்கள் எல்லாக் கிறிஸ்தவர்களுக்குமே பொருந்துகின்றன.
நினைவிருக்கிறதா?
அறுவடை வேலையில் முழுமையாக ஈடுபட கடும் முயற்சி செய்கையில் . . .
• மனத்தாழ்மை ஏன் அவசியம்?
• கடினமாய் உழைக்கும் பண்பை வளர்த்துக்கொண்டு, அதை எப்படி விட்டுவிடாதிருக்கலாம்?
• ஒழுக்க ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நம்மைச் சுத்தமாக வைத்திருப்பது ஏன் முக்கியம்?
[பக்கம் 17-ன் படம்]
கடவுளுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் முதலிடம் கொடுத்து, எளிமையாக வாழ மனத்தாழ்மை நமக்கு உதவும்