உங்கள் உறவினர்களைப் பற்றி என்ன?
1 நம்மில் பலருக்கு சத்தியத்தில் இல்லாத அநேக உறவினர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அன்பானவர்கள் ஜீவனுக்கான பாதையில் நம்முடன் சேர்ந்துகொள்ள வேண்டும் என்று நாம் எவ்வளவு ஆவலாக இருக்கிறோம்! அதிலும் அவர்கள் நம்முடைய சொந்த குடும்ப அங்கத்தினர்களாக இருந்தால், அவர்களுடைய நித்திய எதிர்காலத்தைக் குறித்து நாம் இன்னுமதிகமாகவே அக்கறை கொள்கிறோம். சத்தியத்தில் அவர்களுடைய அக்கறையைத் தூண்டுவதற்காக நாம் வருடக்கணக்காக முயன்றிருந்தாலும்கூட, இனியும் முயன்று பலனில்லை என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது.
2 இயேசு பிரசங்கித்துவந்தபோது, உண்மையில் ‘அவருடைய சகோதரர் அவரை விசுவாசிக்கவில்லை.’ (யோவா. 7:5) ஒரு சமயம், அவருக்குப் பித்துப்பிடித்திருந்ததாக அவருடைய உறவினர்கள் நினைத்தார்கள். (மாற். 3:21) இருந்தாலும், இயேசு அவர்களை விட்டுவிடவில்லை. காலப்போக்கில், அவருடைய சகோதரர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். (அப். 1:14) அவருடைய ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபு, கிறிஸ்தவ சபைக்குத் தூணானார். (கலா. 1:18, 19; 2:9) உங்கள் உறவினர்கள் சத்தியத்தை ஆர்வமாக ஏற்றுக்கொள்ளும் சந்தோஷத்தைக் காண நீங்கள் விரும்புவீர்களானால், ராஜ்ய நற்செய்தியுடன் அவர்களை அணுகும் முயற்சியைக் கைவிட்டுவிடாதீர்கள்.
3 புத்துணர்ச்சி அளிப்பவர்களாய் இருங்கள், திணறச்செய்யாதீர்கள்: இயேசு மற்றவர்களிடம் பிரசங்கித்தபோது கேட்டுக்கொண்டிருந்தவர்கள் புத்துணர்வு பெற்றார்கள், தொந்தரவுபடுத்தப்பட்டவர்களாய் உணரவில்லை. (மத். 11:28, 29) அவர்களால் புரிந்துகொள்ள முடியாத போதனைகளால் அவர் அவர்களைத் திணறச்செய்யவில்லை. சத்தியத்தின் தண்ணீரால் உங்கள் உறவினர்களைப் புத்துணர்ச்சியூட்டுவதற்கு, ஒவ்வொரு முறையும் ஒரு வாளி நிறைய அல்ல, ஒரு கப் அளவே கொடுங்கள்! பயணக் கண்காணி ஒருவர் குறிப்பிட்டார்: “கொஞ்சம் கொஞ்சமாக சாட்சி கொடுப்பதன்மூலம் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தங்கள் உறவினர்களில் தூண்டுகிறவர்கள் மிகச் சிறந்த பலன்களைப் பெறுகின்றனர்.” இந்த முறையில், எதிர்ப்பவர்கள்கூட கேள்விகளைக் கேட்கத் தொடங்கி, முடிவில் சத்தியத்திற்கான தாகத்தை வளர்த்துக்கொள்கிறார்கள்.—1 பே. 2:3; ஒப்பிடுக: 1 கொரிந்தியர் 3:1, 2.
4 திருமணமான அநேக கிறிஸ்தவர்கள், அவிசுவாசியான தங்கள் துணைவர்களின் அக்கறையை ஈர்க்கக்கூடிய விஷயங்களிருக்கும் பக்கங்களுக்கு பிரசுரங்களைத் திறந்து வைப்பதன்மூலம் திறம்பட்டவிதத்தில் சாட்சி கொடுத்திருக்கிறார்கள். இதைச் செய்த ஒரு சகோதரி, அதோடுகூட தன் கணவர் காதுகளில் விழும் வண்ணம் தன் பிள்ளைகளுக்கு படிப்பை நடத்துகையில், அவருக்குப் பயன்தரத்தக்க விளக்கங்களையும் சொன்னார். சிலநேரங்களில் அவர் தன் கணவரிடம் இவ்வாறு கேட்பதுண்டு: “இன்ன இன்ன குறிப்புகளை என்னுடைய படிப்பில் இன்று கற்றுக்கொண்டேன். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” அவரது கணவர் கடைசியில் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்.
5 மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள், பொறுமையற்றவர்களாக இராதீர்கள்: “உறவினர்களும்கூட தங்கள் சொந்த கருத்துக்களையும் நோக்குகளையும் கொண்டிருக்கும் உரிமை உடையவர்கள்,” என்று ஒரு பிரஸ்தாபி சொன்னார். ஆகவே அவர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்லும்போது அல்லது சத்தியத்தைப் பற்றி அவர்களிடம் பேசக்கூடாது என்று அவர்கள் திட்டவட்டமாக நம்மிடம் சொல்லும்போது நாம் அதற்கு மரியாதை காட்ட வேண்டும். (பிர. 3:7; 1 பே. 3:15) பொறுமையாகவும் அன்பாகவும் இருப்பதன்மூலமும் நன்கு செவிகொடுத்து கேட்பவர்களாக இருப்பதன்மூலமும், மறைமுகமான சாட்சி கொடுப்பதற்குப் பொருத்தமான வாய்ப்புகளை நாம் தேடலாம். அப்படிப்பட்ட பொறுமை பலன் அளிப்பதாய் இருக்கலாம்; அவிசுவாசியாகிய தன் மனைவியால் மோசமாக நடத்தப்படுவதை 20 வருடங்கள் பொறுமையாக சகித்த ஒரு கிறிஸ்தவ கணவருடைய விஷயத்தில் இது காணப்பட்டது. அவரது மனைவி மாறத் தொடங்கியதும் அவர் சொன்னார்: “நீடிய பொறுமையை வளர்த்துக்கொள்ள எனக்கு உதவியதற்காக நான் யெகோவாவுக்கு எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்; ஏனென்றால், அதன் விளைவை இப்போது என்னால் பார்க்க முடிகிறது: என் மனைவி சத்தியத்தின் பாதையில் நடக்க ஆரம்பித்துவிட்டாள்!”
6 உங்கள் உறவினர்களைப் பற்றி என்ன? உங்களுடைய நல்ல கிறிஸ்தவ நடத்தையின் மூலமாகவும் அவர்களுக்காக நீங்கள் செய்யும் ஜெபங்களின் மூலமாகவும், “அவர்களை யெகோவாவின் பக்கமாக நீங்கள் ஆதாயப்படுத்திக்கொள்ளக்கூடும்.”—1 பே. 3:1, 2, NW அடிக்குறிப்பு.