செவிசாய்க்கிற ஒருவரை நான் எப்படி கண்டடைவது?
1 பிலிப்பி பட்டணத்தில், ‘இரத்தாம்பரம் விற்கிற . . . லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.’ (அப். 16:14) இந்த விவரம் நமக்கு எதை கற்பிக்கிறது? செவிசாய்ப்பதுதான், ஒரு நபருக்கு சத்தியத்தை கற்கக்கூடிய வாய்ப்பைத் திறந்திடும் வழியாக இருக்கிறது. முதலாவதாக, வீட்டுக்காரரின் கேட்பதற்கான விருப்பத்தின்பேரில்தான், ராஜ்ய செய்தியை பகிர்ந்துகொள்வதில் நம்முடைய வெற்றி சார்ந்திருக்கிறது. செவிசாய்க்கும் ஒருவரை கண்டடைகையில், நம்முடைய செய்தியை அளிப்பது ஓரளவு சுலபமாயிருக்கும். ஆனால், செவிசாய்க்கும் ஒருவரை கண்டடைவது ஒரு சவாலாயிருக்கலாம். நாம் என்ன செய்யலாம்?
2 ஊழியத்தில் பங்குகொள்வதற்கு முன், நம்முடைய தோற்றத்திற்கும், நாம் பயன்படுத்தும் சாதனங்களுக்கும் கவனம் செலுத்தவேண்டும். ஏன்? தன்னை கண்ணியமாக காட்டிடும் ஒருவருக்கு செவிசாய்க்க, ஜனங்கள் அதிக மனச்சாய்வு உடையவர்களாக இருக்கிறார்கள். நாம் நேர்த்தியாகவும் அதே சமயத்தில் கண்ணியமாகவும் உடுத்தி இருக்கிறோமா? அரைகுறையாக ஆடை அணிவது உலகத்தில் பிரபலமாக இருந்தாலும், கடவுளுடைய ராஜ்யத்தை பிரதிநிதித்துவம் செய்கிற ஊழியர்களான நாம் அப்படிப்பட்ட முன் யோசனையின்மையை தவிர்க்கிறோம். நாம் பிரசங்கிக்கும் ராஜ்ய நற்செய்திக்கு நம்முடைய சுத்தமான, நேர்த்தியான தோற்றம் மேலும் நற்சான்றளிக்கிறது.
3 நட்போடும், மரியாதையோடும் இருங்கள்: மாறிவருகிற இன்றைய மனப்பான்மையினாலும், பைபிளைக் குறித்து அநேகருக்கு நல்ல மதிப்பு இருக்கிறதனாலும், பைபிளில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி ஒரு மரியாதையான, நட்பான கலந்துரையாடலுக்கு உகந்த விதத்தில் பிரதிபலிப்பார்கள். ஒரு மனமார்ந்த, உண்மையான புன்முறுவல் வீட்டுக்காரரை சாந்தப்படுத்தி, ஒரு இன்பகரமான கலந்தாலோசிப்புக்கு வழிவகுக்கும். நம் நாணயமும் நல்ல பண்புகளும், வீட்டுக்காரரின் கருத்துக்களுக்கு மரியாதையுடன் செவிசாய்ப்பதை உட்படுத்துகிற பேச்சிலும், நடத்தையிலும் பிரதிபலிக்க வேண்டும்.
4 நம் நோக்கம் பைபிளின் நம்பிக்கையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதுதான். இதை மனதில் கொண்டு, நம் கலந்துரையாடல், பகை விளைவிக்கிறதாகவோ அல்லது சவாலாகவோ இல்லாமல், கவனத்தை கவருவதாகவும், சாதுரியமாகவும் நிச்சயமாக இருக்கவேண்டும். வெளிப்படையாகவே எதிர்க்கிற ஒரு நபருடன் விவாதித்து நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லை. நம் குறிக்கோள் விவாதங்களில் வெற்றிபெறுவதோ அல்லது நம் வேலையை பிடிக்காத மக்களின்மேல் நம் நம்பிக்கைகளை சுமத்துவதோ கிடையாது. (2 தீ. 2:23-25) நம் ராஜ்ய ஊழியத்திலும், நியாயங்காட்டி பேசுதல் புத்தகத்திலும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பல வகையான உற்சாகமளிக்கும், காலத்திற்கு பொருத்தமான பிரசங்கங்களிலிருந்து நாம் தேர்ந்தெடுக்கலாம். அன்பான முறையிலும், நம்பவைக்கிற விதத்திலும் நாம் பேச, நிச்சயமாகவே இவற்றை நல்ல விதத்தில் தயாரிப்பது அவசியம்.—1 பே. 3:15.
5 நம் முதல் சந்திப்பிற்குப் பிறகு, வெகு சில வீட்டுக்காரர்களே நாம் என்ன கூறினோம் என்று சரியாக ஞாபகம் வைத்திருக்கிறார்கள். ஆயினும், உண்மையில் எல்லாருமே அது பேசப்பட்ட விதத்தை ஞாபகம் வைத்துள்ளனர். நற்குணத்தின் மற்றும் தயவின் சக்தியை நாம் குறைவாக மதிப்பிடக்கூடாது. முதல் நூற்றாண்டில் லீதியாள் செய்ததைப்போல, நம் பிராந்தியத்திலும் பல செம்மறியாட்டைப்போல் செவிசாய்க்கிற மக்கள் நிச்சயமாகவே உள்ளனர். நம் தோற்றத்திற்கும், பேச்சுத் தன்மைக்கும் கூர்ந்த கவனத்தை கொடுப்பது, உண்மை மனம் உள்ளவர்களை கடவுளுடைய வார்த்தைக்குச் செவிசாய்க்க உற்சாகப்படுத்தி, விருப்பத்துடன் அதை ஏற்றுக்கொள்ளச் செய்யும்.—மாற். 4:20.