மீண்டும் ஒருபோதும் செய்யப்படாத வேலையில் பங்கெடுங்கள்
1 மனித சரித்திரத்தில் பல்வேறு சமயங்களில், யெகோவா தம்முடைய பகைவர்கள்மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான அவசியம் இருந்தது. என்றபோதிலும், தம்முடைய இரக்கத்தின் காரணமாக, அவர் நேர்மை இருதயமுள்ளவர்களுக்கு இரட்சிப்படைவதற்கான வாய்ப்பை அளித்தார். (சங். 103:13) முடிவான விளைவு அவர்களுடைய பிரதிபலிப்பைப் பொறுத்ததாக இருந்தது.
2 உதாரணமாக, பொ.ச.மு. 2370-ல், ஜலப்பிரளயத்துக்கு முன்பு, நோவா ‘நீதியைப் பிரசங்கித்தவராய்’ இருந்தார். தேவ எச்சரிப்பைப் புறக்கணித்தவர்களே அழிந்துபோனார்கள். (2 பே. 2:5; எபி. 11:7) பொ.ச. 70-ல் எருசலேம் அழிக்கப்படும் முன்னர், அந்த நகருக்கு நேரிடவிருந்த அழிவிலிருந்து எவராவது தப்பிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து இயேசு தெளிவாகக் குறிப்பிட்டார். அவருடைய எச்சரிப்பின் செய்தியை ஏற்க மறுத்த அனைவரும் கடுமையான விளைவுகளை அனுபவித்தனர். (லூக். 21:20-24) அப்படிப்பட்ட தேவ எச்சரிப்புகளும் நியாயத்தீர்ப்புகளும் சரித்திரம் முழுவதிலும் பலமுறை மீண்டும் மீண்டும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
3 நவீன நாளைய எச்சரிப்பு வேலை: யெகோவா, இன்றைய பொல்லாத ஒழுங்குமுறைக்கு எதிராக தம்முடைய கோபம் மூளும் என்றும் சாந்த குணமுள்ளவர்கள் மட்டுமே தப்பிப்பிழைப்பார்கள் என்றும் நெடுங்காலத்திற்கு முன்னரே அறிவித்தார். (செப். 2:1, 3; 3:8) இந்த எச்சரிப்பின் செய்தியை பிரசங்கிப்பதற்கான காலம் விரைவாக குறைந்துகொண்டே வருகிறது! “மகா உபத்திரவம்” (NW) சீக்கிரத்தில் வரவிருக்கிறது; சாந்த குணமுள்ளவர்கள் தற்போது கூட்டிச்சேர்க்கப்பட்டு வருகிறார்கள். உண்மையில், ‘வயல்நிலங்கள் அறுப்புக்கு விளைந்திருக்கிறது.’ எனவே, முக்கியத்துவத்தையும் அவசரத்தன்மையையும் பொறுத்தவரையில், வேறு எந்த வேலையையும் இதனோடு ஒப்பிட முடியாது.—மத். 24:14, 21, 22; யோவா. 4:35.
4 “அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி,” இந்த நவீன நாளைய எச்சரிப்பை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் நாம் பங்குகொள்ள வேண்டும். நாம் புறக்கணிக்கக்கூடாத, கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு வேலை இது. (எசே. 2:4, 5; 3:17, 18) இந்த வேலையில் முழுமையான பங்கைக் கொண்டிருப்பதானது, கடவுளுக்கு நம்முடைய ஆழ்ந்த அன்பையும், அயலாருக்கு நம்முடைய உண்மையான அக்கறையையும், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவில் அசைக்கமுடியாத விசுவாசத்தையும் வெளிக்காட்டும் நம்பத்தக்க நிரூபணமாக இருக்கிறது.
5 இப்போதே செயல்படுவதற்கான காலம்: கடந்தகாலத்தில் யெகோவா நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றிய பின்னரும், சாத்தானும் அவனுடைய பேய்களும் இன்னும் செயல்பட்டுக்கொண்டிருந்ததால், எப்போதுமே துன்மார்க்கம் மீண்டும் தலைதூக்கியது. என்றபோதிலும், இந்த முறை அது வித்தியாசமாக இருக்கும். சாத்தானிய செல்வாக்கு நீக்கப்படும். வரவிருக்கும் ஒரு ‘மகா உபத்திரவத்தைப்’ பற்றிய உலகளாவிய ஓர் எச்சரிப்பு இனி ஒருபோதும் தேவைப்படாது. (வெளி. 7:14; ரோ. 16:20) இனிமேலும் மீண்டும் ஒருபோதும் செய்யப்படாத வேலையில் பங்கெடுக்கும் விசேஷ சிலாக்கியம் நமக்கிருக்கிறது. இந்த வாய்ப்பை நாம் முடிந்தளவு பயன்படுத்திக்கொள்வதற்கான காலம் இதுவே.
6 அப்போஸ்தலன் பவுல், தன்னுடைய பிரசங்க வேலையைக் குறித்து அதிக நம்பிக்கையுடன் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன்.’ (அப். 20:27) எச்சரிப்பைக் கொடுப்பதில் எவ்விதத்திலும் தவறியதற்காக அவர் இரத்தப்பழி உடையவராக உணரவில்லை. ஏன்? ஏனென்றால் தன்னுடைய ஊழியத்தைக் குறித்து அவரால் இவ்வாறு சொல்ல முடிந்தது: “இந்நோக்கத்திற்காகவே நான் பாடுபட்டு உழைக்கிறேன்.” (கொலோ. 1:29, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்) மீண்டும் ஒருபோதும் செய்யப்படாத வேலையில் முடிந்தளவு முழுமையாகப் பங்கெடுக்கும் அதேவிதமான திருப்தியை நாம் அனுபவிப்போமாக!—2 தீ. 2:15.