‘ஏற்ற சமயத்தில் உதவி’
1 சரியாக நமக்கு அவசியப்படுகிற அந்தச் சமயத்தில் உதவியைப் பெறுவது எவ்வளவு புத்துணர்ச்சி அளிப்பதாய் இருக்கிறது! (எபி. 4:16, NW) “தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாட்டில், சரியான நேரத்தில் நமக்கு உதவிக்கான இரு விசேஷ ஏதுக்கள் தரப்பட்டபோது நாம் சந்தோஷப்பட்டோம்.
2 குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புதிய புத்தகம் ஏற்ற சமயத்தில் வந்தது. மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு அவசியமான நான்கு அம்சங்களின்மீது அது கவனம் செலுத்துகிறது: (1) சுயகட்டுப்பாடு, (2) தலைமைத்துவத்தை மதித்துணருதல், (3) நல்ல பேச்சுத்தொடர்பு, (4) அன்பு. குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரையானது, அதைப் பொருத்தும் குடும்பங்கள் அனைத்தும் தேவ சமாதானத்தைக் காண்பதற்கு உதவும். இந்தப் புதிய புத்தகத்தை கவனமாக வாசிப்பதற்கும், குடும்பமாக ஒன்றுசேர்ந்து படிப்பதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள். முதல் முறையாக, மார்ச் மாதத்தில் அது பொது மக்களுக்கு அளிக்கப்படும்போது, அதைத் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்த தயாராக இருக்கும்படி, அதன் அம்சங்களை நன்கு தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
3 கடவுள் நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற புதிய சிற்றேடு, சீஷராக்கும் வேலையைத் துரிதப்படுத்துவதற்கு உதவ ஏற்ற சமயத்தில் வந்துள்ளது. குறைந்தளவு வாசிக்கும் திறமையுள்ள மக்களுக்கு இது முக்கியமாக உதவி செய்யக்கூடும் என்றாலும், படிப்பறிவுள்ள பெரியவர்கள் பலரும் இளம் பிள்ளைகளும்கூட அதிலுள்ள அடிப்படை பைபிள் போதகங்களின் எளிமையான விளக்கங்களிலிருந்து பயன் பெறுவார்கள். அடுத்ததாக அறிவு புத்தகத்தைப் படிப்பதற்கு ஏற்ற வண்ணம், முதற்படியாக ஒரு படிப்பைத் தொடங்குவதற்குத் தேவையான சரியான ஏதுவாக இது இருக்கக்கூடும். கடவுள் எதைத் தேவைப்படுத்துகிறாரோ அதைச் செய்வதன்மூலம் எவ்வாறு அவர்கள் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்படலாம் என்பதை இன்னும் அதிகமானோர் மதித்துணருவதற்கு இந்த ஏது நிச்சயமாகவே உதவும்.
4 தாவீது, ‘ஒன்றுக்கும் குறைவுபடவில்லை, அவருடைய ஆத்துமா தேற்றப்பட்டது, அவருடைய பாத்திரம் நிரம்பி வழிந்தது,’ என்றெல்லாம் சொன்னபோது நம்முடைய உணர்வுகளை முழுமையாக எடுத்துக்கூறினார்! (சங். 23:1, 3, 5, NW) உண்மையான கடவுளாகிய யெகோவாவை அறிந்துகொள்வதற்கும் அவரை சேவிப்பதற்கும் உண்மையாக விரும்பும் மற்றுமநேகருக்கு இந்த அருமையான ஆவிக்குரிய உதவியை அளிப்பதற்கு நாம் சந்தோஷமாக எதிர்நோக்கி இருக்கிறோம்.