நினைவு ஆசரிப்பு—அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி!
1 ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 23 அன்று, சூரிய அஸ்தமனத்திற்குப்பின், நாம் கிறிஸ்துவின் மரண நினைவுநாளை ஆசரிப்போம். (லூக். 22:19) இது உண்மையிலேயே அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி! மரண பரியந்தமும் யெகோவாவிடம் தம்முடைய உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்வதன் மூலம், கடுமையான அழுத்தத்தின் கீழும் பரிபூரணமான தேவ பக்தியை காண்பிப்பது சாத்தியமானதே என்று இயேசு நிரூபித்து, இதன்மூலம் யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தின் சரியான தன்மையை ஆதரித்தார். (எபி. 5:8) மேலுமாக, கிறிஸ்துவின் மரணம், மனிதவர்க்கத்தை மீட்பதற்குத் தேவையான பரிபூரண மனித பலியை அளித்து, விசுவாசம் வைப்போர் நித்தியமாக வாழ்வதைச் சாத்தியமாக்கியிருக்கிறது. (யோவா. 3:16) நினைவு ஆசரிப்புக்கு ஆஜராகி இருப்பதன்மூலம், யெகோவாவின் அன்புக்கும் இயேசு நமக்களித்த பலிக்கும் நம்முடைய இருதயப்பூர்வமான போற்றுதலை வெளிக்காட்டலாம்.
2 1997 யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர்-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மார்ச் 18-23 தேதிகளுக்காக திட்டமிடப்பட்ட பைபிள் வாசிப்பு திட்டத்தைப் பின்பற்றும்படி அனைவரும் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். மேலும், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்திலுள்ள 112-16 வரையான அதிகாரங்களை ஒரு குடும்பமாக கலந்தாலோசிப்பது, மனித சரித்திரத்திலேயே மிக முக்கியமான ஒரு வாரத்தின்மீது நம் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவும்.
3 நினைவு ஆசரிப்பு காலத்தின்போது நீங்கள் வெளி ஊழியத்தில் செலவிடும் நேரத்தை அதிகரிக்க முடியுமா? அநேக பிரஸ்தாபிகள், மார்ச்சிலுள்ள ஐந்து வார இறுதி நாட்களை துணைப் பயனியர்களாக சேவை செய்வதற்கு நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்களில் ஒருவராக நீங்கள் ஏன் இருக்கக்கூடாது? நினைவு ஆசரிப்பிற்கு ஆஜராவதன் முக்கியத்துவத்தை அழுத்திக் காட்டுவதில் நாம் அனைவரும் ஒரு முழுமையான பங்கைக் கொண்டிருக்கலாம். அது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இருப்பதால், அநேகருக்கு வருவது சுலபமாக இருக்கும். பைபிள் படிப்பு படிக்கும் அனைவரையும் அக்கறையுள்ள மற்றவர்களையும் நம்முடன் சேர்ந்துகொள்ளும்படி அழைக்க நிச்சயமாயிருங்கள். ஒவ்வொரு ஆண்டும் விசேஷமாக ஆசரிக்கப்பட வேண்டிய அந்த ஒரு நாளைப் பற்றி அறிவு புத்தகத்தில் பக்கம் 127, பாரா 18-ல் சொல்லப்பட்டிருப்பதை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
4 1997-ன் இந்த மிகப் பெரிய நிகழ்ச்சியை, இயேசுவின் மரணம் நமக்கு எதையெல்லாம் அர்த்தப்படுத்துகிறதோ அவற்றிற்கான ஆழ்ந்த போற்றுதல் உணர்வுடன் நோக்குங்கள். எங்கும் உண்மை கிறிஸ்தவர்கள் நினைவு ஆசரிப்பை உண்மையுடன் அனுசரிக்கும் மார்ச் 23 அன்று மாலை ஆஜராகுங்கள்.