சந்தோஷ இருதயத்தோடு நினைவுநாளுக்குத் தயாராகுங்கள்
1. நினைவுநாள் நிகழ்ச்சி என்ன செய்வதற்கு முக்கிய வாய்ப்பளிக்கிறது?
1 நம்முடைய மீட்புக்காகக் கடவுள் செய்துள்ள ஏற்பாட்டை நினைத்துப் பூரிக்க நினைவுநாள் நிகழ்ச்சி நமக்குச் சிறந்த வாய்ப்பளிக்கிறது; அது இந்த வருடம் மார்ச் 26, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். (ஏசா. 61:10) ஆனால், அந்த நாள் வருவதற்கு முன்னரே நாம் சந்தோஷமான மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் அந்நிகழ்ச்சிக்காக நன்கு தயாராக முடியும். எப்படி?
2. நினைவுநாள் அனுசரிப்புக்காக முன்கூட்டியே தயாரிக்க எது நம்மைத் தூண்ட வேண்டும்?
2 நினைவுநாளுக்குத் தயாராகுங்கள்: நம் எஜமானரின் நினைவுநாள் அனுசரிப்பு ஆழ்ந்த அர்த்தமுடையது, அதேசமயம் எளிமையானது. என்றாலும், அதையொட்டி செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களை மறந்துவிடாதிருக்க நாம் முன்கூட்டியே ‘திட்டமிட’ வேண்டும். (நீதி. 21:5, NW) உதாரணத்திற்கு, சரியான நேரத்தையும் இடத்தையும் தீர்மானிக்க வேண்டும். நினைவுநாள் சின்னங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நிகழ்ச்சி நடக்கப்போகிற இடத்தைச் சுத்தப்படுத்தி, தயாராக்க வேண்டும். நிகழ்ச்சியின்போது செய்ய வேண்டிய காரியங்களைக் குறித்து அட்டெண்டன்டுகளுக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்க வேண்டும். பேச்சு கொடுக்கவிருக்கும் சகோதரர் கவனமாகப் பேச்சைத் தயாரிக்க வேண்டும். இத்தகைய முன்னேற்பாடுகள் பலவற்றை நீங்கள் ஏற்கெனவே செய்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. மீட்புவிலைக்கு நம் உள்ளத்தில் பொங்கும் நன்றியுணர்வு இந்த விசேஷ நிகழ்ச்சிக்காக நன்கு தயாரிக்க நம்மைத் தூண்டும்.—1 பே. 1:8, 9.
3. நினைவுநாள் அனுசரிப்புக்காக நம் இருதயத்தை எப்படித் தயார்ப்படுத்தலாம்?
3 இருதயத்தைத் தயார்ப்படுத்துங்கள்: நினைவுநாள் அனுசரிப்பின் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள நம் இருதயத்தைத் தயாராக்குவதும் மிகமிக அவசியம். (எஸ்றா 7:10) அதற்கு, நினைவுநாளுக்கான விசேஷ பைபிள் வாசிப்புப் பகுதியை வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டும்; அதோடு, இயேசு பூமியில் செலவிட்ட கடைசி நாட்களைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். இயேசு காட்டிய சுயதியாக மனப்பான்மையைப் பற்றித் தியானித்தால் அவரைப் பின்பற்ற நாம் தூண்டப்படுவோம்.—கலா. 2:20.
4. மீட்புவிலையின் நன்மைகளில் எது உங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது?
4 கிறிஸ்து அளித்த மீட்புவிலை, யெகோவாவின் சர்வலோகப் பேரரசாட்சியே சரியானதென நிரூபிக்கிறது. பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதகுலத்தை விடுவிக்கிறது. (1 யோ. 2:2) யெகோவாவோடு சமரசமாவதற்கும், முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கும் வழிதிறக்கிறது. (கொலோ. 1:21, 22) நம்முடைய அர்ப்பணிப்புக்கு இசைய வாழ்வதற்கும், கிறிஸ்துவின் சீடர்களாக நிலைத்திருப்பதற்கும் நாம் எடுத்த தீர்மானத்தை வலுப்படுத்த உதவுகிறது. (மத். 16:24) எனவே, வரவிருக்கும் நினைவுநாள் அனுசரிப்புக்காகத் தயாராகும்போதும் சரி, அதில் கலந்துகொள்ளும்போதும் சரி, உங்கள் இருதயம் சந்தோஷத்தில் பூத்துக் குலுங்கட்டும்!