கடவுளின் மாபெரும் பரிசுக்கு நன்றி காட்டுவோம்!
1. நாம் யெகோவாவுக்கு எதற்காக முக்கியமாய் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்?
1 யெகோவா ஏராளமான ‘நல்ல பரிசுகளை’ நமக்குக் கொடுத்திருக்கிறார்; அவற்றில் மாபெரும் பரிசு அவருடைய மகனை மீட்புவிலையாக அளித்ததே. (யாக். 1:17) இந்த மீட்புவிலையினால் நமக்கு அளவில்லா ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன, நம் பாவங்களுக்கான மன்னிப்பும் கிடைக்கிறது. (எபே. 1:7) இதற்காக நாம் அவருக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். நினைவுநாள் காலத்தின்போது, இந்த அருமையான பரிசைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்க நேரமெடுத்துக்கொள்கிறோம்.
2. மீட்புவிலைக்கான நன்றியுணர்வை குடும்பமாகவும் தனிப்பட்ட விதமாகவும் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
2 நன்றியுணர்வை வளர்த்துக்கொள்ள உதவுங்கள்: இந்த வருடம் மார்ச் 30-ஆம் தேதி நினைவுநாள் அனுசரிக்கப்படும்; மீட்புவிலைக்கான நன்றியுணர்வை உங்கள் குடும்பத்தார் வளர்த்துக்கொள்ள அதற்கு முந்தைய வாரங்களில் நீங்கள் உதவலாம். எப்படி? குடும்ப வழிபாட்டு நேரத்தில் மீட்புவிலை சம்பந்தப்பட்ட அநேக குறிப்புகளைக் கலந்தாலோசிக்கலாம். அதோடு, விசேஷ நினைவுநாள் பைபிள் வாசிப்புப் பகுதியைக் குடும்பமாக வாசிக்கலாம். மீட்புவிலையினால் நீங்கள் எப்படி நன்மை அடைந்திருக்கிறீர்கள் என்று தனிப்பட்ட விதமாக யோசித்துப் பாருங்கள். யெகோவாவையும், உங்களையும், மற்றவர்களையும், எதிர்காலத்தையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்க அது எப்படி உதவியிருக்கிறது என்றும் யோசித்துப் பாருங்கள்.—சங். 77:12.
3. நம்முடைய நன்றியுணர்வை எப்படிக் காட்டலாம்?
3 எந்தெந்த விதங்களில் காட்டலாம்: யெகோவாவைப் பற்றியும், மகனை அனுப்பியதன் மூலம் அவர் காட்டிய மாபெரும் அன்பைப் பற்றியும் மற்றவர்களிடம் சொல்ல மீட்புவிலைக்கான நன்றியுணர்வு நம்மைத் தூண்டும். (சங். 145:2-7) தங்கள் குடும்பத்திலுள்ள ஒருவரையாவது மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் துணைப் பயனியர் ஊழியம் செய்ய ஊக்கப்படுத்துவதன் மூலம் சில குடும்பங்கள் தங்களுடைய நன்றியுணர்வைக் காட்டுகின்றன. உங்களால் துணைப் பயனியர் ஊழியம் செய்ய முடியாவிட்டால், ‘நேரத்தை நன்றாகப் பயன்படுத்தி’ ஊழியத்தில் அதிகமாக ஈடுபட முடியுமா? (எபே. 5:16) நினைவுநாள் அனுசரிப்பில் கலந்துகொள்ள வரும்படி மற்றவர்களை அழைப்பதற்கும் மீட்புவிலைக்கான நன்றியுணர்வு நம்மைத் தூண்டும். (வெளி. 22:17) உங்களுடைய மறுசந்திப்புகள், பைபிள் மாணாக்கர்கள், உறவினர்கள், சக பணியாளர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆகியோருடைய பெயர்களை முதலாவது பட்டியலிடுங்கள்; பின்பு, நினைவுநாள் அழைப்பிதழின் விசேஷ விநியோகிப்பில் முழுமையாகப் பங்கு கொள்ளுங்கள்.
4. இந்த நினைவுநாள் காலத்தை நாம் எப்படி ஞானமாகப் பயன்படுத்தலாம்?
4 யெகோவா நமக்காகக் கொடுத்துள்ள இந்தப் பரிசை நாம் எந்தளவு உயர்வாய் மதிக்கிறோம் என்பதை வெளிக்காட்டுவதற்கு நினைவுநாள் காலத்தில் புதுப்புது வாய்ப்புகள் கிடைக்கின்றன. எனவே, மீட்புவிலைக்காகவும், ‘கிறிஸ்துவிடமிருந்து வரும் எல்லையில்லா ஆசீர்வாதங்களுக்காகவும்’ இந்த நினைவுநாள் காலத்தின்போது நம்முடைய நன்றியுணர்வில் பெருகுவோமாக! அந்த நன்றியுணர்வை வெளிக்காட்டுவோமாக!—எபே. 3:8.