‘நன்றியறிதல் உள்ளவர்களாய் இருங்கள்’
1 யாராவது நம்மிடம் பண்போடு அல்லது தயவோடு நடந்துகொள்ளும்போது, “தயவுசெய்து,” “நன்றி” என்று சொல்ல நம்மில் அநேகருக்கு பிள்ளைப் பிராயத்திலிருந்தே கற்றுக்கொடுக்கப்படுகிறது. எப்போதும் ‘நன்றியறிதல் உள்ளவர்களாய் இருங்கள்’ என்று பவுல் நமக்கு புத்திமதி சொல்கிறார். விசேஷமாக நாம் யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கவேண்டும். (கொலோ. 3:15, 16) ஆனால், நம்முடைய மகத்தான சிருஷ்டிகருக்கு மிகுந்த நன்றியை நாம் எவ்வாறு தெரிவிப்பது? அவரிடத்தில் நன்றியறிதல் உள்ளவர்களாய் இருக்க என்ன விசேஷித்த காரணங்கள் நமக்கு இருக்கின்றன?
2 அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.” (1 கொ. 15:57) நமக்கு நித்திய வாழ்க்கைக்கான நம்பிக்கையை அளித்திடும் கிரயபலியை ஏற்பாடுசெய்கையில் கடவுளும் கிறிஸ்துவும் நம்மீது காட்டிய எல்லையில்லா அன்பு, ஒவ்வொரு வருடமும் நினைவு ஆசரிப்பின்போது நம் நினைவுக்குவருகிறது. (யோவா. 3:16) நம்மில், கிட்டத்தட்ட எல்லாரும் அன்பானவர்களை மரணத்தில் பறிக்கொடுத்திருப்பதால், உயிர்த்தெழுதலைப் பற்றி இயேசு கொடுத்த வாக்குறுதிக்காக எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! இந்த ஒழுங்குமுறையிலிருந்து தப்பித்து, மரணமே இல்லாமல் வாழ்வதற்கான ஓர் எதிர்பார்ப்பை எதிர்நோக்கும்போது நம் இருதயங்கள் நன்றியால் நிறைந்து வழிகின்றன. (யோவா. 11:25, 26) வரவிருக்கின்ற பரதீஸில், யெகோவாவின் கரங்களிலிருந்து நாம் இனிமேல் அனுபவிக்கபோகும் அருமையான ஆசீர்வாதங்களுக்காக நன்றி சொல்ல வேண்டும் என்றால், வார்த்தைகளுக்குத்தான் பஞ்சம். (வெளி. 21:4) கடவுளுக்கு ‘நன்றியறிதல் உள்ளவர்களாய் இருக்க’ இவற்றைவிட வேறு என்ன நல்ல காரணங்கள் நமக்கு இருக்க முடியும்?
3 கடவுளுக்கு எவ்வாறு நன்றியறிதலை காண்பிப்பது: நம் ஜெபத்தில் யெகோவாவை அவரது நற்குணத்திற்காக நன்றிசெலுத்துவது எப்போதும் உகந்ததே. (சங். 136:1-3) மேலும், அவருக்கு வேறு சில சாதகமான வழிகளிலும் நன்றியை வெளிக்காட்ட உந்துவிக்கப்படுகிறோம். உதாரணத்திற்கு, மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை அன்று வரவிருக்கும் கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கு நாம் நிச்சயம் ஆஜராகியிருப்போம். பொருளாதார அடிப்படையில் உள்ளூர் உள்ளூர் சபையின் தேவைக்கும், உலகளாவிய வேலைக்கும் உதவுவதன் மூலம் நாம் சந்தோஷமாக ‘யெகோவாவை நம்முடைய மதிப்புமிக்க பொருட்களால் கனம்பண்ணுவோம்.’ (நீதி. 3:9, NW) மூப்பர்களுக்கு நாம் முழு ஆதரவையும் தந்து, அவர்களோடு ஒத்துழைப்போமாக. இவ்வாறு செய்கையில், மூப்பர்களின் மூலம் யெகோவா தரும் உதவிக்கு நாம் நன்றியைக் காட்டுபவர்களாய் இருப்போம். (1 தெ. 5:12, 13) கடவுளுடைய பெயருக்கு மகிமை கொண்டுவரும் நேர்மையுள்ள நடத்தையை பேணிக்காக்க நாம் ஒவ்வொரு நாளும் கடினமாக முயலவேண்டும். (1 பே. 2:12) நம் நன்றியைக் காட்டும் எல்லாவிதமான இத்தகைய அத்தாட்சிகளின்பேரில் யெகோவா பிரிமுள்ளவராய் இருக்கிறார்.—1 தெ. 5:18.
4 நன்றி செலுத்துவதன் மிகச் சிறந்த வழி: நமக்காக நம் சிருஷ்டிகர் செய்திருக்கும் அனைத்திற்கும் நம் உள்ளப்பூர்வமாக நன்றி செலுத்துவதன் மிகச் சிறந்த வழிகளாய் இருப்பனவற்றுள், ராஜ்ய பிரசங்க வேலையில் முழு மனதோடு பங்கேற்பது, யெகோவாவின் பெயரை கனம்பண்ணுவது, ஜெபத்தில் நன்றியைத் தெரிவிப்பது, மற்றவர்களிடம் சத்தியத்தின் சார்பாகப்பேசுவது ஆகியவை அடங்கியுள்ளன. “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட” வேண்டும் என்ற யெகோவாவின் சித்தத்தை ஆதரிக்கும் வகையில், நாம் அவருக்கு செய்யும் பரிசுத்த சேவைக்குரிய செயல்களை அவர் காணும்போது பெரும் மகிழ்ச்சி அடைகிறார். (1 தீ. 2:3, 4) எனவேதான், வரவிருக்கும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஓரிரு மாதங்களுக்கு துணைப் பயனியராக சேவிப்பதற்கான அழைப்பு பிப்ரவரி நம் ராஜ்ய ஊழியத்தில் வரக்கண்டு, அந்த அழைப்பை தங்களால் ஏற்க முடியும் என நினைக்கும் பல பிரஸ்தாபிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஊழியத்தில் இன்னும் அதிக முயற்சி எடுப்பதும் கடவுளுக்கு ‘நன்றியறிதல் உள்ளவர்களாய் இருப்பதற்கான’ மிகச் சிறந்த வழியாகும். உங்களால் ஏப்ரலில் பயனியர் ஊழியத்தில் பங்குகொள்ள முடியுமா? மே மாதத்திலாவது செய்ய முடியுமா?
5 என்றென்றும் வாழ்வதற்கு ஒரு நிச்சயமான நம்பிக்கை நமக்கு தரப்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கை நிறைவேறும்போது, யெகோவாவுக்கு அனுதினமும் தொடர்ந்து மகிழ்ச்சியோடு நன்றி சொல்ல நமக்கு இன்னும் ஏராளமான காரணங்கள் இருக்கும்.—சங். 79:13.