மெய்யான கடவுளைப் பற்றிய அறிவு ஜீவனுக்கு வழிநடத்துகிறது
1 இயேசு, ஜெபத்தில் தம்முடைய பிதாவிடம் இவ்வாறு சொன்னார்: ‘ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மை . . . அறிவதே நித்திய ஜீவன்.’ (யோவா. 17:3) இது எத்தகைய தயாளமான ஈகை! நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு பிரசுரத்தைப் பயன்படுத்துவதன்மூலம், என்றென்றும் வாழ்வதற்கு, தாங்கள் என்ன செய்யவேண்டுமென்பதைக் கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு நாம் உதவி செய்யலாம். அவர்களுடைய அக்கறையைத் தூண்டியெழுப்புவதற்கும் அறிவு புத்தகத்தை வாசிக்க விரும்பும்படி அவர்களை ஊக்குவிப்பதற்கும் நாம் என்ன சொல்லலாம்?
2 இவ்வாறு நடைமுறையான வழிக்காட்டுதலுக்குரிய மூல ஆதாரமாக நீங்கள் சாதுரியமாய் பைபிளைக் குறிப்பிடலாம்:
◼ “வாழ்க்கையின் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு நடைமுறையான வழிகாட்டுதலுக்குரிய மூல ஆதாரம் ஒன்றை எங்கே கண்டடைவது என்பதைப் பற்றி எங்கள் அயலகத்தாருடன் நாங்கள் கலந்துபேசுகிறோம். பைபிள் உட்பட பல்வேறு மத புத்தகங்களை ஆட்கள் ஆராய்ந்து பார்க்கிறார்கள். ஆனால் ஆட்களுடைய மனப்பான்மைகள் மாறிக்கொண்டிருக்கின்றன; சிலர், தங்கள் மத புத்தகங்கள் மனிதரால்தானே எழுதப்பட்டிருப்பதாகக் கருதி அவற்றை சந்தேகிக்கின்றனர். உங்களுடைய கருத்து என்ன? [பதில் சொல்ல நேரம் அனுமதியுங்கள்.] பைபிள் நம்முடைய நாளுக்கான நடைமுறைக்கு உகந்ததாக இருக்கிறதென்று சொல்வதற்கு மிக நல்ல ஒரு காரணம் இருக்கிறது. [2 தீமோத்தேயு 3:16, 17-ஐ வாசியுங்கள்.] பைபிளை எழுதும்படி கடவுள் ஏவின அந்த சமயத்தில் எவ்வாறு பைபிள் நியமங்கள் பொருந்தினவோ, அதே விதமாகவே இன்றும் அவை பொருந்துகின்றன.” அறிவு புத்தகத்தில் 16-ம் பக்கத்துக்குத் திருப்பி, இயேசுவின் மலைப் பிரசங்கத்தில் காணப்படுகிற நடைமுறைக்கு உகந்த போதனையின்பேரில் சுருக்கமாய் குறிப்புகள் சொல்லுங்கள். பத்தி 11-ல் உள்ள மேற்கோளை அல்லது பத்தி 13-ல் இருப்பதை வாசியுங்கள். புத்தகத்தை அளித்து, பைபிளில் அடங்கியுள்ள அறிவிலிருந்து நாம்தாமே தனிப்பட்ட முறையில் எவ்வாறு பயனடையலாம் என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுசந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
3 ஜெபம், பல ஆட்களுக்கு அக்கறைக்குரிய பேச்சுப் பொருளாக இருப்பதால், பின்வருமாறு கேள்வி கேட்பதன்மூலம் அதைப் பற்றி கலந்து பேசுவதற்கு நீங்கள் விரும்பலாம்:
◼ “தற்கால வாழ்க்கையில் நாம் எதிர்ப்பட வேண்டியதாயுள்ள சவாலான எல்லா பிரச்சினைகளின் மத்தியில் ஜெபம் நமக்கு உண்மையான உதவியாயிருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதிலுக்காகக் காத்திருங்கள்.] கடவுளிடம் ஜெபிப்பதன்மூலம் தாங்கள் அவரிடமாக நெருங்கியிருப்பதாயும் அவ்வாறு செய்வது தங்களுக்கு உள்ளார்ந்த பலத்தைத் தந்திருப்பதாயும் பலர் உணருகின்றனர். இதையே பைபிள் வாக்குக்கொடுக்கிறது. [அறிவு புத்தகத்தை 156-ம் பக்கத்துக்குத் திருப்பி, பிலிப்பியர் 4:6, 7-ஐ வாசியுங்கள்.] இருப்பினும், தன்னுடைய ஜெபங்கள் சிலசமயங்களில் பதிலளிக்கப்படாமல் போகின்றன என்று ஒருவர் உணரலாம். ‘கடவுளிடம் நீங்கள் எவ்வாறு நெருங்கிவரலாம்’ என்று இந்த அதிகாரம் விவரித்துக் கூறுகிறது. [புத்தகத்தை அளியுங்கள்.] கடவுளோடு பேச்சு பரிமாற்றம், ஒருவழி பேச்சல்ல, ஆதலால், கடவுளுக்கு நாம் எவ்வாறு செவிகொடுத்துக் கேட்கலாம் என்பதையும் இது விளக்குகிறது. அடுத்த தடவை நான் வரும்போது அதை நாம் கலந்துபேசலாம்.”
4 பைபிளுக்கு மதிப்புதரும் ஆட்களிடம் பேசும்போது, ஒரு படிப்பைத் தொடங்குவதற்கு நேரடியான அணுகுமுறையைப் பயன்படுத்த நீங்கள் முயற்சி செய்யலாம். உங்களுக்குப் பயன்படக்கூடிய ஒன்று இங்கே உள்ளது:
◼ “இலவச வீட்டு பைபிள் படிப்பு திட்டம் ஒன்றை நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம். இதற்கு முன்பாக பைபிள் படிப்பு திட்டம் எதையாவது நீங்கள் மேற்கொண்டது உண்டா? [பதில் சொல்வதற்கு நேரம் அனுமதியுங்கள்.] நாங்கள் பயன்படுத்தும் படிப்பு உதவியை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.” அறிவு புத்தகத்தைக் காட்டுங்கள், பொருளடக்கத்தை வீட்டுக்காரர் காணும்படி 3-ம் பக்கத்துக்குத் திருப்பி, “இந்த விஷயங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?” என்று கேளுங்கள். வீட்டுக்காரர் அதிகப்படியான அக்கறையைக் காட்டும் அதிகாரத்துக்குத் திருப்பி, உபதலைப்புகளை வாசியுங்கள். நம்முடைய படிப்பு தொடர்முறையில், இந்தத் தகவலை கலந்தாலோசிப்பது எவ்வாறு என்பதைச் சுருக்கமாக நடப்பித்துக் காட்ட நீங்கள் விரும்புகிறீர்களென்று விளக்கிக் கூறுங்கள். ஒரு படிப்பைத் தொடங்கினாலும் அல்லது தொடங்காவிட்டாலும், புத்தகத்தை அளித்து, அதை வாசிக்குமாறு வீட்டுக்காரரை உற்சாகப்படுத்துங்கள்.
5 மெய்யான கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவை இன்று பேரெண்ணிக்கையான மக்கள் ஏற்று செயல்படுகின்றனர். (ஏசா. 2:2-4) யெகோவாவைப் பற்றி கற்று, ஜீவனுக்கு வழிநடத்தப்படும்படி நம்மால் கூடிய அத்தனைபேருக்கும் உதவி செய்வது நம்முடைய சிலாக்கியமாக உள்ளது.—1 தீ. 2:4.