“இதைச் செய்துகொண்டிருங்கள்” ஏப்ரல் 5—நினைவு நாள் அனுசரிப்பு
1. நினைவு நாள் அனுசரிப்பு ஏன் முக்கியமானது?
1 “என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்.” (லூக். 22:19) இயேசு தம்முடைய மரணத்தை நினைவுகூரும்படி சீடர்களுக்குக் கொடுத்த கட்டளைதான் இது. மீட்புவிலையினால் நமக்குக் கிடைத்திருக்கும் நன்மைகள் ஏராளம், ஏராளம்! எனவே, இந்த நாளைவிட மிக முக்கியமான நாள் நமக்கு வேறு ஏதாவது இருக்க முடியுமா? இந்த வருடம் நினைவு நாள் ஏப்ரல் 5-ஆம் தேதி வருகிறது. இதற்காக, யெகோவாவுக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்?—கொலோ. 3:15.
2. பைபிளைப் படித்து தியானிப்பதன் மூலம் நினைவு நாள் அனுசரிப்புக்கான நம் நன்றியை எப்படிக் காட்டலாம்?
2 தயாராகுங்கள்: பொதுவாக, நமக்கு ஏதாவது ஒரு நாள் விசேஷமானதாக இருந்தால் அதற்காக முன்கூட்டியே தயாராவோம். அதேபோல், நினைவு நாளுக்காக நம் மனதைத் தயார்ப்படுத்த, இயேசு பூமியில் கழித்த கடைசி சில நாட்களில் நடந்த சம்பவங்களைப் பற்றிக் குடும்பமாகக் கலந்துபேசலாம், நன்கு தியானிக்கலாம். (எஸ்றா 7:10) இதற்கு உதவியாக, காலண்டரிலும் தினந்தோறும் வேதவசனங்களை ஆராய்தல் சிறுபுத்தகத்திலும் சில வசனங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி-மார்ச் 2012 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 21-22-ல் முழுமையான பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது; மிகப்பெரிய மனிதர் புத்தகத்தில் அந்தச் சம்பவங்கள் வரும் அதிகாரங்களையும் அந்தப் பட்டியலில் பார்க்கலாம்.
3. ஊழியத்தில் அதிகமாக ஈடுபடுவதன் மூலம் நினைவு நாள் அனுசரிப்புக்கு எப்படி நன்றி காட்டலாம்?
3 பிரசங்கியுங்கள்: ஊழியத்தில் முழுமையாகக் கலந்துகொள்வதன் மூலமும் நம் நன்றியைக் காட்டலாம். (லூக். 6:45) மார்ச் 17 சனிக்கிழமைமுதல் நினைவு நாள் அனுசரிப்புக்கான அழைப்பிதழ் உலகம் முழுவதும் கொடுக்கப்படும். அந்தச் சமயத்தில் அதிகமாக ஊழியத்தில் ஈடுபட இப்போதே உங்களால் திட்டமிட முடியுமா? முடிந்தால், துணைப் பயனியர் செய்ய முடியுமா? இதைப் பற்றி அடுத்த குடும்ப வழிபாட்டின்போது கலந்து பேசலாம், அல்லவா?
4. நினைவு நாளை அனுசரிப்பதால் என்னென்ன நன்மைகளை அடைகிறோம்?
4 நினைவு நாள் அனுசரிப்பில் ஒவ்வொரு வருடமும் கலந்துகொள்வதால் நாம் பெறும் நன்மைகள் எத்தனை, எத்தனை! யெகோவா தம்முடைய ஒரே மகனையே நமக்கு மீட்புவிலையாகக் கொடுத்து தம் தாராள குணத்தைக் காட்டியிருக்கிறார். அதைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது நம் உள்ளம் சந்தோஷத்தால் பொங்குகிறது, அவர்மேல் நாம் வைத்திருக்கும் அன்பும் அதிகரிக்கிறது. (யோவா. 3:16; 1 யோ. 4:9, 10) இனி நமக்காக வாழாமல் அவருக்காக வாழ அந்த அன்பு நம்மைத் தூண்டுகிறது. (2 கொ. 5:14, 15) அதோடு, யெகோவாவைப் பற்றிப் புகழ்ந்து பேச நம்மை உந்துவிக்கிறது. (சங். 102:19-22) அதனால், ஏப்ரல் 5-ஆம் தேதி அந்த நிகழ்ச்சிக்குக் கூடிவந்து, இயேசுவின் ‘மரணத்தை அறிவிக்க’ யெகோவாவின் ஊழியர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.—1 கொ. 11:26.