ஏப்ரல் 17—நினைவுநாள் அனுசரிப்பு நன்றி காட்ட ஒரு வாய்ப்பு
1. சங்கீதக்காரன் சொன்ன எந்த வார்த்தைகள் நினைவுநாள் அனுசரிப்புக் காலத்தில் மிகப் பொருத்தமாக இருக்கின்றன?
1 யெகோவா பல விதங்களில் தனக்கு இரக்கம் காட்டி, தன்னை விடுவித்ததை நன்றியோடு நினைத்துப் பார்த்துச் சங்கீதக்காரன் இவ்வாறு கூறினார்: ‘யெகோவா எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.’ (சங். 116:12) இன்று, கடவுளின் ஊழியர்களாகிய நாம் நன்றியோடிருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. சங்கீதக்காரன் மேற்கூறப்பட்ட வார்த்தைகளைச் சொல்லிப் பல நூற்றாண்டுகள் கழித்து மிகச் சிறந்த பரிசாகிய மீட்பு விலையை மனிதகுலத்திற்கு யெகோவா அளித்தார். ஏப்ரல் 17 அன்று கிறிஸ்துவின் மரண நினைவுநாளை அனுசரிக்கத் தயாராகையில், நன்றி காட்ட நமக்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன.—கொலோ. 3:15.
2. மீட்பு விலைக்கு நன்றி காட்ட சில காரணங்கள் யாவை?
2 மீட்பு விலையின் நன்மைகள்: மீட்புவிலையினால் நமக்கு ‘பாவ மன்னிப்பு’ கிடைக்கிறது. (கொலோ. 1:13, 14) நம்மால் யெகோவாவை ஒரு சுத்தமான மனசாட்சியுடன் வழிபட முடிகிறது. (எபி. 9:13, 14) ஜெபத்தில் தயக்கமில்லாமல் அவரை அணுக முடிகிறது. (எபி. 4:14-16) மீட்பு விலையில் விசுவாசம் வைப்பவர்களுக்கு முடிவில்லா வாழ்வு எனும் மகத்தான எதிர்காலம் இருக்கிறது!—யோவா. 3:16.
3. மீட்பு விலைக்காக யெகோவாவுக்கு நம் நன்றியை எப்படிக் காட்டலாம்?
3 மீட்பு விலைக்கு எப்படி நன்றி காட்டலாம்: நமது உள்ளப்பூர்வமான நன்றியைக் காட்ட ஒரு வழி... நினைவுநாள் அனுசரிப்புக் கால பைபிள் வாசிப்புப் பகுதியைத் தவறாமல் வாசித்து அதைக் குறித்துத் தியானிப்பதாகும். மீட்பு விலையை நாம் எந்தளவு உயர்வாய்க் கருதுகிறோம் என்பதை இதயப்பூர்வமான ஜெபத்தில் யெகோவாவிடம் சொல்லலாம். (1 தெ. 5:17, 18) இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, நினைவுநாள் அனுசரிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு நம் நன்றியைக் காட்டலாம். (1 கொ. 11:24, 25) அதோடு, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எத்தனை பேரை அழைக்க முடியுமோ அத்தனை பேரை அழைப்பதன் மூலம் எல்லையற்ற அன்பு காட்டுகிற யெகோவாவை நாம் பின்பற்றலாம்.—ஏசா. 55:1-3.
4. நாம் என்ன திடத்தீர்மானத்தோடு இருக்க வேண்டும்?
4 யெகோவாவுக்கு நன்றியோடு இருக்கிற அவரது ஊழியர்கள்... நினைவுநாள் கூட்டத்தை, ‘இதுவும் ஒரு வாராந்தரக் கூட்டம்தான்’ என்ற ரீதியில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ‘வருடத்திலேயே இதுதான் மிக முக்கியமான கூட்டம்’ என்றே கருதுவார்கள். நினைவுநாள் நெருங்கி வர வர... ‘என் ஆத்துமாவே, யெகோவாவை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே’ என்று எழுதிய சங்கீதக்காரனின் திடத்தீர்மானம் நமக்கும் இருக்கட்டும்!—சங். 103:2.